புவி வெப்பமடைந்து வருவதைத் தடுக்க டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:

- இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

-மேற்குவங்கம் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன, 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள் பட்டியலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.

- இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.

ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.

- 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை, காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

- 2035 ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்துவிட வாய்ப்புள்ளது.

- இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.

- கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.

- இதுவரை 1998ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.

- 20ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்துவிடும்.

(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It