தென்கோடியில் அரசுகளுடன் ஒத்துழைக்காமல் ஆளுநர்கள் ஆணவத்தால் ஆடுகிறார்கள். வடகோடியில் விவசாயிகளுடன் பிரச்சனையைப் பேசித் தீர்ப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீது அடக்குமுறைத் தாண்டவம் ஆடுகிறது ஒன்றிய அரசு.

விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துச் சட்டமாக்கவும், எம். எஸ்.சாமிநாதன் ஆணையக் குழு பரிந்துரைகள் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்ததால் டில்லியை நோக்கி அறவழியில் போராட பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் டிராக்டர்களில் ஊர்வலமாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

போராட்டம் என்பது மக்களின் உரிமை. விவசாயிகள் போராட இன்னமும் டில்லி சென்றடையவில்லை. போராட்டத்தைத் தொடங்கவும் இல்லை.

ஆனால் ஏதோ அன்னிய நாட்டுப் படைகளைத் தடுப்பது போல விவசாயிகள் வரும் வழிகளில் முள்வேலிகள், பெரிய பெரிய காங்கிரிட் தடுப்புகள், குத்திக் கிழிக்கும் ஆணிகள் போன்றவைகளைப் போட்டிருப்பதைப் பார்த்தால், இது ஓர் ‘அரசு’ செய்யும் வேலையாகத் தெரியவில்லை. விவசாயிகளைத் தம்குடிமக்களாகப் பார்க்காமல் ஏதோ எதிரிகளைப் போல ஒன்றிய அரசு பார்ப்பதாகத் தோன்றுகிறது.

தடுப்புகளைத் தகர்த்துத் தாண்டி உரிமைகளைக் கேட்டுச் செல்லும் விவசாயிகள் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசித் தாக்குகிறார்கள் காவலர்கள். நூற்றுக்கணக்கானோர் காயம் பட்டிருப்பதாகத் தொலைக் காட்சியில் செய்தி வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால், விமான வழித்தாக்குதல் போல ‘ட்ரோன்’களை வானத்தில் ஏவி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகிறார்கள்.

மணிப்பூர் எரிந்து கொண்டு இருந்தபோது பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றதைப் போல, இப்போதும் இங்கே விவசாயிகள் போராட்டம், தாக்கப்படுகிறார்கள். பிரதமர் போய் விட்டார் அமிரகத்திற்கு.

உற்பத்தி செய்து உணவைத் தட்டில் வைத்துக் கொடுக்கும் விவசாயிகளைத் தடுக்க வழியில் முள்வேலி, ஆணிகளின் படுக்கைகளை வைத்து வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

ஆணவம், எதேச்சதிகாரம், சர்வாதிகாரம் வென்றதாக வரலாறு இல்லை.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்கிறார் எங்கள் புலவர் இளங்கோ அடிகளார்.

சில மாதங்களில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் அரசியல் பிழைத்த பா.ஜ.கவுக்கு அறத்தின் கூற்றம் என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்.

பா.ஜ.கவின் ‘கொட்டம்’அடங்கும், இந்தியா கூட்டணியின் ‘கொற்றம் ‘உயரும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It