ஒரு புதிய மடிக்கணினி வாங்கிவிட்டோம். பழைய மேசைக்கணினியை என்ன செய்யலாம்? பிளாஸ்டிக், அலுமினியக் குப்பிகளைப்போல மறுசுழற்சிக்கு தள்ளிவிடலாமா? வீசியெறியப்பட்ட மின்னணு சாதனங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாகங்களையும, உலோக பாகங்களையும் ஏன் உருக்கி எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது? எலக்ட்ரானிக் சாதனங்களில் மறுசுழற்சி என்பது நாம் நினைப்பதுபோன்று அவ்வளவு எளிதாக இல்லை. வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கணினி போன்ற மின்சாதனங்கள் பெரும்பாலும் இந்தோனேசியா, சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே தள்ளிவிடப்படுகின்றன. இங்கெல்லாம் ஆட்கூலி குறைவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கெடுபிடிகள் இல்லை. மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு அதிக தேவை இருப்பதும் இந்த நாடுகளில்தான். இதன்காரணமாக மறுசுழற்சி தொழிலில் கிடைக்கும் இலாபமும் அதிகமாக இருக்கிறது. 

மறுசுழற்சி தொழிலில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றன. ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதும், கட்டுபடியான விலையில் மின்னணு சாதனங்களை வாங்கமுடிவதும் நன்மைகள்.  அதே சமயம் தொழிலாளர்களின் உடல்நலனுக்கு எந்த பாதுகாப்புமின்றி இயங்கும் போலி தொழிற்சாலைகள் இங்கு இயங்குவதையும் கவனிக்கவேண்டும். மின்சுற்று பலகைகளில் உள்ள விலை உயர்ந்த உலோகங்களை அமிலங்களைக் கொண்டு உருக்கிப் பிரிக்கும்போது டையாக்சின், ஈயம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் கையாளப்படுகின்றன. செப்புக்கம்பிகளை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் மேலுறை தீயிட்டு எரிக்கப்படும்போது வெளிப்படும் டாக்சின்கள் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஈயம், பாதரசம் போன்ற பொருட்களை உருக்கிப் பிரிக்கும் நடைமுறை இந்த நாடுகளில் இல்லை. மாறாக, மின்னணுக்கழிவுகள் பூமிக்குள் இட்டு புதைக்கப்படுகின்றன. விளைவு நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மின்னணுக் கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சிறந்த வழி. ஒரு மடிக்கணினி வாங்கியவர் தன்னுடைய மேசைக்கணினியை தேவைப்படுவோருக்கு கொடுக்கலாம். இதன்மூலம் ஒரு புதிய கணினி உற்பத்தியாவதை ஒத்திப்போடலாம். ஒரு கணினியைத் தயாரிக்க அதன் எடையைக் காட்டிலும் 12 மடங்கு எடையுள்ள படிம எரிபொருள் தேவைப்படுகிறது.  பள்ளிகளுக்கும், தேவைப்படுவோருக்கும் இவற்றைப் பெற்றுவழங்கும் தன்னார்வ நிறுவனங்களும் இயங்குவது ஆறுதலான செய்தி.

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://news.discovery.com/tech/dont-recycle-your-computer.html

Pin It