முதலாளித்துவ ஜனநாயகத்தில் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை முதலாளிகளும், அந்த முதலாளிகளின் அடியாள் படையாக வேலை செய்யும் ஆட்சியாளர்களுமே தீர்மானிக்கின்றார்கள். மக்கள் நலன் பாற்பட்டே சட்டங்களை இயற்றுவதாகச் சொல்லும் இவர்கள் சம்மந்தப்பட்ட மக்களிடம் தாங்கள் கொண்டு வரும் சட்டத்தைப் பற்றி ஒருபோதும் கருத்து கேட்டது கிடையாது.

farmer protestsகோடான கோடி மக்களுக்குத் தெரியாமல் அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்தக் கயவர்களின் பெயர்தான் ஜனநாயகவாதிகள்! அந்த கயவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நாடுதான் ஜனநாயக நாடு.

 அப்படி கோடான கோடி இந்திய விவசாயிகளுக்கே தெரியாமல் அவர்களின் வாழ்க்கையை ஓட்டுமொத்தமாக கார்ப்ரேட்டுகளுக்கு விற்கத் துணிந்த பாசிச மோடி கும்பல், தான் கொண்டு வந்த விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 ஆகியவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

 ஆனால் இலவச மின்சாரத்தை ரத்து செய்து விவசாயிகளை மின்சாரத்துக்காக அதானி, அம்பானி கும்பலிடம் சிக்க வைக்க கொண்டு வரப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதா (2020) ரத்து செய்வது பற்றி மோடி அரசு இன்னும் வாய் திறக்கவில்லை.

 கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றார்கள். இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் மோடி அரசின் வஞ்சத்தால் உயிரை விட்டிருக்கின்றார்கள்.

ஒரு பக்கம் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒன்றிய அரசு அவர்களுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்காததால் வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.

 ஆனால் விவசாயிகள் மோடியை நம்பவில்லை. மோடி போன்ற கார்ப்ரேட் எடுபிடிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள எந்த மாதிரியான பித்தலாட்டத்தையும் செய்வார்கள் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

 மோடியும் கூட விவசாயிகளை நன்றாக உணர்ந்திருந்தார். இந்த பஞ்சை பராரிக் கூட்டம் அவ்வளவு எளிமையாக நாம் சொல்வதை நம்பாது என்று. அதன் வெளிப்பாடாகத்தான் கடந்த ஆண்டு டெல்லியில் 72வது குடியரசு தினத்தின் போது அமைதி வழியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.

 கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியானா மாநிலம் கர்னலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது ஹரியானா காவல் துறையினர் லத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

 அதன் உச்சக்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் காரை ஏற்றி நான்கு விவசாயிகளைப் படுகொலை செய்தான்.

 படுகொலையை நிகழ்த்துவதற்கு முன் அவன் அளித்த பேட்டியில், “டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை அவர்களாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி முடிக்காவிட்டால் நான் இரண்டு நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வருவேன்” என திமிர்த்தனமாகப் பேசினான்.

 விவசாயிகள் மீது ஆஷிஷ் காரை ஏற்றிக் கொன்றது குஜராத் கலவரத்தைப் போன்று நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட ஒன்று.

 ஆனால் ஆஷஷை கைது செய்ய முதலில் மறுத்த யோகியின் காவி காவல்துறை, கலவரத்தைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் தடியடி நடத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை படுகாயப்படுத்தினர்.

 என்ன செய்தும் விவசாயிகளின் மன உறுதியை மோடி அரசால் குலைக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்தியாவில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற உண்மையை விவசாயிகள் உணர்ந்து இருந்ததும், ஆட்சியாளர்கள் தடித்தோல்காரர்கள் என்பதை நன்றாகப் புரிந்து இருந்ததும்தான்.

 இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திமுக, திரிணமுல் போன்ற கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. ஆனால், நாடாளுமன்றத்துக்குப் போகும் பழக்கமே இல்லாத பாமகவின் அன்புமணி ராமதாஸ், சட்டம் நிறைவேற்றப்பட்ட 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்று நேரில் ஆஜராகி வாக்களித்து தனது அடிமை விசுவாசத்தைக் காட்டினார்.

 விவசாயத்திற்கு என வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை போடும் பாமகவின் நிலைமையே இப்படி என்றால், நிரந்தர அடிமைகளான அதிமுகவை கேட்கவா வேண்டும்?

 அதிமுகவின் தேனி தொகுதி எம்.பியும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரகுமார்,  "பிரதமர் நரேந்திர மோதியின் ஆளுமை மிக்க தலைமை நாட்டை அறிவியல், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளில் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன். வறுமை என்ற வார்த்தையை ஒழிக்கவும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவும் பிரதமர் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பு, உலகில் ஒவ்வொருவரையும் வியக்க வைக்கிறது” என்றும்,

 “இந்த மசோதா, நீண்ட காலமாக நீடித்த வேளாண் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் வருவாய் இரட்டிப்புக்கு பாதகமான தடங்கல்களை கலைந்துள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகப் பெரிய கொள்கை சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்" என்று பேசி தான் அப்பனை மிஞ்சிய விசுவாசி என்பதை வெளிப்படுத்தினார்.

 ஆனால் இன்று மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதாக மோடி சொன்ன பின்னால் அதையும் வெட்க மானமே இல்லாமல் அதிமுக ஆதரிக்கின்றது. சொந்த மூளையும், சுய சிந்தனையும் இல்லாத இந்த அடிமைக் கூட்டத்தின் அந்தர்பெல்டியை பார்த்து ஊரே சிரிக்கின்றது.

 சுய சிந்தனை இல்லாத அடிமைகள் இவர்கள் மட்டுமல்ல பாமகவும் வேளான் சட்டங்களுக்கு கொடுத்த ஆதரவு தவறானது என்பதை பெரிய கண்டுபிடிப்புகளுக்கு பிறகு ஒப்புக் கொண்டுள்ளது. "விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே தீர்மானத்தை ஆதரிக்கிறோம்" என பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

 அதனால் விவசாயிகள் இந்த ஓட்டுப்பொறுக்கி பச்சோந்தி கும்பலின் யோக்கியதையை நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

 மோடி தற்போது விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்குப் பின்னால் உள்ளது விவசாயிகளின் நலன் அல்ல என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் என்பதும் அவர்களுக்குத் தெரியாது அல்ல.

 அதனால்தான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் மோடி சொன்னதை நம்பாமல், ‘வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி வருகிற 29ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்துவோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்கள்.

 உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்றும் ABP-CVoter கருத்துக்கணிப்பு தெரிவித்திருந்தாலும் விவசாயிகளின் இடைவிடாத போராட்டமும் எதிர்க்கட்சிகளின் தீவிரமான பரப்புரையும் தேர்தலுக்கு முன் மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்ற பயம்தான் தற்போதைய பின்வாங்கலுக்கு முக்கிய காரணமாகும்.

 ஆனால் கார்ப்ரேட்களின் அடிமையான மோடி அரசால் தேர்தலுக்குப் பின் நிச்சயம் சும்மா இருக்க முடியாது. அவர் தன்னுடைய எஜமானர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

 இந்தியாவில் கார்ப்ரேட்களிடம் இருந்து அதிக நிதிபெறும் கட்சிகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் பிஜேபிக்கு வேறு எந்த மாற்றுமே கிடையாது. அதனால் தேர்தலுக்குப் பின் மோடி மீண்டும் விவசாயிகள் மீதான தனது தாக்குதலைத் தொடுப்பார்.

 அதனால் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும் விவசாயிகள் மிக விழிப்பாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் அவர்களை பயங்கரவாதிகள் என்றும், காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி கொல்லவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

- செ.கார்கி

Pin It