குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இந்தியாவில் எவருக்கும் பாதிப்பு இல்லை என்ற வாதத்தையே பிரதமரும், உள்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். சட்டம் அமுலுக்கு வந்த பிறகு தானே பாதிப்புகளை மக்கள் உணர முடியும்? ஆனாலும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே இந்தச் சட்டம் ‘இந்தியா’வின் மதிப்புக்கு கடும் பாதிப்பையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி விட்டது என்பதை மறுக்க முடியாது. மதத்தின் அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்ற இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கத்தையும் சிதைத்துவிட்டது. இந்த இரண்டு பாதிப்புகளுக்கும் நடுவண் ஆட்சி என்ன பதிலை வைத்திருக்கிறது?

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் நடக்கும் இஸ்லாமிய ஆட்சிகளால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர் அல்லாத ஆறு பிரிவினருக்கு குடியுரிமை வழங்க சட்டம் கொண்டு வந்த பிறகு தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களை குறி வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி, 57 உயிர்களை (இது எழுதப்படும் வரை) பலி வாங்கியிருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இஸ்லாமியர் அகதிகளாகவும் வர வேண்டாம்; இந்தியாவிலும் வாழ வேண்டாம் என்று அச்சுறுத்துகிறார்களா?

தலைநகர் டெல்லியில் திட்டமிட்டப் படுகொலைகளும் தீ வைப்புகளும் நடத்தி முடித்த வன்முறையாளர்கள் மீது “துப்பாக்கியால் சுடுங்கள்” என்ற கொலை வெறியைத் தூண்டிவிட்ட கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் (இவர் மத்திய நிதித் துறை இணை அமைச்சர்), பிரவேஷ் வர்மா (பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்) உள்ளிட்டோர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதைச் சுட்டிக்காட்டிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரர் என்பவரை, பஞ்சாப், அரியானா மாநிலத்துக்கு உரிய கால அவகாசம் தராமலேயே மாற்றியது ஏன்?

பற்றி எரியும் இந்தப் பிரச்சினையை உடனடியாக விசாரணைக்கு ஏற்காமல் ஒரு மாத காலத்துக்கு அதே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு அமர்வு தள்ளிப் போட்டதும், இதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி, விசாரணையை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்டிருப்பதும் எதைக் காட்டுகிறது?

அய்.நா. மனித உரிமை ஆணையர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளில் தன்னையும் இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற ஒரு பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே மறுப்பது ஏன்? ‘ஹோலி பண்டிகை’ கொண்டாட்டத்துக்குப் பிறகு விவாதிக்கலாம் என்று நாடாளுமன்ற அவைத் தலைவரே கூறுவது பிரச்சினையை அலட்சியப்படுத்துவது அல்லவா?

உடைமைகளையும் உயிரையும் இழந்து நிற்கும் மக்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆட்சியாளர்கள் ஆறுதல் கூட கூற மறுப்பது ஏன்? கலவரம் தொடங்கி நான்கு நாட்கள் வரை அமைதி காத்துவிட்டு, பிறகு சடங்குக்காக ஒரு அறிக்கை விடுவதோடு பிரதமர் கடமை முடிந்து விட்டதா?

டெல்லி காவல்துறையின் அலட்சியத்தை மக்களிடமிருந்து பேட்டி கண்டு வெளியிட்ட இரண்டு மலையாள தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை 48 மணி நேரத்துக்கு ஒளிபரப்ப, மத்திய தகவல் தொடர்புத் துறை தடை போட்டுவது கருத்துரிமையா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எப்படி விமர்சிக்கலாம் என்று மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை எழுத்துப்பூர்வமாக இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பியது சரி தானா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டதா?

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, குடியுரிமைப் பதிவேடுகளை எதிர்த்து கேரளா, புதுவை, பஞ்சாப், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் சட்டம் இயற்றிய நிலையிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் குடியுரிமைப் பதிவேட்டை எதிர்த்தும், மக்கள் தொகைப் பதிவேட்டில், புதிதாக இணைக்கப்பட்ட கேள்விகளைக் கை விடுமாறும் தீர்மானம் போட்டும், மாநிலங்களின் குரலை அலட்சியப்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்தையே குழி தோண்டி புதைப்பதல்லவா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து நிற்கின்றன.

நாடு ஆபத்தான திசையில் பயணிக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைப் புறந்தள்ளிவிட்டு ‘மதவெறி’ வட்டத்துக்குள் மோத விட்டுக் கொண்டிருக்கும் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதை நடுவண் ஆட்சியாளர்கள் உணரும் காலம் தொலைவில் இல்லை.

Pin It