மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்...
இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்திருந்தது.
2014 ஆம் ஆண்டின் 16ஆம் நாடாளுமன்றத்தில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் அதிமுக 37 இடங்களில் வென்றிருந்தது. 2019 இல் நடைபெற்ற 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றிருந்தாலும் அதன் அணியில் இருந்த அதிமுக ஓரிடத்தில் மட்டுமே வென்றிருந்தது. 2014ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆண்டு வரை 10 ஆண்டுகளாக முழுமையான அதிகாரத்தைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
இந்தப் பத்து ஆண்டுகளில் மொழித் தேசிய இனங்களின் அடையாளங்களையெல்லாம் சிதைத்துவிட்டு ஆரியப் பார்ப்பனியத்தை வலுப்படுத்திக் கொள்ள பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகமிக அதிகப்படியானவை.
மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப் பட்டிருப்பது பாஜகவிற்கு சிறிதும் உடன்பாடில்லாதது. அதனால்தான் மொழி மாநிலங்களை எல்லாம் சிதைக்கிற வேலைகளை அது தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது.
காசுமீரத்திற்கென அளிக்கப்பட்டிருந்த 370 ஆம் சட்டப்பிரிவை நீக்கியதோடு அது ஒரு மாநிலம் எனும் நிலையையே இல்லாமல் செய்துவிட்டது பாஜக. 2019 ஆகத்தில் காசுமீரத்தை இரண்டாகத் துண்டாடிவிட்டது. காசுமீரத்திற்குரிய 370ஆவது சட்டப்பிரிவை ஏதோ இரவலாக அவர்கள் பெற்றிடவில்லை. காஷ்மீரத்திற்குள் பிறநாட்டினர் பிற மாநிலத்தவர் எவரும் குடியேறிடவும், நிலம் வாங்கிவிடவும் முடியாது என்பது காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் இணையும் போது 26.10.1947இல் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக் கையின்படி பெற்ற உரிமை ஆகும்.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாக இந்தியா என்பது ஓர் அரசியல் சார்ந்த நாடாகவோ, இயற்கையானதாக அடையாளப்படுத்திடும் வகையில் நிலவியல் சார்ந்த பகுதியாகவோ இருந்திடவில்லை. சிந்து ஆற்றை அடிப்படை யாக வைத்து சிந்துசு (Indus) என்று ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்டதுதான். பின்னர் அவர் களால் இந்து என்றும் இந்தியா என்றும் அழைக்கப் பெற்றது.
1600க்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி அதிகாரங்களால் இந்திய அரசு உருவாக்கப்பட்டு ஆளவும்பட்டது.
வந்தேறிய ஆங்கிலேயர்கள் 1947இல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளியேறியபின், அதற்கு முன்பே வந்தேறிப் பரவியிருந்த ஆரியப் பார்ப்பனிய அதிகார வகுப்பினரின் பனியா பெருமுதலாளிகளின் கைகளுக்கு இந்திய அரசு கைமாறியது.
ஆரியப் பார்ப்பனிய-பனியா வகுப்பால் 1947இல் உருவாக்கப்பட்ட இந்தியாவிற்குள் 500க்கும் மேற்பட்ட தனி நில ஆட்சிப் பகுதிகள் மிரட்டப்பட்டும், அதிகாரப் பங்கு தருவதாக ஆசை காட்டப்பட்டும் இணைக்கப்பட்டன.
அப்போது காசுமீரமும், நாகலாந்தும், மிசோரமும் உள்ளிட்ட சில பகுதிகளும் முழுமையாக இந்தியப் பார்ப்பனிய அரசுக்குக் கட்டுப்பட்டுவிடவில்லை. இறுதியாக, காசுமீரம் இந்தியாவிற்குள் இணையலாமா வேண்டாமா என மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் என்றும் அதுவரை காசுமீர் இந்திய அரசுக்கும் பாகிசுத்தானுக்கும் சிறுபகுதி சீனத்திற்கும் உரியது என்றும் உலக அவை ஏற்றுக்கொண்டு அறிவித்தது. காசுமீரத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும் வரை 370ஆம் பிரிவு காசுமீரத்திற்கு இருக்கலாம் என்று இந்திய அரசு ஒப்புக்கொண்டது.
ஆனால், வரலாற்று வழிநடந்த அத்தகைய அனைத்து நிகழ்வுகளையும் மூடிமறைத்து இந்திய வெறிப்படையைக் கொண்டு காசுமீர மக்களை நசுக்கி, அடக்கி, ஒடுக்கி இந்தியா விற்குள் வைத்திருந்தது மட்டுமின்றிக் காசுமீர் மாநிலத்தையே அதிகார வழி இரண்டாகத் துண்டாடிக் கூறுபடுத்தியது பாஜக அரசு.
சிந்து சமவெளி தொடங்கி கங்கை சமவெளி வரை வந்தேறிப் பரவி இருந்த ஆரியப் பார்ப்பனிய அதிகார வகுப்பினர் அப்பகுதிகளை ஆரிய வர்த்தம் என்ற அழைத்துக் கொண்டனர். அக்காலத்தில் பரவி இருந்த பல்வேறு ஆட்சியியல், வாழ்வியல் கருத்துகளை எல்லாம் தொகுத்து, குப்தர்கள் கால அளவில் அர்த்தசாசுத்திர, மனுசாசுத்திரங்கள் என உருவாக்கிக் கொண்டனர். தொடர்ந்த காலங்களில் ஆண்ட அரசுகளை அரசர்களை மிரட்டியோ மயக்கியோ தங்களுக்கு வயப்படுத்திக் கொண்டு ஆரியப்பார்ப்பனிய அதிகாரத்தை ஊன்றிக் கொண்டனர்.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்னர் தங்களின் வழமையான உருட்டல் மிரட்டல் நடைமுறைகளுக்குப் பெரு மளவில் இடர்கள் ஏற்படவே ஆரியப்பார்ப்பனியம் ஒருங் கிணைந்து எப்படியாவது அதிகாரங்களை நிலைப்படுத்திக் கொள்ளுகிற வகையில் சூழ்ச்சி செய்யத் தொடங்கியது.
1925 இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்படுவற்கு முன்பாகவே ஆரிய சமாஜம் உள்ளிட்ட பல இயக்கங்கள் உருவாக்கப்பட்டு ஆரியப் பார்ப்பனியக் கருத்துகளைப் பரப்பல் செய்து வந்தன.
1925இல் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ்க்கு ஆரிய வர்ததத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
அப்பகுதியில் வாழும் மக்கள் அவர்கள், சமஸ்கிருதத்தை மறுக்க மாட்டார்கள். அதுவே தேவமொழி என்பதை ஏற்பார்கள். எல்லா மொழியும் சமமானவை என்று சொல்ல மாட்டார்கள். கோயில்களில் சமஸ்கிருதத்தில் மட்டுமே ஓதவேண்டும். என்பதை ஏற்பார்கள் வேத புராணங்களை மறுக்கமாட்டார்கள். அவையெல்லாம் அநாதி. உலக அறிவே அவற்றில் தாம் உள்ளன என்பார்கள் என்பதை ஏற்பாளர்கள். இந்து மதமே சிறந்த மதம் என்பார்கள். இந்தியாவை இந்து நாடு என அழைக்க வேண்டும் என்பார்கள் என்பதை ஏற்பார்கள்.
அர்த்தசாசுத்திரத்தின்படி, மனுதர்மத்தின்படி வருண வேற்றுமைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு எந்த வன்முறை நடைமுறையையும் அவர்கள் செய்யத் தயங்கிய தில்லை. வரலாறு நெடுக ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களையெல்லாம், அரசர்கள் தொடங்கி அறிஞர்கள், அற நெறியாளர்கள் எனப் பல்லாயிரம் பேர்களைக் கொலை செய்து வந்தவர்கள் அவர்கள். ஆர்எஸ்எஸ்இன் கொள்கைகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டவையே பாரதிய வித்யார்த்தி பரிஷத், பாரதிய ஜனசங்கம், வனவாசிகள் கல்யாண் ஆசிரமம், பாரதிய மஸ்தூர் சங்கம் என நூற்றுக்கும் மேலான அமைப்புகள்.
அவை அனைத்தும் ஒரே கருத்தில் ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. அவை யாவும் பார்ப்பனியத்தையே மேலாக எண்ணுபவை. அத்தகைய அடித்தளங்களின் மீது இந்திய அரசியல் அதிகாரத்தை பாரதிய ஜனதா கட்சி பாசிச பார்ப்பனிய உணர்வோடு கையகப்படுத்திக் கொண்டது.
கடந்த 2014 தொடங்கி 2024 வரை பத்தாண்டுகளில் அது ஆடி வருகின்ற வெறி ஆட்டம் எளிதே பட்டியலிட்டுவிட முடியாத படி அனைத்துத் துறைகளிலும் தாண்டவமாடி வருகிறது.
குசராத்திலும், மராட்டியத்திலும், தமிழ்நாட்டிலும் மதக்கலவரங்கள் எனும் பெயரில் அவர்கள் செய்த கொடிய கொலைகள் பல ஆயிரக்கணக்கானவை. பில்கிஸ்பானு உள்ளிட்ட பல கொலைகள் மாந்தயேமற்றவை. தபோல்கர் கல்புர்கி, கௌரிலங்கேசு உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பலர் பல மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறுமி ஆசிபா உள்ளிட்ட குழந்தைகள், பெண்கள் பல்லாயிரக்கணக்கினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். வரவர இராவ், ஸ்டேன்சாமி-என நூற்றுக் கணக்கான மாந்த உரிமைச் செயல்பாட்டாளர்கள் கொடுஞ் சிறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள்.
என்ஐஏ, தேசியப் புலனாய்வு முகமை என்கிற பெயரில் மாநிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பன்னூற்றுக் கணக்கினரைச் சிறை கொட்டடிகளில் அடைத்து வைத்திருக்கின்றனர். மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் என்று கொல்லப் பட்டவர்கள் எத்தனை எத்தனையோ பேர்.
இவை ஏதோ இந்தப் பத்தாண்டின் செயல்பாடுகள் அல்ல; இதற்கு முன்பாகவும் சூழ்ச்சியாலேயே ஆட்சியைப் பிடித்துத் தன் அதிகாரத்தைப் படிப்படியாக ஊன்றியிருந்தது பாஜக.
1925 தொடங்கி படைத்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் அரச அதிகாரிகள் அளவில் ஆர்எஸ்எஸ் ஊடுருவ தொடங்கிவிட்டது போலவே காங்கிரசு உள்ளிட்ட தேர்தல் அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் ஊடுருவிச் செயல்பட்டது. காங்கிரசில் இருந்தவர்கள் பலர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் கரைந்தனர்.
அத்தகைய திட்டமிடல் வழியில்தான் 1952இல் பாரதிய ஜனசங்கமும் 1980-இல் பாரதிய ஜனதா கட்சியும் தோற்றுவிக்கப்பட்டன.
1977 இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடிகால (எமர்ஜென்சி) நிலைக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்னெடுத்த ஜனதா தளத்தை, ஆர்எஸ்எஸ் தேர்தல் அரசியல் களத்தின் வழி தங்களை வளர்த்துக் கொள்வதற்கு நல்லவாய்ப்பாக அமைத்துக் கொண்டது. அன்றைக்கு நடந்த ஆறாவது நாடாளுமன்றத்திற்குரிய 542 தொகுதிகளில் 345 இடங்களில் ஜனதாக் கூட்டணி வெற்றி பெற்றது. அதில் 298 இடங்களை ஜனதாகட்சி பெற்றிருக்க அவற்றுள் 95 இடங்கள் தங்களால் பெறப்பட்டது என்பதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துக் கொண்டது.
அந்த வாய்ப்பை இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பயன்படுத்திக் கொண்டு அரசியல் களத்தில் ஊன்றிக் கொண்டது. தேர்தல் அரசியல் களத்தில் திட்டமிட்ட முதல்நகர்வு என்று எடுத்துக் கொண்டால், அடுத்தகட்ட நகர்வை 1980இலே தொடங்கிவிட்டது ஆர்எஸ்எஸ்.
1980இல் தொடங்கப்பட்ட பாரதிய ஜனதாகட்சி 1984இல் தனித்த ஓர் அணியை வாஜ்பாய் தலைமையில் கட்டிப் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
1989இல் நடைபெற்ற ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்த அணியை அத்வானி தலைமையில் கட்டி 85 இடங்களில் வெற்றி பெற்றது. ஜனதா தளத்தின் வழியாக கட்டப்பட்ட தேசிய முன்னணிக்கு 143 இடங்களில் வெற்றி கிடைத்திருந்தச் சூழலில் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து வி.பி.சிங்கைத் தலைமை அமைச்சராக ஆக்கியது போல் வெளியில் காட்டிக்கொண்டு, அவரின் ஆட்சியைக் கவிழ்த்ததில் பாஜகவே காரணமாய் இருந்தது என்ற அவலத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். உள்ளிருந்தே கீழறுக்கும் பணியில் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தவிடாமல் விபிசிங் ஆட்சியை இரண்டே ஆண்டில் கவிழ்த்தது பாஜக.
1990 செப்டம்பர், அக்டோபரில் எல்.கே.அத்வானி இரத யாத்திரை நடத்தி இந்து மதவெறியையூட்டியதன் பயனாக 1991இல் நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி தலைமையில் கட்டப்பட்ட பாஜகவின் கூட்டணி 120 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாய் ஆனது.
இந்தக் கால கட்டங்களையெல்லாம் இந்துமத வெறித் தனத்தைப் பரப்புவதற்கு பாஜக பயன்படுத்திக் கொண்டது. மதக்கலவரங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் பிள்ளையார் ஊர்வலங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பைச் செய்து இந்து வெறியுணர்வு தூண்டிவிடப்பட்டது. 1996 ஆம் ஆண்டின் பதினோராவது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் கூட்டணி 161 இடங்களில் வென்றதுடன் வாஜ்பாயைத் தலைமை அமைச்சராக ஆக்கிப் பெரும்பான்மையை நிறுவ இயலாமல் 13 நாள்கள் ஆட்சியில் அமர்த்திக் காட்டியதன் வழி தனது மூன்றாவது கட்டத்தை அது எட்டியது.
1998இல் பன்னிரண்டாவது தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழி 254 இடங்களில் 182 இடங்களைப் பெற்றி ருந்தது பாஜக. இந்தச் சூழலைத் தனக்கு நான்காவது கட்டமாக அது பயனாக்கிக் கொண்டது. வாஜ்பாய் தலைமை அமைச்சராகத் தேர்வு செய்யப் பெற்று 1999ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த காலம் பாஜகவிற்கு அடுத்த காலகட்டமாகக் காலூன்றி பார்ப்பனியத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பெருமளவில் பயன்பட்டது.
கல்வித்துறையில் பார்ப்பனியக் கருத்தாளர்களை நுழைத்தது. வரலாற்றைப் பார்ப்பனியச் சார்பில் எழுதியது, சமற்கிருத பரப்பல்களை அதிகப்படுத்தியது, சன்ஸ்தான் என்கிற பெயரில் சமற்கிருத ஊர்களை அமைத்தது எனப் பல்வேறு வகையில் ஆரியப் பார்ப்பனியம் காலூன்றி வலுப்படுத்தப்பட்டது.
தங்க நாற்கரச் சாலை திட்டம் பெயரில் நெடுஞ் சாலைத்துறையை விரிவுபடுத்தி அனைத்து ஊர்களுக்கும் புறவழியில் செல்கிறபடி விரிவான சாலை அமைப்புகளை அமைத்துச் சுங்கச்சாவடிகள் நிறுவி வழிப்பறிக் கொள்ளைகள் விரிவாகத் தொடங்கப்பட்டன. கனிமவளச் சூறையாடல்கள் அதிகமாகியது. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரில் காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்தாலும் வலுவான எதிர்க்கட்சியாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெயரில் பாஜக இருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது அடிப்படையில் பாஜகவுக்கு எதிரான கட்சியாக செயல்பட்டாலும், கோட்பாட்டு அடிப்படையில் பார்ப்பனிய எதிர்ப்புள்ள கூட்டணியாக இல்லை. இந்தியப் பார்ப்பனிய அரசியல் கட்டமைப்பை எதிர்க்கிற கொள்கையோ, பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளை எல்லாம் விரட்டிவிட்டு அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, மண்ணின் தொழில்களை வலுப்படுத்த வேண்டுமான கொள்கை கொண்டதோ இல்லை. மாநிலங்களுக்கே முழு உரிமைகளை அளித்திட வேண்டும் எனும் கருத்தும் அவர்களுக்கு இல்லை எனவே பாஜகவால் இவர்களை எளிதே வீழ்த்திவிட முடிந்தது.
இந்த நிலையில் 2014-2024 என்பது அவர்கள் ஏற்கனவே ஐந்தாறு கட்ட நிலையில் நிலைப்படுத்திக் கொண்ட தங்களின் அதிகாரக் கட்டமைப்பை இறுக்கமாக வலுப்படுத்திக் கொள்ள பெருவாய்ப்பாக்கிக் கொண்டது.
சாகர் மாலா என்று கடல் வளத்தை, துறைமுக ஆளுகைகள் அதிகாரத்தை அம்பானி அதானிகளுக்கு அளித்த தன் வழித்தடங்கள் அளவில் வலுப்படுத்திக் கொண்டனர். நெடுஞ்சாலைகளில் மிக அதிகப்படியான சுங்கச்சாவடிகள் அமைத்து வழிப்பறிக் கொள்ளை செய்ய தொடங்கினர்.
ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் வணிக வரிகள், முன்னர் போராடிப் பெற்றிருந்த தொழிலாளர் சட்டங்களை எல்லாம் செயலிழக்கச் செய்துவிட்டு முழுக்க முழுக்க கொத்தடிமை முறைகள் ஆக்கியது. கல்வித்துறையை முழுக்க முழுக்க இந்திய அதிகாரத் துறையிடம் கொண்டு சென்றது. அனைத் திலும் நுழைவுத் தேர்வு என்கிற வகையில் (நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் வழியாகவே) மாணவர்களைப் பாகுபடுத்தி ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் கல்வி ஈடுபாட்டைத் தடை செய்தது. பாடத்திட்டங்களில் பார்ப்பனியக் கருத்தாடல்களை நுழைப்பதன் வழிமாநில கல்விக்கு மொழிப் பாடங்கள் தவிர பிறவற்றை உருவாக்குவதில் தடை செய்தது. தேசியக்கல்விக் கொள்கையை எப்படியாவது திணித்திடுவது, மாநில அறிவை அடையாளப்படுத்துகிற சித்த மருத்துவம் போன்ற துறைகளை வளர விடாமல் செய்திடுவது. ஆக எல்லாவற்றிலும் மாநில அடையாளங்களே சிறிதும் தலைதூக்கி விடாதபடி ஆளுநர்களைக் கொண்டு, அதிகாரிகளைக் கொண்டும் மாநில உணர்வுகளையே தேய்த்து அழித்து வருகிற நடைமுறையை இந்தப் பத்தாண்டுகளில் ஒன்றிய பாசக வல்லாட்சி கடுமையாகச் செய்து நிறைவேற்றி வந்திருக்கின்றது.
மணிப்பூர் தேசத்தையே நாசப்படுத்தி நடத்திய வெறி யாட்டமும், அங்குப் பெண்களுக்குச் செய்த கெடுமைகளையும் கொடுங்கொலைகளையும் உலகமே அறிந்தாலும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாது வெறியாட்டம் போட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் என்கிற கொடுஞ்சட்டத்தைக் கொண்டு வந்து, அதை எதிர்த்துப் போராடிய உழவர்கள் நுற்றுக் கணக்கினர் இறந்துபோனது பற்றியோ ஆண்டுக்கணக்கில் அவர்கள் தில்லி நெடுஞ்சாலைகளில் போராடியது பற்றியோ கவலைகெள்ளாத ஆரியப்பார்ப்பனிய திமிர் தன்மையில் தாண்டவமாடி வருகின்றது.
பட்டேலுக்கு 3000 கோடியில் சிலை, ராமனுக்குப் பல ஆயிரம் கோடியில் கோயில், பல ஆயிரம் கோடியில் நாடாளு மன்றத்திற்குப் புதிய கட்டடம் பாசிச பாசகமோடி ஆட்சி என மக்கள் பணத்தைப் பாழாக்குவது. பல்கலைக்கழக வேந்தர்களைத் தங்கள் இழுப்புக்கு நகர்த்துவது, சனாதனமே சிறந்தது என ஊடகங்களைக் கையில் வைத்துக் கொண்டு உளறிக் கொட்டுவது, திருவள்ளுவரை, வள்ளலாரைக் காவி புனைந்து இழிவுபடுத்துவது, தமிழ் தெரியாமல் தமிழியம் தெரியாமல் ஆரிய பூச்சு பூசிப் பேசித் திரிவது, மாநில உரிமைகளுக்குத் தடையாக இருந்து முட்டுக்கட்டை இடுவது-என ஆளுநரை வைத்துக்கொண்டு பார்ப்பனிய பாஜக அரசு அடிக்கிற கொட்டங்கள் கொஞ்ச நஞ்சமன்று. அவற்றையெல்லாம் எப்படி முறியடிக்கப் போகிறோம்.
தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதால் மட்டுமே இவற்றையெல்லாம் நீக்கிவிட முடியாது. தேர்தல் களத்தில் மட்டுமல்ல மக்கள் களத்தில், குமுகக் களத்திற்குள் நஞ்சாக ஆரியப் பார்ப்பனியம் பரவி இருக்கிறது.
பாஜகவை, அதன் பரிவாரங்கள், ஆர்எஸ்எஸ்ஐ பரவி இருக்கின்றவர்கள் அளவில் அடி அறுக்காமல் அவற்றின் கொடுமைகளிலிருந்து மீளமுடியாது..
அவை வேரூன்றி வளர்வதற்கு அவற்றுக்கு அடித்தளமாக இருப்பதே ஒரேமொழி (சமஸ்கிருத-இந்தி), ஒரேமக்கள் (ஆரியப் பார்ப்பனிய வயப்படுத்தப்பட்ட மக்கள்), ஒரேநாடு (மாநில அடையாளங்களை அழித்திட்ட நிலையிலான இந்தியா), ஒரே பண்பாடு (ஆரியத்தை உயர்த்திக் கொண்டிருக்கிற வருணாச்சரமப் பண்பாடு), ஒரே வரலாறு (ஆரியமே உலகம். ஆரியமே அறிவு என அனைத்தையும் தனக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிற வரலாறு) என இத்தகைய புனைவுகளை எல்லாம் வேரறுக்காமல் ஆர்எஸ்எஸ்ஐயோ பாஜகவையோ வீழ்த்திவிட முடியாது.
எனவே அடிப்படையானது மாநிலங்கள் அனைத்தும் அவ்வற்றின் அதிகாரங்களை மீட்டு நிலைப்படுத்திக் கொள்வதற்கு அனைத்து மாநிலங்களும் தங்களின் உரிமைகளுக்குப் போராடியாக வேண்டும்.
மாநிலங்கள் என்கிற மொழிவழித் தேசிய இனங்கள் தங்கள் உரிமைகள் என்கிற போர் கருவியால்தான் பாரத வர்ஷம் எனும் ஒரேநாடு என்னும் ஆரியப் பார்ப்பனியப் பாசிசத்தை வீழ்த்த முடியும்.
அத்தகைய மாநில உரிமை இயக்கங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு புதிய ஒன்றியத் தைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம்.அந்த வகையில் யாவரையும் கேளீராகக் கருதுகிற, அறஉணர்ச்சி என்பது வேறு, பாரதத்தேஷ்-என்று ஆரிய அடிமைச் சகதிக்குள் அடிமைப்பட்டு மூழ்குகிற நிலை என்பது வேறு.
எனவே, ஆரியத்தை பாஜகவை வேரறுக்க மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். அவையே முதன்மையானது என முழங்குவோம்!
அனைவரும் இணைந்து தமிழ்நாட்டு உரிமைகளை முன்நிறுத்திப் போராடும் சூழலில் ஆரியப் பார்ப்பனியப் பாசிச சனாதன பாரதம், பாரத வர்ஷம் எனும் அவர்களின் கருத்தாடல்கள் அனைத்தும் பொசுங்கட்டும்.
- பொழிலன், தமிழக மக்கள் முன்னணி