Reservations in Private Sectorபாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது ஐந்து ஆண்டுகள் ஆட்சியின் இரண்டாவது பட்ஜெட் வெளியிடப் பட்டிருக்கிறது. 1992ஆம் ஆண்டு தொடங்கிய தனியார் மயமாக்கலை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டுச் செல்வதற்கு அடையாளமாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனியார் மயமாக்கப்படப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்தியன் ஏர்லைன்ஸ்நிறுவனம் முழுமையாக விற்கப்படப் போகிறது. ஒரு துறைமுகம் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. மாவட்ட மருத்துவமனைகளை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது.

தனியார் மயமாக்கலின் பொருளாதார பின்விளைவுகள் ஒருபுறமிருக்க, தனியார் மயமாக்கலின் மிகப்பெரிய ஆபத்து பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டினால் கிடைத்துவரும் சிறிய பலன்களையும் இல்லாமல் செய்து விடும் என்பதுதான்.

விடுதலை பெற்ற இந்தியாவில் 69 ஆண்டுகளாக, நடுவன் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. 69 ஆண்டுகள் கழித்தும் இந்த இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மூன்றாம் மற்றும் நான்காம் நிலைப் பணிகளுக்கு ஏறக்குறைய முழுமையாக அமுல் படுத்தப் பட்டாலும், முதலாம் மற்றும் இரண்டாம் நிலைப் பணிகள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படுவதில்லை. ‘ஒப்பந்த முறைப் பணியாளர்கள்' என்ற குறுக்கு வழியைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பது வழக்கமாக இருக்கிறது. 2001 ஆம் ஆண்டு தேசிய புள்ளி விவர அறிக்கையின்படி, யுஜிசி நிதி உதவியோடு இயங்கும் 256 பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள 11000 கல்லூரிகளில் பணிபுரியும் 3.42 லட்சம் ஆசிரியர் பணிகளில், தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் 2% மட்டுமே இருந்தார்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்பட வேண்டிய 75,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

நடுவன் அரசுப் பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் நிலை இன்னமும் பரிதாபம். பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரை செய்த மண்டல் கமிஷன் 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் அமைக்கப் பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து, இந்திரா காந்தி அம்மையார் தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் மண்டல் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து வி.பி. சிங் அவர்களால் இது அமல்படுத்தப்பட்டது. இதற்கான அரசாணை,

வி.பி. சிங் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அமைந்த ராஜீவ் காந்தி அரசால் 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆயினும் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கு மட்டுமே தரப்பட்டது. கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வருவதற்கு இன்னமும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அந்த ஆணை வந்து 14 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு (2020) நடைபெறவிருக்கும் அகில இந்திய அளவிலான மருத்துவ மேல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், எந்தவிதக் காரணமுமின்றி, பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீடு இரத்து செய்யப்பட் டிருக்கிறது. பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரை 42 ஆண்டுகள் ஆகி இன்னமும் நிறைவேற்றப்பட வில்லை. இந்திய நிர்வாக அமைப்பில் இருக்கும் முன்னேறிய சாதியினரின் ஆதிக்கம், மக்கள் சபைகளில் நிறைவேற்றப்படும் சட்டங்களைக் கூட நிறைவேற்ற விடாமல் செய்யும் வலிமை பொருந்தியதாக இருக்கின்றது.

அதே சமயம் உயர்சாதியினரில் உள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கு மறுநாளே அதற்கான அரசாணை, அனைத்து நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு, இந்த கல்வி ஆண்டிலேயே உயர்சாதியினரில் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட வேண்டும் என ஆணையிடப் பட்டது. இதற்காக அதிக இடங்களை உருவாக்க வேண்டியிருந்தால் உருவாக்கிக் கொள்ளலாம் என்ற சலுகையையும் அரசு அளித்திருக்கிறது.

இந்திய அரசும், நிர்வாகமும் யாருக்காக இருக்கிறது என்பதற்கும், பின்தங்கிய, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் அதிகாரம் எவ்வளவு என்பதற்கும் இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

இந்திய சமூக அமைப்பின் கீழ் அடுக்குகளில் இருக்கிற சமூகங்கள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடத்தும் போராட்டம் முழுமையான வெற்றி யடைய செல்ல வேண்டிய தூரம் அதிகம். இட ஒதுக்கீடுகளின் மூலம் கிடைக்கும் சிறிய வெற்றி களைக் கூட முற்றிலும் இல்லாமல் செய்வதற்கான எளிய தந்திரமே தனியார்மயமாக்கல்.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் தாராள மயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் தொடங்கியது முதல் தனியார் துறை அபரித வளர்ச்சி கண்டு வருகிறது. தனியார் துறை வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தனியார் துறை, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்கிறது. மேனாள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் “தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்” என்று பேசிய போது, இந்தியாவின் பெரிய தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாட்டா “எங்கள் நிறுவனங்கள் உலகச் சந்தையில் போட்டியிட மிகச் சிறந்த பணியாளர்கள் தேவை. இட ஒதுக்கீடு அளிக்க நிர்பந்திக்கப்பட்டால் திறமை குறைந்தவர்களை பணியமர்த்த வேண்டும். அது உற்பத்தித் திறனை குறைத்துவிடும்” என பேசினார்.

தொராட் மற்றும் அட்வால் 2007ஆம் ஆண்டு, டெல்லியில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். ஒரே மாதிரியான கல்வித் தகுதிகள், முன் அனுபவங்கள் மற்றும் பிற திறமைகள் கொண்ட விண்ணப்பங்களை, சாதிகளையும், மதங்களையும் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய பெயர்களில், வேலை கோரி சில பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பினார்கள். உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணக்கூடிய விண்ணப்ப தாரர்களுக்கு அனுப்பப்பட்ட நேர்காணல் அழைப்புகளைவிட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 50% குறைவான அழைப்புகள் விடுக்கப் பட்டன என்பதும், முஸ்லிம் பெயராக இருந்தால் அந்த வாய்ப்பு 25% க்கும் குறைவு என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்விகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், திறமை குறைந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டு, கல்வியின் தரம் கெட்டு விடும் என்று கூப்பாடு போட்டார்கள். இன்று மருத்துவக்கல்வி வேகமாக தனியார் மயமாகி வருகிறது. இந்தியாவிலுள்ள 269 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30,688 இடங்கள் இருக்கின்றன. ஆனால் தனியார் வசம் இருக்கும் 260 கல்லூரிகளில் 35,290 இடங்கள் இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான மதிப்பெண்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேரும் மாணவர்களின் மதிப்பெண்களை விட மிக மிகக் குறைவு. தகுதி, தகுதி என்று கூச்சல் போடுபவர்கள் இது பற்றிப் பேசுவதே கிடையாது.

இட ஒதுக்கீடு நாட்டு முன்னேற்றத்தின் எதிரி எனப் பேசியவர்கள், உயர் வகுப்பினரில் ஏழைகளுக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டை 'புரட்சிகரமான செயல்' என்று வர்ணிக்கிறார்கள். மதிப்பெண் குறைவாக வாங்கிய தாழ்த்தப்பட்ட அல்லது பின்தங்கிய மாணவன், தொழிற்கல்வியில் சேர்வதால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்று கூறுபவர்கள், உயர்சாதியைச் சேர்ந்த ஏழை மாணவன் மதிப்பெண் குறைவாக வாங்கி, தொழிற்கல்வியில் சேர்வதை வரவேற்பதற்குக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? மதிப்பெண் குறைவாக வாங்கினாலும் உயர்சாதி மாணவர்கள் அறிவாளிகள் என்றும், என்ன மதிப்பெண் வாங்கினாலும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிறவி முட்டாள்கள் என்றும் நினைக்கும் ஆதிக்க மனப்பான்மையன்றி வேறென்ன?

மண்டல் கமிஷன் அறிக்கை அமுலாக்கப்பட்ட போது, பின்தங்கிய மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்ற எண்ணிக்கை எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று நீதிமன்றங்கள் கேள்வியெழுப்பின. இட ஒதுக்கீடுச் சட்டங்களும், சமூக நீதிக்கான மற்ற முன்னெடுப்புத் திட்டங்களும் 1931ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படை யில் திட்டமிடப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய நீதிமன்றங்கள், சாதி அடிப்படையிலான இப்போதைய சமூக, பொருளாதார, கல்வி புள்ளி விவரங்கள் இல்லை என்பதைத் தெரிவித்தன. 1931ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பும் முழுமையான கணக்கெடுப்பு அல்ல. இந்திய கணக்கியல் துறையின் அப்போதைய தலைவராக இருந்த ஜெ.ஹெச். ஹட்டன் ஒரு மானுடவி யலாளர். அவர் பழங்குடியினரை 'தொல்குடியினர்' எனவும், தாழ்த்தப்பட்ட மக்களை சாதி அமைப்புக்கு வெளியில் உள்ள ஒடுக்கப் பட்டவர்கள் எனவும் பிரித்தார். அவர் கணக்கெடுப்பின்படி 277 தாழ்த்தப்பட்ட சாதிகள் கண்டறியப்பட்டு, அவை மக்கள்தொகையில் 10.1% இருப்பதாக சொல்லப்பட்டது. அவருடைய கணக்கெடுப்பில் பின்தங்கிய மக்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. இந்த 80 ஆண்டுகளில் பல சமூக மாற்றங்கள் நடந்திருக் கின்றன. எனவே நிகழ்காலத்தில் சாதி அமைப்பு அடைந்திருக்க மாற்றங்களையும், இட ஒதுக்கீட்டினால் என்ன பலன் கிடைத்திருக்கிறது என்பதையும், ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்கு எப்படிப்பட்ட புதிய திட்டங்கள் தேவை என்பதைப் பற்றியும் அறிவதற்கு, முழுமையான சாதி, பொருளாதார, கல்வி புள்ளி விவரங்கள் தேவை.

இதற்காகத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டுக் கால ஆட்சியின்போது, 2011ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் கேட்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவர்களைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், முலாயம்சிங் யாதவ் போன்ற தலைவர்களும் ஆதரவளித்தார்கள். மக்களவைத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். எனினும், 2011ஆம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தனியாகவும், சாதி புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு தனியாகவும் நடைபெறும் என அமைச்சரவை முடிவு செய்தது. இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பின்பும் இன்றுவரை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இனி தனியார்மயம் தான் என்ற நிலை சமூகநீதிக்கான அச்சுறுத்தல். சமூக நீதியைக் காக்க தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும். சமூக நீதீப் போராட்டத்தை, பங்களித்தல் நீதிப் போராட்டமாக, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி, அரசு தரும் வங்கிக் கடன்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு துணைப் பொருட்கள் தயாரிக்கும் வாய்ப்புகள், தொழில் முனையும் வாய்ப்புகள் அனைத்திலும் சாதி அடிப்படை யிலான பங்கீடு வேண்டும் என்று முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தனியார் மய யுகத்தில் அவசியமாகிறது.

இந்தப் போராட்டங்களுக்கு சாதி அடிப்படையிலான புள்ளி விவரங்கள் தேவை. “தலைகளை எண்ணிக்கொள். இடங்களை பிரித்துக் கொடு” என்பது தந்தை பெரியாரின் கூற்று. சமூக நீதித் திட்டங்களை திட்டமிடவும், பொருளாதார வளர்ச்சியின் சரியாக பங்கிட்டுக் கொடுக்கவும் சாதி புள்ளிவிவரக் கணக்கு மிக அவசியம். எனவே 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அகில இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி விவரங்கள் பதியப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: மருத்துவர் செந்தில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்

Pin It