இராமாயணத்தின் யோக்கியதையும், அதில் ராமனின் ஒழுக்கமும் ஊரே சிரிக்கும் அளவுக்கு இருக்க, இந்த ஆபாசக் குப்பையை தமிழில் பாடிய கம்பன், வால்மீகியே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆபாசத்தை அள்ளித் தெளித்திருக்கின்றான். அதுவும் வகைதொகை இல்லாமல், இடம் பொருள் பார்க்காமல் தனது கைவரிசையைக் காட்டி இலக்கிய மேதைகளை கட்டிப் போட்டிருக்கின்றான். கம்பனின் ரசத்தை அள்ளி அள்ளிப் பருகிய இந்தக் கும்பல்தான் கம்ப ராமாயணத்தைப் படித்தால் இலக்கியம் வரும் என்றும், கவி அழகு பெருகும் என்றும், இன்னும் ஒருபடி மேலே சென்று மோட்சம் கிடைக்கும் என்றும் பரப்புரை செய்து வருகின்றது. தமிழரின் பண்பாடும், நாகரிகமும் கம்பனால் எப்படி தனிச்சிறப்படைந்து கொடிகட்டிப் பறக்கின்றது என்று  ஆய்வு செய்தால், முதலில் செருப்பால் அடிக்க வேண்டியது வால்மீகியையா, இல்லை கம்பனையா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு அது விவாதப் பொருளாக மாற வாய்ப்பிருக்கின்றது.

   Hanuman Ramaஇராமன் காட்டிற்கு விரட்டப்பட்ட துக்கம் தாளாமல் தசரதன் இறந்து விடுகின்றான். பரதன் இராமனை அழைத்துவர தனது உறவுகளுடன் படகில் பயணம் ஆகின்றான். தசரதன் இறந்த துக்கம் தாளாமல் வீரர்கள் அனைவரும் மனச்சோர்வு அடைந்திருக்கின்றார்கள். ஆனால் திடீரென வீரர்கள் உற்சாகம் பெற்று மனச்சோர்வு நீங்குகின்றார்கள். தசரதன் இறந்த துக்கத்தையே மிஞ்சி வீரர்களுக்கு ஏதோ ஒரு சம்பவம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்பதை நம்மால் இதன் மூலம் ஊகிக்க முடிகின்றது. அப்படி என்ன நடந்திருக்கும்? கம்பன் தனது கைவரிசையைக் காட்டுகின்றான்.

“இயல்வுறு செயல்வினாவா

   யிருகையு மெயினர் தூண்டத்

துயல்வன துடுப்பு வீசித்

   துவலை கண் மகளீர் மென்றூ

கயல்வுறு பரவை யல்கு

   லொளி புறத்தளிப்ப வுள்ளத்

தயர்வுறு மதுகை மைந்தர்க்

   கயா உயிர்ப் பளித்த தம்மா!”

 வேகமாக செல்லும்  படகுகளின் இரு பக்கத்திலும் வேடர்கள் போடும் துடுப்புகளால் நீர்த்திவலைகள்  மேலெழும்பி, ஓடத்தில் அமர்ந்துவந்த பெண்களின் மெல்லிய ஆடைகளில் பட்டு அவர்களின் அல்குல் வெளித்தெரிகின்றது. இதைப் பார்த்த இராமபக்தர்களான படைவீரர்கள் தங்களது மனச்சோர்வு நீங்கி பரவசநிலையை அடைந்தனர். வடநாட்டு இராமபக்தர்களை தமிழ்மயப்படுத்தினாலும் அவர்களை பரவசமடையச் செய்யவேண்டும் என்றால், ஆரிய வழக்கத்தின் படியேதான் செய்ய வேண்டி இருக்கின்றது. இழவு வீட்டில் உட்கார்ந்துகொண்டுகூட இராமபக்தர்கள் போர்னோகிராபி பார்த்து பரவசநிலையை அடைபவர்கள் என்ற அரிய உண்மையை கம்பர் தனது கவித்திறத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார். எங்கெல்லாம் ஆபாசம் இருக்குமோ அங்கெல்லாம் ஆரியமும் இருக்கும், நித்தியானந்தாவும் எச்.ராஜவும் சேர்ந்திருப்பது போல.

 அட இதைக் கூட சகிச்சிக்கிலாம். தசரதன் அறுபதனாயிரத்து மூன்று மனைவிகளைக் கட்டி வயசாகி ஏதோ ‘மர்மமான நோயால்’ பாதிக்கப்பட்டு இறந்தான். அதனால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல்  வெளித்தோற்றத்திற்கு சோகமாகவும், உள்ளுக்குள் ஏகாந்த மனநிலையிலும் இராமபக்தர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இராமன் தனது தாலிகட்டிய கற்புக்கரசியை இராவணன் தூக்கிக் கொண்டு போன போது எப்படி துடித்திருப்பான். அவளை மீட்டுவர வேண்டும் என்று எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்? நினைத்தாலே நமக்கும் கண்ணீர்  வரும்போல இருக்கின்றது.  நமக்கே என்றால் ராமனுக்கு? இராமன் தனது துயரத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு இலங்கைக்கு சென்று சீதையைப் பார்த்துவர கட்டபிரம்மச்சாரியான அனுமானை அனுப்புகின்றான். சீதையை அனுமான் முன்பின் பார்த்ததில்லை. ஆகையால் தனது மனைவியின் அங்க அடையாளங்களை அனுமானுக்குச் சொல்கின்றான். ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் திருவடியைத் தொழுது தமிழ்நாட்டில் ராமராஜ்யத்தைக் கொண்டுவர சதா சர்வகாலமும்  போராடிக்கொண்டு இருக்கும் சுத்த இந்துப் போராளிகள் இதை உன்னிப்பாகப் படிக்க வேண்டும்.

"வாராழி கலசக் கொங்கை

  வஞ்சிபோல் மருங்குவாள் தன்

தாராழிக் கலைசார் அல்குல்

   தடங்கடற்கு உவமை தக்கோய்!!

பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்

   பணி வென்றோங்கும்

ஓராளித் தேரும் கண்ட உனக்கு

   நான் உரைப்ப தென்ன?"

  அதாவது மானமுள்ள மகாசனங்களே! இதற்கு என்ன அர்த்தம் என்றால் “தக்கவனே! என் மனைவி சீதை இருக்கின்றாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றன! அல்குலோ, தடங்கடற்கு உவமை” என்கின்றான். மேலும் அனுமானிடம் சொல்கின்றான்

"செப்பென்பன் கலசம் என்பன்

  செவ்விள நீரும் தேர்வன்

துப்பொன்று திரள்சூ தென்பன்

  சொல்லுவன் தும்பிக் கொம்பை

தப்பின்றிப் பகலின் வந்த

  சக்கர வாகம் என்பன்

ஒப்பொன்றும் உலகின் காணேன்

  பல நினைத்து உலைவன் இன்னும்."

“என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கின்றேன். ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!” என்று சோகிக்கிறார் இராமன். "செப்புக் கலசமோ! செவ்விள நீரோ!” என்று தமது மனைவியின் தனங்கட்கு உவமை தேடுகிறார், தவிக்கிறார். ஏகபத்தினி விரதனான இராமன் பத்தினிகளை வெறுத்து, திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த அனுமானிடம் தனது பத்தினியின் அங்க அடையாளங்களை எவ்வளவு துல்லியமாகச் சொல்லி அனுப்புகின்றார் என்று பாருங்கள். இதனால் தான் இலங்கைக்குச் சென்று மிக எளிதாக கற்புக்கரசியான சீதையை அனுமானால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்கின்றது. இராவணன் மிகப் பெரிய தவறு செய்துவிட்டான் என்று நமக்கு இப்போதுதான் தோன்றுகின்றது. இராவணன் சீதையை தூக்கிக்கொண்டு வந்ததற்குப் பதிலாக இராமனையே நேரடியாக அணுகி இருக்கலாம். அனுமானுக்கு ஒரு நீதி, இராவணனுக்கு ஒரு நீதியா என்ன?

 இன்னும் கம்ப ரசத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ராமபக்தர்கள் இதையும் பரவச நிலையை அடைய பயன்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமும் பீதியும்  நம்மை ஆட்கொள்வதால் தோழர்கள் அண்ணாவின் கம்பரசத்தை முழுவதுமாகப் படித்து ராமனின் பூவுலகத் திருவிளையாடல்களையும், அதை தமிழிலே எழுதிய கம்பனின் கைவரிசையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். நாம் ராமபக்தர்களை நினைத்துப் பயப்படுவது எல்லாம் ஒன்றுதான். தனது மனைவி காணாமல் போய்விட்டாள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்லும் இராமபக்தன் தனது மனைவியின் அங்க அடையாளங்களை அவர்களது பகவான் இராமனின் மொழியில் சொல்வார்களா? என்பதுதான் அது.

  இப்படிப்பட்ட ஆன்மீக அனுபவத்தை தமிழர்களுக்கு வழங்கி, அவர்களை ஆரியக் கூட்டத்தின் அடிமைகளாய், மானமற்றவர்களாய் மாற்றப் பார்த்த கம்பனை அம்பலப்படுத்தி முச்சந்திக்கு இழுத்த ஒரே தலைவர் தமிழ்நாட்டில் பெரியார் மட்டுமே. தன் வாழ்நாள் எல்லாம் இராமாயணத்தையும், இராமனையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டே இருந்தார் பெரியார். தன்னுடைய மொழி என்பதற்காகவோ, தன்னுடைய இனத்தான் என்பதற்காகவோ அவர் எதையும் கொண்டாடவுமில்லை, யாரையும்  புகழ்பாடவுமில்லை. தன்னினத்திற்கு கம்பன் மிகப்பெரிய இழிவை ஏற்படுத்திவிட்டான் என்ற அடிப்படையில்தான் அவர் கம்பனைக் கடுமையாக விமர்சனம் செய்தார். கம்பனை தமிழினத்தின் துரோகி என்றார். கம்ப ராமாயணத்தை எரித்து அந்தச் சாம்பலை சாக்கடையில் கரைக்க வேண்டும் என்றார்.

 “..கம்பன் தன் சொந்தத்தில் தானாகவே ஒரு இராமாயணத்தைக் கற்பித்துக்கொண்டு, அதில் வெறும், பொய்யையும், புளுகையும் புகுத்தி, இராமனைக் கடவுளாகவும், இராமன் மனைவி சீதையை ஒரு பெண் கடவுளாகவும் கருதும்படி செய்துவிட்டான். அதன் காரணமாகவே இன்று எங்கு பார்த்தாலும் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் கம்ப ராமாயண காலட்சேபம், கம்பன் விழா, கம்ப ராமாயணப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கின்றது.

   இராமாயணத்தில் வால்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால்,  வால்மீகி, இராமன் தகப்பனுக்குப் பிறக்கவில்லை, புரோகிதனுக்குப் பிறந்தான் என்கின்றான். கம்பன், இராமனைத் தகப்பனுக்கு, தசரதனுக்குப் பிறந்தான் என்கின்றான். வால்மீகி, சீதையை விபச்சாரி என்றே குறிப்பிட்டு (சீதையின் சூலை) அவள் கர்ப்பத்தையே ஆதாரமாகக் காட்டிவிட்டான். கம்பன் அவைகளை மறைத்து அவளைப் பதிவிரதையாய்க் காட்டி இருக்கின்றான்.

நமது புலவர்கள்(புளுகர்கள்) பலர் கம்பனைக் காப்பாற்ற வேண்டி "வால்மீகி ஆரிய மரபுப்படி இராமாயணம் எழுதினான். கம்பன் தமிழர் மரபுப்படி இராமாயணம் எழுதினான்” என்று கூறி மழுப்பி விடுகின்றார்கள். ஆனால் இவர்கள் இப்படிப் பேசுவதில் ஒன்றைக் கவனிப்பதில்லை

 அதாவது, இராமாயணம் கடவுள் கதையை வெளிப்படுத்துவதற்கு ஏற்பட்டதா? அல்லது ஆரியர் மரபைக் காட்டுவதற்கு ஏற்பட்டதா? என்பதைக் கவனிப்பதில்லை. அன்றியும் அப்படியே அதாவது இராமாயணம் தமிழர் மரபைக் காட்டுவதாயிருந்தால் வால்மீகியில் சூர்ப்பனகை என்னும் தமிழர் மரபுப்பெண்ணை மூக்கையும் காதையும் மாத்திரம் இலட்சுமணன் அறுத்தான் என்று எழுதி இருக்கிறான். இந்த நம் புலவர்களுக்கு இதுதான் தமிழரின் மரபு போலும்!.

 இதில் கம்பன் கருத்து ஆரியரை மேன்மைப்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கவேண்டும் என்கின்ற எண்ணமா? தமிழர் மரவை மேன்மைப்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணமா? என்று சிந்திக்க வேண்டுகிறேன். ஆகவே இந்தத் தமிழ்ப் புலவர்களுக்கு புத்தி வரவும் பார்ப்பனர் சூழ்ச்சி தோல்வி அடையவும் ‘ஸ்ரீராமநவமி' என்கின்ற நாள் அன்று நமது கழகத் தோழர்கள் கம்பராமாயணத்தை நெருப்பில் கொளுத்தி அதன் சாம்பலைத் தண்ணீர் விட்டுக் கழுவி சாக்கடைக்கு விட வேணுமாய் வேண்டிக் கொள்கிறேன்…”. (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 3 ப.எண்:695).

 இன்று தமிழ்மக்களுக்கு இராமன் போன்ற கழிசடைகள் எல்லாம் தெய்வமாக வணங்கப்படுவதற்குக் காரணம் இனத்துரோகி கம்பனே ஆவான். தன்னுடைய தமிழ்ப்புலமையும், அறிவாற்றலையும் பார்ப்பனியத்துக்கு விற்று வயிறு கழுவிய கவிஞர்களின் முன்னோடியாக, வழிகாட்டியாக கம்பனே தமிழ்நாட்டில் அறியப்படுகின்றான். தமிழ்மக்களின் தன்மான உணர்வை மழுங்கச் செய்து அவர்களை முட்டாள்களாக, அறிவியல் சிந்தனை அற்றவர்களாக, பார்ப்பன அடிவருடிகளாக மாற்றத் துணைபோன கம்பனை தமிழ்மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பெரியார் கடுமையாக எதிர்த்ததில் வியப்பொன்றும் இல்லை.

     பெரியார் கம்பனையும், இராமனையும் பற்றிச் சொன்னதை ஏற்க மனமின்றி அதை உதாசீனப்படுத்திய கூலிப்படை கவிஞர்களுக்கு மத்தியில் அன்று அதை ஏற்றுக்கொண்டவர் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் ஆவார். அவர் அப்படியே பெரியாரின் கருத்தை எதிரொலித்தார்.

   “ ……..எண்ணூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த கம்பரென்னும் புலவரால் பாடப்பட்ட இராமாயணம் வட மொழியிலுள்ள வால்மீகி  ராமாயணத்தைப் பார்த்துச் செய்யப்பட்டதாயினும், அதனிலும் பார்க்கப் பொய்மை நிறைந்ததாய், பழைய தமிழாசிரியர் கைக்கொண்ட வழக்கிற்கு மாறுபட்டதாய் தோன்றினமையின் அக்கம்பருக்குப் பிற்பட்ட சிறந்த உரை ஆசிரியர்களாலும் அஃது ஏற்றுக்கொள்ளாமல் போயிற்று. இவ்வாறு கம்பர் நடவாத பொய்க்கதையாக்கி இராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்துச் செய்தமையால் வடமொழி பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா அதன் இலக்கியச் சுவைத் தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யாவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்கனவே கம்பருக்குப் பின் வந்த புலவர்கள் எல்லோரும் பொது மக்களை ஏமாற்றுதல் பொருட்டு பார்ப்பனரும், கோயில் குருக்கள்களும் வடமொழியில் வறைந்தோய்த்த பொதுவான புராணங்களையும் தலபுராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்த்து வைத்து பண்டைத் தமிழ் மெய் வழக்கினை அடியோடு அழித்துவிட்டனர்….”. நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 2 ப.எண்:287).

  ஆனால்  எவ்வளவுதான் எடுத்துக்காட்டி சொன்னாலும், மானமுள்ள மனிதர்கள் மட்டுமே தங்களை மாற்றிக்கொண்டு நேர்மையாக நடக்க முயற்சிப்பார்கள். மானமற்ற மனிதர்களிடம் எவ்வளவுதான் சொன்னாலும் அது சுவற்றைப் பார்த்து கத்துவது போன்றதுதான்.இதை பெரியார் அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள் இராமாயணத்தை ஆதரித்த கும்பலைப் பார்த்து,

"இது தமிழனுக்கு மானமில்லை என்பதையும் பகுத்தறிவில்லை என்பதையுமே காட்டுகின்றது. எவ்வளவு ருசி உள்ள பண்டமானாலும் மலத்தில் கிடப்பதை எடுத்து உண்பானா? இராமாயணம் எதற்கு எழுதப்பட்டது? யாரால் எழுதப்பட்டது? இதுகூட தெரிந்து கொள்ள முடியாதவர்களை மனிதக் கூட்டத்தில் சேர்க்க முடியுமா? அப்படிப்பட்டவர்களை மதிக்கலாமா? மானத்தைப் பற்றி கவலை இல்லாதவன் எவ்வளவு படித்தவனானாலும் அவன் தாசிக்கு சமானமானவனே ஆவான். அவனது படிப்பும் மானாபிமானமுள்ளவர்களுக்கு ஆபத்தாகவே முடியும்." ( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 3 ப.எண்:312)

  மேலும் இராமாயணத்தை கலை, கலை என்று தூக்கி வைத்துக் கொண்டுத் திரியும் கும்பலைப் பார்த்து கேட்கின்றார், “கலையென்றால் அதற்கொரு விளக்கம் வேண்டாமா? அதற்கொரு லட்சணம் வேண்டாமா? அருமையான கற்பனையின் மூலம் ஒருவன் ஒரு கவி எழுதி மற்றவனின் மனைவியைக் கேட்டால் பக்தர்கள் போல் மகிழ்ச்சியடைய வேண்டியதுதானா? அல்லது அவனை உதைக்க வேண்டியதுதானா? இந்தச் சிறு விஷயம் தெரியாதவர்கள் தங்களைப் பண்டிதர்கள் என்றும், தமிழபிமானிகள் என்றும் சொல்லிக்கொண்டால் நம்மால் மதிக்க முடியுமா?..." என்று. (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 3 ப.எண்:317)

  மேலும் “வடநாட்டில் இராவணனைக் கொடும்பாவி உருவமாக்கி நெருப்பு வைத்துக் கொளுத்தினால், தென்னாட்டில் இராமனை அயோக்கியக் கொடும்பாவி ஆக்கி கொஞ்சம் கொஞ்சமாய் கொளுத்த வேண்டமா? நீதி என்றால் ஒரு குலத்திற்கு ஒரு நீதியா? மானம் என்றால் ஒரு குலத்திற்கு ஒரு மானமா? மனம் புண்படும் என்றால் ஒரு குலத்திற்கு ஒரு புண்ணா?" என்றும்,  "உங்களின் மான வாழ்வு உங்களை சாகடித்தாலும் பரவாயில்லை; ஆனால் முதுகில் குத்துப்பட்டு சாகாதீர்கள் என்று மாத்திரம் அல்லாமல் 'கம்பன் விழா'க் கொண்டாடும் மானசூனியங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்றார்.

   தமிழ்மக்களின் மானங்கெட்ட நிலையை எண்ணி இதை எழுதும் போது பெரியார் எவ்வளவு மனக்கொந்தளிப்புக்கு ஆளானர் என்பதை அவரே பதிவும் செய்கின்றார்  “(இதை எழுத எழுத எனக்கு தலைவலி அதிகமாகி விட்டதால் இத்தோடு நிறுத்தி விடுகின்றேன்: மன்னிக்கவும்)" என்று .( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 3 ப.எண்:763)

   ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. ராமராஜ்ய ரத யாத்திரை தமிழ்நாட்டில் வந்தபோது அதை ஓட ஓட தமிழினம் விரட்டியடித்ததைப் பார்த்திருந்தால் ஈரோட்டுக் கிழவன் அகமகிழ்ந்து ஒரு இளைஞனைப் போல துள்ளிக் குதித்திருப்பான். கிழவனின் தலைவலி எல்லாம் பறந்து போய் இருக்கும்.

  காவி வானரங்களுக்கு தலைவலி தொடரும்…

- செ.கார்கி

Pin It