கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

'திராவிடர் என்பதன் உள்ளடக்கத்தைப் பாருங்கள், அகராதியில் பொருள் தேடாதீர்' என்னும் கொளத்தூர் மணி அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினை:

முனைவர் த. செயராமன் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் எழுதி வரும் ‘இனவியல்: ஆரியர்-திராவிடர்-தமிழர்’ என்னும் தொடர் ஆய்வுக் கட்டுரைக்கு எதிர்வினையாக இதுவரை கீற்று தளத்தில் பல கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். கடைசியாகத் திரு கொளத்தூர் மணியின் மயிலாடுதுறை உரையையும் கண்டேன். இதுவே இக்கட்டுரையை எழுதும்படி என்னைத் தூண்டியது. 

பேராசிரியர் செயராமன் அவர்கள் திராவிடர் என்ற கருத்துக்குத் தமிழ் இலக்கியங்களில் அகச் சான்றேதும் இல்லை என்றும், அதாவது தமிழர்கள் தங்களைத் திராவிடர் என எக்காலத்திலும் முன்னிறுத்திக் கொண்டதில்லை என்றும், தமிழர்கள் மீது திராவிடர் என்னும் முத்திரையை அழுத்தி வந்தவர்கள் உள்ளபடியே தமிழர்களின் இனப் பகைவர்களாகிய ஆரியர்களே என்றும், வரலாற்றில் தமிழகத்துப் பார்ப்பனர்களே கூட தங்களைத் திராவிடர்கள் என கூறிக் கொண்டனர் என்றும், தமிழர்களே தங்களைத் திராவிடர்கள் என அழைத்துக் கொண்ட வரலாற்றுப் பிழை கால்டுவெல்லின் ஆய்வுப் பற்றாக்குறையால் ஏற்பட்டதே என்றும் தெள்ளத் தெளிவாகத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் மெய்ப்பித்துக் காட்டி விட்டார். 

திரு செயராமனுக்கு எதிர்வினையாகத் திரு கொளத்தூர் மணி ஒரு விளக்கமளிக்கிறார்: 'ஆட்டம்' (atom) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இலத்தீன் மொழியில் 'பிரிக்க முடியாதது' என்பதுதான் உண்மையான பொருள் என்றாலும் பிற்காலத்தில் அணுவைப் பிளக்கக் கற்றுக் கொண்ட அறிவியல் உலகம் இப்போதும் எப்படி அதே சொல்லையே பயன்படுத்தி வருகிறதோ, அதே போல்தான் திராவிடர் என்ற சொல்லுக்குரிய இன்றைய பயன்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது தமிழர்களிடமிருந்து ஆரியர்களைப் பிரித்துக் காட்ட விரும்பிய பெரியார் திராவிடர் என்ற சொல்லுக்கு அப்படி ஓர் உள்ளடக்கத்தை வழங்கியதாகச் சொல்கிறார். 'ஆட்டம்' என்னும் ஆங்கிலச் சொல்லில் உள்ள சிக்கலை இப்போது உருவாகியுள்ள திராவிடர் என்னும் சொல்லுக்குரிய சிக்கலுடன் தோழர் கொளத்தூர் மணி எப்படிப் பொருத்திப் பார்க்கிறார் என விளங்கவில்லை. 

'ஆட்டம்' என்ற சொல் அன்றைய ஐரோப்பிய அறிவியல் உலகமே ஏற்றுக் கொண்டு பயன்பாட்டுக்கு வந்ததே தவிர ஏதோ தனியரு மனிதராகப் பார்த்துப் புனைந்த சொல்லன்று. அந்தச் சொல்லுக்கு நேர்மாறான ஒரு பொருள் பிற்கால வரலாற்றில் வந்தாலும் ஏற்கெனவே புழங்கிப் போய்விட்ட சொல்லை மாற்ற வழியின்றி அதனையே அறிவியலர்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது உண்மையே. சரி, அது எப்படி திராவிடர் சொல்லுக்குப் பொருந்தும் என்பதைத் திரு கொளத்தூர் மணி விளக்குவாரா? அணு பற்றி இவ்வளவு பின்னோக்கிச் சென்று ஆய்கிற கொளத்தூர் மணி அவர்கள் திராவிடர் என்ற சொல் குறித்தும் ஆதியிலிருந்து ஆய்ந்துரைக்க வேண்டியதுதானே? அணு பற்றித் தெரிந்தபோது அதைப் பிளக்க முடியாது என்பதே அன்றைய இயற்கை அறிவியல் நிலையாக இருந்தது.

ஆனால் திராவிடர் என்றால் ஆரியர் இல்லாத தமிழர்கள் எனப் பொருள் வரும்படியான சமூக அறிவியல் நிலையேதும் அன்றைய தமிழ்ச் சூழலில் இருந்ததா? அல்லது எதையும் பகுத்துடைத்துப் பார்க்கும் பெரியார் அப்படிப்பட்ட சான்றெதையும் தமிழுலகத்துக்கு வழங்கினாரா? தமிழர்கள் என்றால் பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள், திராவிடர்கள் என்றால் வர மாட்டார்கள் என்பதுதானே அவர் வழங்கிய ஒரே சான்று? இது எப்படிச் சமூக அறிவியல் ஆகும்? வரலாற்றில் பார்ப்பனர்களே திராவிடர்களாக அறியப்பட்டவர்கள் என்பது செயராமன் ஆய்ந்துரைக்கும் வரலாற்று உண்மையாக இருக்க, இதற்கு நேர்மாறான ஒரு முடிவைச் சொன்ன பெரியாரின் தனிப்பட்ட கருத்துக்கு 'ஆட்டம்' என்னும் வரலாற்று வழிப்பட்ட சொல் எவ்வகையில் துணைசெய்யும்? திராவிடர் என்பது பெரியார் அன்றைய சூழ்நிலைக்காக வரித்துக் கொண்ட ஒரு சொல்தான் என்றால், வரலாற்றில் எந்நிலையிலும் திராவிடரில் தமிழர் அடங்கியதில்லை என்ற பேராசிரியர் செயராமனின் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் திரு கொளத்தூர் வருவதாகக் கொள்ளலாமா?   

தமிழர்கள் என்றால் பார்ப்பனர்கள் வந்து விடுவார்கள் சரி, பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்கள் எனச் சொல்லிக் கொண்டு வந்தால் உங்கள் நிலை என்ன எனப் பெரியாரிடம் கேட்டபோது, பார்ப்பனர்கள் அப்படி மனந்திருந்துவாரேயானால் அவர்களைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்றாராம். ஆனால் ஒரே ஒரு பார்ப்பனர் கூட இன்று வரை திராவிடர் கழகத்திலோ, பெரியார் திராவிடர் கழகத்திலோ உறுப்பினராக இல்லையே, ஏன்? அப்படியானால் தன்னைத் திராவிடர் எனச் சொல்லிக் கொள்ளும் துணிவு பெற்ற ஒரு பார்ப்பனர் கூட தமிழகத்தில் ஆதி தொட்டுத் தோன்றியதே இல்லையா என்ன? தலித் கிறித்துவப் பெண்ணை மணந்து கொண்டு, சாதி துறந்து, பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜோதி சங்கர் என்னும் பார்ப்பனர் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்புவதாகப் பெரியாரிடம் தெரிவித்தபோது அதனை அவர் ஏற்க மறுத்து விட்டதாகத் தோழர் நாத்திகன் கேசவன் சமூகநீதித் தமிழ்த் தேசம் இதழில் எழுதியுள்ளாரே, பின்னர் பெரியார் இனத் தூய்மை பார்த்துத் திராவிடர் கருத்தை உருவாக்கவில்லை எனத் திரு கொளத்தூர் மணி கூறுவது எப்படி?

இப்படித் தூய பகுத்தறிவுடன் வந்த பார்ப்பனர்களையும் வடிகட்டி இயக்கத்தை இந்தப் பார்ப்பனப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் கண்ணுங்கருத்துமாய்ப் புடம் போட்ட 'திராவிடர்களை' மட்டுமே தேர்ந்தெடுத்த திக இன்று ஆரியத்திடம் மண்டியிட்டுக் கிடப்பது எப்படி? இந்துத்துவ வெறி பிடித்த பாப்பாத்தி ஜெயலலிதாவைச் சமூகநீதி காத்த வீராங்கனை ஆக்கி அழகு பார்த்தது எப்படி? தமிழீழ இனப்படுகொலையைத் தடுப்பதற்குத் தமிழினப் பகையாளி ஜெயலலிதாவுக்கு வாக்குக் கேட்ட பெரியார் திகவின் நிலைப்பாடு எந்த வகையில் நேர்மையானது? இது அப்பட்டமான தன்முரண்பாடு இல்லையா? 

இராமன் ஆரியன் என்றும், இராவணன் திராவிடன் என்றும், ஆரிய-திராவிடப் போராட்டமே இராமாயணம் என்றும் திராவிட இயக்கங்கள் காலங்காலமாகச் சொல்லி வரும் கதை. தோழர் பெ. மணியரசன் தமிழர் கண்ணோட்டம் இதழில் இராமர் ஒரு தமிழர் என்ற கருத்தை வெளிப்படுத்திய போது புரட்சி பெரியார் முழக்கம் இதழ் அதனைக் கடுமையாக விமர்சித்தது. ஆனால் இப்போது திரு கொளத்தூர் மணி அவர்களே இராமர் ஒரு சூத்திரர் எனச் சொல்கிறார். அப்படியானால் இராவணன் யாரெனச் சொல்வாரா? 

திராவிடம் பேசும் இந்தக் கழகங்களின் இத்தகைய தன் முரண்பாடுகள் ஏதோ தற்செயலாக நடந்தவையல்ல. திராவிடர் என்னும் சமூக அறிவியலற்ற பார்வையின் தருக்க முடிவே ஆகும். 

இன்று தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா உட்பட உலகெங்கும் ஆழ வேரூன்றி விட்ட திராவிடர் என்னும் கருத்தியலுக்குத் திரு செயராமன் அவர்கள் தமது ஆழ்ந்த அறிவியல் வாதுரைகளால் அடி மேல் அடி கொடுத்து வருகிறார்; எத்தகைய காழ்ப்போ, தனிமனிதச் சாடலோ இன்றித் தாம் எடுத்துக் கொண்ட கருத்தில் மட்டுமே ஊன்றி நின்று சான்றுகளை அடுக்கி வருகிறார்.

யார் திராவிடர்? என்பது குறித்துத் தெள்ளத் தெளிவான ஓர் அறிவியல் ஆய்வுரை தமிழக மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், திராவிடர் கழகச் சார்பாளர்கள் தாங்கள் நீண்ட காலமாக ஓங்கிப் பேசி வரும் ஒரு மாபெரும் வரலாற்றுக் கருத்தை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் அறிவியல் அடிப்படையில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றே என்னைப் போன்ற பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். 

திரு வீரமணியின் திராவிடர் கழகம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. கலைஞருக்கு ஏவல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இதில் அக்கறை இல்லாது போனதில் வியப்பில்லை.

தமிழினச் சிக்கல்களில் தீவிரக் களப் பணியாற்றி வரும் பெரியார் திகவிடமிருந்து இயல்பாகவே மறுப்பு வெளிப்பட்டது. ஆனால் திராவிடர் குறித்துத் திரு செயராமன் எழுப்பியுள்ள அடிப்படை வினாக்கள் எதற்கும் நேரடியாக ஒரு பதிலைக் கூட அவர்கள் இது வரை தரவில்லை என்பதே இங்கு வருத்தத்துக்குரிய செய்தி. கருத்தைக் கருத்துத் தளத்திலேயே சந்திக்காமல் உணர்ச்சிவயப்பட்டது பெரியார் திக. தனிமனிதச் சாடல்களில் ஈடுபட்டது, திராவிடக் கருத்தை எதிர்ப்போரைப் பார்ப்பனியத்துக்குச் சோரம் போவதாகக் கேலி செய்தது, அறிஞர் த. செயராமனை மாயவரம் குணா எனத் தூற்றியது, அவர்தம் அருமுயற்சிக்குப் பல வகையிலும் உள்நோக்கம் கற்பித்தது, பொருந்தாத எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் கூறி கருத்தைக் குழப்பப் பார்த்தது. அவர்களின் நடையில் எள்ளலும் பகடியுமே விஞ்சி நின்றன. இப்படிக் கிண்டலடிக்கும் செயலையும், உள்நோக்கம் கற்பிக்கும் போக்கையும் பெருங்குற்றமாகக் கருத வேண்டியதில்லை. ஆனால் இது அவர்களின் அடிப்படை மறுப்புரைக்குத் துணை செய்வதாக இருக்க வேண்டுமே தவிர அதுவே மறுப்புரையின் முதன்மை ஓட்டமாக இருக்கக் கூடாது. பெரியார் திக எழுதும் மறுப்புரைகள் எல்லாம் கிண்டலிலும் கேலியிலுமே கவனம் செலுத்துவதால் அவர்களிடம் அறிவியல் அடிப்படையிலான பதிலேதும் இல்லையோ என்றுதான் ஐயுற வேண்டியுள்ளது. 

கால்டுவெல் காலத்துக்கு முன்னால் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்ற சொல்லால் குறித்துக் கொள்ளவில்லை என்ற செயராமனின் அடிப்படை வாதத்தைத் தக்க சான்றுகளுடன் பொய்ப்பித்துக் காட்டுவதே பெரியார் திகவின் முதற்பணியாக இருக்க வேண்டும். இதைச் செய்து முடித்து விட்டால் திராவிடர் என்ற சொல்லின் மீது எந்தப் பொருளையும் உள்ளடக்கிச் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. 

1. திராவிடர்கள் என்றால் வரலாற்று நோக்கில் தமிழர்கள் அல்லாதவர்கள்.

2. திராவிடர்கள் என்றால் பெரியாரின் நோக்கில், அல்லது அவர் தம் காலத்திய அரசியல் சூழலுக்கேற்ப வரித்துக் கொண்ட பொருளின்படி ஆரியர் அல்லாத தமிழர்கள். 

இந்த இருவேறு கருத்துகளையும் தனித்தனியாக அணுகினாலே இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன். இரண்டில் ஏதேனும் ஒன்றைத்தான் ஏற்க முடியும். ஒரு பக்கம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் திராவிடர்கள் தமிழர்களே என மெய்ப்பிக்கப் பார்ப்பது, மறுபுறம் ஆரியரிடமிருந்து தமிழரைப் பிரிக்கப் பெரியார் கையாண்ட ஒரு சொல்லே திராவிடர் என விளக்கமளிப்பது எனப் பெரியார் திக இரண்டுக்கும் மாறி மாறித் தாவுவதே வெளிப்படையான தன்முரண்பாடுகளுக்குக் காரணமாகி விடுகிறது. 

ஆக, இச்சிறு கட்டுரை வாயிலாகப் பெரியார் திக தோழர்களைப் பணிவாகக் கேட்டுக் கொள்ள விரும்புவது என்னவென்றால், தயவுசெய்து திரு செயராமனின் திராவிடர் ஆய்வைக் கருத்தியல் தளத்தில் சந்தியுங்கள். முடியவில்லை என்றால், அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு, ஒரு புது நிலைப்பாட்டுக்கேனும் வாருங்கள். அதாவது, "திராவிடர்களில் தமிழர் அடங்க மாட்டார் என்ற செயராமனின் கருத்து வரலாற்று வழிப்பட்ட உண்மைதான் என்றாலும், திராவிடர் என்ற சொல் பெரியார் காலந்தொட்டுத் தமிழ்ச் சூழலில் நீண்ட காலப் பயன்பாட்டில் இருந்து வருவதால் அதை இனி ஆரியர்களிடமிருந்து தமிழர்களைப் பிரித்துக் காட்டும் ஓர் இடுகுறிச் சொல்லாகப் பயன்படுத்த விழைகிறோம்" என வெளிப்படையாக அறிவியுங்கள். அது முனைவர் செயராமனின் அரிய ஆய்வுக்குத் துணை செய்யும், நமது தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு தோழமையான சூழலுக்கு வழி வகுக்கும் எனக் கருதுகிறேன். அதை விடுத்துத் தன் முரண்பாடான கருத்துகளைக் கூறிக் குழப்புவது, தனி மனிதச் சாடல்களில் இறங்குவது என்பது தோழர் கொளத்தூர் மணி போன்ற ஈக வாழ்க்கை வாழும் சான்றோர்களுக்கு அழகன்று. 

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)