மக்களை இணைக்கும் என்ற அடைமொழியுடன் உலகம் முழுவதும் தன் செல்போன் விற்பனை மூலம் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ள நிறுவனம் நோக்கியா. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினால் என்பது மாறி அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா என்ற நிலை உருவாகியுள்ளது. அந்நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயார்செய்வது தான் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி. தைவான் நாட்டின் கம்பெனியான ஃபாக்ஸ்கான் 2006ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பத்தூரில் தன்னுடைய உற்பத்தியை துவக்கியது. இந்நிறுவனத்தில் 1800 நிரந்தர ஊழியர்களும், 6000 தற்காலிக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும் பகுதி இளம் ஆண்களும், பெண்களும் பணியாற்றுகின்றனர்..
இதில் பெரும் எண்ணிக்கையில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ. 150 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றும் இவர்களுக்கு,. இந்திய நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்கள் அடிப்படையில் தரப்படவேண்டிய நிரந்தர பணி நியமன ஆணை, ஈ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வை துவக்கினர். 2010 ஜூலை மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 200 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.. இது தொழிலாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷவாயு கசிவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரியபோது சரியான பதில் இல்லை.
தங்களுக்கு நியாயம் கேட்கும் என உருவாக்கப்பட்ட தொ.மு.ச.வோ நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது. இதன் காரணமாக நிர்கதிக்கு ஆளான தொழிலாளர் இந்திய தொழிற்சங்க மையத்தை (சிஐடியு) அனுகியுள்ளனர்.. பின் தங்களுக்கான சங்கத்தை உருவாக்கி ஆகஸ்ட் 22 அன்று செங்கொடியை தங்கள் நிறுவனத்தின் முன்பாக ஏற்றினர். ஆகஸ்ட் 24 அன்று ஃபாக்ஸ்கான் நிர்வாகம், தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் தங்கள் நிறுவனத்தில் வாக்கெடுப்பு மூலம் எந்த சங்கத்திற்கு பெரும்பான்மை என்பதை தீர்மானித்து உதவிட கேட்டுக்கொண்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த கடிதத்தின் மீது தொழிலாளர் நலத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிஐடியு இத்தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் சம்பள கோரிக்கைகாக தாவா ஒன்றை தொழிலாளர் நலத்துறையிடம் எழுப்பியது. தாவா நிலுவையில் உள்ள நிலையில் தொ.மு.ச ஒப்பந்தம் போட முயற்சி செய்தது.. இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் தங்களின் கடைசி ஆயுதமான வேலை நிறுத்தத்தை செப். 23 முதல் துவங்கினர். வேலை நிறுத்தம் அமைதியாக நடந்துவரக்கூடிய நிலையில் அக். 9 அன்று சிஐடியு பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் உட்பட 319 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.. ஜாமீனில் வந்த அன்றே மீண்டும் பொய் வழக்கு போட்டு அக் 13ந்தேதி அ.சவுந்தரராசன், இ.முத்துகுமார் உட்பட 12 தோழர்களை கைவிலங்கிட்டு உத்தரமேரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இது மனித உரிமையையும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நீதிக்கும் முரணானது என்று சவுந்தரராசன் காவல்துறையிடம் எடுத்துரைத்த பின்னும் காவல்துறையின் வக்கிரம் அடங்கவில்லை.
இத்தோடு மட்டுமல்ல, ஸ்ரீபெரும்பத்தூரில் சிஐடியு அலுவலகம் செயல்பட இடம் வாடகைக்கு விட முன்வருபவர்களை திமுக குண்டர்களும், காவல்துறையும் மிரட்டியது. மேலும், ஜாமீன் கேட்டு மனுசெய்யும் போது, செஷன்ஸ் நீதிபதி தற்காலிக விடுப்பு, பேச்சு வார்த்தையின் போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் விடுப்பு என காலதாமதம் செய்து ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் காட்டினர். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் நாங்கள் நினைத்தால் நீங்கள் நடக்கமுடியாது, இருக்கமுடியாது, போராட முடியாது கொக்கரித்துள்ளார்.
இப்போராட்டம் நடைபெறும் காலத்தில் தான் தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. அந்த ஒப்பந்தங்களில் என்ன தான் இருக்கிறது, 1) தனி சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்படுவது, 2) குறைந்த விலையில் நிலம் 99 வருடத்திற்கு, 3) தண்ணீர் வசதி, 4) குறைந்த விலையில் மின்சாரம், 5) 10 ஆண்டுகள் வரிச்சலுகை 6) தொழிற்சாலை போக மீதி இடத்தை உள்வாடகைக்கு விட அனுமதி என வெளியில் தெரியாத எத்தனையோ சலுகைகள் உள்ளன. அரசிற்குள் அரசாக உள்ள இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்திய சட்டங்கள், சட்டங்களின் அமலாக்கம் கேள்விக்குறியாக உள்ளது.
ஸ்ரீபெரும்பத்தூரில் நோக்கியா நிறுவனம் தன் பெயரில் 221 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் வைத்துள்ளது. ஒரு ஏக்கர் 4.5 லட்சம் ரூபாய்க்கு, 99 வருட குத்தகைக்கு இந்நிறுவனம் தமிழக அரசிடம் பெற்றுள்ளது. இம்மண்டலத்தில் 7 நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஃபாக்ஸ்கான். இக்குழுமத்தின் வரிச்சலுகை துவக்கப்பட்டது முதல் தற்சமயம் வரை 645 கோடி ரூபாய் தமிழக அரசு வாட் வரி விதிப்பின் மூலம் வரிச்சலுகை தந்துள்ளது.
இப்படியாக அரசின் சலுகைகளை அள்ளிச் செல்லும் நிறுவனத்தில் தொழிலாளர் நிலை என்ன? உலகமயம் காட்டும் பாதையான. தொழிலாளர் உழைப்பை அடிப்படையாக கொண்டு கொள்ளை இலாபத்தை கொண்டு செல்கிறது. ஆனால், உழைப்பிற்குகேற்ற ஊதியம், பணி நிரந்தரம், ஈ.எஸ்.ஐ, பி.எப், ஓய்வு ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் சுரண்டி இலாபம் தனக்குமட்டுமே என்ற நோக்கத்தோடு உள்ள கோட்பாடுதான் உலகமயம்.
இளைஞர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு, அவனை தூரவீசும் கலாச்சாரமே தனியார்மயம். இதுவே நோக்கியா, ஃபாக்ஸ்கான, ஹ¨ண்டாய், ஃபோர்டு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் தமிழக அரசு முதலாளிகள் பக்கமே என்று மீண்டும் வெளிக்காட்டியுள்ளது ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்.