பாரதியின் புகழ்பெற்ற 'கரும்புத் தோட்டத்திலே' பாடலைப்போலவே பழைய மக்கள் கலைமன்றப் பாடல் ஒன்று உண்டு.
"கரும்புத் தோட்டத்திலே ஏழைமக்கள் களையெடுக்கையிலே
கருக்கருவாள் போல சோகை
கைகளை கிழிக்கும்
கசியும் வேர்வை காயத்திலே பட்டு
கனலாய் கொதிக்கும் உடம்பு
தனலாய் எரியும்."
மக்கள் மன்றத்தில் இந்தப்பாடல் பாடப்படும்போது கேட்போரிடம் இருண்ட முகத்தோடு கனத்த பெருமூச்சு வெளிப்படுவதை நான் எப்போதும் கண்டிருக்கிறேன்.
கரும்புத் தோட்டத்து வேலை கொடுமையானது. இரண்டு, மூன்று முறை களையெடுப்பதும், ஒவ்வொரு முறை நீர்பாய்ச்சுவதும் அத்தனை சுலபமானதாக இருக்காது. சருமத்தை கிழிக்கின்ற சோகைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பெண்கள் காலிறங்க பாவாடைகளையும், தனது தந்தை அல்லது கணவன்மார்களின் முழுகை சட்டைகளையும் அணிந்துகாெள்வதை நான் எப்போதும் கண்டிருக்கிறேன்.
அத்தனை துன்பப்பட்டு உற்பத்தியில் ஈடுபடும் கரும்பு விவசாயிகளின் இன்றையநிலை கண்களில் குருதியை கொண்டுவருவதாக ள்ளத. உடல் வருத்தி உழைக்கின்ற விவசாயி கடந்த 4 ஆண்டுகளாக விற்ற கரும்புக்கான நிலுவைத் தொகையினை பெறமுடியாத அவலத்தில் கிடக்கிறான். ஆங்காங்கே தற்கொலைகள் வேறு.
கரும்பு விவசாயிகளின் அவலம்
தற்போதைய கணக்குப்படி தமிழகத்தில் உள்ள 38 சர்க்கரை ஆலைகளில் தனியாருக்குச் சொந்தமான 24 சர்க்கரை ஆலைகளில் கடந்த 4 ஆண்டுகளாக மாநில அரசின் கூடுதல் தொகை வழங்கப்படவில்லை. இதன் மூலம் மட்டுமே சுமார் 1400 கோடிரூபாய் விவசாயிகளுக்கான பணம் நிலுவையில் உள்ளது. கூட்டுறவு ஆலைகள் தமிழகத்தில் 13 உள்ளன இவற்றில் இரண்டாண்டு நிலுவைத் தொகையாக சுமார் 220 கோடிரூபாய் நிலுவை உள்ளது. தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காக தமிழக அரசு மௌனம் காக்கிறது.
தி.மு.க குறித்தும் தினகரன் குறித்தும் மிடுக்காக பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் இந்த ஈன அமைச்சர்கள் அதில்காட்டும் அக்கரையில் 100ல் 1 விழுக்காடு காட்டினால் கூட விவசாயிகளின் துயர்மிகு பிரச்சனையில் ஒரு சுமூகத் தீர்வு கிடைக்கக் கூடும்.
விலை நிர்ணய முறையில் உள்ள சிக்கல்கள்
பொதுவாக ஒரு அரவை ஆண்டுக்கான கரும்பு விலை நிர்ணயம் என்பது பருவ மழையைப் போன்றே இருக்கிறது. எப்போது வரும், எவ்வளவு வரும் என விசாயிகள் ஏங்கிக் கிடப்பது வாடிக்கையாகி விட்டது. பல வேளைகளில் இந்த ஆண்டுக்கான விலை இவ்வளவு என தெரியாமலேயே கரும்பை ஆலைகளுக்கு கொடுக்கும் அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
முதலில் மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அது வந்து விட்டால் தமிழக அரசு கொடுக்கும் கூடுதல் விலைக்கு காத்திருக்க வேண்டும். ஆதார விலையாக கடந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 2300. மாநில அரசு ஒதுக்கியது 450ரூபாய் ( முந்தைய ஆண்டுகளில் இது ரூ. 650 ஆக இருந்தது). இதில் போக்குவரத்து செலவுக்காக ருபாய் 100. ஆக மூன்றையும் சேர்த்து மொத்தமாக கடந்த ஆண்டைய கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 2850 ரூபாய் ஆகும். இதில் தமிழக அரசு நிர்ணயித்த தொகையை வழங்கிட முடியாது எனத்தான் ஆலைகள் அடம் பிடித்து வருகின்றன. இந்தியாவிலேயே கரும்பு விவசாயிகளின் அதிக பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. இந்தப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உ.பி. கடந்த 2005 ல் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விலை நிர்ணயத்தில் மாநில அரசுக்கு அளித்த அதிகாரம் இன்றைக்கும் ஏட்டளவிலேயே கிடக்கிறது.
தேய்ந்துவரும் கரும்புக்கான உற்பத்தி பரப்பு
குறைந்த கொள்முதல் விலை நிர்ணயம் காரணமாகவும், குறைந்த விலையைக்கூட பிடித்தமில்லாமல் கொடுக்க வக்கற்ற நிலைகாரணமாகவும், நீர் பற்றாக்குறை காரணமாகவும் கரும்பு உற்பத்திக்கான பரப்பு தமிழகத்தில் வெகுவாக குறைந்து விட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 41% கரும்பு விவசாயப் பரப்பு குறைந்து போய்விட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2006-2007 ஆண்டுகளில் 39.12 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு விவசாயப் பரப்பு கடந்த 2016-17 அரவை ஆண்டுகளில் 23.73 லட்சம் ஹெக்டேராக சுருங்கிப் போய்விட்டது. கரும்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் 3 லட்சம் விவசாயக் குடும்பங்களும் அதைவிட இரட்டிப்பான விவசாயக் கூலிகளும் இப்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்.
நடப்பாண்டில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மொத்தம் 65 லட்சம் டன் மட்டும்தான் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருக்கின்ற 38 ஆலைகளின் அரவைக்கு சுமார் 2 மாதங்களுக்கு கூட இக் கரும்பு போதாதது என்பதும், இதனால் ஆயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் என்பதும் மற்றொரு வேதனையான விஷயம். 65 லட்சம் டன் கரும்பைக்கொண்டு 6 லட்சம் டன் சர்க்கரையை உருவாக்கலாம் என்பது கணக்கு. தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு 1.5 டன் சர்க்கரை தேவை என்ற நிலையில் இந்த ஆண்டின் உற்பத்தி 4 மாதத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
கடந்த 2013-2014 ம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி தமிழகத்தில் 23.70 லட்சம் டன் என்றும் அந்த ஆண்டில் கரும்பு உற்பத்தி 2.60 கோடி டன் என்றும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது 4ல் 1 பங்கு கூட இந்தஆண்டு உற்பத்தி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது ஆலைகளில் உள்ள சர்க்கரை கையிருப்பு என்பது 5.20 லட்சம் டன் மட்டுமே.
அரசுகளின் அலட்சியப் போக்கே நெருக்கடிகளுக்கு காரணம்
உலக சர்க்கரைச் சந்தையில் போதுமான விலையில்லாமல் போனதே சர்க்கரை ஆலைகளின் நெருக்கடிக்கு காரணம் என அதிகாரத்தில் உள்ளவர்கள் பொய்யான தகவல்களை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள். 2013-2014 ம் ஆண்டில் 273 கோடியை தமிழகத்தில் நிலுவையாக வைத்த ஆலைகள் 2014-2015ம் ஆண்டில் 286 கோடியை நிலுவை வைத்தன. 2015-2016 ல் வரலாற்றிலேயே இல்லாத அளவான 1000 கோடிக்கும் மேலான ரூபாய்களை நிலுவையில் வைத்துள்ளன.
எத்தகு நெருக்கடியில் விவசாயிகள் தத்தளித்தாலும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை. இன்றைய கரும்பு விவசாயிகளின் அவல நிலையை மீட்டெடுக்க வேளாண் அறிஞர்கள் சொல்லக்கூடிய எந்த ஆலோசனைகளையும் அரசுகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. கொள்ளையடிக்க வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடி கோடியாக சழுகைகளை அள்ளிவழங்கும் மத்திய மாநில அரசுகள் தேசத்தின் முதுகெலும்பான வேளாண்மையை கபளீகரம் செய்து வருகின்றன.
இன்றைய கரும்பு விவசாயிகளின் அவலம்தீர 1) கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்துதல்.2) கரும்புக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ஊக்குவித்தல். 3) உற்பத்தி செலவு கூடுவதற்கேற்ப மானியங்களை வழங்குதல் 4) எத்தனால் எனும் எரிசாராயத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவித்தல் 5) நிலைமைக்கு தகுந்தவாறு மாநி அரசு விலை நிர்ணயம் செய்தல் ஆகிய ஐந்து அம்சங்களை அமல் படுத்த வேண்டியது அவசியம்.
விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் வேண்டுமென இன்று நேற்றல்ல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இரட்டிப்பான உரவிலை தொடங்கி மாற்றமடைந்துள்ள உற்பத்தி செலவுகளை கணக்கிட்டால் அவர்களின் இந்த 4000 ரூபாய் கோரிக்கை என்பது குறைவுதான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஆயிரத்து சொச்சம்கோடி ஒதுக்கி கருப்பாலைகளில் மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டார் என்றாலும் நடைமுறையில் அவரைப்பாலவே இந்த திட்டமும் மரித்துப் போய்விட்டதாகவே தோன்றுகிறது. உண்மையில் இந்தத் துறையில் முறைப்படி மின்சாரம் உள்ளிட்ட மாற்று வழிகளை யோசித்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.21000 வரை லாபம் பார்க்கலாம் என ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
உலகம் முழுவதுமே மாற்று எரிபொருள் ( Bio fuel) குறித்த கதையாடல்கள் கடந்த தசாப்தங்களிலேயே தொடங்கி விட்டன. அமெரிக்கா 2007லேயே தனது மொத்த எரிபொருளில் 22 சதவீதம் எத்தனால் பயன்படுத் இலக்கு நிர்ணயித்தது. பிரேசில் கூட தனது மொத்த கரும்பு உற்பத்தியில் 50 சதவீதத்தை எத்தனால் பயன்படுத்த உத்திரவிட்டுள்ளது. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை இது கதை வடிவிலேயே இருக்கிறது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து தொடர்ந்து பேசிவந்தாலும் கூட குறிப்பிடத் தகுந்தவாறு நடைமுறையில் எதுவும் ஈடேற வில்லை. சென்ற ஆண்டு மத்திய அரசு பெட்ரோலில் 5% எத்தனாலை கலந்திட அனுமதி வழங்கிய பிறகு எத்தனாலுக்காக விடப்பட்ட டென்டர் தமிழகத்தைப் பொருத்தவரை கண்டு கொள்ளப் படவே இல்லை. இந்தியாவில் பெட்ரோலில் 5% அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான ஒராண்டில் 280.89 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்தன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையை பாரத் பெட்ரோலிய நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது.
அதன்படி தமிழகத்தின் தேவைக்காக மட்டும் 22 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.. ஆந்திராவில் 12.90 கோடி லிட்டர், தெலுங்கானாவில் 13.60 கோடி லிட்டர், கர்நாடகத்தில் 22.10 கோடி லிட்டர், கேரளத்தில் 15.50 கோடி லிட்டர் என தென் மாநிலங்களில் மட்டும் 86.50 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யதிட வேண்டும். அதிகபட்சமாக லிட்டர் ரூ.39 என்ற விலையில் எத்தனால் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் மொத்த சர்க்கரை ஆலைகளில் ஆண்டுக்கு 50 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இவை எத்தனாலை உற்பத்தி செய்ய தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.
தமிழகத்தில் 8 சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் தான் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஆண்டுக்கு 9 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும் என்ற போதிலும், 50 லட்சம் லிட்டர் அளவுக்கு மட்டுமே எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் முழு அளவில் எத்தனால் தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால், மொத்தம் 50 கோடி லிட்டரையும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விற்பனை செய்ய முடியும். அதன்மூலம் ரூ.1950 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். ஒரே ஆண்டில் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் கொடுத்துவிட முடியும். அதுமட்டுமின்றி, கரும்புக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்கி விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
ஆனால் தமிழக சர்க்கரை ஆலைகள் முழு அளவில் எத்தனால் தயாரிக்கத் தொடங்கினால், அதன்பின்னர் அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகளும் நடத்தி வரும் மது ஆலைகளில் மது உற்பத்திக்குத் தேவையான மொலாசஸ் கிடைக்காது என்பதாலே எத்தனால் உற்பத்தி திட்டமிட்டு தடுக்கப்படுகிறது. தமிழகத்தில் விற்கப்படும் மதுவகைகள் அனைத்தும் மட்டமான மொலாசஸ் எனப்படும் கரும்புக் கழிவிலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாலேயே, அனைத்து ஆலைகளும் மொலாசஸ் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமையளிக்க வேண்டும்; எத்தனால் தயாரிக்கக் கூடாது என தடை போடப்பட்டுள்ளது என்பது எவ்வளவு கேவலமான விஷயம் பாருங்கள்.
தங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ளவே நாளும் போராடும் இந்த கோமாளிகளின் அரசு அதிகாரத்தில் இருக்கும்வரை, விவசாயத்தின் அவசியத்தை உணரத் தலைபடாத கட்சிகள் ஆட்சிக்கு வரும் வரை, சுயசார்புத் தன்மையை கூறுபோடுகின்ற நவீன வேளாண்மைக் கொள்கையை ஆளுகின்ற கட்சிகள் ஏற்றுக் கொண்டு செயல்படும் வரை, இத்தகு மோசடி பேர்வழிகளுக்கு முட்டுக் கொடுக்கும் இந்த பாராளுமன்ற அமைப்பு நீடிக்கும் வரை நிச்சயமாக விவசாயிகளின் கரும்புகள் அவர்களின் கண்ணீர் துளிகளில் ஊறி கரிக்கத்தான் செய்யும்.
- பாவெல் இன்பன்