அரசின் தொடர் நிதிச்சுமை கடனில் முடியும். கடன் மீண்டும் பணியாளர் சேர்க்கையைத் தாமதப்படுத்தும். தாமதம் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கும். வேலைவாய்ப்பின்மை சமூகச் சீர்கேடுகளைக் கூர்மைப்படுத்தும்.
அரசின் வருவாயில் முப்பதில் இருந்து நாற்பது விழுக்காட்டை, ஒன்றிலிருந்து இரண்டே விழுக்காடு இருக்கும் அரசு ஊழியர்கள் தமக்கிருக்கும் தொழிற்சங்க வலிமையால் கடந்த 50 ஆண்டுகளில் பெற்றாகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஊதியம் 3 மடங்கு அதிகம் பெற்ற அரசு ஊழியர்கள் உண்டா இல்லையா? ஊதிய ஒப்பந்தங்களின் நன்மையை, பணியில் இருப்பவர்களே பெற்று ஒன்றிலிருந்து லட்சம் வரை ஊதியத்துடனும், பிற துணை நன்மைகளுடனும், அரசு ஊழியர்கள் செங்குத்தான வளர்ச்சி அடையச் செய்த தொழிற்சங்கங்கள், நிறைய ஆள்சேர்ப்பை வலியுறுத்தி நன்மைகளைப் பரவலாக்கத் தவறிவிட்டன.
சுமை அதிகமானதால்தான் 2001-2006 ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா அரசு துணிந்து அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த முனைந்தது. அதை வலுவாக எதிர்கொண்டு முறியடித்த அரசு ஊழியர் சங்கங்கள், அரசின் நிதிநிலை அறிந்து, தங்கள் ஊதிய உயர்வுக் கேட்பைக் குறைக்கவில்லை. மாறாகப் புதியவர்கள் வருவதை அரசு நிறுத்துவதை ஏற்றுக் கொண்டார்கள். அரசு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்துக் கொண்டது. கால்வாசி கூட இல்லாத ஊதியத்தில் அவர்கள் செய்த வேலையை 4 மடங்கு ஊதியம் வாங்கியும் செய்யாத அரசு ஊழியர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஓய்வூதியச் சுமை, இறுதி சேம நல, பணிக்கொடை ஆகிய நன்மைகள், ஊதியச் சுமையைப் போன்றே அதிகமாக அழுத்தின.தொடர்ந்து வந்த அரசுகள், சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், மக்களிடம் எதற்குக் கெட்ட பெயர் என்று இந்தச் சூழலைச் சரி செய்யாமல் தள்ளிப்போட்டன. தனியாரை ஊக்குவித்தன. இது ஒரு விசச் சுழற்சி போல இன்று பூதாகாரமாக அரசையும் இளைஞர்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது
நன்மை பெற்றது மிகக் குறைந்த அளவிலான, ஆனால் தொழிற்சங்க வலிமையுடைய அரசு ஊழியர்கள். பாதிக்கப்பட்டது அமைப்புக்கு வெளியே இருந்த கோடி இளைஞர்கள். கொழுத்த பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?
திறமையற்ற நிர்வாகம், ஊழல், பதவி வெறி, சாதி வெறி என்று ஒரு காட்டாட்சி நடத்திய அ.தி.மு.க அரசு, ஓய்வூதிய, பணி இறுதி நன்மைகளைக் கொடுக்காமல் நிறுத்தி, தன் ஆட்சிக்காலம் வரை தப்பித்துக்கொள்ள ஓய்வு வயதையே தள்ளிப்போட்டு, ஊதியச்சுமையையும் ஏற்றியது.
போக்குவரத்து உள்ளிட்ட பலதுறைகளில் ஊதிய நிலுவை வைத்தது. சொல்லொணாத கடன் சுமையையும் விட்டுச் சென்றது.
கடன் வட்டிச் சுமை, நிர்வாக சீர்திருத்தம், எதிரிகளின் தொடர் தாக்குதல், ஒன்றிய அரசின் வஞ்சனை ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டிய தி.மு.க. அரசு, சோர்ந்திடாமல், தன் வாக்குறுதிகளையும், மக்கள் கோரிக்கைகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றிடப் போராடி வருகிறது.
ஒரு சமூகமாக நாம், நிலவும் இந்தச் சிக்கலைக் .கவனிக்க வேண்டும். ஊதிய உயர்வு தேவையே. ஆனால் வெளியே நம்மைப் போல பல நூறு மடங்கு இளைஞர்கள் குறைந்தபட்ச பணிப் பாதுகாப்புக் கூட இல்லாமல் காத்திருக்கையில், ஊதிய உயர்வின், அரசுச் செலவின் நன்மைகள், விரிவாக மக்களுக்குச் சென்றடைய தொழிற் சங்கங்கள் முனைய வேண்டுமே அன்றி, குறைந்த எண்ணிக்கையினரின் செங்குத்தான வளர்ச்சிக்காக அல்ல.
இந்தச் சூழல் மாறும். அரசு திறமையான அரசு. மக்களின் பக்கம் நிற்கும் தலைமை. குறைகளைச் சுட்டுவோம். ஆனால் இடர்கள் உணர்ந்து சேர்ந்து பயணிப்போம். போக்குவரத்துத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு இளைஞர்களின் சிக்கல்களும் தீரும். தேவை மக்களின் ஈடுபாடு. இது விமர்சனம் மட்டுமல்ல.
- சாராதாதேவி