தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே

இளம் சுதந்திரப் பயிர் செழித்து வளரும்

_நவ ஜவான் பாரத் சபா அறிக்கையிலிருந்து

சேவை, துன்பம், தியாகம் என்ற குறிக்கோள்களை அவர்கள் தங்களது ஒரே வழிகாட்டியாக கைக் கொள்ளட்டும். ஒரு தேசத்தின் உருவாக்கம், தங்களது சொந்த சுகங்களையும் நலன்களையும் காட்டிலும், தங்களது சொந்த உயிர்களையும் தாம் நேசிப்பவர்களின் உயிர்களையும் காட்டிலும் தங்களது நாட்டு நலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது என்பதை அவர்கள் நினைவில் நிறுத்தட்டும். 06.04.1928ம் தேதி நவஜவான் பாரத் சபா அமைப்பினால் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களின் தேச பக்த உணர்வை மேலும் வார்த்தெடுக்கவும், போராட அறைகூவல் விடுத்துப் வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.

ஜாலியன் வாலபாக் மைதானம் அமைந்துள்ள, அமிர்தசரஸ் நகரம், 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 7வது மாநாடு நடைபெற்ற நேரம், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அஞ்சலியை செலுத்தி ஊர்வலமாக, மாநாட்டு அரங்கத்தை அடைந்தவுடன், அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மூன்று ஆண்டுகளில், 289 வாலிபர் சங்கத் தோழர்கள், சங்கத்திற்காக உயிரைச் அர்ப்பணித்து இருந்தனர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் 260 தோழர்களை இழந்திருக்கிறோம் என்ற செய்தி, சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மாற்று அரசியல், ஆதிக்க அரசியலின் வன்மங்களை எதிர்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதைப் புரிய வைத்தது.

1980ல் துவங்கப்பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காகக் கொடுத்த விலையை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத்திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றபோது, இந்திய ராணுவத்திற்கு இணையாக களப்பலி கொடுத்த இயக்கம் டி.ஒய்.எப்.ஐ. அரசியல் ராணுவமாக தேச ஒற்றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எப்.ஐ மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ்சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாணவர்களின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980களில் இந்திய அரசியலில் திவீரம் செலுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றை டி.ஒய்.எப்.ஐ இளைஞனை கதாநாயகனுக்குரிய குறிய மிடுக்கோடு, நடைபோடச் செய்தது.

இதன் பின்னணியில் இந்தியாவில் 1980களில் இளைஞர்களின் நம்பிக்கை ஒளியாய் தேசம் காக்கும் போர்படையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேவை, துன்பம், தியாகம், முன்னேற்றம் என்ற பாதையில் சமூகத்தை மாற்றியமைக்கும் கடமையில் எண்ணற்ற வீரர்களை, தோழர்களை, தியாகிகளை பலிதந்து இன்று தேசத்தின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கிறது.

வாலிபர் இயக்கத்தில் தமிழகத்தின் முதல் இரத்த சாட்சி தோழர் சீராணம் பாளையம் பழனிசாமி துவங்கி குட்டி ஜெயபிரகாஷ், பாபு, செல்லையன், சுதாகரன், கோபி, முத்து, சேட்டு, அமுல்ராஜ், சந்துரு, ஆதித்தவர்த்தன், ராஜூ, சிங்கை குமார், சீனிவாசன், பாண்டி, பன்னீர்செல்வம், குமார், ஆனந்தன், அமல்ராஜ், சுரேஷ், இரத்தினசாமி, மாணவதியாகிகள் சோமு, செம்பு உள்ளிட்டு கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பலியான பள்ளிபாளையம் வேலுச்சாமி தியாகம் வரை எத்தனை எத்தனை தியாகங்கள். எதற்கு.. இந்த மக்களை அளவு கடந்து நேசித்த காரணத்தால்,.. அளப்பரிய மனித நேயத்திற்கு சொந்தகாரர்களாய் இருந்ததால்.. அவர்களின் ஒவ்வொரு அணுவிலும் கொண்ட கொள்கையும், இலட்சியமும், போராட்ட பாராம்பரியமுமே இதற்கு காரணங்களாகும்.. வரலாற்றில் தனிநபர்களுக்கு மகத்தான பாத்திரங்கள் உண்டு.. அவர்களது செயல்பாட்டில் வரலாற்றையும் உருவாக்குகிறார்கள். இன்று தமிழகத்தின் பல்வேறு கடைக்கோடி கிராமங்களான சீராணம்பாளையம், பெத்தானியபுரம், அருமனை, மண்டபம், அரசூர், அரகநாடு, விருதுநகர், தேன்கனிகோட்டை, பெரம்பூர், விக்ரமசிங்கபுரம், கேத்தம்பாளையம், பட்டிதேவன்பட்டி, புதுப்பாளையம், கண்டமங்களம், இடுவாய் என எண்ணற்ற கிராமங்களை வரலாற்றில் பதிவு செய்தது தோழர்களின் தியாகங்களே என்றால் அது மிகையாகாது.

விசைத்தறி தொழிலாளர்களை வஞ்சிக்க நினைத்து அடக்கி ஒடுக்க நினைத்த சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக களத்தில் நின்ற தொழிலாளிவர்க்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் 1979ல்வெட்டி கொல்லப்பட்டான் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் பணியாற்றிய தோழன் சீராணம்பாளையம் பழனிசாமி. தொழிற்சாலையில் சங்கம் வைத்த காரணத்திற்காக வெட்டிக் கொல்லப்பட்டார் கேத்தம்பாளையம் பன்னீர்செல்வம். இடுவாய் கிராமத்தில் மக்களை நேசித்து அவர்களுக்காக பணியாற்றி இரண்டு முறை ஊராட்சிதலைவராக தேர்வு ஆக்கியபோது தோழன் இரத்தினசாமியை கொன்றவர்கள் எழுதி வைத்தார்கள். நீ சக்கிலியனுக்கு ஆதரவாக இருந்தாய். தீண்டாமைக்கெதிராக நடவடிக்கை எடுத்தாய். சிறுபான்மைமக்களுக்கு ஆதரவாய் இருந்தாய். மொத்தத்தில் கம்யூனிஸ்டாய் இருந்தாய் அதனால் உன்னை கொன்றோம் என அவரை வெட்டி கொன்ற ஆதிக்கவெறி கூட்டம் அவரை இறந்துவிட்டிருப்பாரோ இல்லையோ என பயந்து தூக்கிலும் தொங்கவிட்டு சென்றார்கள். திருப்பூரின் தியாக ஜோதிகளாய் பழனிசாமியும், பன்னீர் செல்வமும், ரத்தினசாமியும் சுடர் விட்டு எரிகிறார்கள்.

இரண்டு அரசியல் இயக்கங்களை தேர்தல் நேரத்தில் நேரடியாக மோதவிட்டு ஆதாயம் தேட நினைத்த காவல்துறையினரால் நேர்ந்த கொடூர விளைவு சாதாரண அப்பாவி மக்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகும் நிலை மதுரை முனிசாலை பகுதியில் ஏற்பட்ட போது குண்டுகள் பாய்ந்த நிலையில் கீழே விழந்து கிடந்தவர்களை பாதுகாக்க தீரத்துடன் களம் கண்ட மாவீரன் குட்டி ஜெயபிரகாஷ் போலீசின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி போனான். சம்பவத்தை கேள்விப் பட்டு தோழனை காப்பாற்ற சீறிவரும் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் சென்ற கிளை செயலாளர் ஆனந்தன் தனது உடன் நின்ற அதிமுக தொண்டர் ராஜூவை உடனுக்கு அழைக்க அந்த வீரனோ வா தோழா நீ உனது இயக்கத்திற்காக உயிரை பணயம் வைக்கும் போது, எங்களது கட்சிக்காக வேலை செய்த உனக்கு உதவமாட்டேனா? என்று சொல்லி உடன் சென்று காவல்துறையோடு பேச்சுவார்த்தை நடத்திய அவர்களிடம் துப்பாக்கியால் சுட்டு வீரத்தை காண்பித்தது தமிழக காவல்துறை. தோழன் குட்டி ஜெயபிரகாஷ், தோழன் ராஜூ இருவரும் அங்கேயே மாண்டுபோனார்கள். குண்டுகளை பரிசாக பெற்ற தோழர் ஆனந்தன் இன்றும் அதே குண்டுகளோடு வாழ்ந்து வருகிறார். வைகுந்தம், சிவலோகம் என்பது புராண பெயர்கள் மட்டுமல்ல.. மக்களை வாட்டி வதைத்து ரவுடிசம், அடக்குமுறை, உழைப்பு சுரண்டல், மத கலவரங்கள். இவைகளால் அல்லலுற்ற குமரி மாவட்டத்தின் வானூயர்ந்த இரப்பர் மரத்தோட்ட எஸ்டேட்கள் ஆகும். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் வாலிபர் இயக்கத்தை ஆரம்பித்து மக்களின் நலனுக்காக போராடிய அற்புத மாணிக்கங்களே குமரி பாபு, செல்லையன், சுதாகரன், கோபி ஆகிய தோழர்கள். காங்கிரஸ், பிஜேபி கட்சிகளை சார்ந்த மனிதமுகமற்ற மிருகங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தியாகிகள். கொல்லப்படுவோம் என தெரிந்தும் அந்த மக்கள் விரோதிகளுக்கு எதிராக போரடிய மகத்தான மனிதர்கள். கள்ளக்கடத்தல், போதைபொருள், கள்ளச்சாராயத்திற்கு எதிராக மட்டுமல்லாது மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக போராடிய மண்டபம் முத்து, கடலூர் குமார், ஆனந்தன், விருதுநகர் சந்துரு, தேன்கனிகோட்டை ஆதித்தவர்த்தன், சேலம் சீனிவாசன் ஆகியோர் மக்கள் விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். புதுப்பாளையத்தின் இரட்டையர்களாய் மக்களுக்கான போராட்டங்களில் முன்னின்று கள்ளசாராயத்தை ஒழிக்க பாடுபட்ட அந்த இளம் குருத்துக்கள் ஆனந்தனும், குமார் ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்டனர். ஆதிக்க சாதிகளின் அடக்கு முறைக்கு எதிராகவும், உழைப்பு சுரண்டலுக்கு எதிராக சொந்த சாதியினரையும், ஆதிக்க சாதியினரையும் எதிர்த்து மக்களை திரட்டி தலைமையேற்று போராடி அனைவரும் வியக்கும் வண்ணம் பணியாற்றிய அரசூர் சேட்டு, பட்டிதேவன்பட்டி பாண்டி, கண்டமங்களம் சுரேஷ் ஆகியோர் கொடுமையான முறையில் மக்கள் விரோதிகளால் வெட்டிக் கொள்ளப்பட்டனர். ஆதிக்கத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவரை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பாண்டி. ஆதிக்கத்தை எதிர்த்து சிறுவர்களாக இருந்தபோதே பாலர் சங்கம் வைத்து வாலிபர் இயக்கத்தோடு இணைந்து நின்று போராடிய சேட்டு தோழர் ஆனந்தன் அவர்கள் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றினார். தோழர் ஆனந்தன் வெற்றியும் பெற்றார். பொறுக்கமுடியாத ஆதிக்க சக்திகள் ஊர் புகுந்து குடிசைகளை தீக்கிரையாக்கி தோழர் சேட்டுவை வெட்டி கொன்றது காவல்துறை சாட்சியாக..

இப்படி எங்கு பிறந்திருந்தாலும் அநீதி எதிராக போராடுகிறாயா நாம் இருவரும் தோழனே என்ற உலக புரட்சியாளன் சேகுவேராவின் கனல் வார்த்தைகளை மனதில் இருத்திய காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு திசைகளில் பிறந்ததிருந்தாலும் தனது அமைப்பு வளர்த்திய பாதையிலே மக்களுக்கான போராட்டத்தில் உயிர் நீத்த தோழர்களுக்கு செவ்வணக்கம் செய்வது மட்டுமல்ல. அவர்களுக்கான மரியாதை அவர்களின் வழியில் அந்த இலட்சியங்களை அடைவதே..  

இவர்கள் வழியில் நாமும் பறிக்க பறிக்க பூத்துக் கொண்டே இருக்கும் செம்மலர்களை போல பூத்துக்கொண்டே இருப்போம். அதற்கான உரமாக இந்த புத்தகம் பயன்படும். இதற்கான முயற்சி மேற்கொண்ட தோழர் ரமேஷ்பாபு அவர்களுக்கும், வெளியிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழ்நாடு மாநிலக்குழு, பாரதி புத்தகாலயத்திற்கு மகத்தான பாராட்டுதல்களை தெரிவிப்பதோடு, போராட்ட களத்தில் உள்ள ஒவ்வொரு போராளியின் கையில் இருக்க வேண்டிய புத்தகமிது.

Pin It