உண்மைக் கடத்தல்காரர்களைப் பிடிக்கத் தூண்டுவோம்!

கடந்த 7-4-2015 முதல், தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள எல்லாக் கட்சிக்காரர்களும், எல்லாச் சாதிப் பொது மக்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து,

“என் கவுண்டரில் கொல்லப்பட்ட தமிழகத் தொழி லாளர்களைச் சுட்டுக்கொன்ற ஆந்திரப் போலீசாரைக் கைது செய்! கைது செய்!”

“சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் குடும்பத்துக்கு 40 இலட்ச ரூபா நட்ட ஈடு கொடு.”

“அப்பாவித் தமிழ்த் தொழிலாளர்களை அநியாய மாகச் சுட்டுக்கொன்ற ஆந்திர அரசைக் கலைத்திடு! கலைத்திடு”

என்று முழக்கமிட்டுக் கொண்டு ஊரைச் சுற்றி ஊர்வலம் வருகிறார்கள்.

இந்தியா முழுவதிலும் உள்ள மனித உரிமைக் காப்பு ஆர்வலர்களும், இந்திய அரசின் மனித உரி மைக்காப்பு ஆணையமும் ஓடோடி வந்து, செம்மரக் காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங் களுக்கு நீதி கோருகிறார்கள்! சுட்டுக்கொன்ற போலீ சாரைத் தண்டிக்கச் சொல்லிக் கோருகிறார்கள்.

இவர்களை, மனிதமனம் கொண்ட மக்கள் காவலர்கள் என்றே நாம் பாராட்டலாம்.

சந்தன மரக்கடத்தல் வீரப்பனை மய்யமாக வைத்து, கருநாடக அரசும், தமிழ்நாட்டு அரசும் - வீரப்பனுக்குத் தூது செல்வதாகவும், சோறு தருவதாக வும் அப்பாவி மலைவாழ் மக்களையும், சத்திய மங்கலம் காடுவாழ் வனவாசிகளையும் வீடு புகுந்து தாக்கினார்கள்; பெண்களைக் கற்பழித்தார்கள்.

அப்போது, சந்தன வீரப்பன் திருடன் - சந்தன மரம் வெட்டிக் கடத்துகிறவன் - யானைகளைக் கொன்று தந்தங்களை விற்கிறவன் என்று ஊருக்கெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் உண்மையில், அன்று நடந்தது என்ன?

சந்தன வீரப்பன் பெயரை வைத்து, 1) வனத் துறை உயர் அதிகாரிகளும், 2) ஆளும் கட்சி அமைச் சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், 3) எதிர்க் கட்சிக்காரர்களில் வல்லமை படைத்தவர்களும் சந்தன மரம், தேக்கு மரம், சில்வர் ஓக் மரம் இவற்றை லாரி, லாரியாகக் கடத்தி விற்றுக் கொள்ளையடித்தார்கள்.

இதை முன்வைத்து, “வீரப்பத் திருடர்களும், நீதிபதிக் குருடர்களும், அரசியல் அயோக்கியர்களும்” என்று, உண்மையான காட்டுச் செல்வத் திருடர்களை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரையை எழுதினேன்.

அரசு வேண்டுதலின்பேரில் வீரப்பனிடம் தூது போனவர்களில் ஒருவரான பேராசிரியர் கல்யாணி அந்தக் கட்டுரையை வீரப்பனிடமே படித்துக்காட்டி யிருக்கிறார். “உண்மையைத்தான் எழுதியிருக்கிறார்” என்று வீரப்பன் சொன்னதாக, என்னிடமே கல்யாணி கூறினார்.

இன்று இந்தத் தமிழர் கொடூரக் கொலை களுக்குக் காரணமான களம் மாறியிருக்கிறது.

கர்நாடக அரசும் தமிழக அரசும் சேர்ந்து, உண் மையான சந்தன மரக் கொள்ளையர்களைக் காப்பாற்றி விட்டு, வீரப்பனை வஞ்சனையாகக் கொன்றிருக் கின்றன.

இப்போது, “செம்மரக் கடத்தல்” என்றால், அது என்ன? சிவப்புச் சந்தனமரக் கடத்தல் என்பதுதான், அது.

சிவப்புச் சந்தனமரம் வெட்ட வெட்ட வேகமாகத் துளிர்க்கிற மரம். திருப்பதியை ஒட்டியிருக்கிற ஆந்திர அரசுக்கு உரிமையான சேஷாசலம் காடுகள் அடர்த்தி யானவை. ஏறக்குறைய 4.67 இலட்சம் எக்டேரில் - அதாவது 11.5 இலட்சம் ஏக்கர்களில் வளருகிற மரங் கள்; வளர்க்கப்படுகிற மரங்கள் இவை.

அந்த மரங்களில், கடத்தல்காரர்களிடமிருந்து 2013இல் கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் 2,025 டன் எடை கொண்டவை. அவை வளர்க்கப்படும் மாவட் டங்கள் சித்தூர், கடப்பா, நெல்லூர், கர்நூல் என்கிற தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரப் பகுதிகள்.

சோளிங்கபுரத்திலிருந்து, திருத்தணி வழியாகப் புறப்பட்ட மரம் வெட்டும் 20 தமிழ்த் தொழிலாளர்கள் 6-4-2015 மாலை 5 மணிவாக்கில் சேஷாசலம் காட்டை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் நேரே அங்கே செல்லவில்லை. அவர்கள் பயணித்த பேருந்து புத் தூரில் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கேயே 7 பேர் பட்டப்பகலில் இறக்கப்பட்டு, சேஷாசலம் வனப் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இவர் கள் தர்மபுரிக்காரர்கள். அவர்களை அன்னியில் 12 பேர் திருவண்ணாமலையைச் சார்ந்தவர்கள்.

கண்ணமங்கலம் புதூர் சேகர் - காவலர்கள் கண்ணில் படாமல், புத்தூரில் இறங்கி ஊருக்கு வந்து சேர்ந்தார். அவரே இப்போது நேரடி சாட்சி. 7-4-2015 காலை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் படங்கள் வெளி வந்ததை சேகரே பார்த்து, தன்னோடு பயணித்த 7 பேரை அடையாளங்காட்டியிருக்கிறார்.

ஏன் இவர்கள் இப்படிப்பட்ட மரம் வெட்டும் வேலைக் குப் போகிறார்கள்?

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட் டங்களில் மழை குறைவு; வயிற்றுப்பாட்டுக்குப் போதிய சம்பாத்தியம் பெற வேண்டியே இந்தத் தொழிலுக்குப் போகிறார்கள்.

இவர்கள் தாங்களாகவே போகிறார்களா? இல்லை. ஆந்திர நாட்டு சித்தூர், நெல்லூர் தரகர்கள் தமிழர் களில் சிலரைத் தரகர்களாக வைத்து, மரம் வெட்ட ஆள்களைப் பிடிக்கிறார்கள்.

எந்தத் தரகருக்கும் வெட்டப்பட் மரங்கள் யாருக் காக - யாரால் பாதுகாப்பாகக் கடத்தப்படுகின்றன என் பது தெரியாது. இதில் தான் இரகசியம் அடங்கியிருக் கிறது.

1953-க்குப் பிறகு, ஆந்திர மாநிலம், மாறி மாறி ரெட்டி வகுப்பினராலும், கம்மநாயுடு வகுப்பினராலும் ஆளப்படுகிறது. இவர்கள் மேல்சாதி சூத்திரர்கள்; இவர் களில் 100க்கு 90 பேர் பெரிய நில உடைமைக் காரர்கள்.

30 ஆண்டுக்காலம் இவர்களுக்குத் தண்ணீர் காட்டியவர்கள், மக்கள் படையைச் சேர்ந்த - ஆயுதம் ஏந்திய நக்சலைட் போர் வீரர்கள் (People’s War Group). இவர்கள் பழைய சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்திலும், ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்திலும் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.

ரெட்டி ஆட்சிக்காலத்தில், ஏகச் செம்மரக் கடத்தல்காரனாக உருவானவர் கெங்கு ரெட்டி என்பவர். இவர் சிங்கப்பூரிலோ, ஹாங்காங் கிலோ இப்போது இருக்கிறார்.

இவரும் இவரைப் போன்றவர்களும் - ஆந்திரா வில் ஆளும் கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளிலுள்ள சொந்தச் சாதிக்காரர்கள், ஆந்திர இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், ஆந்திர வனத்துறை உயர் அதிகாரிகள் இவர்களால் காப்பாற்றப்படுகிறார்கள். இதுவே உண்மை.

இதில் விதிவிலக்காக - நேர்மையாக நடந்து கொண்டவர்கள் அய்தராபாத் உயர்நீதிமன்றத்தார் மட்டுமே.

பா.ச.க. ஆதரவாளரான ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கெங்கு ரெட்டியை ஒழிப்பதற்குத் துப்பு இல்லாமல், வயிற்றுப்பாட்டுக்குக் கூலிக்கு மரம் வெட்டப்போன உழைப்பாளித் தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டது மாபெரும் கொடுமை! கொடுமை!

இப்போது ஆந்திர அரசின் தலைமைச் செயல ரைத் தில்லிக்குத் தூது அனுப்பி, மோடி அரசின் ஆதர வுடன், 20 தமிழரின் படுகொலையை மூடி மறைக்க எல்லாம் செய்கிறார், நாயுடு. இது கடுங்கண்டனத்துக்கு உரியது.

மரம் வெட்டப் போனவர்கள் கோடரியாலும் கல் லாலும் காவலர்களைத் தாக்கினார்கள் என்று, காவல் துறை உயர் அதிகாரி தில்லி அரசிடம் கூறுவது வடி கட்டிய பொய்.

இவர்களின் கயவாளித்தனத்தை மறைத்துவிட்டு, படுகொலைக் குற்றத்திலிருந்து காவல் துறையைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற அவர் முயலுகிறார்.

எனவே, தன்னெழுச்சியாகத் தெருவுக்கு வந்து, தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கும் எல்லாத் தமிழரும் :

1.            06-04-2015, 07-04-2015இல் 20 தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டி வைத்துச் சுட்ட காவல் துறை அதிகாரிகள் எல்லோரையும் கொலைகாரர்கள் என்று ஏற்று, அவர்கள் பேரில் படுகொலை வழக் கைப் போடு என்று, தொடர்ந்து ஆந்திர அரசைக் கோர வேண்டும்.

2.            கொல்லப்பட்ட ஒவ்வொரு தமிழர் குடும்பத்துக்கும் ஆந்திர அரசு ரூ.25 இலட்சமும், தமிழக அரசு ரூ.25 இலட்சமும் இழப்பீடு தரவேண்டும் என்று கோர வேண்டும்.

3.            காவல்துறையினரும் உயர் அதிகாரிகளும் - குற்றம் செய்கிறவர்கள் என்று சொல்லி - நிராயுதபாணி களாக-ஆயுதம் வைத்திருக்காதவராக எதிர்கொள் ளும் எவரையும் - இடுப்புக்கு மேலே சுடக்கூடாது என்பதை ஒரு விதியாக - குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கிடக் கோர வேண்டும்.

4.            இந்த 20 பேர் படுகொலை - போலியான தற்காப்புக் காக மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கை மட்டுமே இதை என் கவுண்டர் என்பது வடிகட்டிய பொய். அம்பலப்படுத்திட எல்லாத் தமிழரும் எல் லாம் செய்ய வேண்டும்.

5.            இன்று தன்னெழுச்சியாக உருவான - “தமிழருக்கு அநீதி செய்தவரைத் தண்டித்தே தீருவோம்” என்கிற ஒரே முழக்கத்துடன் எல்லாக் கட்சித் தமிழ ரும் தொடர்ந்து பேராடுவோம் என்றும் இன்றும், இனி எப்போதும் ஒன்றுபட்டு நிற்போம்! என முடி வெடுக்கவும் வேண்டும்.

“மானிட உரிமை காக்கப் போராடுவோம்!”

“தமிழனுக்கு அநீதி இழைப்போரைப் புறங்காணு வோம்!”

என்று முடிவெடுங்கள் - அதை மறவாதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

- வே.ஆனைமுத்து

Pin It