கோவை மாவட்டம், செட்டிபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒராட்டுக் குப்பை என்ற கிராமத்தில் _நாகலட்சுமி பைலோரசிஸ் ( பி ) லிட் என்ற நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய டயர்களை பெரிய பாய்லரில் போட்டு கொதிக்க வைத்து, உருக்கி பர்னாஸ் ஆயில் என்ற எரிபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த எரிபொருள் மற்ற தொழிற் சாலைகளுக்கு தேவைப்படும் எரிபொருளாகும்.
இந்த மாதிரியான தொழிற்சாலை தொடங்குவதற்கு தொழிலாளர் நலத்துறை, வருவாய் துறை, தொழில்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறை, காவல் துறை, வெடிமருந்து & பாய்லர் துறை மற்றும் மத்திய மாநில கலால் பிரிவு ஆகிய 8 துறைகளில் உரிமம் பெற்றுத்தான் உற்பத்தியை தொடங்க முடியும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மேற்படி எந்தவொரு துறையிலும், எந்தவிதமான உரிமமும், அனுமதியும் பெறாமல் இந்த தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல் பட்டு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் நாள் காலை 11 மணியளவில் மேற்படி தொழிற் சாலையில் பணியிலிருந்த ஆறு தொழிலாளர்கள் பழைய டயர்களை உருக்கும் பாய்லரை திறக்க முயற்சித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு ஆறு தொழிலாளர்களும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலன் அளிக்காமல் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிகாஸ் ( வயது 19), பீர்ஜான் ( வயது 20), து.சரோஜ் ( வயது 24), குணால் ( வயது 19), தருண் (வயது 20) மற்றும் பிரித்தம் ( வயது 25) ஆகிய ஆறு பேரும் மரணமடைந்தார்கள்.
படுகாயமடைந்த தொழிலாளி பிரித்தம், தனது மரண வாக்குமூலத்தில் “டயர்களை உருக்கப் பயன்படுத்திய பாய்லர் சரிவர நிர்வாகத்தால் பராமரிக்கப்படாமல் இயங்கியதே” விபத்துக்கு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.
மேற்படி தொழிற்சாலை விபத்தை குற்றவழக்காக பதிவு செய்த செட்டிபாளையம் காவல்துறை அதிகாரிகள் தொழிற்சாலை உரிமையாளர் K.G.பாலகுரு, அவரது மகன்கள் செந்தில் குமார், திருமலைராஜா, மேனேஜர் கௌதம் மற்றும் மேற்பார்வையாளர் மணி ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அனைவரும் அன்றே ( 12.2.2016) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். முதலாளி K.G.பாலகுரு ஆளும்கட்சியில் செல்வாக்குப் பெற்ற முக்கிய பிரமுகர்.
சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் “ மேற்குவங்க இளைஞர்கள் ஆறுபேர் இறப்பிற்கு காரணமான தொழிற்சாலை முதலாளி K.G.பாலகுரு, மகன்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கையெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் எம்.ஆறுமுகம் வலியுறுத்தினார்.
இந்த தொழிற்சாலையில் நடைபெறும் உற்பத்தியின் காரணமாக செட்டி பாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும், நஞ்சாக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், பொதுமக்களின் உடல்நலனில் கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை மூடவேண்டும் என்றும் செட்டிபாளையம் பஞ்சாயத்து உறுப்பினர் காளிமுத்து என்பவரும் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பாக புகார் மனு கொடுத்து வந்தனர். வழக்கம் போல அதிகாரிகள் அவரது புகார் மனுக்களை கண்டு கொள்ளவேயில்லை. அதிகாரிகள் ஆலை முதலாளியிடம் பெறவேண்டியதை பெற்று, வளமாக வாழ்ந்தார்கள்.
எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் இயங்கி வந்த இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த மேற்படி ஆறு அப்பாவி இளைஞர்கள் இளம்வயதில் அகால மரணமடைந்தார்கள். உண்மையில் இது விபத்தே அல்ல. இந்த சம்பவத்தை அப்பட்டமாக படுகொலை என்றே சொல்லலாம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமானத் தொழில், மெட்ரோ ரயில்திட்டம், பஞ்சாலைகள், இன்ஜீனியரிங் தொழிற்சாலைகள், தேயிலை தோட்டங்கள், மர அறுவை தொழிற் சாலைகள், கல் குவாரிகள் ஆகிய அனைத்து தொழில்களிலும் மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1 ½ லட்சம் பேர் வேலை செய்து வருவதாக அதிகாரப் பூர்வமற்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து தமிழகத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்பு வசதி, சம்பளம், மருத்துவ வசதி, விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வரும் வசதி, பிரயாணச் செலவு ஆகிய உரிமைகள் சம்பந்தமாக மத்திய அரசு 11.6.1979ம் தேதியே ஒரு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு “1979ம் வருடத்திய மாநிலங்களுக்கு இடையில் குடிபெயர்ந்து வேலை செய்து வரும் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு சட்டம்” என்று பெயர்.
இந்த சட்டம் தமிழ்நாட்டில் 12.09.2009ம் தேதியில் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் முதலாளிகள் அதற்கென்று நியமிக்கப்பட்ட தமிழக அரசின் மாவட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். ஒவ்வொரு வெளிமாநில தொழிலாளியிடம் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தின் பெயர், உரிமையாளர், சம்பளம் மற்றும் அவர்களது வேலை சம்பந்தமான விவரங்கள் குறிக்கப்பட்ட பாஸ்புக், அடையாள அட்டையை கொடுத்து வைக்கவேண்டும்.
மேற்படி சட்ட விதிகளை அமுல்படுத்தாத முதலாளிகளுக்கு ஒராண்டு வரை சிறை தண்டனை, அபாரதம் விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. பிற மாநிலத் தொழிலாளர்களின் உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க கூடிய இந்த சட்டம் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் அமுலாவதில்லை. வெளிமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் சம்பந்தப்பட் மாவட்ட அதிகாரிகளை “ பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்து சரிக்கட்டி” தங்களது சட்ட விரோதமான தொழிற்சாலையில் கொள்ளை லாபத்தோடு உற்பத்தியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
கோவையில் ஏற்பட்ட மேற்படி விபத்து போல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடி கட்டிடம் தரைமட்டமானது. 50க்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் இறந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். திருசெங்கோடு, நாமக்கல் மரஅறுவை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வெளி மாநிலத் தொழிலாளர்கள் உடல் கருகி செத்தார்கள்.
இன்னும் பல தொழிற்சாலை விபத்துக்கள் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் துணையோடு மூடிமறைத்து மரணம் அடைந்த தொழிலாளர்களின் ஏழைக் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு தொகையை கொடுத்து, எந்தவிதமான வழக்கும் இல்லாமல் முதலாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து தொழிற்சாலையிலும் பிற மாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதால் முதலாளிகளுக்கு கொழுத்த லாபம் கிடைக்கிறது. எந்தவிதமான தொழிலாளர் நலச் சட்டங்களையும் அவர்களுக்கு அமுல் படுத்தவேண்டியதில்லை. மொழிப் பிரச்சனை காரணமாக அவர்கள் யாரும் தொழிற் சங்கத்தில் சேர்வதில்லை. தொழிற்சங்கங்களும் அவர்களை கண்டு கொள்வதில்லை. சம்பள உயர்வு, வேலை நிரந்தரம் கோரி எந்தவிதமான போராட்டங்களும் இருக்காது.
மொத்தத்தில் பிற மாநிலத் தொழிலாளர்களை தமிழகத்தில் கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். எந்தவிதமான சட்ட பாதுகாப்பும் இல்லாமல் தினசரி பல மாவட்டங்களில் இளம் வயதிலேயே மரணத்தை சந்திக்கும் அவலநிலை தொடர்கிறது. இவ்வளவு படுமோசமான, உச்ச கட்ட உழைப்பு சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சட்டப்படி அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சமூக ஆர்வலர்களும், தொழிற் சங்க இயக்கத்தினரும், இடதுசாரி மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்