Woman Honour to Cleaning workerஇயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மட்டுமில்லாமல், அன்றாட வாழ்வில் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. நாடும் வீடும் தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்களின் உடல், உடைகளில் அசுத்தங்களைச் சுமக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா நாவல் வைரஸ் இந்தியாவை பெரும் அச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அதுவும் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியிருக்கிறது. அது சாதி, மதம், ஏழை, பணக்காரன் என உயர்வு தாழ்வு பார்க்காமல் எல்லோரையும் பாரபட்சமில்லாமல் தாக்கி வருகிறது என்பதை நாம் அன்றாட செய்திகளில் அறிகிறோம்.

கொரோனா தாக்கமும் ஊரடங்கும்

2019 டிசம்பர் பிற்பகுதியில் சீனாவின் ஹூபே மகாணத்தின் வுகான் நகரம் முழுவதும் பரவி வரும் நோய்க்கு புதுவகையான கொரோனா வைரஸ் சார்ஸ் கோவி 2 தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதிலும் பாதித்தது. தற்போது இத்தொற்றின் பிடியில் ஒட்டுமொத்த உலகமும் சிக்கியுள்ளது. கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது என உலக சுகாதர அமைப்பால் தொடக்கத்திலேயே நாம் எச்சரிக்கப்பட்டோம்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று 2020 ஜுலை-08 நிலவரப்படி பாதிப்பு 7,34,647. கிட்டதட்ட பத்து லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இறப்பு எண்ணிக்கை 20,620 யை தொட்டுவிட்டது. இந்திய அளவில் இப்படி என்றால், தமிழக அளவில், பாதி;ப்பு எண்ணிக்கை 1,18,594 எனவும் இறப்பு எண்ணிக்கை 1,636 ஆகவும் இருக்கிறது.

இருப்பினும் மக்கள் தொகை குறைவான நாடுகளைவிட இந்தியாவில் மிகக் குறைவான மக்களுக்கே பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் தொற்று அதிகமாக இருக்கிறது என்றால் பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் இன்னும் எண்ணிக்கை கணிசமாகக் கூடும் என்பதில் ஐயமில்லை.

கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் சென்னையை மிஞ்சும் அளவுக்கு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் கணிசமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவொரு பக்கம் பெரும் அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ச்சியான ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை முதல்;;கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டு, மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டன. இப்படியாகப் படிப்படியாக ஊரடங்கை மீண்டும் மீண்டும் அமலாக்கம் செய்து தற்போது ஆறாவது ஊரடங்கில் நாம் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இதற்குப் பின்னாவது நிலைமை கட்டுக்குள் இருக்குமா? கொரோனா பாதிப்பு குறையுமா? என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

கொரோனா வைரஸ்;க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கால் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இதன் பாதிப்புகள் அடுத்த ஆறு மாதம் நீடிக்கும் எனச் சர்வதேச பல்கலைக்கழங்கள் எச்சரித்துள்ளன. அதேநேரத்தில் உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகலும் அவசியம் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பல இடங்களில் துப்புரவுப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி பொதுமக்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவப்படுத்தி வருகின்றனர். ஆனால் சமூகத்தில் ஏற்படும் இதுபோன்ற அவசர காலகட்டத்திலும் நோய் பரவல் காலத்தில் மட்டுமே துப்புரவுப் பணியாளர்களை பொது மக்கள் மதிப்பதும், மற்ற நேரங்களில் அவர்களை ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பதும் தொடர் கதையாகிக் கொண்டுதான் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் துப்புரவுப் பணியாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை பார்ப்போம்!

மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

இந்திய மருத்துவ ஆராய்;ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விடுத்துள்ள அறிக்கையில் புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் மற்றும் பிற மெல்லும் புகையிலை பொருட்கள் அர்கா நட் ஆகியவற்றை சாப்பிட்டால் உமிர்நீர் உற்பத்தி அதிகமாகும். அதனை உட்கொள்ளும் சிலர், தொடர்ந்து பொது இடங்களில் எச்சில் துப்பி வருகின்றனர். ஆனால் அவ்வாறு புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி துப்ப வேண்டாம் என்று உலக சுகாதர ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் துப்புவதால் கொரோனா வைரஸ் பரவுவதை அதிகரிக்கும். தொற்று நோயின் பரவல் அதிகரித்து வரும் ஆபத்தை கருத்தில் கொண்டு, புகைப்பிடிக்காத புகையிலை பொருட்களை உட்கொள்வதையும் பொது இடங்களில் துப்புவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.

புகையிலைப் பொருட்களை மென்று துப்புபவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வைரஸ் பாதித்த மற்றவர்கள் இதுபோன்று துப்பும் போது, வைரஸ் இல்லாதவர்களை அது பாதிக்கும். இதனால் மற்றவர்களும் வைரஸை வீட்டுக்குக் கொண்டு சென்று குடும்பத்தினருக்கும் பரவ வாய்ப்பு அளிப்பவராக மாறிவருகிறார் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். (தினகரன், ஏப்ரல் 06, 2020)

மேற்கண்ட அறிக்கையை மேற்கோள் காட்டியே, மத்திய சுகாதர அமைச்சகம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புகையிலை வெற்றிலைப் பாக்கு போடுவதால் எச்சில் துப்ப தூண்டும்;. எனவே பொது இடங்களில் அவற்றை பயன்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசு தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் பொது இடங்களில் எச்சில் துப்புவது கொரோனா தொற்றை அதிகரிக்கக்கூடும். இதனை தடுக்க தொற்றுநோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (தினகரன், ஏப்ரல் 12, 2020)

பொது இடங்களில் புகையிலை போன்ற பொருட்களைப் போட்டு எச்சிலை துப்பும் நபர்கள் துப்பிவிட்டு போய்விடுவர்கள். அவர்களைவிட அவ்விடங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களுக்கே அதிக பாதிப்பு வரக்கூடும். அதோடு அவரது குடும்பத்தை சார்ந்தவர்களும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும்.

இதற்காக குறைந்தபட்சம் கடைகளில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை ஏன் தடை செய்யக்கூடாது? இதுபோன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கு தடையின்றி கடைகளில் புகையிலை பொருட்கள் கிடைக்கும் போது அதை வழக்கமாக உபயோகிப்பவர்கள் உட்கொள்ளத்தானே செய்வார்கள். பின்பு பொது வெளியிலும், தெருக்களிலும் துப்பத்தானே செய்வார்கள். புகையிலை பொருட்களை உட்கொள்ளாதீர்கள் என்று சொல்வதைவிட அதன் விற்பனையை தடைசெய்வது எவ்வளவு நல்லது? ஒருவேளை தடைசெய்தால் விற்பனை பாதித்து அதனால் அரசுக்கு வரும் வரி உள்ளிட்ட இதர வருவாய்கள் நின்றுவிடும் என்பதாலும்தான் இதை அரசு செய்வதில்லை?

முதலில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிசெய்யும் நபர்களாவது இத்தகைய வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க என்ன உத்திரவாதம் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது என்று சொல்ல முடியுமா? கிட்டதட்ட தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்பட்ட போது மதுரையில் ஒரு பேருந்து ஓட்டுநர் பான் மசாலா உட்கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டுப் போகும் போது நடுரோட்டில் துப்பிவிட்டுச் செல்கிறார். அவருக்கு கொரோனா இல்லை என்றாலும் அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் பொறுப்புள்ள நபர்களே இத்தகைய செயலை செய்யும் போது மற்றவர்களை என்ன செய்ய போகிறோம்? மொத்தத்தில் விற்பனையை நிறுத்துவதுதானே சரியாக இருக்கும்?

அதேபோல மதுக்கடைகள் செயல்பட தொடங்கியதும் பார்கள் இல்லை என்ற நிலை இருந்த போது மதுப்பிரியர்கள் எங்குபோய் மது குடித்தார்கள். ரோட்டு ஓரங்களில்தானே? அப்போது அவர்கள் மதுக்குடித்த பாட்டில்கள், கிளாஸ்கள், அவர்கள் தின்ற நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் என எல்லாவற்றையும் சாலைகளில்தானே வீசி எரிந்து விட்டுப் போனார்கள். அதையெல்லாம் அள்ளி சுத்தப்படுத்தியது யார் இந்த துப்புரவுப் பணியாளர்கள்தானே? அவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் அதன் வழியாக அதிகம் பாதிக்கப்படப் போவது துப்புரவுப் பணியாளர்களே? அதனால்தான் துப்புரவுப் பணியாளர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களின் இடைவெளியில் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

எளிதில் தொற்று பாதிப்பு அபாயத்திலிருப்பவர்கள்

துப்புரவுப் பணியாளர்கள் ஏன் எளிதாக தொற்றுக்கு இலக்காகுகிறார்கள் என்பது குறித்த தெளிவு பலருக்கும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு இச்செய்தி எடுத்துக்காட்டாக இருக்கும்.

மதுரை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளாராகப் பணிபுரிந்த மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், கொரோனா வார்டுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வந்திருக்கிறார். அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிக்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், பயன்படுத்திய கவச உடைகளை இவர் அப்புறப்படுத்தியிருக்கிறார். இதனையடுத்து காய்ச்சல், தொண்டை தொற்றால் அவதிப்பட்ட இவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளருக்கு கொரோனா அறிகுறி கண்டறிய்பபட்டது மற்ற துப்புரவுப் பணியாளர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வார்டில் பணியாற்றிய அந்தப் பணியாளருக்கு உரிய பாதுகாப்பு உடைகள் எப்படியும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அவர் அவ்வளவு எளிதாக தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார். அதுபோலதான் மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரும் நோய்த் தொற்றுக்கு விரைவில் இலக்காகும் அபாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா? என்பதை கண்காணிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இதனால் அவர்களையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதோடு இச்சமூகத்தையும் பாதுகாக்க முடியும். முதலில் அவர்களுக்கு நோய் தொற்றுக் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு

துப்புரவுப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாமலே வேலை செய்து வருவது பெரும் அவலத்திற்குரியது. மிக முக்கியமாக நோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு அந்நோயின் தாக்கம், அதன் தடுப்பு முறைகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முறையான விழிப்புணர்வை அரசு நிர்வாகம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்ய தவறியதால் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த தெளிவு இல்லாமல் ஏதோவொரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு துப்புரவுப் பணியாளர்கள் பணிசெய்து வரும் சூழல்தான் இன்று இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக இச்செய்தியைப் பார்க்கலாம்.

புதுச்சேரியில் கொரோனா நோய்ப் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளரான பெண் ஒருவர் தலையில் வேப்பிலையை அணிந்து கொண்டு பணிக்குச் செல்லும் அப்பெண்ணிடம் ஒருவர் எங்குச் செல்கிறீர்கள் எனக் கேட்க, அதற்கு அவர், ‘இப்போ எல்லாம் நாடுவுட்டு நாடு, நகரம் விட்டு நகரம், ஊருக்கு எவ்ளோ தீங்கு வருது. பாண்டிச்சேரியில் இதுபோல இந்த குருமா வருதுன்னு சொன்னாங்க. ஊர் பசங்க யாருமே அனுப்பல. நீப் போன திரும்ப வரமாட்டேன்னு சொன்னாங்க. ஏதோ கடவுள் நம்பிக்கையில வேப்பிலையை நான் தலையில வைச்சிட்டு வேலைக்குப் போறேன்’ என்று கூறியிருக்கிறார். அவரிடம் மீண்டும் மீண்டும் அது என்ன நோயி எனக் கேட்க, அவரோ குருமா நோயிங்க. குருமா நோயிங்க’ என்று தொடர்ந்து பதில் அளித்திருக்கிறார். துப்புரவுப் பணியாளரின் இந்த அறியாமை பேச்சு வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து பத்திரிகையிலும் இச்செய்தி வந்தது. (தினகரன், ஏப்ரல் 18, 2020)

புதிதாக நோய் ஒன்று தாக்கும் அபாயம் இருந்தால் அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதுகுறித்து தெளிவுபட அவர்கள் புரியும் வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அந்நோய் தாக்கம் குறித்து அவர்கள் தெரிந்து கொண்டு கவனமாக வேலை செய்து அவர்களை அந்நோயிலிருந்து காப்பாற்றிக் கொண்டும், இச்சமூகத்தையும் காப்பாற்ற முயலுவார்கள். ஆனால் இங்கு நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளருக்கு அதுகுறித்த எவ்வித தெளிவும் இல்லாமல் அந்நோயின் பெயரைக்கூட சரியாக சொல்லத் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என்றால் நோய் தடுப்புப் பணியில் அரசு காட்டும் தீவிரத்தை நினைத்தால் மிகப் பெருமையாகத்தான் இருக்கிறது. இதை மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்? நோய் குறித்த விழிப்புணர்வே இல்லையென்றால் பின்பு எப்படி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்திருப்பார்கள் என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டியது இருக்கிறது.

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை செய்ய நிர்பந்தம்

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியாக பல பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொற்று வராமல் தடுக்கும் பணியில் துப்புரவுப் பணியாளர்களின் பணி மகத்தானது. இத்தகைய பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில் அரசும் அரசு அதிகாரிகளும் அலட்சியமாகவும் பாராபட்சமாகவும் நடந்து கொள்வது ஏனோ தெரியவில்லை. அதற்காக ஆங்காங்கே புகார்கள் எழுந்த பிறகு அவற்றை சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் என்பது நோய்யை தடுக்க அரசுத் தரப்பி;ல் காட்டும் முனைப்பை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்? இதுகுறித்து பத்திரிகைகளில் இடம்பெற்ற ஒருசில செய்திகளைப் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காத நிலையில் பணியாற்றியிருக்கிறார்கள். நகர் பகுதியில் வாறுகாலை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வரும் அவர்களுக்கு கையுறை, முககவசம் இல்லாத நிலையில் சாலைகளில் கழிவுகளை எடுத்துக் கொட்டி வந்திருக்கின்றனர். இப்பணிகளைச் செய்ய நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. (தினகரன், மார்ச் 27, 2020)

தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அன்றாட வேலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததையொட்டி பேராவூரணி வட்டாட்சியர் துப்புரவுப் பணியாளர்களுக்கு முககவசம், கையுறைகளை வழங்கியிருக்கிறார். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 11, 2020)

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குப்பையை அகற்றுவது, சாலை ஓரங்களில் பிளிச்சிங் பவுடர் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை போன்ற பொருட்களும், வேறு எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை எனப் புகார் பத்திரிகைகளில் வெளியானதும் மறுநாள் அப்பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. (தினகரன், ஏப்ரல் 16, 2020)

அப்படியே பாதுகாப்பு கவசங்கள் கொடுத்தாலும் அவைகள் தரமானதாக இல்லை என்கின்றனர் துப்புரவுத் தொழிலாளர்கள். “பொதுமக்களுக்காக அர்ப்பணிப்புடன் துப்புரவு வேலைகளைச் செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இன்னும் முககவசம் கூட சரிவரக் கொடுக்கபடவில்லை. ஒரு நாளைக்கு 2 முககவசம் 2 கையுறைகள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். சில இடங்களில் கொடுக்கப்படும் முககவசம் தரமானதாக இல்லை. பஞ்சு மாதிரி இருக்கிறது. கையுறைகள், காலுறைகளும் கிடையாது. மாநகராட்சி நிர்வாகம் வழங்கும் கவச உடை என்பது ‘ரெயின் கோட்’ அதை அணிந்த 5 நிமிடத்தில் உடம்பு முழுவதும் வேர்த்துக் கொட்டு விடுகிறது. அதில், எப்படி வேலை செய்ய முடியும்?" எனக் கேள்விகள் எழுப்புகின்றனர். துப்புரவுப் பணியாளர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மனித நேயமுள்ள யாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழ்நிலையில் கூட எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்தான் துப்புரவுப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். சானிடைசர்கள், முககவசம், காலணிகள் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்புக் கருவிகள் அவர்களுக்குப் போதுமான அளவு வழங்கப்படவில்லை. இதனால் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு மற்றவர்களைவிட துப்புரவுப் பணியாளர்களுக்குதான் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்தபட்சம் இத்தகைய தொற்றுக்கு இலக்காகக் காத்திருக்கும் இவர்களுக்கு முறையான மருத்துவ கவனிப்புகள் செய்யப்பட்டால் நல்லது என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மருத்துவ முகாம்

கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி நோய் தாக்குதல் ஏதேனும் இருக்கிறதா எனக் கண்டறிய அரசுத் தரப்பில் உத்திரவிட்டதையொட்டி ஒருசில இடங்களில் பெயரளவில் நடந்ததோடு சரி. ஆனால் அது முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது யார்? என்பதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியதிருக்கிறது.

மதுரை, மாநகராட்சியில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் பணிசெய்கிறார்கள். இவர்கள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் வீதிகள் தோறும் கிருமிநாசினி உள்ளிட்ட மருந்துகளை தெளித்து வருகிறார்கள். அவர்களுக்கு நோய்தொற்று எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக மாநகராட்சியிலுள்ள 25 மருத்துவமனைகளில் முகாம் நடத்தி கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் பரிசோதனை செய்யப்படுகின்றன. (தினகரன், ஏப்ரல் 07, 2020)

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் எவ்வித நோய் தொற்றும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் 3,651 துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 13, 2020)

இதுபோன்ற செய்திகள் பத்திரிகையில் இடம் பெற்றாலும் உண்மையாகவே மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை செய்யும் அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலருக்கு உடலின் வெப்பநிலையை அறியும் டெம்பரேச்சர் கருவியை முகத்திற்கு நேராக நீட்டிவிட்டு போ எனச் சொல்லிவிடும் நிகழ்வும் நடந்திருக்கிறது. உண்மையாகவே நோய் தாக்கும் அபாயத்திலிருக்கும் துப்புரவுப் பணியாளர்களை அதிக கவனம் மேற்கொண்டு அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ ஆலோசனைகளோ அல்லது பரிசோதனைகளோ செய்யப்பட வேண்டும். அதுதான் இன்றைய முக்கியத் தேவையும்கூட. இதை செய்ய தவறினால் தற்போது தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் இன்னும் அதிகப் பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியது இருக்கும்?

வெற்று கௌரவிப்புகளால் யாருக்கு பயன்?

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில் தங்களின் உயிரை பணயம் வைத்து, துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாடு முழுவதும் துப்புரவுப் பணியாளர்களின் சேவையை பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய மரியாதை தராமலிருந்த சமூகம் தற்போது அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது போன்ற மாயையை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். இதை உறுதிசெய்யும் வகையில் ஒருசில நிகழ்வுகளை நாம் பார்ப்போம்.

ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் பாலமநேர் என்ற பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமானதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் தொடர்ந்து கிருமி நாசினிக் கொண்டு சுத்திகரிக்கும் பணியில் அப்பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக இரண்டு பேருக்கு 15 நூறு ரூபாய் நோட்டுகளை மாலையாக கோர்த்து சால்வையோடு அணிவித்து பாராட்டியிருக்கிறார்கள். இது துப்புரவுப் பணியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். (தினகரன், ஏப்ரல் 08, 2020)

பெரியகுளம் அருகே எண்டப்பள்ளி ஊராட்சி பகுதி பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இரவு பகல் பாராமல் கிருமி நாசினி தெளித்து துப்புரவுப் பணியாற்றும் ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 10கி அரிசி பையுடன், 2 கி காய்கறி தொகுப்பு பையையும் வழங்கி, மேலும் இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்றிட தங்களது வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் கூறினர். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 09, 2020)

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட துப்புரவுப் பணியாளர்களைப் பாராட்டி ஊராட்சிமன்ற தலைவர், துப்புரவுப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தும், அவர்களின் உடல்நலம் பேணிக் காப்பதற்காக பலவகைப்பட்ட பழங்களை வழங்கியும் மரியாதை செய்தனர். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 11, 2020)

மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்து, காலம் முழுக்க அவர்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் காக்கப்பட வேண்டியவர்கள் எனப் பாராட்டினர். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 13, 2020)

காரியப்பட்டி பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் கசாயம் வழங்கினர். (தினகரன், ஏப்ரல் 14, 2020)

பரமக்குடி தாலுகா, போகலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்புப்பணி, தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு பணியாளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் துப்புரவுப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி நன்றி தெரிவித்தார். போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினர். (தினகரன், ஏப்ரல் 18, 2020)

பழனி அருகே பெரியம்மாபட்டி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செய்யும் நிகழ்ச்சியை ஊராட்சிமன்ற தலைவர் செய்தது அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (தினகரன், ஏப்ரல் 22, 2020)

சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக மதிய விருந்து அளித்து மளிகைப் பொருட்கள் வழங்கினர். (தினகரன், ஏப்ரல் 24, 2020)

இதுபோல் இன்னும் பல இடங்களில் ஏதேனும் ஒருவகையில் கௌரவிக்கும் நிகழ்வு நடந்திருக்கலாம். எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது துப்புரவுப் பணியாளர்களின் மீது அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. அத்துடன் பல ஊர்களில் அவர்கள் பாராட்டப்படுவது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தருகிறது. அதோடு கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் போது அன்றாடம் துப்புரவுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சரி இதற்கு அடுத்து துப்புரவுப் பணியாளர்களின் நிலை? அம்போவென்று விட்டுவிடும் கதைதானே தொடரப் போகிறது. உண்மையாகவே நாம் அதைத்தான் விரும்புகிறோமா? கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அவர்களைக் கௌரவித்துவிட்டு, மற்ற நாட்களில் சக மனிதர்களாகக்கூட பார்க்காத மனநிலையில்தான் இருக்கப் போகிறோமா?

இதை ஊடகங்களும் எந்தவித விமர்சனமும் இன்றி கௌரவிக்கும் நிகழ்வாக சித்தரிப்பதும் வெட்கக்கேடுதான். காலங்காலமாக துர் நாற்றமெடுத்த மலத்தையும், குப்பையையும் அள்ளுவதற்கென்றே பிறந்தவர்கள் போல வஞ்சிக்கப்பட்ட இம்மக்களின், அன்றாடம் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை புனிதப்படுத்தி அவர்களை இத்தொழிலிலேயே தக்க வைப்பதற்கான மோசடி செயல்தானே இது?

போலியான மரியாதை எதற்கு?

பொதுவாக இந்த கொரோனா கொள்ளை நோய் காலத்தில் காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்களைவிட இன்று நாட்டில் அதிகம் வழிபாட்டுக்குரிய மனிதர்களாக துப்புரவுப் பணியாளர்கள் போற்றப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் காவல்துறை மட்டும் துப்புரவுப் பணியாளர்களை கௌரவிக்காமல் விட்டுவிடுமா? அப்படிப்பட்ட நாடகங்களும் அரங்கேறின.

தமிழக காவல்துறை சார்பில் காவல் துறையின் மாநில உயர் மட்டக் காவல்துறைத் தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிற புருயுசுனு ழுகு ர்ழுNழுருசு எனப்படும் (தேசப் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் ராணுவ மரியாதை) உயரிய மரியாதையை ஒருசில இடங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொடுத்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகாதரப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு நெல்லை மாநகர காவல்துறை சார்பில் போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். (தினகரன், ஏப்ரல் 10, 2020)

விருதுநகர் மாவட்டத்தைத் தூய்மைப்படுத்தி எவ்வித தொற்று நோய்களும் பரவாமல் தடுத்துவரும் துப்புரவுப் பணியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக மாவட்ட காவல்துறையினர் சாத்தூரில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மதிய விருந்து ஏப்ரல் 13 அன்று அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை சரக காவல் துணைத் தலைவர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சாத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் மேற்கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒருபக்கம் துப்புரவுப் பணியாளர்களைப் பயங்கராமாக மரியாதை செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் கொரோனா தடுப்புப் பணியில் தன் உயிரை பணயம் வைத்து செய்துவரும் சக அரசு ஊழியரான துப்புரவுப் பணியாளரை அதே போலீசார் தாக்குகின்றனர். இது எவ்வளவு பெரிய முரண்?

அரக்கோணம், சுவால்பேட்டை சாலையில் துப்புரவுப் பணியாளர் சேகர் என்பவர் நடந்து செல்லும் போது அவரை போலிசார் எந்த விசாரனையும் இன்றி தடுத்து நிறுத்தி லத்தியால் தாக்கி எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த துப்புரவுப் பணியாளர்கள் அங்கு திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட உடனடியாக நகராட்சி ஆணையாளர், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துப்புரவுப் பணியாளர்கள் எங்கள் பணியை நாங்கள் வழக்கம் போல் செய்கிறோம். ஆனால் போலீசார் எந்த விசாரனையும் இன்றி லத்தியால் தாக்கிவிட்டு அதன் பிறகே விசாரிக்கின்றனர் எனத் தெரிவித்தனர். அதன் பிறகு நகராட்சி ஆணையாளர் இதுபோன்ற பிரச்சனை வராமல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்ட பின்பு கலைந்து சென்றனர். (தினகரன், ஏப்ரல் 10, 2020) இத்தகைய செயலுக்காக அங்கிருந்த போலிஸார் வருத்தம் தெரிவித்ததாகக்கூட தெரியவில்லை. இவ்வளவு அப்பாவித்தனமாக, சமூகத்திற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களைக்குக் கொஞ்சம்கூட அரசு ஊழியர் என்ற மரியாதைகூட தருவது கிடையாது. முதலில் அரசு துப்புரவுப் பணியாளர்களை அரசுப் பணியாளாராகக் கருதி அவர்களை அங்கீகரிப்பது கிடையாது. பிறகு எப்படி மற்றவர்கள் மதி;ப்பார்கள்?

பெரும்பாலான நேரங்களில் துப்புரவுப் பணியாளர்களை அவர் எத்தனை வயதானவராக இருந்தாலும் அவரும் ஒர் அரசு ஊழியர் என்று பிற அரசு ஊழியர்கள் மதிப்பதே கிடையாது என்பதுதான் எதார்த்தம். ஒருமையில் பேசுவது, தீண்டத்தகாதவர்களாக அருவருக்கத்தக்க வகையில் பார்;ப்பது போன்றவை தொடரத்தானே செய்கிறது. ஆனால் இன்று கொரோனா போன்ற கொள்ளை நோயிலிருந்து எப்படியும் நாம் தப்பித்து உயிர் பிழைக்க வேண்டும் என்ற பயமே இத்தகைய செயல்களைச் செய்து துப்புரவுப் பணியாளர்களை ஊக்குப்படுத்துவதற்கான நுண்ணிய வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறார்கள் என்பதை நாம் மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

அப்படி ஒருவேளை துப்புரவுப் பணியாளர்களை உண்மையாகவே இப்போது அளிக்கப்படும் உயரிய மரியாதையை அளிக்க மனதார விரும்பினால் எத்தனையோ பேர் பணியின் போது பாதாள சாக்கடைகளில் இறங்கி தங்களின் உயிரை விடுகிறார்கள். அவர்களின் சாவு கூட உரிய விசாரனையின்றி அதற்கு காரணமானவர்கள் காப்பாற்றத்தானே படுகிறார்கள். அதுவொரு பக்கம். அவர்களின் இறப்பிற்கு உரிய நிவாரணத்தைகூட போராடித்தான் வாங்க வேண்டிய அவலம். அதற்கு காவல்துறையினர் முறையாக அவர் பணியின் போது பாதாள சாக்கடையில் விழுந்து இறந்தார் என வழக்குப் பதிவு செய்ய எத்தனை போராட்டங்களை அமைப்புகள் கடந்த காலங்களில் நடத்தியிருப்பார்கள்?

சரி இனிமேலாவது இதுபோன்ற நிகழ்வின் போது மனிதத் தன்மையோடு காவல்துறையினர் நடந்து கொண்டு தவறு இழைத்தவர்களைக் கைது செய்து, சரியான வழக்குப் பதிவு செய்வார்களா? அதைவிட முக்கியமான விசயம். துப்புரவுப் பணியின் போது இறந்தவர்களின் உடலுக்கு இப்போது அளித்த மரியாதையை அளிக்க அரசும், காவல்துறையும் முன்வருமா? ஒரு சாதாரண கீழ்மட்டத்திலிருக்கும் அரசு ஊழியன் கூட அவர்களின் சாவில் பங்கெடுப்பது கிடையாதே? இப்போது நடப்பதை பார்த்தால் எவ்வளவு பெரிய கபட நாடகம் என்று சொல்வதா? சாதியின் பெயரால் தீட்டப்பட்ட சதி என்று சொல்வதா? மனசாட்சியுள்ள மனிதர்களே பதில் சொல்லட்டும்?

கடவுளுக்குச் சமமானவர்கள் என்றால் நீங்களும் கடவுளாகலாம்!

மத்திய, மாநில அரசுகள் எப்போதுமே துப்புரவுப் பணியாளர்களை மனிதப் பிறவிகளாக மதிப்பது கிடையாது, நடத்துவதும் கிடையாது. அவர்கள் மனுதர்ம விதிகளை தூக்கிப்பிடித்து சாதிய கட்டமைப்புக்குத் துதிபாடுபவர்களாக இருப்பதே காரணம். இது சாதி ஆதிக்கவாதிகளின் நலன் காக்கவே பயன்படும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜ் சென்ற பிரதமர் மோடி அங்கு கும்பமேளாவில் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்பு கும்பமேளாவை சிறப்பாக சுத்தம் செய்த 5 துப்புரவுப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பாதங்களை பிரதமர் மோடி கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் பெரிய அளவில் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதான் இன்று கொரோனா வைரஸ்; தடுப்புப் பணி நேரத்தில் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களுக்குப் பூஜை செய்யும் செயலுக்கு முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய செயலை ஆட்சியாளர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் செய்து பெருமிதம் அடைந்தார்கள் என்பதை நாம் அன்றாடம் பத்திரிகைச் செய்திகளில் படித்திருப்போம்.

modi cleaning the feet of a scavengerமதுரை, திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 750 துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர், உதயக்குமார், கொரோனா பாதிப்பு சமயத்தில் தங்களது உயிரை துச்சமாக மதித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் எனக் கூறியவர் துப்புரவுப் பணியாளர்களின் கால்களில் விழுந்து வணங்கிய பின்பு நிவாரணப் பொருட்களை வழங்கினார். (தினகரன், ஏப்ரல் 18, 2020)

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி, திருவேடகம் கிராம ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை பார்க்கும் ஆண்-பெண் உள்ளிட்ட 8 நபர்களுக்கு ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமையில் பாத பூஜை செய்து கௌரவப்படுத்தி பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினர். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 09, 2020)

விருதுநகர் ஒன்றியத்திலுள்ள கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் செல்வி, தனது ஊராட்சியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செய்து அவர்களின் வாழ்வாதரத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 23, 2020)

மேற்கண்ட நிகழ்வுகளில் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைத் தொட்டு பூஜை செய்தார்கள். ஆனால் திருச்சியில் இந்நேரத்தில் இன்னொரு சம்பவம் அரங்கேறியது. துப்புரவுப் பணியாளர்களை காலில் விழவைத்த நிகழ்வுதான் அது. என்னைப் பொறுத்தவரை துப்புரவுப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்கி பூஜை செய்வதும் கூடாது. இன்னொன்று கடவுளின் பெயரால் அவர்களைக் காலில் விழ வைப்பதும் செய்யக்கூடாத செயல். அப்படி செய்யும் போது கடவுளுக்குச் சமமானவர்களாக நினைத்து செய்யும் செயல் பலிக்குமா? மொத்தத்;;;தில் இதுவொரு வெற்று வேஷம் என்பதை உணர்த்தவே அவ்வாறு குறிப்பிட்டேன்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டத்தை சார்ந்த துப்புரவுப் பணியாளர்கள் பலர் மன்னார்குடி செண்பக மன்னர் இராமனுஜ ஜுயரிடம் காலில் விழுந்து ஆசிபெறும் நிகழ்வுதான் அது. 30 துப்புரவுப் பணியாளர்கள் பாத பூஜை வஸ்திரம் அணிந்து மாலை போட்டுக் கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வு துப்புரவுப் பணியாளர்களிடையே ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என வீடியோவில் வெற்றிச் செல்வன் என்பவர் பேசிக் கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் திருச்சி மாநகராட்சியை இன்னும் தூய்மையாக வைத்திருப்போம் என துப்புரவுப் பணியாளர்கள் சொல்லி சென்றதாகவும் குறிப்பிட்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

உண்மையிலேயே துப்புரவுப் பணி புனிதமானது என்று கருதும் நபர்கள், அப்பேர்பட்ட அந்தப் பணியை அவர்கள் செய்ய முன்வராததுதான் பெரிய முரணாக இருக்கிறது. இதிலிருந்தே இது எவ்வளவு பெரிய வெற்று துவேசம் எனப் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை அவர்கள் ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பார்கள் என நினைக்கிறேன். திடீரென விட்டுவிட்டு வரமுடியாதல்லவா? அதனால் குறைந்தபட்சம் அவர்களின் பிள்ளைகளையாவது அந்தப் பணியில் சேர்வதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக இப்போது இருந்தே ஆயத்தப் பணிகளைத் தொடங்க வேண்டும். துப்புரவுப் பணியின் மகத்துவத்தைப் பற்றி வீட்டில் உள்ளவர்களிடமும் சொந்தபந்தங்களிடமும் பரப்புரை செய்ய வேண்டும். எத்தனை நாளைக்கு இதுபோன்ற கொள்ளை நோய் அல்லது பேரிடர்கள் வரும் போது மட்டும் துப்புரவுப் பணியாளர்களின் கால்களுக்குப் பாதபூஜை செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். உங்களுக்கோ அல்லது உங்களது பி;ள்ளைகளுக்கோ அதே பாதபூஜையை இப்போது துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்யும் அவர்களின்; வாரிசுகள் செய்யாமலா போவார்கள்?

துப்புரவுப் பணியாளர்கள் கடவுளுக்குச் சமமானவர்களாக இருந்து நிறைய புண்ணியத்தை சம்பாதித்து விட்டார்கள். அதனால் மற்றவர்களுக்கும் வழிவிட்டு நிற்க ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தாராளமாக நீங்களும் விரைவாக வந்து சேருங்கள்... உங்களின் வருகைக்காக துப்புரவுப் பணியாளர்கள் வழிமேல் வழி வைத்துக் காத்திருக்கிறார்கள். சீக்கிரம்... மனது மாறுவதற்குள் சேர்ந்து விடுங்கள்...!

குப்பைக்கும் - அதை அள்ளுபவர்களுக்கும் ஓரே வாகனமா?

கொரோனா ஊரடங்கில் சிறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு அத்தியாவசியப் பணிகளுக்காக அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்று அரசு அறிவித்த போது அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றுவர காலையிலும் மாலையிலும் பேருந்து வசதி செய்துதரப்பட்டது. அதிலும்கூட ஒரேப் பேருந்தில் அடைத்துக் கொண்டு போதிய இடைவெளி இல்லாமல் அழைத்துச் செல்லப்படுகிறோம் எனக் குற்றச்சாட்டும் சொன்னார்கள். இது கண்டிக்கப்பட வேண்டியதுதான். அரசே இடைவெளி விட்டு இருங்கள் எனச் சொல்லிவிட்டு அரசு ஊழியர்களை அடைத்துக் கொண்டு பேருந்தில் ஏற்றிச் செல்வது தவறுதான்.

அதே நேரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் இல்லையா? ஏன் அவர்கள் பணிக்குச் செல்லும் போது முறையான பேருந்து வசதிகள் செய்துதரப்படவில்லை? அவர்களை வேலை வாங்கும் நிர்வாகத்தினருக்கு வாகன வசதி செய்துதரப்பட வேண்டும் என ஏன் தோன்றவில்லை. அவர்களே குப்பையை அள்ளுகிறார்கள். அவர்களுக்கு எதற்கு வாகனம். குப்பை வண்டி போதாதா? என்கிற மனநிலைதானே? மனம் முழுவதும் குப்பைமேட்டை போன்று உயர்ந்திருப்பவர்களுக்குள் அப்படித்தானே நினைக்கத் தோன்றும்?

சென்னை, தி.நகர் பாண்டி பஜார் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களை சமூக இடைவெளி இல்லாமலும் அரைகுறை முககவசங்களுடனும் குப்பை லாரியில் புளி மூட்டை போல அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டும் போதே இந்த நிலைமை என்றால் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்? (தினகரன், ஏப்ரல் 13, 2020)

அதேபோல, மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை போதிய சமூக இடைவெளி இன்றி மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக சரக்கு வேனில் அழைத்துச் செல்கிறது. (தினகரன், ஏப்ரல் 14, 2020)

துப்புரவுப் பணியாளர்கள் பலர், கொரோனா ஊரடங்கிற்கு பின்பு வேலை அதிகமாகி விட்டது. ஆனால் வேலைக்குப் போவதற்கு வண்டி வசதி இல்லை. ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறவர்களுக்குத் தனியாக பேருந்து விடுவதாகவும் அதேநேரத்தில் இவர்கள் நடந்தோ சைக்கிள்யோ போக வேண்டியது இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் பெண்கள் இன்னமும் குப்பை வண்டியில்தான் போய்வர நேர்கிறது. இதில் எங்கிருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறது? என்று கேள்வி கேட்கின்றனர்.

பொது மக்களை சமூக இடைவெளி விட்டு செல்லுங்கள், வீட்டிற்குள்ளே இருங்கள் என்று அக்கறை காட்டும் அரசு அந்த அக்கறையைப் பொது மக்களின் நலனுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்கள் மீது கொஞ்சமாவது வைத்தால் என்ன? இது ஒருவிதத்தில் மாற்றான் தாய் மனப்பாண்மைதானே? இல்;லை... இல்லை இது கடைந்தெடுத்த சாதிய கண்ணோட்டமே!

சுழற்சி முறையில் பணியை மாற்றினால் என்ன?

கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்ற மருத்துவத் துறையினர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர்கள் தொடங்கி துப்புரவுப் பணியாளர்கள் வரை வயதானவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்ற கூக்குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. தற்காப்பு உடைகள், முகக்கவசம் போன்றவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அவர்களெல்லாம் உயிரைப் பணயம் வைத்துதான் கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். ஆகவே, கூடுமானவரை வயதானவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது என்பதே பலரின் கருத்தாக இருந்தது.

இவற்றை தொடர்ந்து சென்னையில் ஒருசில பகுதிகளில் 50 வயதிற்கு மேல் இருக்கும் காவலர்கள் விரும்பினால் பணிக்கு வரலாம். தேவையெனில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவித்தார்கள். அதேபோல் மற்ற துறைகளிலும் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வெறும் 50 சதவித ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணிசெய்ய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் எவ்வித தளர்வும், விடுமுறையும் இல்லாமல் கூடுதல் வேலை சுமையுடன் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டது துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே. ஏன் இந்த பாராபட்சம்?

இந்த கொள்ளை நோய் காலத்தில் குறைந்தபட்சம் அவர்களின் வேலை தன்மையைக்கூட மாற்றியமைக்க மனம் இல்லை. இந்த அவசர காலத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. குறைந்தது ‘ஷிஃப்ட்’ முறையில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தால் நல்லது என துப்புரவுப் பணியாளர்கள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனா வந்ததிலிருந்து பெரும்பாலான தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதுகூட கிடையாது. இரவு பகல் பாராமலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட அவர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சின்னாளப்பட்டி பேரூராட்சியில் 40 துப்புரவுப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என மொத்தம் 60 பேர் பணிசெய்து வருகிறார்கள். கொரோனா பரவி வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவுப் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்துப் பணியாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் மதிய நேரங்களில் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மதிய நேரங்களில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பசியின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். (தினகரன், ஏப்ரல் 09, 2020)

இச்செய்தியை பார்த்தாலே தெரியும் அவர்கள் எவ்வளவு கூடுதல் வேலையை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது. மற்ற நாட்களில் காலை 6 மணிக்கு வேலை தொடங்கினாலும் குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் மதியத்திற்குப் பின்பு வேலை தொடங்கும். ஆனால் கொரோனா பாதித்திருக்கும் சூழலில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. சாப்பாடுக்குச் செல்வதற்குக்கூட அனுமதிக்கப்படாமல் அவர்களே உணவு கொடுத்து அவர்களின் ஓய்வு நேரத்தையும் சுரண்டும் மோசமான சூழலில்தான் துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இது தனியார் துறைகளைவிட துப்புரவுப் பணியாளர்களை அரசு நிர்வாகமே மோசமான முறையில் சுரண்டுகிறது என்பதற்கு சாட்சி.

மேற்கண்ட செய்தியில் மதிய உணவு மட்டுமே அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் காலை 6 மணிக்கு வேலைக்கு வரும் துப்புரவுப் பணியாளர்கள் காலை எங்கு சாப்பிடுவார்கள். தினமும் காலை எப்படிச் சாப்பிட்டார்களோ அப்படிச் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்கிற நினைப்புதான். அவர்கள் கடைகளில் ஏதாவது கிடைத்ததை கொண்டு வயிற்றை நிறைத்துக் கொள்ளும் போக்குதான் அன்றாடம் நடக்கும். இங்கு அரசு நிர்வாகத்தின் திட்டம் என்னவென்றால் காலை 11 மணிக்கு மேல் அவர்கள் வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய் மதியம் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் வேலைக்கு வருவார்கள். இந்த கொஞ்ச நேர இடைவெளியில் ஓய்வைக்கூட பறிக்கும் மோசடிதானே? இதற்காகக் கூடுதல் ஊதியம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் சோறு போட்டு உழைப்பை சுரண்டும் நுணுக்கும் பழைய அடிமை முறையை கண்முன்னால் காட்சிப்படுத்துகிறது.

இதைவிட என்ன கொடுமை என்றால் அயாராது காலை முதல் உழைத்துக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொண்டு வரப்படும் உணவில்கூட எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். தஞ்சையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஓய்வின்றி பணிசெய்யும் இவர்களுக்குக் கொண்டு வரும் உணவை குப்பை வண்டியில் எடுத்து வரலாமா? என நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 20, 2020)

எவ்வளவு மட்டமான புத்தி இவர்களுக்கு. ஒரு நல்ல வாகன ஏற்பாடுகூடவா அரசு நிர்வாகத்தினருக்குக் கிடைக்கவில்லை. குப்பை வண்டியில் கொண்டுவரும் உணவை இவர்கள் முதலில் சாப்பிடுவார்களா? நாய்களைவிட கேவலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாதபூஜை வேறு செய்து எவ்வளவு பெரிய கபட நாடகம் ஆடுகிறார்கள். இத்தகைய செயல்களை அதிகாரிகள் மட்டுமல்ல, அவர்களுடன் இந்நேரத்தில் கைகோர்த்திருப்பது சாதிய மனோநிலையில் இருப்பவர்களும்தானே இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்?

மற்ற துறைகளைப் போல் துப்புரவுப் பணியாளர்களை ஏன் ஐம்பது சதவிதத்தினரை கொண்டு வேலை செய்யவில்லை. கேட்டாலும்கூட விடுமுறை கொடுக்காமல் அவர்களை அடிமைகளைப் போல் நடத்துவது ஏன்? சாதிய மனோநிலைதான் என்பதை மேற்கண்ட செய்திகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை பணிச்சுமை அதிகம், அதனால் தொடர்ச்சியாக வேலை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட மற்ற துறைகளில் இருக்கும் பணியாளர்களை இப்பணிக்கு ஈடுபடுத்த வேண்டியதுதானே? எல்லாம் அரசாங்க வேலைதானே?

சம்பள உயர்வு கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிர அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் துப்புரவுப் பணியைச் செய்து வருகிறார்கள். நேரடியாக உள்ளாட்சித் துறையில் பணியாற்றுகிறவர்களைத் தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அமர்த்தப்பட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களும் உள்ளனர். இதில் நிரந்தரப் பணியாளர், தொகுப்பூதியப் பணியாளர், ஒப்பந்தப் பணியாளர், தினக்கூலி என்று வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் நிரந்தரப் பணியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு முறையான ஊதியம் கிடையாது. சுரண்டலுக்குத்தான் உள்ளாகிறார்கள். அல்லது போதிய ஊதியமின்றி அவர்கள் பணிசெய்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள சுயஉதவிக் குழுக்கள் மூலமாக நியமிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை சம்பள உயர்வு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதை கேள்விப்பட்டு வந்த அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளம் தங்கு தடையின்றி வழங்கப்படும். சம்பள உயர்வு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி தான் வழங்க முடியும். அதனால் இப்போது பணிக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று துப்புரவுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர். (வணக்கம் இந்தியா, ஏப்ரல் 10, 2020)

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மாற்றி அமைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் ஆகியோர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி, பல்லாயிரக்கணக்கானோர்; மரணத்திற்கு காரணமான கொரோனா தொற்றுநோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க துப்புரவுப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் மிகவும் ஏழை, எளிய நிலையில் உள்ள துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வாதரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மாற்றியமைத்திட வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் பலருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், மற்ற துறை பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். (தினகரன், ஏப்ரல் 12, 2020)

சாத்தூரில் கடந்த ஜுன் 06 அன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை கவுன்சிலர் கவிதா கருப்பசாமி முன்மொழிந்தார். இந்தக் கோரிக்கையை பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் இதற்கு, கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். (தினகரன், ஜுன் 07, 2020)

கொரோனா தொற்றைத் தடுப்பதில் சுகாதாரத்துறை ஊழியர்களைப் போலவே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மூன்று மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் சுமார் 30 துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். குறைவான ஊதியம், அதிக பணி நேரம், போதுமான பாதுகாப்புக் கருவிகள் இல்லை என்று கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஒருநாள் நடத்திய போராட்டத்தைக்கூட அனுமதிக்காமல் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தை தூண்டியதாகக் கூறி இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கொரோனா போன்ற கொள்ளை நோய் காலங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பணிச்சுமை அதிகம் இருந்தும் அவர்களால் தேவைக்குக்கூட விடுமுறை எடுப்பது கிடையாது. அல்லது முடிவதில்லை. அதேநேரத்தில் அவர்களுக்கு வேலைகேற்ற ஊதியமும் கொடுக்கப்படுவதில்லை. இது ஒருவகையில் பெரும் உழைப்பு சுரண்டல்தானே? அதையும் மீறி ஏதாவது முன்னெடுத்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பெரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்நேரத்தில்கூட துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் துப்புரவுப் பணியாளர்களை மற்றவர்களைக் காட்டிலும் அரசு நிர்வாகமே அதிகமாக வஞ்சிக்கிறது என்று சொல்லலாம். எத்தனையோ கோடிகளில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்புப் பணிக்காக பணம் ஒதுக்குகிறார்கள். அதில் கூடுதல் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியமாவது கொடுக்க முன்வரலாம் அல்லவா? அல்லது அந்தக் கூடுதல் வேலைக்கேற்ற பணியாளர்களை நியமிப்பதுதானே சரியாக இருக்கும்?

கொள்ளை நோய் அச்சமும் கடமை தவறாத பணியும்

கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க மூன்று நடவடிக்கைகள் மிக முக்கியம். அவை, “வீட்டில் இருங்கள், வீட்டிலே இருங்கள், வீட்டிலேயே இருங்கள்" என்பதுதான். வெளியே சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய முழக்கமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம், தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் எனத் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க வைத்துள்ளது.

ஆனால், வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியே சென்றால் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க முடியாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், தொற்று தமக்கு வந்துவிடுமோ என்ற பேரச்சத்திலும் மக்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறுக்க இயலாது.

கொரோனா தொற்றில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்தும் துப்புரவுப் பணியாளர்களால் அப்படி இருக்க முடியவில்லை. துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமல்ல. மருத்துவர்கள், காவலர்கள், வருவாய்துறையினர் எனப் பலரும் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் துப்புரவுப் பணியாளர்களின் வேலை தன்மை சற்று மாறுபட்டது அல்லவா? அப்படி, மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். அதையும் மீறி விடுமுறை எடுத்தால் சம்பளம் போய்விடும். ஒருவேளை விடுமுறை போட்டாலும் இனி வேலைக்கே வர வேண்டாம் எனச் சொல்லிவிடுவார்களோ என்கிற பயம். இப்படிப் பயத்தோடுதான் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். அவர்கள் வேலைக்குச் சென்றால்தான் சம்பளம். போகாவிட்டால் ஒன்றும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் உயிர் பயம் இருந்தாலும் உயிருடன் இருக்க வேண்டுமே என்பதற்காகவே வேலை செல்ல வேண்டிய அவலம். அரசுத் துறையில் இருக்கும் மற்ற துறை பணியாளர்களுக்கு விடுப்புடன் சம்பளம் கொடுத்தாலும் இவர்களுக்கு மட்டும் கிடையாது. விடுமுறை எடுத்துக் கொண்டால் சம்பளப் பிடித்தம் செய்யப்படுகிறது. இது தி;ட்டமிட்டு செய்யப்படும் பெரும் சதியே தவிர வேறு என்னவென்று சொல்வது?

சாதி ஆதிக்க மனோபாவம்

கொரோனா அச்சத்தில் துப்புரவுப் பணியாளர்களின் பணி போற்றத்தக்கது எனப் பலரும் மெச்சிக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே சில விரும்பத்தகாத மோசமான சம்பவங்களும் அரங்கேறத்தான் செய்கின்றன. பாதபூஜைகள் செய்து அவர்களுக்கு மாலை மரியாதைகள் அளிக்கப்பட்ட போதும் சாதி துவேசத்துடன் சக மனிதனாகக்கூட பார்க்காத மனநிலையில் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை சென்னைக்கு அருகே ஒரு சம்பவம் நடந்த வீடீயோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைராகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெரியவர் மனிதாபிமானம் அற்று பேசிய விசயத்தை பலரும் பார்த்திருப்போம். இருப்பினும் பதிவு செய்கிறேன்.

“கோடிக்கணக்குல வீட்டே கட்டிப் போட்டிருக்கோம். எங்களால நீ சம்பாரிச்சிட்டு இருக்குறே. நாங்க கட்டிப் போட்டதுனால வந்து நீ பீயை எடுக்குற. நீ பீயை எடுக்குறதுக்கு காரணமே நாங்கெல்லாம் வந்து வீடு கட்டுனதால. அதுல சம்பாரிச்சு காலம் ஓட்டுற நீ. யாரை வேணாலும் வரச்சொல்லு. யாருகிட்ட வேணாலும் சொல்லத்தயார். பீயிலிருந்து வர்ற சம்பாத்தியம்தானே இது. அதனால நீ அதத்தான் திங்குற. அதத்தின்னா என்ன. இதத்தின்னா என்ன. நாங்க கொடுக்கலன்னா எங்கயிருந்து தின்பே நீ. உன்ன லாடம் கட்டலன்னா பாருடா?” என்று பேசியதோடு கெட்டவார்த்தையும் பேசினார். இவ்வளவு திமிராக பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? (ஏப்ரல் 2020, சமுகவலைததள வீடீயோ) இப்படிப் பேசியவரின் வீட்டில் செப்டிக் டேங்கில் கழிவை ஏற்றப் போன நபரிடம் இவ்வளவு வன்மையாகப் பேசியிருக்கிறார் அந்த வீட்டுக்காரர். அவர் பார்ப்பனராக இருக்கக்கூடும். பூனூல் வேறு போட்டிருந்தார்.

இப்பேச்சு எவ்வளவு கடைந்தெடுத்த சாதிய திமிரோடு பேசியிருக்கிறார்; அவர். தன் மலத்தை எடுத்து மற்றொருவன் பணம் சம்பாதித்து அதன் வழியாக தன்னுடைய வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்கிறான் என்பது அந்த மலத்தை கழிக்கும் அவருக்கு பெருமையாக இருப்பது போல பேசியிருக்கிறார். தன் நாடி நரம்பெல்லாம் சாதிய கட்டமைப்பு எனும் மனுதர்ம கோட்பாட்டு ஊறிப்போன ஒரு அயோக்கியனால்தான் அவ்வாறு பேச முடியும்.

துப்புரவுப் பணியாளர்களின் கால்களைக் கழுவி அவர்களின் பாதங்களில் மலர்களை பலர் தூவி முடித்து அதன் வாசம் போவதற்குள் இன்னொரு இடத்தில் மீண்டும் அதே மலத்தை அள்ளி முகத்தில் வீசியிருக்கிறார் இந்நபர். மலர் மாலைகள் அணிவித்து துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டாடிய சமூகமும் சரி, அத்தகைய செயலை முன்னெடுத்தவர்களும் சரி, இதுபோன்ற ஈனங்கெட்ட செயலை கண்டிக்கதத் துளியும் மனம் வரவில்லையே ஏன்? அவர்களின் வேலை நாம் துப்புரவுப் பணியாளர்களுக்கு மரியாதை செய்துவிட்டோம். அச்செய்தியும் பத்திரிகையில் வந்துவிட்டது. அதற்கான கணக்கும் எழுதிவிட்டாச்சு. இனி நமக்கு அதற்கும் சம்பந்தமில்லை என்பதை போல்தானே நடந்து கொண்டார்கள்? துப்புரவுப் பணியாளர்களுக்காக வேலை செய்யும் அமைப்புகளும், இயக்கங்களுமே அதை கண்டித்து ஆங்காகங்கே கோஷங்கள் எழுப்பிய பின்பே அவரின் மீது உரிய நடவடிக்கை எடுத்ததாக கேள்விப்பட்டோம். அதுவும் உரிய தண்டனை கிடைத்ததா? என்பதுகூட தெரியவில்லை.

ஏனென்றால் இங்கு துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டாடுபவர்கள் எல்லாரும் ஆதிக்க மனநிலையில் இருப்பவர்களே? மதத்தில் சொல்லப் பட்டுள்ளவற்றில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். பின்பு அவர்களில் ஓரிருவர் இதுபோன்ற அயோக்கித்தனமாக நடந்து கொள்ளும் போது அத்தகைய செயலை அவர்களே எப்படிக் கண்டிப்பார்கள் அல்லது தண்டனை பெற்றுத் தருவார்கள்? அதற்கு நியாயம் கற்பிக்கத்தானே முயலுவார்கள். வேண்டுமென்றால் பெரும் பிரச்சனையானால் பெயரளவில் கண்டிப்பார்கள்.

தொடரும் மலக்குழி மரணங்கள்

பாதள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் அவலத்தற்கு எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. விஞ்ஞானத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதை ஊக்கப்படுத்துபவர்களுக்கும் சாதி ஆதிக்க பின்னணி இருக்கத்தானே செய்கிறது. அதனால்தான் எதெற்கெல்லாமே நவீன கருவிகள், கண்டுபிடிப்புகள் வருகிறது. பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வதற்கும் அடைப்பை எடுப்பதற்கும் ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபித்தாலும் அதை வாங்கி செயல்படுத்துவார்களா? என்பதுகூட சந்தேகமாகத்தான் இருக்கிறது.

கொரோனா காலத்தில் முககவசம் கட்டாயம் அணியுங்கள்... வாய்ப்பிருந்தால் கையுறை போட்டுக் கொள்ளுங்கள்... கண்ட கண்ட இடத்தில் கைகளை வைக்காதீhகள்... எனத் தொடர்ந்து அரசு மக்களின் மீது பெரும் அக்கறை கொண்டு இவ்வாசகங்களை ஆங்காங்கே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாராட்டத்தக்க விசயம்தான். அதேநேரத்தில் ஊர் முழுவதும் பயன்படுத்திய பின்பு வரும் கழிவுகளைப் பற்;றி இந்நேரத்தில் சொல்லவே வேண்டாம். அது எவ்வளவு பெரிய நஞ்சு என்று. ஆனால் அதையும் இந்நேரத்தில் எவ்வித பாதுகாப்பு கவசமோ, கருவியோ எதுவும் இல்லாமல் ஒரு துப்புரவுப் பணியாளர் செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவர்களை ஆடு, மாடுகளைப் போல் ஏதோ ஒர் இழிபிறவி என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டியதிருக்கிறது.

பாட்னாவில் துப்புரவுப் பணியாளாரான தன் சக ஊழியர் ஒருவர் சாக்கடையில் இறங்கி கழிவை எடுத்துக் கொடுக்க, அதை வெளியில் ஊற்றுகிறார் மற்றொரு மாநகராட்சி துப்புரவுப் பணியாளர். (தினகரன், ஏப்ரல் 24, 2020) இச்செய்தி புகைப்படத்துடன்; வெளியாகியிருந்தது. கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் அதைப் பார்க்கவே சகிக்காமல் கோபம் பொங்கி எழத்தான் செய்கிறது. இருப்பினும் மனசாட்சியுள்ள மனிதர்கள் ஆங்காங்கே கண்டன குரல்களை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜுலை மாதம் 4 ஆம் தேதியன்று தூத்துக்குடி, செக்கரக்குடியில் மலக்குழித் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது ராஜா, பாலா, தினேஷ், பாண்டி ஆகிய நான்கு பேரும் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டன குரல்கள் தெரிவித்தன. அதோடு மலக்குழியில் இறக்க நேரிட்டால் ரூபாய் பத்து லட்சம் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்றிய கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் - 2013 மலக்குழிக்குள் மனிதனை இறக்கக்கூடாது எனவும் அதற்கென பல்வேறு வழிகாட்டுதல்களை சொல்லியுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே இதுபோன்ற மரணங்கள் நிகழ்வதை தடுக்க முடியவில்லை. காரணம் சட்டத்தை கிடப்பில் போட்டதுதான். குற்றம் இழைத்தவர்களுக்குச் சட்டத்தில் உள்ளபடி கடுமையான தண்டனை வழங்கினால்தான் அடுத்து இதுபோன்ற பணியில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இருப்பார்கள். அதன் வழியாக மலக்குழி மரணங்களை தடுக்கவும் முடியும்.

பொதுவாக துப்புரவுப் பணியாளர்களை மனிதர்களாக மதிப்பது கிடையாது. அதிலும் மலக்குழி போன்ற மரணங்கள் நேரும் போது அதை அருவருக்கத்தக்க நி;லையில் பார்த்துவிட்டு கடந்துபோய் விடும் மனநிலைதான் அதிகமானோரிடம் உள்ளது. பிற மரணங்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் இதுபோன்ற மரணங்களுக்குக் குரல் கொடுக்க ஏனோ பாராபட்சம் காட்டுகிறார்கள். இந்த மனநிலை மாறவேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற மரணங்கள் ஏதோ ஒரு பெட்டிச் செய்தியாக நினைத்து ஒட்டுமொத்த சமூகமும் கடந்துபோய் கொண்டேதான் இருப்பார்கள். இருக்கவும் போகிறார்கள். ஒருபக்கம் பூஜிக்கவும் மற்றொரு பக்கம் மலக்குழியில் இறக்கி கொல்லவும் கூடிய முரண்பட்ட மோசமான சூழலில்தான் வாழ்கிறோம்.

பணியின் போதான மரணத்திலும் பாராபட்சம்

அரசுப் பணிகளில் ஆபத்தான அல்லது எளிதில் நோய் தொற்றும் பணிகளில் துப்புரவுப் பணியும் ஒன்று. அப்படிப்பட்ட பணியாளர்களுக்கு வேண்டிய முதலுதவிகள் மற்றும் அவரச உதவிகள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போதாவது அதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். ஆனால் அரசுத் தரப்பில் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதுதான் சகிக்க முடியாததாக இருக்கிறது.

மே மாதம் 7 ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பவானி அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டையை சேர்ந்த துப்புரவுப் பணியாளர் பாலன் பணியின் போது நெஞ்சுவலியால் மரணம் அடைந்தார். பாலனின் உடலை அவரது வீட்டிற்கு அவர் வேலை செய்த இடத்திலிருந்த குப்பை வண்டியில் எடுத்துச் சென்றிருக்கின்றனர். அரசின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலை என்னவென்று சொல்வது? துப்புரவுப் பணியாளர்களின் பணிப் போற்றத்தக்கது. அவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்பதெல்லாம் பெரிய அபத்தம் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்;த்துகிறது.

கொரோனா தடுப்புப் பணியின் போது மரணமடையும் துப்புரவுப் பணியாளர்களின் உடலை இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்திட வேண்டும். அதேநேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு ஐம்பது லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரி;க்கைகள் சில அமைப்புகளால் முன்வைக்கப்பட்டன. ஆனால் அரசு எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஐம்பது லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது துப்புரவுப் பணியாளர்களை முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. கொரோனா தடுப்புப் பணியில் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. அப்படியிருந்தும் அவர்கள் திட்டமிட்டே இத்தகைய நிவாரண நிதி வழங்குவதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தெரியவில்லை போலும்!

பணித்தளங்களில் தொடரும் தாக்குதல்கள்

ஓர் அரசுப் பணியாளரை பணிசெய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது பணித்தளங்களில் தாக்கப்பட்டாலோ அது கடுமையான குற்றம். அவர்கள் உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஆனால் துப்புரவுப் பணியாளர்கள் விசயத்தில் தாக்கப்படுவதும் அந்த தாக்குதல் குறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும் தொடர்கதையாகித்தான் வருகிறது.

இப்போது துப்புரவுப் பணியாளர்களை கடவுள் போல் நினைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டே வருகிறது. இதைத் தடுக்கவோ அல்லது அத்தகைய செயலில் ஈடுபடாமல் இருக்கவோ எவ்வித உத்திரவாதமும் கிடையாது.

மே மாதம் தென்காசி மாவட்டம், ராயகிரி அருகே தாகத்திற்குத் தண்ணிர் கேட்ட துப்புரவுப் பணியாளர் மயில்ராஜ் என்;பவர் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டார். மற்ற அரசு ஊழியர்கள் என்றால் அவர்களுக்கென அலுவலகம் இருக்கும். அவர்களுக்கு குடிதண்ணீர், ஓய்வறை, கழிப்பறை என சகல வசதிகளும் செய்துதரப்பட்டிருக்கும். ஆனால் துப்புரவுப் பணியாளர்களின் வேலைச்சூழல் களம்தான். அவர்கள் வேலை செய்யும் இடங்களே தெருக்கள்தான். அத்தெருக்களில் வசிப்பவர்களின் குப்பைகளைத்தான் சுத்தம் செய்கிறார்கள். அவர்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக மனிதநேயமே இல்லாமல் தாக்கியிருக்கிறார்கள்.

அதேபோல, சோழிங்கநல்லூர் பகுதியில் துப்புரவுப் பெண் பணியாளர் ஒருவரை, வீட்டு உரிமையாளர் ஒருவர் முதல்நாள் குப்பையை வாங்க வரவில்லை என்று தாக்கியதோடு சாக்கடையில் தள்ளி, ஆடைகளைக் கிழித்த அவலமும் அரங்கேறியிருக்கிறது. தன் வீட்டிலுள்ள குப்பையை அப்புறப்படுத்த இன்னொருவன் வரவேண்டும் என்று நினைக்கும் கேவலமான மனநிலையை என்னவென்று சொல்வது?

ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் இத்தகைய கொடிய செயலை செய்யத் தூண்டியிருப்பது சாதி ஆதிக்க மனோபாவம்தானே? சக மனிதர்களாகப் பார்க்க முடியாத கேவலமான சமூக விரோத சிந்தனைதானே இத்தகைய செயலை செய்யத் தூண்டியிருக்கிறது?

துப்புரவுப் பணியாளர்களின் ஆதங்கம்

துப்புரவுப் பணியாளர்கள் தெய்வங்கள் என்ற வாசகம் இயற்கை பேரிடரின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரத்தில் அவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மட்டுமே அவர்களுக்கு முககவசமும் கையுறைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அவை தரமானதாக இருப்பதில்லை எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் துப்புரவுப் பணியாளர்கள்.

சுகாதரப் பணிகளில் ஈடுபடும் போது தெருக்களில் வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டால்கூட சிலர் கொடுப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சாப்பாடுகூட இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். தெருக்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையான குப்பை தொட்டிகள் இருக்கிறது. இதில்கூட பெரும்பாலான பொதுமக்கள் வகைபிரித்து குப்பையைப் போடுவதில்லை. ஒவ்வொரு தனிநபரும் செய்ய வேண்டிய இந்த வேலையைக்கூட துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே வகைபிரித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது எனப் பணித்தளத்தில் அவர்கள் சந்திக்கும் அவலங்களைக் குறிப்பிடுகின்றனர்.

அதோடு ஊரடங்கு உத்தரவால் தேனீர் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருப்பதால் காலையில் வெறும் வயிற்றுடன் பணியைத் தொடங்கும் நிலையில்தான் துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். ஊரடங்கினால் மக்கள் காலையில் எழுவதற்கு பல நேரங்களில் தாமதமாவதால் வீடுகளில் காத்திருந்து குப்பைகளை வாங்கவேண்டிய நிலை. அதேநேரத்தில் அவர்கள் வழக்கமாக குப்பையை ஏற்றும் குப்பை வண்டி வந்து விடுவதால் அதற்குள் குப்பைகளைச் சேகரித்தாக வேண்டிய நெருக்கடி. இதைத்தாண்டி கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலும் அம்மா உணவகத்தில் கிடைக்கும் மதிய உணவு மட்டுமே அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறது. அங்கும் பெரும் கூட்டமே கூடிவிடுகிறது என தான் சந்திக்கும் பல்வேறு இன்னல்கள், சவால்களை நினைத்து குமுறுகின்றனர் துப்புரவுப் பணியாளர்கள்.

தற்போது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உலக நாடுகள் உச்சரிக்கும் ஒரேசொல் சுத்தமாக இருப்பது. அந்தச் சொல்லை செயலில் காண்பிப்பவர்கள் துப்புரவுப் பணியாளர்கள். தனிநபர் கழிவு, மருந்துவ கழிவு, சாலையோர கழிவு, வீடுகளின் கழிவு, அலுவலக கழிவு என அனைத்து வகையான கழிவுகளையும் துப்புரவுப் பணியாளர்களே அகற்றுகிறார்கள். ஆனால் பணி நிரந்திரம்கூட இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். எனவே அவர்;களை அரசு நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேரிடர் காலங்களில் துப்புரவுப் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மக்களும் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பேரிடர் காலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து நோய் காலத்திலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். (தினகரன், ஏப்ரல் 05, 2020) என துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

துப்புரவுப் பணியை பொது மக்கள் மதிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதோடு, மற்ற அரசு ஊழியர்கள் போன்று இதுவும் ஒரு துறையே என்ற வகையில் சீர்திருத்தம் செய்து ஒப்பந்தகாரர்களிடம் இப்பணியை ஒப்படைப்பதை கைவிட்டு அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் போதும், மதிப்புமிக்க வகையிலும் கண்ணியமாகவும் துப்புரவுப் பணி பார்க்கப்பட முன் முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் போதுதான் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு செய்யும் சரியான மாற்றாக இருக்கும். அதோடு ஊதியத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமே கடவுளாகும் துப்புரவுப் பணியாளர்கள்

இயற்கை பேரிடர் காலங்களில் தெருக்களில் குவியும் குப்பைகளை அகற்றுவது எவ்வளவு கஷ்டம் என்பது துப்புரவுப் பணியாளயர்;களுக்கு மட்டுமே தெரியும். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் போது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள்;; பெரும் சேதத்தை சந்தித்தது. இங்கு ஆபத்தைகூட பொருட்படுத்தாமல் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள். அதற்கு முன்பு சென்னை பெருவெள்ளத்தின் போது, அதற்கும் முன்பு சுனாமி பேரலை தாக்கத்தின் போது எனத் தொடர்ந்து அவர்கள் அர்ப்பணிப்போடு பணிசெய்திருக்கிறார்கள்.

அதேநேரத்தில் கொரோனா வைரஸ்க்கு உலகமே பயந்துகொண்டிருக்கும் இந்த நிமிஷம் வரை துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அவசரகாலப் பணி என்றாலே கூடுதல் சுமை இருக்கும். ஆனாலும், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். என்ற கடமை உணர்ச்சியுடன் அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும்கூட ராணுவத்தினர் செய்யத் தயங்கிய பணிகளை துப்புரவுப் பணியாளர்களே முன்நின்று அந்த அவசரகாலப் பணியில் ஈடுபட்டார்கள். எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் காரணம் துப்புரவுப் பணியாளர்கள்தான். இந்நேரத்தில் பயந்துகொண்டு அவர்கள் வீடுகளையும், தெருக்களையும் சுத்தம் செய்யாமல் இருந்தால் நிலைமை என்னவாகும்? இது மக்கள் பணி. இதற்காக அவர்களுக்கு சக மனிதர்களாக உரிய அங்கீகாரம்கூட தர மறுப்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய தீண்டாமை அல்லவா? இதெல்லாம் தெரிந்தும் ஏதோ சகித்துக் கொண்டு வேலை செய்வதால்தான் அவர்களை மேலும் மேலும் இகழ்வாகப் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது.

தற்போது கொரோனா பாதித்திருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் குறித்து பெருமிதம் பொங்க உயர்வாக சித்தரித்து எழுதுகிறார்கள். எம்.எல்.ஏ, அமைச்சர் எல்லாம் காலைத் தொட்டுக் கும்பிடுவது, இதையெல்லாம் பார்க்கும் போது துப்புரவுப் பணியாளர்களுக்கு அவர்களின் உடல் கூசும் அளவுக்குக்கூட இந்நிகழ்வு இருக்கலாம். அதையெல்லாம் அவர்கள் துளியும் விருப்பவில்லை. மாறாக அவர்களை சக மனிதனாக நினைத்து மரியாதையுடன் நடத்தி, உழைப்புக்கேற்ற அல்லது மற்ற அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் கிடைத்தாலே போதும் என்பதுதான் அவர்களின் மனநிலை.

பார்க்கப்போனால் நோய் தடுப்புப் பணிகளை துப்புரவுப் பணியாளர்கள் செய்வதினால் அவர்களுக்கு மருத்துவர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அதுவே சரியான பாரபட்சமற்ற அணுகுமுறையாக இருக்கும். அப்படியெல்லாம் செய்துவிட்டால் எல்லோரும் சமம் என்றாகி, மற்ற சமூகத்தினரும் வேலைக்கு வந்துவிட மாட்டார்களா? பிறகு மனுதர்ம கோட்பாடு என்னாவது? என்றெல்லாம் யோசிப்பார்கள் போலும் இந்து சனாதனவாதிகள். அதற்கு ஆட்சியாளர்களும் தலையாட்டிக் கொண்டு அரிதாரம் பூசியதுபோல் வெற்று வார்த்தைகளால் துப்புரவுப் பணியாளர்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை துப்புரவுப் பணியாளர்களும் கவனித்துக் கொண்டுதான் வருகிறாhர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

பெயர் மாற்றத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல்

துப்புரவுப் பணியாளர்களை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூய்மைப் பணியாளர்கள் எனக் கவுரப்படுத்துவதாக அழைக்கச் சொல்லி அரசானையும் பிறப்பித்தார். இருப்பினும் அதிகாரிகள் மட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களை மனிதர்களாகக்கூட நடத்துவது இல்லை. பொது சமூகத்திலும் மதிப்பிற்குரியவர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவற்றை சரிசெய்ய துளியும் முயலாமல், பெயரை மாற்றுவதினால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது.

இதுபோன்ற பெயர் மாற்றம் பெட்டி பெட்டியாக ஐஸ் கட்டிகளைத் தூக்கி துப்புரவுப் பணியாளர்களின் தலையில் வைப்பது போன்ற மாயையை. குறிப்பிட்ட நேரம் கழித்துப் பார்த்தால் ஐஸ் கரைந்துபோய் காணாமல் போயிருக்கும். அதனால் எவ்வித பிரயோஜனமும் அவர்களுக்குக் கிடையாது. அப்பெயரை நினைத்து வேண்டுமானால் சற்றுநேரம் உப்புச் சப்பில்லாத பெருமைபட்டுக் கொள்ளலாமே தவிர, அதனால் துளியாவது துப்புரவுப் பணியாளர்களுக்குப் பயன் உண்டா?

கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் நோய் தடுப்புப் பணியில் உயிரை பணையம் வைத்து மக்கள் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, அவை போதிய அளவில் அவர்களுக்குப் போய் சேர்கிறதா? என்பதை கண்காணிப்பது....

அவர்கள் பணியிடத்திற்குப் பாதுகாப்பான முறையில் சென்றுவர உரிய வாகன ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது இல்லையென்றால் உரிய வாகன ஏற்பாடுகளை கண்ணியமான முறையில் செய்து கொடுப்பது...

அதிகாலையில் எழுந்ததுமே நோய் தடுப்புப் பணியை மேற்கொள்ள வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காலை, மதிய வேளை உணவுக்கு என்ன செய்வார்கள். அதனால் அவர்களுக்குப் பணிநேரத்தில் உணவுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுப்பது...

நோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் இவர்கள் நோய் எளிதில் தாக்கும் அபாயத்தில் இருப்பவர்கள் அதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு முறையாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு கொரோனா தொற்று எதுவும் இருக்கிறதா? எனக் கண்டறிவது...

அரசு ஊழியர்களிலே மிகக் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்கள் துப்புரவுப் பணியாளர்கள். அதிலும் கணிசமான தொகை பெரும்பாலும் ஒப்பந்தகாரர்களின் வாயில் சிக்கிக் கொள்கிறது. அதனால் அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் கொடுத்து அது சரியாக அவர்களுக்குப் போய் சேர்கிறதா? என்பதை கண்காணிப்பது...

அவர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் பல, குப்பை மேட்டைவிட மிக மோசமான சூழலில் இருக்கிறது. அவற்றை சுகாதாரமான முறையில் பாராமரித்து அவர்களை சக மனிதர்கள் வாழும் இருப்பிடங்களைப் போல் உருவாக்கித்தர வேண்டும் அங்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும் என்ற நினைப்பு...

பலர் பணியில் இருக்கும் போதே நோய் வாய்ப்பட்டும், தீடீரெனவும் செத்து மடிகிறார்கள். அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆய்வு மேற்கொண்டு அவர்களின் பணிச்சூழலை ஆரோக்கியமான முறையிலோ அல்லது ஷிப்டு முறையிலோ மாற்றியமைத்து அவர்களின் உயிரை பாதுகாக்கும் முயற்சி...

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கக்கூடாது என்கிற சட்டத்திற்கு எதிராக மனிதர்களை அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி குறைந்த கூலியைக் கொடுத்து பாதாள சாக்கடையிலும் மலக்குழிக்குள்ளும் இறக்கி விஷவாயு தாக்கி கொன்று குவிப்பவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது...

துப்புரவுப் பணியில் தலித்களுக்கே முழு இடஒதுக்கீடும் கொடுத்து அத்தொழிலை அம்மக்களுக்கான தொழில் போன்று முத்திரை குத்தி ஓரம் கட்டி வைத்திருக்கிறார்களே அவற்றை மறுசீரமைப்பு செய்து அனைத்து சாதியினரும் கட்டாயம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வரவேண்டும் என அவர்களுக்கான ஒதுக்கீட்டை உத்தவாதம் செய்வது...

கொரோனா வைரஸ் தொற்று போன்ற கொள்ளை நோய் காலத்திலும், இயற்கை பேரிடர் காலங்களிலும் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களுக்கு மலர் தூவி பூஜை செய்வதை தவிர்த்துவிட்டு, துப்புரவுப் பணியாளர்களுக்குப் பதிலாக அத்தகைய செயலை செய்யும் அவர்களை ஒருநாளாவது துப்புரவுப் பணியை முழுமையாக மேற்கொண்டு சேவை செய்ய வலியுறுத்துவது...

என எதையும் செய்யாமல், இனிமேல் துப்புரவுப் பணியாளர்கள் - தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என மாநிலத்தின் முதலமைச்சர் சொல்வது அழகா? இந்தப் பெயர் மாற்றம் அருவருப்பூட்டும் ஒன்றாகத்தானே இருக்கிறது. இருக்கிற நிலைமை அப்படியே தொடரத்தானே இது வழிசெய்கிறது. வேறு எந்த துரும்பையும் மாற்றி வைக்கவில்லையே?

இப்பெயர் மாற்றம், நடிகர் வடிவேலு நடித்த 23 ஆம் புலிகேசி படத்தில் பட்டம் சூட்டுவது போல் இருக்கிறது. இது துப்புரவுத் தொழிலாளர்களை அவமானத்திலிருந்து மீண்டு சமூக எழுச்சி கொள்ளாமல் மேலும் அழுத்தி வைக்கவே பயன்படும். இதை நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செய்வதின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலுக்குப் பின்னால் மனுதர்ம கோட்பாடு பல்லிளித்துக் கொண்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது.

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It