அடித்தள மக்களின் வரலாறே ஆகச் சிறந்த வரலாறு. அவர்களின் போராட்டங்களங்களே அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாய் உழைத்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் வரலாற்றைப் பதிவு செய்கின்றன.
தமிழ்நாடு அரசு அரசாணை எண்: 625, நாள்: 6.7.1995-ன்படி, கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன.
தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அடுத்தடுத்த மாதங்களில் வந்த தேர்தல் பணியும், கொரோனா தொற்று நோய்க்கால களப்பணியும் கிராம உதவியாளர்கள் என்று அழைக்கப்படும் தலையாரிகளின் கடுமையான பணிக்காலமாக அமைந்தன.
2021 வருட துவக்கத்தில் அரசு ஊழியரில் கடைநிலைப் பணியில் உள்ள பணியாளர்களின் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி முதல் நடத்திய தொடர் மறியல் மற்றும் சிறைநிரப்பும் போராட்டம், தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டங்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதாகும்.
7-வது ஊதியக்குழு ஊதிய அட்டவணையின்படி, அடிப்படை சம்பளம் ரூ.15700 - அதாவது ‘D' தரநிலையில் உள்ள அடிப்படை சம்பளத்தையாவது கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை போராட்டங்களின் வாயிலாக முன்வைக்கப்பட்டது.
தமிழக அரசின் எந்தவொரு திட்டத்தின் பலனும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழை, எளிய பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய முக்கிய காரணமே கிராம உதவியாளர்கள்தான்.
எத்தகைய பேரிடர் காலத்திலும், சாதாரண நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுபவர்கள் கிராம உதவியாளர்கள்.
வருடத்தின் 365 நாட்களும், அனைத்து தரப்பு மக்களும், ஏழை - பணக்காரன், சாதி, மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசு கொண்டு வரும் திட்டங்களின் பலனை அவர்களிடம் கொண்டு சேர்க்க பணிபுரியும் உழைக்கும் மக்களே கிராம உதவியாளர்கள்.
ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம் ஒன்று உள்ளது. சமூகத்தின் பாதுகாப்பு என்றால் நமது மக்களின், நமது ஊர்க்காரர்களின், நமது சொந்த பந்தங்களின் பாதுகாப்பு.
ஊனமுற்றோர், முதியோர், விதவைகள், திருமண உதவித் தொகை போன்றவை கிராம உதவியாளர்கள் மூலமே அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்கிறது. ஒரு கிராமத்தில் இருக்கும் ஆண், பெண், குழந்தைகள் வரை அவர்களின் வரலாறு தெரிந்த திறந்த புத்தகமாக வாழ்பவர்கள் கிராம உதவியாளர்கள்.
கிராமத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை என்றால், முதலில் தகவல் தெரிவிப்பவர்கள். அரசு விழாக்களில் அனைத்துப் பணிகளையும் சிரமம் பார்க்காது செய்துவிட்டு ஒதுங்கி நிற்பவர்கள். நிலத்தை அளக்கும்போதும், ஆக்கிரமிப்பை அகற்றும்போதும், கிராம உதவியாளர்களின்றி எப்பணியும் முழுமை பெறாது. கிராம ஆவணங்களைப் பாதுகாப்பவர்கள். அரசு விவகாரங்களில் மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பவர்கள்.
தன் பிள்ளைக்கு அப்பாவை அறிமுகம் செய்யும் தாய் போல, ஒவ்வொரு ஆண்டும் இடம் மாறும் அலுவலர்களுக்கு கிராமத்து மக்களை இவர்தான் இவர், இன்னார்தான் இன்னார் என்று அறிமுகம் செய்பவர்கள் கிராம உதவியாளர்கள்.
கிராமத்தில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், தலையாரி அறிமுகம் இன்றி யாருக்கும் இவர்தான் அதிகாரி என்று யாருக்கும் தெரியப் போவதில்லை. அவர்களின் பணி என்ன என்று யாருக்கும் புரியப் போவதும் இல்லை.
ஒரு கிராமத்தின் மொத்த பிறப்பு, இறப்பு கணக்குகளை பதிவு செய்து பராமரித்தல், வருவாய் கிராம ஆவணங்களான ‘அ” - பதிவேடு, சிட்டா, நத்தம் அடங்கல் பராமரித்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்து வருபவர்கள் கிராம உதவியாளர் (எ) தலையாரிகள்.
தமிழ்நாட்டில் 16000 -க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும், மேலும் பல உள் கிராமங்களும் உள்ளன. சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு யார் என விசாரித்து, உண்மை நிலவரத்தை அரசின் ஆவணங்களில் பதிவு செய்ய உழைப்பவர்கள் தலையாரிகள். வரிவசூல் செய்வதும் அவர்களின் முக்கிய பணியாக உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை அளவு பார்க்கும் இரவு நேரப்பணி செய்து வீடு செல்லாமல் அலுவலகத்திலேயே மக்கள் நிம்மதியாக வாழ காத்துக் கிடப்பவர்கள்.
ஆக, நிகழ்கால வரலாற்றில் நாம் வாழும் நாளில், கிராமத்து மக்களின் தாயாகி, யாதுமாகி நிற்கிறார்கள் கிராம உதவியாளர்கள். இவர்களை கிராமத்து மக்களின் உதவும் கரங்கள் என்றால் அது மிகையல்ல.
- சுடலைமாடன்