தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம்.
வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
"நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு" என்கிற மக்களின் நம்பிக்கையை பெற வாய்ப்புள்ள திட்டமாக இருப்பதால் இந்தத் திட்டத்தை எந்த அரசாலும் இனிமேல் கைவிடவே முடியாது.
ஏற்கனவே நல்ல ஊதியத்தில் பணி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் ஒட்டுநர்களாகவும் (997) பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிக் கல்வி பயின்ற இளைஞர்களும், இளம் பெண்களும் முதலுதவிப் பணியாளர்களாகவும்(1008), கணிணிக் கல்வி பயின்றோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு மேற்கூறிய காரணங்களே உந்து சக்தியாக இருந்திருக்கிறது.
இன்றைய நிலையில் தனியார் நிறுவன முதலாளிகளின் சுரண்டல் வேட்டைக் காடுகளாய் தொழில் நிறுவனங்கள் ஆக்கப்பட்டுள்ளன.தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி, முடிந்த அளவிற்கு காட்டுமிராண்டித்தனமாய் அவர்களின் உழைப்பைச் சுரண்டி, தொழிலாளர் நலச்சட்டங்கள், நியதிகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றன எல்லா தனியார் கொள்ளை நிறுவனங்களும். உரிமைகள் கோரினாலோ, வேலை செய்யத் திராணியற்று போனாலோ தொழிலாளர்களை குப்பைக்காகிதங்களாய் - கரும்புச் சக்கைகளாய் வேலையை விட்டு தூக்கி எரிந்து கொண்டிருக்கின்றனர் இந்த தனியார் தொழில் நிறுவனக் கொள்ளையர்கள்.
அரசுத் துறையில் வேலை, நிரந்தரமாக்கப்படும் வாய்ப்பு, அங்கீகரிக்கப்பட்ட நியதிகளின் படியிலான ஊதியம், அரசு ஊழியர்களுக்கான எல்லா உரிமைகளும், சலுகைகளும் கிடைத்திடும் என்கிற நியாயமான எதிர்பார்ப்புகளுடன் தான் சுமார் 2500 இளைஞர்களும், இளம் பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பெருமிதத்தோடு வேலைக்குச் சேர்ந்தனர்.
பாம்புக்கடிக்கு உள்ளானோர், தீக்காயமுற்று உயிருக்கு துடிப்போர், வாந்தி, பேதி, மலம், ரத்த சகதியில் தோய்ந்தோரை உறவினர்களே தள்ளி நிற்கிற நிலையிலும் தூக்கி வந்தனர். கரிய இருளில் நட்ட நடுரோட்டில் பிரசவங்கள் பார்த்தனர். ஐந்தாவது மாடியிலே இருந்தெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை அலேக்காக பூப்போல தூக்கி வந்தனர். அதிகபட்ச அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்தனர்.தமிழக மக்களின் மனதை கொள்ளையடித்தனர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.
இவர்கள் இந்த வேலையில் சேரும் போது ஒரு நாளுக்கு 16, 18 மணி நேரமெல்லாம் வேலை செய்ய வேண்டியதிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று அப்படித்தான் செய்கிறார்கள். எத்தனை மணி நேரம் வேலை பர்த்தாலுமே ஒரு நாளுக்கு 150 ரூபாய் அளவிற்கே ஊதியம் கிட்டும் என்பதையும் அவர்கள் அன்று எதிர்பார்க்கவில்லை.
வாரம் ஒரு நாள் விடுமுறையைக் கூட அதிகரிகள் அவர்களாய் விரும்புகிற நாளில்தான் தருவார்கள் என்பதை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.வருங்கால வைப்புநிதிக்கு நிறுவனம் கட்ட வேண்டிய தொகையையும் சேர்த்து நாமே கட்ட வேண்டியதிருக்கும் என்பது அவர்களின் மனதில் உதயமாகி இருக்காது.
ஆனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுடன் 108 ஆம்புலன்ஸ் பணியில் அமர்ந்த இவர்கள் எதிர்கொண்டதெல்லாம் எந்த நாகரிக சமூகமும் காணக் கூசும் அவலங்களே.
தமிழக அரசு இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசு திட்டம் (இன்றும் ஊடகங்களில் சொல்லப்படுவது அரசு திட்டம் என்றே) என்று அறிவித்துவிட்டு தமிழக அரசு குயுக்கியாய் உலகவங்கி கடன், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து பணம், தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதி இவையனைத்தையும் ஐதராபாத்தைச் சேர்ந்த G.V.K. என்கிற நிறுவனத்திற்கு இந்த 108 திட்டத்தை நடத்த (முன்பு சத்யம் கம்ப்யூட்டர்ஸ்) கோடிகணக்கில் தாரை வார்த்து கொடுத்திருக்கிறது தமிழக அரசு.
அதே சமயத்தில் இந்தத் திட்டத்தின் மக்கள் ஆதரவுத் தன்மை குறித்த விளம்பரங்களை ஆளுங்கட்சித் தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஊடகங்களுக்கே வழங்கி இதற்கு கட்டணமாக கணிசமான (1,01,53,320) பணத்தை வசூலித்தும் நோகாமல் நொங்கு தின்னும் அதே சமயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கூற்றுக்கு ஒப்ப தனது ஆட்சிக்கும் நற்பெயர், தனது வீட்டிற்கும் பெருந்தொகைப் பணம் என்ற அடிப்படையில் இரட்டை லாபம் அடைந்து கொண்டிருக்கிறது ஆளுங்கட்சிக்குடும்பம்.
இதே சமயத்தில் இந்தத் திட்டம் துவங்கி இரண்டு வருடங்கள் முடிந்திருந்தன. ஆறு மாதத்திற்கு ஒரு இன்கிரிமென்ட் உயர்வு என்கிற வாக்குறுதியின்படி இதற்குள்ளாக இவர்களுக்கு நான்கு இன்கிரிமெண்டுகள் 108 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு வருட காலத்தில் ஒரு இன்கிரி மெண்டு கூட வழங்கப்படாதது அநீதி.
பழைய ஊழியர்கள் உரிமைக்கான முயற்சியை முன்னெடுப்பார்கள் என்கிற பதைப்பில் பழைய ஊழியர்களுக்கு சொல்லெண்ணா தொல்லைகளைத் தந்து அவர்களை வேலையை விட்டே துரத்தும் அக்கிரமம்; தொழிலாளர்களை கொத்தடிமைகளாகவே நடத்தி அவர்களை ஆலையிலிட்ட கரும்பாய் சாறு பிழியும் காட்டு மிராண்டித்தனம்.
இப்படிப்பட்ட பரிதாபகரமான நிலையில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 997 ஒட்டுநர்கள், 1008 முதலுதவி பணியாளர்கள், 218 கால் சென்டர் ஊழியர்கள் துடித்து துவண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதே திட்டத்தில் 50 ஆயிரத்திலிருந்த ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளமாகவும், இவைவிட பல மடங்கு கிம்பளமாகவும் பெறுகிறார்கள் 120க்கும் மேற்பட்ட அந்த தனியார் நிறுவன (G.V.K.) கொள்ளையர்கள்.
முன் குறிப்பிட்டுள்ள உழைக்கும் தொழிலாளர்களக்கு சம்பளம் கொடுக்கப்படுவதும் அரசு வரிப்பணத்தில் தான். இந்த 120க்கும் மேற்பட்ட "லேப்-டாப்" பேர்வழிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதும் அரசு பணத்தில்தான். இந்த இரு தரப்பினருக்கும் சம்பளம் தருவதோ ஜி.வி.கே. என்கிற கம்பெனி. இந்த உத்தமமான நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை நடத்த ஒப்படைத்திருப்பதோ நமது தமிழக அரசு. அந்த ஜி.வி.கே. நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்ற பணமோ நமது வரிப்பணம் (134 கோடியே 44 லட்சம்)
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையும் தமிழக சுகாதார திட்டம் அலுவலகமும் இழுத்து மூடப்பட்டு விட்டதா? இவர்களால் இந்தத் திட்டத்தை நடத்த முடியாதா என்ன? இப்படிப்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் திட்ட ஊழியர்களுக்கு முன் உள்ள அவசரக்கடமை மத்தியப்படுத்த பட்ட தியாக தழும்புகள் தோய்ந்த வரலாற்று பின்புலம் கொண்ட ஒரு தொழிலாளர் சங்க அமைப்பின் வழிகாட்டுதலைப் பெறுவதும் அச்சங்கத்தில் ஒற்றுமையுடன் போராடுவதும் தான். தொழிலாளர் சங்கம் ஓன்று மட்டும் தான் பல அற்புதங்களை நிகழ்த்தும் கருவி.
எந்தப் பின்னணியையும் கொண்டிராத நடுத்தர, மற்றும் விவசாய குடும்பங்களிலிருந்தும் வந்திருக்கிற 108 தொழிலாளர்கள் அவர்களின் பிரச்னைகளுக்காக ஓன்று சேர்ந்து போராடியே ஆக வேண்டும். தனியாக எந்த ஒரு தளத்தையும் கொண்டிராத, புதிதாய் சமீபத்தில் தொழிலாளர்களாய் ஆகி இருக்கிற 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தன்னையொத்த தொழிலாளர்களோடு ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக வலிமையோடு செயல்படத்துவங்கும்போது தான் அவன், கோடிக்கணக்கான கால்களையும், கைகளையும் கொண்ட 'கோடிக்கால் பூதத்தின்' பங்கும் பகுதியும் ஆகிறான். அவனது உழைப்பைச் சுரண்டியே லாபமீட்டிக் கொளுத்துக்கொண்டிருக்கிற முதலாளிகளின் கொட்டத்தை அடக்கவல்ல பேராயுதம் தொழிலாளர் சங்கம் மட்டுமே. அவனிடம் உள்ள போராட்ட குணமும், வேலைநிறுத்தமுமே தொழிலாளர்களின் சூலாயுதம். தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒருவகையில் போர்களே ஆகும்.
ஒரு போரில் ஈடுபடும் இருதரப்பினரும் மிகமுக்கியமாக எண்ணிப்பார்க்க வேண்டியது; தனது எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் அத்துடன் அவனோடு மோதத்தயாராகும் தனது பலத்தையும் பலவீனத்தையும் துல்லியமாக உணர்ந்து தெளிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒரு துறையில் செயல்படும் தொழிலாளர்கள் மிகப் பெருமளவு சார்ந்திருக்க வேண்டியது அவர்களது சொந்த பலத்தையும், அவர்களது எதிரியை எதிர்த்துப் போரட அவர்கள் மேற்கொண்டுள்ள சுய தயாரிப்புகளையுமே. இதை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னே நடவடிக்கைகளை அதை வழி நடத்தும் தலைவர்களுக்கு திறமையையும் , நிபுணத்துவத்தையும் அளிக்கிறது. இந்த அடிப்படையோடு இணைந்திராத நிபுணத்துவம் நீடித்த பலன்களை ஒரு போதும் தராது.
இந்த அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தளம் முதற்கண் அவர்களின் ஒற்றுமையில் தான் உள்ளது. இரண்டாவதாக அவர்களை நினைத்த மாத்திரத்தில் களமிறங்கச்செய்வதேயாகும். பலகாலங்களாக சந்தர்ப்பவாதச் செயல்பாடுகளின் விளைவாக தொழிற்சங்கங்கள் குறித்த பல தவறான புரிதல்கள் தொழிலாளர்களின் மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சங்கம் பல அற்புதங்களை நிகத்தக்கூடியது. அவற்றில் இணைந்து விட்டால் பிரச்சனைகள் தானாகவே தீர்ந்துவிடும் என்ற வகையிலான புரிதல் அவற்றில் உண்டு.தவிரவும் தொழிற்சங்கங்கள் நடத்துவதற்கு ஒரு வகை நிபுணத்துவம் தேவை என்பது போன்ற தவறான புரிதலும் தொழிலாளர் மனதில் இடம் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் ஏற்கனவே அடிக்கோடிட்டு குறிப்பிட்டுக் காட்டியுள்ளபடி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தளம் முதற்கண் அவர்களது ஒற்றுமையில் தான் உள்ளது. இரண்டாவதாக அவர்களையொத்த ஓட்டுனர் போன்ற தனித்திறமை வாய்ந்தவர்களையும், முதலுதவிப் பணியாளர்களையும் இவர்களையொத்த அளவே சம்பளம் பெறுகின்ற கால் செண்டர் ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்து விட்டு 108 ஆம்புலன்ஸ் திட்ட பராமரிப்பில் முன்னவர்களுக்கு கொடுக்கப்பட்ட சொற்ப ஊதியத்திற்கே உரிய எண்ணிக்கையில் புதியவர்களை கண்டுபித்து சி.வி.கே.நிர்வாகம் உடனடியாக நியமிக்க முடியாது என்பதும் நமது பலமே.
இந்த சி.வி,கேயின் பலமோ ஊழல் மலிந்து போன ஆளும்கட்சியின் பின்புலத்தைக் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை, தங்களுக்காக பாடுபட்ட ,அதனால் பாதிப்பிற்கு உள்ளான தன்னலமற்று இன்றும் துணிச்சலோடு இப்பிரச்சனையை கையில் எடுத்து முனைப்புடன் நின்று கொண்டிருக்கிற தங்களையொத்த தொழிலாளர்களை தலைமையாகக் கொண்டு செயல்படத் தொடங்கினாலே போதும் லட்சிய வேட்கையும், சமூக மாற்றச்சிந்தனையும் கொண்ட அமைப்புக்களின் பின்புலமும் அவற்றிற்கு நிச்சயம் கிடைக்கும்.
இத்தகைய பின்புலத்துடன், அமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடினால் நிச்சயம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிச்சயம் உரிய வெற்றியை அவர்கள் அடைவார்கள். இவ்வாறு வெற்றி அடைவதை யாராலும் தடுக்கவே முடியாது. ஏனெனில் முன்பு ஏமாற்றியதைப் போல அரசு வேலை "நிரந்தர பணி" " அரசு ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகள், சலுகைகள் என நிர்வாகம் ஏமாற்ற முடியாது. இவர்களது நடைமுறையில், இத்தகைய நம்பிக்கையில் பணியமர்ந்தவர்கள் இருக்கும் நிலையில் நிச்சயம் அவர்களது கண்களை திறக்கவே செய்யும்.
பல்வேறுபட்ட ஊழல் நடவடிக்கைக்களால் முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கும் தமிழக ஆளும் கட்சியின் அரசியலும், அதன் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் ஆட்சியையும் ஒன்றுபட்ட உழைப்பாளர் சக்திகளுக்கு இன்றில்லாவிட்டாலும் நாளை மண்டியிட்டே தீர வேண்டும். அகவே உழைக்கும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்பதும் அவர்களின் அவலங்களை வெளிக்கொண்டு வருவதும் நமது சமூக மாற்ற கடமையாகும். தமிழக அரசும் சி.வி.கே. நிறுவனமும் அடிக்கும் கூட்டுக் கொள்ளையை அம்பலப்படுத்துவோம்.108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்னல் தீர குரல் கொடுப்போம்.
தொடர்பிற்கு - கு.கதிரேசன், 9843464246