நம் இருவருக்கான
பயணத்தில்...
இடைச்சொருகலென
மௌனம்
நுழைந்தெப்படி?

தொடர்ந்து வரும் மௌனத்தை
தொலைக்கவியலாது..
திக்கொரு விக்ரகமாய்
திரும்பியிருக்கிறோம் நாம்!

மெல்ல கைகள் பற்று!
உதறி உருவினாலும்..
இறுகப் பற்று!
இன்னும் நெருக்கமாயிரு!
காதுமடல் வருடு!
கன்னத்தில் முத்தமிடு!
காதல் கொள்!
முன்னிலும் அதிகமாய்..

உடனிருக்கையில்
உள்ளமரும் மௌனத்தைப் போல்
ஆகச்சிறந்த தண்டனை
வேறெதுவுமில்லை!
மௌனம் உடை!
மனந்திற!

- இசைமலர்