தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’
தென் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 11.2.2018 மாலை 4 மணியளவில் சென்னை அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் காதலர் நாள், ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களும், ம.க.இ.க. தோழர் காமராசும் ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினர். தோழர்கள் ஜெயநேசன், ரவிபாரதி கவிதைகளை வாசித்தனர். தொடர்ந்து, ‘எது தேவை? வாழ்வியல் காதலா? தெய்வீகக் காதலா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வே. மதிமாறன் நடுவராக இருந்தார். ‘வாழ்வியல் காதலே’ என்ற அணியில் திலகவதி, சுபா ஆகியோரும், ‘தெய்வீகக் காதலே’ என்ற அணியில் மேட்டூர் பரத், சென்னை யுவராஜ் ஆகியோரும் பேசினர்.
வே. மதிமாறன் தனது உரையில், ‘தெய்வீகக் காதல் கூட ஒரு பெண் ஆண் கடவுளை நினைத்து உருகி, அவனுக் காகவே அர்ப்பணித்துக் கொண்டவளாக இருப்பதற்கே அனுமதிக்கிறதே தவிர, ஒரு ஆண், பெண் கடவுளுக்காக உருகி, உருகி, அந்தக் கடவுளுக்காகவே தன்னை அர்ப் பணித்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. தெய்வீகக் காதல் பெண்ணடிமையைத் தான் வலியுறுத்துகிறது. காதல் என்பதே ஒரு நிலையற்ற உணர்வு என்று பெரியார் கூறுவதை சுட்டிக்காட்டிய, மதிமாறன், ஜாதி கடந்த காதல்கூட ஒரே வர்க்கப் பின்னணியில்தான் நிகழ்கிறது; ஜாதி கடந்த காதலை வர்க்க உணர்வுகளே தீர்மானிக்கின்றன’ என்றார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக 1979ஆம் ஆண்டில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பேராசிரியர் சரசுவதி-விடுதலை இராசேந்திரன் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் அவர்கள் கேக் வெட்டி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட 17 இணையர்களுக்கு விருதுகளையும், பெரியார் நூல்களையும் கழக சார்பில் வழங்கினர். ஜாதி மறுப்பு இணையர்களுக்கு காதல் பரிசாக ‘ரோஜா’ மலர்களும் வழங்கப்பட்டன.
பிப்.14 அன்று உலகக் காதலர் நாள் என்றாலும், கழகத் தோழர்கள் 11ஆம் தேதியே நிகழ்வை நடத்த திட்டமிட்டனர். இதற்கு இந்துமத வெறி அமைப்புகளிட மிருந்து மிரட்டல்கள் வந்ததோடு, நிகழ்வுக்கு அனுமதி தரக்கூடாது என்று காவல்துறைக்கு அழுத்தம் தந்தனர். காவல்துறை நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தொடர்ந்து நெருக்கடிகளை உருவாக்கி யது. அம்பேத்கர் மணிமண்டபத்தில் மின் தொடர்புகளைத் துண்டித்தார்கள். தடை - நெருக்கடிகளை மீறி, மின் ‘ஜெனரேட்டர்’ ஏற்பாடுகளை செய்து, நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன. அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே உயர்நீதிமன்ற நீதிபதிகள் வீடுகள் இருப்பதால் அங்கே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் கூறினர். நிகழ்வில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், காவல்துறையின் இந்தக் கூற்றுக்கு தக்க பதிலடி தந்தார்.
“இந்த காதலர் நாள் விழாவை ஜாதி எதிர்ப்பு, ஜாதி ஆணவப் படுகொலை எதிர்ப்பாகவே இங்கே நடத்துகிறோம். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப் போருக்கும் ஒரே குலத்தில் ஒரே ஜாதியில் திருமணங்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டி சட்டத்தைக் கையில் எடுக்கும் ஜாதி கட்டப் பஞ்சாயத்துகளை நடத்துவோருக்கும் கடும் எச்சரிக்கை செய்துள்ளது. வயது வந்த ஆணும் பெண்ணும் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், அதில் தலையிட்டு தடுக்க மூன்றாவது நபர்களுக்கு சட்டப்படி எந்த உரிமையும் இல்லை. சட்ட விரோத திருமணமாக இருக்கும் என்றால், அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். சமூகத்தின் மனசாட்சிக் காவலர்களாக தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொள்ள எவருக்கும் உரிமை கிடையாது. திருமணங்களை நீதிமன்றம் சட்டத்தின் பார்வையில் மட்டுமே பார்க்கும். ஜாதி சம்பிரதாயங்களோ, குலகோத்திரங்கள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பதையோ நீதிமன்றம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்று தான் ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து ஜாதி எதிர்ப்பு நாளாக இந்த காதலர் நாளை நடத்துகிறோம். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்கும் இந்த நிகழ்வு இங்கே எதிரில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரானது என்று காவல் துறை கருதுகிறதா? உலக காதலர் நாள் என்பது அய்.வா.வால் அங்கீகரிக்கப்பட்ட உலகம் முழுதும் கொண்டாடப்படும் சர்வதேச நாள். இதைத் தடைப்படுத்த காவல் துறைக்கு எந்த உரிமையும் கிடை யாது” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
விழாவின் நிறைவாக ஜாதி எதிர்ப்பு உறுதிமொழியை கூட்டத்தினர் எடுத்தனர். உலக காதலர் நாளில் உறுதி ஏற்கிறோம். ஜாதி மறுப்பு திருமணங்களை ஆதரிப் போம்; ஜாதி ஆவணப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவோம்; ஜாதி மறுப்புத் திருமணம் செய்த குடும்பங்களிடையே உறவுகளை வளர்ப்போம்; தந்தை பெரியார் வாழ்க; புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க - என அனைவரும் எழுந்து நின்று உறுதி ஏற்றனர். அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. கழகத்தைச் சாராத ஏராளமான பெண், ஆண் இளைஞர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
வழக்கமாக பிப். 14 அன்று இந்து முன்னணியினர் கடற்கரையில் காதலர் நாளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி காதலர்களை மிரட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்.11ஆம் தேதியே கழகம் காதலர் நாள் நடத்தியதால், 11ஆம் தேதியே ‘பெசன்ட் நகர்’ கடற்கரையில் காதலர் நாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணியினர் நடத்தினர்.