2023 ஆகஸ்டில் பாராளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மூன்று சட்ட முன்வரைவுகளும் எதிர்பாராதவிதமாக டிசம்பர் 9 அன்று விலக்கிக் கொள்ளப்பட்டு, இரண்டாவது வரைவுகள் டிசம்பர் 12 அன்று மக்களவையில் முன்வைக்கப்பட்டது குற்றவியல் சட்டச் சீர்திருத்தக் கதையில் அண்மைய திருப்பம் ஆகும்

2023 ஆகஸ்டில் முன்வைக்கப்பட்ட மூன்று சட்ட முன்வரைவுகளின் முதலாவது வரைவுகள் நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக பொதுமக்களால் பரவலாக எதிர்க்கப்பட்டதால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்தச் சட்ட முன்வரைவுகள் குறித்து தி ஒயர் (The Wire) இதழ் விளக்கமான பகுப்பாய்வைக் கொண்டு வந்தது. 2023 ஆகஸ்டு முதலாவது வரைவுகள் பாராளுமன்ற நிலைக் குழுவால் பரிசீலனை  செய்யப்பட்டன. அக்குழுவின் அறிக்கை அந்த  வரைவுகளை வரவேற்று 2023 நவம்பர் 10 அன்று அவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்ட முன்வரைவுகளின் மிகவும் மோசமான தரத்தையும் அவற்றின் எச்சரிக்கைத் தன்மையையும் பிரதிபலித்து, பா.ஜ.க. தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு கூட பெருமளவிலான மாற்றங்களைப் பரிந்துரைக்கக் கட்டுப்படுத்தப்பட்டது. அந்தக் குழு வரைவுகளில் இருந்த முக்கியமான வரையறைகளின் தெளிவற்ற தன்மையைக் குறித்து எச்சரிக்கையுடன் மென்மையாகக் கவலை தெரிவித்தது.

அந்தச் சட்ட முன்வரைவுகளின் முதலாவது வரைவுக்கான அடிப்படையான ஆட்சேபனை இரண்டாவது வரைவில் அகற்றப்படவில்லை. அந்தச் சட்ட முன்வரைவுகளின் தன்மை அடிப்படைரீதியாக ஜனநாயக விரோதமானவையாகவே இருக்கின்றன. இரண்டாவது வரைவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெருமளவிலான மாற்றங்கள் ஏறத்தாழ முற்றிலும் பதிப்புத் தன்மை கொண்டவை, வெறுமனே மிகவும் தொல்லை தரக் கூடிய பிழைகளைச் சரி செய்வதாக மட்டுமே இருக்கின்றன. இருப்பினும் இரண்டாவது வரைவுகளில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் கவனிக்கத் தக்கவை. முதலாவது வரைவில் செய்யப்பட்டுள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.Reform of Indian Justice Systemபயங்கரவாதம் (பிரிவு 113, பாரதிய நியாய சம்ஹிதா (பா.நி.ச.)

இந்தியத் தண்டனைச் சட்டம் (இ.த.ச.) வுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் பா.நி.ச.வின் இரண்டாவது வரைவின் மிகவும் முக்கியமான மாற்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 (UAPA---உலாபா) இல் உள்ள வரையறைக்கு அப்பால் முதலாவது வரைவில் செய்யப்பட்டிருந்த பயங்கரவாதக் குற்றச் செயலின் அச்சுறுத்தும் விரிவாக்கம் முற்றிலுமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகும். கொடூரமான உலாபா சட்டத்திலேயே, “இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள அல்லது இந்தியாவில் அல்லது எந்த அயல்நாட்டிலாவது மக்களின் மீது அல்லது மக்களின் எந்தப் பிரிவின் மீதாவது பயங்கரத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அல்லது பயங்கரத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள எந்தச் செயலும் பயங்கரவாதச் செயலாக” வரையறுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மாறாக, முதலாவது பா.நி.ச.வரைவில் பயங்கரவாதம் குறித்த வரையறையில், “பொது மக்களை அல்லது அவர்களில் ஒரு பிரிவினரை’ “பொது அமைதிக்குத் தொல்லைதருதல்”, “அச்சுறுத்தும் சூழலை உருவாக்குவது அல்லது  அச்சத்தை ஏற்படுத்தும் செய்தியைப் பரப்புதல்” “நாட்டின் அரசியல், பொருளாதார, அல்லது சமூகக் கடமைப்புக்களை சீர்குலைப்பது அல்லது அழிப்பது” அல்லது பொது நெருக்கடி நிலையை உருவாக்குவது அல்லது பொதுமக்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்தல்” போன்ற மிகவும் தெளிவற்ற செயல்கள் சேர்க்கப்பட்டிருந்தன. முதலாவது பா.நி.ச. வரைவில் இந்த்ச் செயல்கள் வன்முறையற்ற பேச்சாக இருந்தாலும் கூட, எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தாலும் கூட பயங்கரவாதச் செயல்களாக இருந்தன. இந்தத் தெளிவற்ற சூத்திரங்கள் உண்மையில் சட்டபூர்வமான பொது உரையாடலை “பயங்கரவாதமாக” சித்தரித்து யாரை வேண்டுமானாலும் சிறையிலடைப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய உள்ளாற்றல் கொண்டவையாகும்.

பா.நி..ச.வின் இரண்டாவது வரைவு முதலாவது வரைவிலிருந்த பயங்கரவாதம் குறித்த வரையறையை திரும்பப்பெற்றுக்கொண்டு, உலாபா (UAPA) வரையறையை முற்றிலுமாக எடுத்துக் கொள்கிறது (விதிவிலக்காக, உலாபா வில் “உயர்தர இந்தியக் கள்ளப் பணம், நாணயம் அல்லது வேறு எந்தப் பொருளையாவது உற்பத்தி செய்வது அல்லது கடத்துவது ”பயங்கரவாதத்தில் சேர்க்கப்பட்டிருந்தது, அதற்கு மாறாக பா.நி.ச. இரண்டாவது வரைவில் இந்த வரையறையில், “எந்த இந்தியக் கள்ளப் பணம், நாணயம் அல்லது வேறு எந்தப் பொருளையாவது” என்று விரிவாக்கப்பட்டிருக்கிறது.) தவறான ஊடக செய்திகளுக்கு மாறாக, நாட்டின் ‘பொருளாதாரப் பாதுகாப்புக்கும்’ ‘இறையாண்மைக்கும்’ அச்சுறுத்தலை ஏற்படுத்துவது’ முதன் முறையாக பா.நி.ச.வின் இரண்டாவது வரைவில் பயங்கரவாதத்திற்கான வரையறையில் அறிமுகப்படுத்தப் படவில்லை --- அவை உலாபாவில் உள்ள பயங்கரவாதம் குறித்த வரையறையின் பகுதியாக இருக்கின்றன, அவை இப்போது பா.நி.ச. வில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. பா.நி.ச. வின் இரண்டாவது வரைவு பயங்கரவாதத்துக்கான தண்டனையை உலாபாவில் கொடுக்கப்பட்டுள்ளதைப் போல நிபந்தனை விடுவிப்பு (parole) இல்லாத வாழ்நாள் சிறைத் தண்டனையிலிருந்து  ‘மரணத்தை ஏற்படுத்தும்’ தண்டனையாக மாற்றுகிறது (நிபந்தனை விடுவிப்பினை விலக்காமல்).

பா.நி.ச வில். பயங்கரவாதம் குறித்த வரையறை மாற்றங்கள் வரவேற்கத்தக்கவையாக இருக்கிற அதேவேளையில் ஏற்கெனவே உலாபா வில் உள்ளடங்கியுள்ள பயங்கரவாதக் குற்றத்தை பா.நி.ச.வில் கைவிடுவதற்கு ஒட்டுமொத்தமாக அரசாங்கம் மறுத்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் புதிய பா.நி.ச. விதியின் மூலம், அரசாங்கம் இப்போது இரண்டு சட்டங்களின் கீழ் பயங்கரவாதத்துக்கான வழக்கு விசாரணை மற்றும் சிறையடைப்பில் இரட்டைக் குழல் கொண்ட ஆயுதத்தை வைத்திருக்கிறது --- குறைவான ‘நடைமுறைப் பாதுகாப்புக்’ கொண்ட உலாபா சட்டம் ஒருபுறம், நடைமுறைப் பாதுகாப்பே இல்லாத இன்னொரு பொதுவான பா.நி.ச. சட்டம். அரசியல்ரீதியான மற்றும் சித்தாந்த ரீதியான எதிர்ப்பாளர்களை அரசாங்கம் இந்த ஆயுதத்தின் இரட்டைக் குழல்களாலும் தாக்கும் என்று நாம் முழுதாக எதிர்பார்க்கலாம். பயங்கரவாதக் குற்றச்சாட்டை எந்தச் சட்டத்தின் கீழ் (உலாபா எதிர் பா.நி.ச.) விசாரிக்கவும் வழக்குத் தொடுக்கவும் செய்யலாம் என்பதைத் தெரிவு செய்துகொள்வதற்கு காவல்துறைக்கு பா.நி.ச. வழிகாட்டுதலற்ற அதிகாரத்தை அளிக்கிறது. ஒரு சட்டத்தில், சிறப்பு நீதிமன்றத்தில் (உலாபாவில்) சில பாதுகாப்புக்கள் இருக்கின்றன என்றால், மற்றொன்றான பா.நி.ச.வில் அந்தப் பாதுகாப்புக்கள் இல்லை.  இதுவே இந்த அசாதாரண காவல்துறை விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் சூழ்ச்சிக்கும் ஊழலுக்குமான வாய்ப்பை உருவாக்குகிறது. இரண்டு தனித்தனி சட்டங்களில் பயங்கரவாதக் குற்றத்தை விசாரிக்க வேண்டிய தேவை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தப்படவில்லை.

அமைப்புரீதியான சிறு குற்றம் (பிரிவு 112, பா,நி.ச. இரண்டாவது வரைவு)

முதலாவது பா.நி.ச. வரைவில் “அமைப்புரீதியான சிறு குற்றம்” தெளிவற்ற வரையறை  வன்முறையற்ற எதிர்ப்புக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடிய இன்னொரு ஆயுதமாகும். அதன்படி பதிமூன்று எண்ணிக்கையிலான செயல்கள் மற்றும் அமைப்புரீதியான குற்றக் குழுக்கள் அல்லது கும்பல்கள் செய்யும் அமைப்புரீதியான குற்றங்களின் பொதுவான வடிவங்கள் குடிமக்களிடையே பொதுவான பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிற எந்தக் குற்றமும் குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் திறந்தநிலை வரையறையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக மிகவும் வரையறுக்கப்பட்ட வரையறையைக் கொண்டுவந்துள்ளது:

“எவரொருவர் எந்த ஒரு குழு அல்லது கும்பலின் உறுப்பினராக இருந்து, தனியாகவோ கூட்டாகவோ திருட்டு, சங்கிலி பறிப்பு, மோசடி, அனுமதியில்லாமல் சீட்டுகள் விற்பனை, அனுமதியற்ற பந்தயம் கட்டுதல் அல்லது சூதாட்டம், பொதுத் தேர்வுகளின் வினாத்தாள்களை விற்பனை செய்வது அல்லது அது போன்ற குற்றத்தைச் செய்வது அமைப்புரீதியாகச் செய்யப்பட்ட சிறு குற்றமாகக் கூறப்படுகிறது.”

தண்டனைகள் [பிரிவு 4, பாரதிய நாகரிக் சுரக்ஷா அதிநியம் (பா.நா.சு.அ.)]

இரண்டாவது பா.நி.ச. வரைவில் அனைத்து வழக்குகளிலும் “வாழ்நாள் சிறை என்பது ஒரு மனிதனின் எஞ்சிய இயற்கையான வாழ்நாள் சிறையாக” இருக்கும் என்ற முந்தைய முன்மொழிவை அரசாங்கம் கவிட்டுவிட்டது. இருப்பினும் அதன் பொருள்,  சிறைத் தண்டனையிலிருந்து, குற்றத்தைக் கையாள்வதற்கு மிகவும் மனிதாபிமானதும் பகுத்தறிவு சார்ந்ததுமான ஓர் அணுகுமுறையை நோக்கி நகர வேண்டிய தேவை குறித்து அரசாங்கம் மதத்தைப் பற்றிக்கொண்டுள்ளது என்பது அல்ல, அதற்கு மாறாக வரைவுகள் கடுமையான தண்டனை என்ற பழமையான நிலப்பிரபுத்துவக் கொள்கையை இன்னும் சார்ந்துள்ளன என்பதாகும்.

‘கொலை அல்லாத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கான’ தண்டனை முதலாவது வரைவில் தெளிவாக வரைவு செய்யப்படவில்லை, இரண்டாவது பா.நி.ச. வரைவு அதைத் தெளிவு படுத்துகிறது. திருத்தப்பட்ட கூற்றில் அவசர மற்றும் கொலை அல்லாத கவனக் குறைவு காரணமாக மரணத்தை விளைவிக்கும் எந்தச் செயலுக்குமான தண்டனை ஏழு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அவசரம் மற்றும் கவனக்குறைவாக ஒரு வாகனத்தை ஓட்டுவதால் கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்துக்கான தண்டனை, அந்த வாகனத்தின் ஓட்டுனர் அந்த நிகழ்வு நடந்த உடன் விரைவாக காவல்துறை அதிகாரிக்கோ குற்றவியல் நடுவருக்கோ தெரிவிக்கத் தவறினால் பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

பா.நா.சு.அ. வின் இரண்டாவது வரைவு புதிய சமூக சேவைத் தண்டனையின் இந்த வரையறை முதலாவது வரைவில் இல்லை. “தண்டனைக் குற்றவாளி ஒருவருக்கு தண்டனையின் ஒரு வடிவமாக சமூகத்துக்குப் பயனளிக்கும் ஒரு வேலையை நீதிமன்றம் உத்தரவிடலாம், அதற்காக அந்தக் குற்றவாளிக்கு எந்த ஊதியமும் பெறுவதற்கு உரிமையில்லை.” கட்டாய சமூக சேவை மூலமான தண்டனை தன்னிச்சையானது அல்ல, சாதி, பாலின பாகுபாடு மற்றும் வர்க்கத் தப்பெண்ணம் ஆகியவை இல்லாதது, எந்த ஊழல் கறையும் படாதது, என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த வரையறை போதுமானதாக இல்லை. சமூக சேவைத் தண்டனை தண்டிக்கும் நோக்கத்தைவிட நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சமூகப் பணியாளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் நெருக்கமான ஈடுபாடு இன்றியமையாததாகும்.

மனநிலை சரியில்லாமை

சட்ட முன்வரைவுகளின் முதலாவது வரைவுகள் “மனநிலை சரியில்லாமைக்கு” இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் தவறான பதிலீடுகளைச் செய்திருந்தன. இதில் “மன நோய்” என்ற  சொல்லாக்கத்தை முன்வைக்கிறது, மனநிலை சரியில்லாமைக்கும் மன நோய்க்கும் இடையில் வேறுபாடு கவனிக்கப்படவில்லை. இந்தப் பிழை இரண்டாவது மூன்று வரைவுகளிலும் சரி செய்யப்பட்டுள்ளது.

மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்

இந்தச் சட்ட முன்வரைவுகளும் குற்றவியல் நீதி வழங்கலில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு பற்றிய புரிதலில் தெளிவில்லாமையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டின. எடுத்துக்காட்டாக, முதலாவது வரைவில் மின்னணுரீதியாக நடத்தப்பட அனுமதிக்கப்பட்டிருந்த பல்வேறு நடைமுறைகளை அவற்றை மாற்றுவதற்கான தேவையை விளக்காமலேயே இரண்டாவது பா.நா.சு.அ. வரைவு நீக்கி விடுகிறது.

சில முக்கியப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை

திருமணத்துக்குப் புறம்பான பாலுறவு ஒரு பொதுவான பாலினக் குற்றமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சமூகரீதியாகப் பழமைவாதப் பரிந்துரையை வியப்பூட்டும் வகையில் ஒன்றிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது உண்மையில் வரவேற்கத்தக்கது. இருப்பினும் பலமான ஆதரவு அளிக்கப்பட்டால், இந்தப் பரிந்துரை  அரசாங்கத்தின் அடிப்படைத் தொகுதிகளில் இன்னுமொரு திருத்தத்தின் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்.

(i)இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 377 இல் இடம் பெற்றுள்ள ஒருமித்த ஒப்புதல் இல்லாத பாலுறவுச் செயல்கள் தொடர்ந்து குற்றச் செயல்களாக ஆக்கப்பட வேண்டும் (ii)  தண்டனைகளை மாற்றுதலுக்கான காரணங்கள் நிர்வாகத்தால் அளிக்கப்பட வேண்டும் மற்றும் (iii) உடல்நலப் பராமரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்கு சிறப்பான விதிமுறை சேர்க்கப்பட வேண்டும், இரண்டாவது வரைவுகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய நிலைக்குழுவின் இந்தப் பரிந்துரைகள் சேர்க்கப்படவில்லை.

சட்ட முன்வரைவுகளின்  அடிப்படைத் தன்மை

இந்தச் சட்ட முன்வரைவுகள் காவல்துறையை ஆயுதமாக்குகின்றன, குற்றவியல் நீதி அமைப்புக்கு அனைத்து -- மைய, மாநில, வட்டார – மட்டங்களிலும் அரசியல் தலைமையை அளிக்கச் செய்கின்றன. குற்றவியல் நீதி அமைப்பை, அரசியல் ரீதியாக சித்தாந்த மற்றும் அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக தெரிவு செய்து, இலக்காக்கி, ஒரு பக்கச் சார்பாக வழக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பெரிய வாய்ப்பினை அளிக்கிறது.  இதற்காக, “பயங்கரவாதம்”, “அமைப்புரீதியான குற்றம்” இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்” மற்றும் “அரசுத் துரோகத்துடன் கூடுதலாக” என்று நாம் சேர்த்துக் கொள்ளக் கூடியது போன்ற குற்றங்களை எளிதில் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வகையில்  தெளிவற்ற சொற்களால் இந்தச் சட்ட முன்வரைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்ட முன்வரைவுகள் காவல்துறை அதிகாரங்களையும் விருப்ப அதிகாரத்தையும் உயர்த்துகின்றன. பல துறைகளில் தெளிவற்ற குற்றச் செயல்களை வழக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. நன்கு நிறுவப்பட்ட பாரம்பரிய நீதித் தரங்களை மீறி, சில வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தொடக்கநிலை விசாரணை நடத்துவதற்கான தேர்வுரிமையை காவல்துறைக்கு அளிப்பதன் மூலம்  முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தல், மற்றும் வழக்குப் பதிவு செய்தல் ஆகிய காவல்துறை கடமைகளை இந்தச் சட்ட முன்வரைவுகள் நீர்த்துப் போகச் செய்கின்றன. அவை பயங்கரவாதச் செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் எந்தச் சட்டத்தின் கீழ் (உலாபா அல்லது பா.நி.ச.) விசாரிக்கப்பட வேண்டும்  என்பதைத் தெரிவு செய்வதற்கு  காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கின்றன. அவை காவல்துறையின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதை குற்றச் செயலாக்குகின்றன (இது பொதுவாக அரசாங்க அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் குற்றத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.) அவை காவல்துறை காவலுக்கான வாய்ப்பெல்லையை 15 நாட்களிலிருந்து 90 நாட்களுக்கு ஆறுமடங்காக அதிகரிக்கச் செய்கின்றன.

அரசின் கண்காணிப்பை விரிவாக்க, ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆனால் குற்றம் சாட்டப்படாதவர்களின் உயிரியல் அளவுகள் (பையோமெட்ரிக்) எடுத்துக் கொள்வதை இந்தச் சட்ட முன்வரைவுகள் கட்டாயமாக்குகின்றன.

நீண்டகால நீதித்துறைத் தரங்களை மீறி, இந்த சட்ட முன்வரைவுகள் கைவிலங்கிடுவதை கைதின் போது மட்டுமின்றி நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கும் விரிவாக்குகின்றன.  கைவிலங்கிடுவதற்கான சந்தேகத்துகு உரியவர்கள் ம்ற்றும் குற்றம் சாட்டப்படுவோர் பட்டியலில் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் பொருளாதாரக் குற்றவாளிகள் அகற்றப்பட்டிருப்பதில் வியப்பேதுமில்லை.

இன்னொருபுறம், காவல்துறை மக்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை அதிகரிக்கும் வகையில் இந்த வரைவுகளில் எந்த முயற்சியும் இல்லை. பொய்யாக, தீநோக்குடன் தெரிவு செய்து வழக்குத் தொடுப்பது, பலநேரங்களில் முறையான குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் நீண்டநாள் சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றிலிருந்து குடிமக்களை பாதுகாக்க நீதித் துறையினாலேயே இயலாமல் போகக்கூடிய இந்தக் காலத்தில் இந்தச் சட்ட முன்வரைவுகள் நமது நாட்டில் அடக்குமுறையை அதிகரிப்பதற்கான செயல்முறைகளாக இருக்கின்றன.

குற்றவியல் நீதி நிர்வாகத்தை பலப்படுத்துவதைவிட, இந்தச் சட்ட முன்வரைவுகள் முதன்மையாக அரசியல் குறிக்கோள்களுக்கே சேவகம் செய்கின்றன. இந்தி பேசாத மக்களுக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் தெளிவாகப் பெயரைச் சேர்ப்பதற்கு பிடிவாதமாகவும் பிறமொழி வெறுப்புடனும் மறுப்பது, இந்தி மற்றும் வட்டார மொழிப் பயன்பாட்டுக்கு சட்ட முன்வரைவுகளின் பெயர்களை சமஸ்கிருதத்தில் தக்கவைத்துக்க்கொள்வது,  ஆகியவை அரசியல் பிரச்சார நோக்கங்களுக்குச் சேவகம் செய்கிறது. பெருந்திரள் உடற்பயிற்சியிலும் ஊர்வலங்களிலும் (லத்திகள் உட்பட) ஆயுதங்கள் எடுத்துச் செல்வதை குற்றச் செயலிலிருந்து அகற்றுவதும் [பிரிவு 103 (2), பா.நி.ச.] அதேபோல கும்பல் கொலை அல்லது குழுவாக கொடுங்காயம் ஏற்படுத்தும் குற்றத்திற்கான அடிப்படைகளில் மதவெறுப்புணர்வை வெளிப்படையாகவே தவிர்த்திருப்பதும் [பிரிவு 117 (4) பா,நி.ச] சங் பரிவாரங்களுக்குக் கேடயமாக இந்தச் சட்ட முன்வரைவுகள் உருவாக்குகின்றன

வேறுபல வரலாற்றுச் சட்டமியற்றல் பிரிவுகள் போல, இந்த மூன்று முக்கியச் சட்டங்கள் அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையையும் ஆழமாகப் பாதிக்கும், அவை குறித்த எந்த பொருளுள்ள அல்லது எந்த நியாயமான விவாதத்தையும் தவிர்க்கும் குறிக்கோளுடன் வெளிப்படையாகவே பாராளுமன்றத்தின் மூலம் விரைந்து நிறைவேற்றப்படுகின்றன.  இதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை உண்மையான ஜனநாயக முறையில் நிறைவேற்ற முடியாது.

____________________________________

- ஜி.மோகன் கோபால், இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், சட்டக் கல்வியாளரும் ஆவார்.

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: ஜனதா வீக்லி மற்றும் தி ஒயர்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த சட்ட முன்வரைவுகள் ஆங்கிலக் கட்டுரை வெளியான பின்னர், அப்படியே சட்டங்களாக ஆக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டன. 

Pin It