2023 ஆகஸ்டு 11 அன்று ஒன்றிய அரசாங்கம் மக்களவையில் மூன்று புதிய சட்ட முன்வரைவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவை முறையே,
- இந்திய தண்டனைச் சட்டம் 1860 க்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்ட முன்வரைவு (சுருக்கமாக பா.நி.ச.---இ.த.ச.), 2
- இந்திய சாட்சியச் சட்டம் 1872 க்குப் பதிலாக பாரதிய சாக்சிய அதிநியம் சட்ட முன்வரைவு (சுருக்கமாக பா.சா.அ- -- இ.சா.ச)
- குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 க்குப் பதிலாக (பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்ட முன்வரைவு (சுருக்கமாக பா.நா.சு.ச.— கு.ந.ச)
வலிமையான சமுதாயங்களும் பலவீனமான அரசுகளும் (1988, பிரிஸ்ன்டன் பல்கலைக்கழக அச்சகம்) என்ற தனது நூலில் ஜோயல். எஸ். மிக்டல் யுஜீன் வெபெரின் விவசாயிகள் பிரெஞ்சுக்கரர்களாக (1976, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம்) என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார்:
“’அனைத்துத் தீமைகளிலிருந்தும் நீதியிலிருந்தும் எங்களை விடுவிப்பாயாக’ என்ற வரி பிரான்சின் ஒரு பிரிவில், நீண்ட காலமாகவே விவசாயிகளின் மாலைப் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.”இந்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய சாட்சியச் சட்டம் 1872, மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றுக்குப் பதிலாக ஒன்றிய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. இந்தியர்களாகிய நாமும் நமது அன்றாடப் பிரார்த்தனைகளில் “குற்றவியல் நீதியிலிருந்து எங்களை விடுவி” என்ற வேண்டுகோளை சேர்த்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஏனெனில் இந்தப் புதிய சட்ட முன்வரைவுகளில் பெயர் மாற்றங்களோடு சேர்த்து பனிரெண்டு அதிர்ச்சியூட்டும் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்தப் பனிரெண்டில் ஆறு மாற்றங்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும், எதிர்ப்பே இல்லாமல் செய்யவும், பொது உரையாடலை அறவே இழுத்து மூடவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாக உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மூன்று தொகுப்பான மாற்றங்கள் ஆளும் சித்தாந்தம் அதன் எதிரிகளாகக் கருதும் தனிநபர்களையும் அமைப்புக்களையும் வழக்குத்தொடுத்தல் மற்றும் சிறையில் அடைத்தல் மூலமாக ஒரு பக்கச் சார்பாக அரசியல் துன்புறுத்தலுக்கு இலக்காக்குதலுக்கான புதிய ஆயுதங்களை அளிக்கின்றன. இரண்டு மாற்றங்கள் நேரடியான ஜனநாயகச் செயல்பாட்டைத் தாக்குகின்றன. ஒன்று சட்டமியற்றும் அதிகாரத்தை சங் பரிவாரங்கள் ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படுவதற்கு கட்சிக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகுப்பதாக இருக்கிறது.
இந்த சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் சட்டபூர்வமான வழிகளில் அரசியல் சட்டத்துக்கும் கூடுதலான அவசரநிலை அதிகாரங்களை நிரந்தரமாக நிறுவிக் கொள்வதற்கு வழிவகுக்கும். எதிர்கால அரசாங்கங்களும் இந்த அதிகாரத்தைக் கைவிடவோ, அரசியல் சட்டத்துக்கும் கூடுதலான அவசரநிலையை அதிகாரத்தைத் திரும்பப் பெறவோ சாத்தியமில்லை. இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியல் சாசன நியாயத் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை. அவற்றுக்கு உள்ளார்ந்த அரசியல்சட்டக் கட்டுப்பாடுகள் இல்லை. அவை எழுத்திலும் உணர்விலும் அரசியல்சட்டத்துக்கு எதிரானவை. இந்த இரண்டு சன்ஹிதாக்கள் மற்றும் அதிநியாம் ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் குறிக்கோள், “அவர்களுக்கு மூச்சுவிட அவகாசம் கொடுக்காதீர்கள்” என்ற கூற்று ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கின் துணைநிலை ஆளுநரின் அண்மைக் கூற்றின் தொகுப்பாகத் தெரிகிறது.
_______________________________
I வன்முறையற்ற ஜனநாயகச் செயல்பாட்டை ‘பயங்கரவாதமாக’ நுத்திரை குத்தும் தன்னிச்சையான அதிகாரம்.
சட்டரீதியான மாற்றங்களில் முதலாவது, ஜனநாயக அல்லது சமூக, அல்லது அரசியல் அல்லது பொருளாதர நீதிக்கான வன்முறையற்ற எந்த ஒரு செயல்பாட்டையும், அல்லது அரசாங்கத்தின் கூற்றிலிருந்து முரண்படுகிற வன்முறையற்ற எந்த கருத்துவேறுபாடு, எதிர்ப்பு அல்லது பொது விவாதத்தையும் உண்மையில் “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி அதை அடித்து நொறுக்கி மௌனிக்கச் செய்வதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை முழுவீச்சுடன் கட்டவிழ்த்துவிடும் தன்னிச்சையான அதிகாரத்தை அரசாங்கத்துக்கு வழங்குகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 (UAPA) இல் பயங்கரவாதம் தற்போதைய கொடூரமான வரையறையில் “இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அல்லது அச்சுருத்தலை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் குறிக்கோளாகக் கொண்ட, அல்லது இந்தியாவில் அல்லது எந்த அயல்நாட்டிலாவது மக்களிடம் அல்லது மக்களின் எந்த ஒரு பிரிவினரிடமாவது பயங்கரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் (செய்யப்படுகிற) அல்லது பயங்கரத்தைத் தூண்டும் சாத்தியமுள்ளவையாகக் கருதப்படும் வன்முறைச் செயல்பாடுகளை உள்ளடக்கியிருக்கிறது.
பா.நி.ச.-- இ.த.ச. பிரிவு 111 (1) (iv) பயங்கரவாதம் குறித்த UAPA வரையறையை இரண்டு வழிகளில் விரிவாக்குகிறது.
- UAPA சட்டத்தின் கீழ் ஒரு வன்முறைச் செயல் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும். பா.நி.ச.—இ.த.ச. வின் கீழ் அமைதியான, வன்முறையற்ற செயல்களைக் கூட, அவை பிற வகைப்பாடுகளுக்குப் பொருத்தமாக இருந்தால், பயங்கரவாத வரையறைக்குள் சேர்க்கிறது. அதன் விளைவாக, பா.நி.ச.—இ.த.ச.வின் கீழ் வன்முறையற்ற ஒரு செயல் அல்லது பேச்சு அல்லது எழுத்து மூலமான வெறும் வெளிப்பாடும் கூட பயங்கரவாதத்தின் வரையறைக்குள் வந்துவிடும்.
- UAPA சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயல் என்பது மக்களிடம் அல்லது மக்களின் எந்த ஒரு பிரிவினரிடமாவது பயங்கரத்தைத் தூண்டும் செயலாக இருக்க வேண்டும். பா.நி.ச. பயங்கரவாத வலையை விரிவாக்கி, “பொது மக்களை அல்லது அவர்களில் ஒரு பிரிவினரை அச்சுறுத்துகிற” அனைத்துச் செயல்களையும்” பயங்கரவாதச் செயல்களாகக் கருதச் செய்கிறது. பா.நி.ச.—இ.த.ச. பயங்கரவாதச் செயலின் வரையறையில் “பொது அமைதிக்குத் தொல்லை தருவது” என்ற பரந்த வகையைச் சேர்த்துக் கொள்கிறது. பா.நி.ச. பயங்கரவாதத்தின் வரையறையில் அதன் வலையை மேலும் விரிவாக்குவதற்காக புதிய காரணங்களைச் சேர்ந்த்து கொள்கிறது: ஒரு செயல் நாட்டின் அரசியல், பொருளாதார, அல்லது சமூகக் கட்டமைப்புக்களைச் சீர்குலைக்குமானால் அல்லது அழிக்குமானால் அது பயங்கரவாதச் செயலாகும். இந்தக் கடைசிக் காரணம் 2002 ஜூன் 13 இல் ஐரோப்பிய பேரவை சட்டக முடிவை எதிரொலிக்கிறது. அதன்படி பயங்கரவாதம் “தேசிய சட்டத்தின் கீழ், ஒரு நாடு அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியல்சட்ட, பொருளாதார அல்லது சமூகக் கட்டமைப்புக்களைச் மோசமாகச் சீர்குலைக்கும் அல்லது அழிக்கும்” குறிக்கோளுடன் செய்யப்படுகிற குற்றங்களாக வரையறுக்கப்படுகிறது, ஒரு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட “குற்றச்செயல்கள்” மட்டுமே பயங்கரவாதத்தின் வரையறையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய நிபந்தனையை பா.நி.ச. வரையறை கைவிடுகிறது. மேலும் “சீர்குலைவு” அல்லது “அழிவு” என்பது “தீவிரத்தன்மை” கொண்டதாக இருக்க வேண்டும், மற்றும் தாக்கப்படும் அரசியல், அரசியல் சட்ட, பொருளாதார, அல்லது சமூகக் கட்டமைப்புக்கள் “அடிப்படை” கட்டமைப்புக்களாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய பேரவையின் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுவதற்கான நியந்தனையாகும். இந்த வழியில் பா.நி.ச. பயங்கரவாதம் குறித்த அதன் வரையறையை ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட வரம்புகளையும் மீறி விரிவாக்கிக் கொண்டுசெல்கிறது.
மக்களின் நலனை உயர்த்திப்பிடிக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பை பாதுகாக்க வேண்டும், அந்த அமைப்பில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி தேசிய வாழ்க்கையின் அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் (பிரிவு 38) சந்தேகத்துக்கிடமின்றி அரசிடம் வேண்டுகிறது. “குறிப்பாக, வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பாடுபட வேண்டும், தனிநபர்களிடையே மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அல்லது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்கள் குழுக்களிடையேயும் அந்தஸ்தில், வசதிகளில், வாய்ப்புக்களில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்குப் பாடுபட வேண்டும்” என்று அரசியல் சாசனம் அரசுக்குக் கட்டளையிடுகிறது. பல நூற்றாண்டுகளாக நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலப்பிரபுத்துவ, மதம் சார்ந்த சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை பெரிய அளவில் அல்லது சிறிய அளவுக்கேனும் வன்முறையற்ற முறையில் ‘அழிக்கவோ ‘சீர்குலைக்கவோ’ செய்யாமல் இந்த மாற்றங்களைச் செய்ய முடியாது. இந்த மாற்றங்கள் புரட்சிகர மாற்றங்களை விரும்புவோர் மற்றும் அவற்றை எதிர்க்கும் அல்லது அவற்றால் அச்சத்துக்கு உள்ளாகும் மேட்டுக்குடியினர் என்ற இரு பிரிவுகளாக தவிர்க்க இயலாத வகையில் மக்களைப் ‘பிளவுபடுத்தும்’.
பா.நி.ச. விதிகள் புரட்சிகரமான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கான அனைத்து அமைதியான இயக்கங்களையும் பயங்கரவாத இயக்கங்களாக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை உள்ளடக்கியவையாக இருக்கின்றன (எடுத்துக்காட்டாக டாக்டர் பி.ஆர். அம்பேதகரின் சாதியை அழித்தொழித்தல் என்ற அறைகூவலும் தந்தையாதிக்கம் அல்லது முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்களும் கூட இதில் சேர்க்கப்படலாம்). இந்தச் சூழமைவில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் குறித்த வரையறையில் கூட இடம் பெறாத “நாட்டின் சமூகக் கட்டமைப்புக்களுக்கு எதிரான’ செயல்பாடுகள் பா..நி.ச. வின் பயங்கரவாதம் குறித்த வரையறையில் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது சாதி அடிப்படையில் அமைந்த நிலவும் சமூக அமைப்பை எதிர்க்கும் சமூக சீர்திருத்தச் செயல்களைக் கூட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தித் தடுப்பதற்கு வாய்ப்பளிக்கக் கூடியதாகத் தெரிகிறது. பயங்கரவாதம் குறித்த பா.நி.ச. வரையறையிலிருந்து அரசியல் அமைப்புக் கட்டமைப்பைத் தாக்குதல் என்பது வசதியாகக் கைவிடப்பட்டிருக்கிறது.
பா.நி.ச.வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த புதிய மற்றும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய திறந்தநிலை விதிமுறைகள், பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் கீழ் மூன்று அத்தியாயங்களில் பயங்கரவாதத்தை தீவிரமான குற்றச்செயலாக்கும் ஏற்கெனவே இருந்துவரும் விதிமுறைகளுடன் சேர்த்துக்கொள்ளப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த இரண்டு சட்டங்களின் தொகுப்புக்களும் ஒன்றேபோல் இல்லை. பா.நி.ச. வின் கீழ் பயங்கரவாதத்துக்காக வழக்குத் தொடுக்கப்படுவோருக்கு UAPA சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அதற்கான சிறப்பு நீதிமன்றங்களின் கீழ் கிடைக்கும் சிறிதளவு பாதுகாப்பும் கிடைக்காது. குறிவைக்கப்பட்டவர்கள் இரண்டு சட்டத் தொகுப்புக்களின் கீழும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டு முடிவற்ற சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம். நிறுவப்பட்டுள்ள சமூக அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதை பயங்கரவாதத்துக்கான தண்டனையின் வலியைக் காட்டித் தடுப்பது நாட்டின் நேர்மையற்ற சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கிற மற்றும் அரசியல் சாசனத்தில் எதிர்நோக்கப்பட்டுள்ள மிகவும் தேவையாக இருக்கிற புரட்சிகர, அமைதியான, சமூக மாற்றத்தைத் தாமதப்படுத்துகிற நோக்கம் கொண்டது என்பதை நாம் ஊகிக்கலாம்,
II அரசத் துரோகம் என்பது அரசத் துரோகத்துக்கும் கூடுதலான மிகவும் தீய அவதாரத்தை எடுக்கிறது
சுதந்திரம், ஜனநாயகம், கருத்து வேறுபடுதல் மற்றும் எதிர்ப்பு ஆகிவற்றுக்கு எதிரான இரண்டாவது தாக்குதல் புதிய, கெடு வரையறை கொண்ட, அளவுக்கு மிதமிஞ்சிய பெருங்குற்றத்தை உருவாக்குவதன் மூலம் எதிர்ப்பாளர்களையும் கருத்து மாறுபாட்டாளர்களையும் குறிவைத்து ஒருபக்கச்சார்பாக வழக்கு விசாரணைக்கு உள்ளாக்குதல் மற்றும் சிறையில் அடைத்தல் ஆகிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது. (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் செயல்கள் – பா.நி.ச. வின் பிரிவு 150.) பின்வரும் ஐந்து நடவடிக்கைகளைக் குற்றச் செயலாக்குகிறது: (1) “ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள்” (2) “பிரிவினை” (3) “பிரிவினைவாத நடவடிக்கைகள்” (4) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அபாயம் ஏற்படுத்துதல் மற்றும் (5) “ஆயுதம் தாங்கிய கலகம்”. இவற்றில் ஒன்றுகூட சட்டமுறையில் வரையறுக்கப்படவில்லை, அதனால் காவல்துறையும் அரசியல் நிர்வாகமும் விருப்பப்படி செயலாற்ற அனுமதிக்கிறது. இந்த ஐந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடிய வரையறுக்கப்படாத, கேலிக்குரிய வகையில் தெளிவில்லாத முறைகளின் மூன்று வகைகளை பிரிவு 150 குற்றச் செயலாக்குகிறது.
(1) மேற்குறிப்பிட்ட ஐந்து தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்களுக்குப் ‘பரபரப்பூட்டுவது’ (2) இந்த நடவடிக்கைகளின் பால் நேர்மறையான வழியில் மக்களிடையே ‘கிளர்ச்சியை’ உருவாக்குவது (3) இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்களிடயே உணர்வுகளை ஊக்குவிப்பது. அப்படிப்பட்ட குற்றங்கள் இழைக்கப்படக் கூடிய தடைசெய்யப்பட்ட நான்கு கருவிகளை பிரிவு 150 உருவாக்குகிறது. அவற்றில் இரண்டு புதியவை, (1) மின்னணுத் தகவல்பரிமாற்றம் மற்றும் (2) நிதிசார் வழிகள். மற்ற மூன்றும் இத.ச. பிரிவு 124 அ (அரசத் துரோகம்) விலிருந்து அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. (1) “பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட சொற்கள்” (2) ‘அடையாளங்கள்’ அல்லது (3) “காணத்தக்க எடுத்துக்காட்டுக்கள்” உண்மையில் அரசாங்கம் நடுநிலைப்படுத்துவதற்கு அல்லது மௌனிக்கச் செய்வதற்கு, நேர்மையான, ஜனநாயக மற்றும் வன்மூறையற்ற எதிர்ப்புத் தெரிவிப்புக்களை, கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கு விரும்பும் எந்த ஒருவர் மீதும் இ.த.ச.பிரிவு 124 அ வின் கீழ் காலனிய கலத்திலிருந்து சமகாலம் வரை செய்யப்பட்டுவரும் அதே முறையில் இந்தத் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள், முறைகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக தெளிவற்ற மொழியில் வரையறுக்கப்பட்டுள்ளன.
இ.த.ச.பிரிவு 124 அ (அரசத் துரோகம்) பா.நி.ச. வில் சேர்க்கப்படவில்லை. 124 அ நீக்கப்பட்டிருப்பது குற்றவியல் சட்டத்தில் தாராளத் திருத்தம் என்று ஒன்றிய அரசாங்கம் கூறிக்கொள்கிறது. இ.த.ச.124 அ படியான அரசத் துரோகக் குற்றம் என்பது அடிப்படையில் அரசாங்கத்துக்கு எதிரான, (i) “வெறுப்பு” (ii) “அவமதிப்பு” (iii) “பற்றின்மை” (iv) “விசுவாசமின்மை” மற்றும் (v) “பகைமை” ஆகிய ஐந்து போக்குகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றை உருவாக்குவது அல்லது உருவாக்க முயற்சிப்பது ஆகும். 124 அ பிரிவை நீக்கும் அதேவேளையில், பா.நி.ச. வின் பிரிவு 150 அத்தகைய போக்குகளிலிருந்து தோன்றும் இன்னும் விரிவான நட்வடிக்கைகளைக் குற்றச் செயலாக்குகிறது. பா.நி.ச. பிரிவு 150 124 அ வின் மிகவும் கொடூரமான அவதாரமாகும்.
III கருத்துவேறுபடுவோர் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களைக் குறிவைக்க வழிவகுத்தல்
ஜனநாயகத்தின் மீதான மூன்றாவது தாக்குதலும், முதல் இரண்டையும் போல, அரசாங்கத்துக்கும் அதன் சமூக, பொருளாதார, அரசியல் எஜமானர்களுக்கும் ஒத்திசைவாக இல்லாதவர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு எதிராக ஒருபக்கச்சார்பாக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தித் துன்ப்றுத்துவதற்கான புதிய ஒரு சட்ட ஆயுதமாகும். இந்த ஆயுதத்தால் பாதிக்கப்படுபவர்கள் அமைப்புரீதியான குற்றம் (பிரிவு 109) மற்றும் சிறு அமைப்புரீதியான குற்றம் (பிரிவு 110) ஆகியவற்றில் சேர்க்கப்படுவார்கள். மராட்டிய அமைப்புரீதியான குற்றத்தடுப்பு சட்டம் 1999 மற்றும் கர்நாடகா அமைப்புரீதியான குற்றத் தடுப்புச் சட்டம் 2000 ஆகிய இர்ண்டு கொடூரமான சட்டங்கள் அளிக்கும் வரையறைப்படி, “அமைப்பு ரீதியான குற்றம் என்பது ஒரு தனிநபர் தனியாகவோ அல்லது கூட்டுச் சேர்ந்தோ, அமைப்புரீதியான குற்றக்குழுவின் உறுப்பினராகவோ அல்லது அப்படிப்பட்ட குழுவின் சார்பாகவோ வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல் அல்லது பயமுறுத்துதல் அல்லது பலவந்தப்படுத்துதல் அல்லது பிற சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்தி, பணப்பலன்களை அடையும், அல்லது தனக்கு, அல்லது வேறு எந்த ஒரு நபருக்கு அல்லது கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு நியாயமற்ற பொருளாதார அல்லது பிற ஆதாயத்தைதை அடையும் குறிக்கோளுடன் தொடர்ந்து செய்துவரும் எந்த சட்டவிரோத நடவடிக்கையும்” என்று வரையறுக்கப்படுகிறது.
நாடுகடந்த அமைப்புரீதியான குற்றத்துக்கு எதிரான ஐ,நா.பேரவையின் மாநாடு 2000, அமைப்புரீதியான குற்றம் குறித்த நிறுவப்பட்ட வரையறையை அளிக்கிறது: “நிதிரீதியான அல்லது பிற பொருள்வகை பயனை அடைவதற்கான நோக்கத்துடன் தொடர்புடைய நேரடியாகவோ மறைமுகமாகவோ தீவிரமான குற்றத்தைச் செய்வதற்கு ஒப்படைவு செய்துகொள்ள ஒரு நபர் அல்லது இன்னும் கூடுதல் நபர்களுடன் உடன்படுவதும், உள்நாட்டுச் சட்டம் அந்த உடன்பாட்டின் தொடர்ச்சியாக அமைப்புரீதியான குற்றக் குழுவில் ஈடுபடும் பங்கேற்பாளர்களில் ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஒரு செயலை உள்ளடக்கியிருப்பதும்.” அதற்கு மாறாக பா.நி.ச.அமைப்புரீதியான குற்றத்திற்கு புதிய வரையறையை அறிமுகப்படுத்துகிறது அது தெளிவற்ற ஒரு புதிராக இருக்கிறது.
“ஆள்கடத்தல், கொள்ளை, வாகனத் திருட்டு, வழிப்பறி, நில அபகரிப்பு, ஒப்பந்தக் கொலை, பொருளாதாரக் குற்றங்கள், கடுமையான பின்விளைவுகளைக் கொண்ட இணையவழிக் குற்றங்கள், ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கள்ளச் சரக்குகள் அல்லது சேவைகள், மற்றும் ஆயுதங்கள், பாலியல் தொழிலுக்காக ஆட்கடத்தல், தனிநபர்களோ கூட்டுச் சேர்ந்தோ பணயத்தொகைக்காக கடத்துதல் ஆகியவை உட்பட சட்டவிரோத நடவடிக்கையை தனியாகவோ அல்லது கூட்டுச் சேர்ந்தோ, அமைப்புரீதியான குற்றக்குழுவின் உறுப்பினராகவோ அல்லது அப்படிப்பட்ட குழுவின் சார்பாகவோ வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல் அல்லது பயமுறுத்துதல் அல்லது பலவந்தப்படுத்துதல் அல்லது பிற சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்தி, பணப்பலன்களை அடையும், அல்லது தனக்கு, அல்லது வேறு எந்த ஒரு நபருக்கு அல்லது கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு நியாயமற்ற பொருளாதார அல்லது பிற ஆதாயத்தைதை அடையும் குறிக்கோளுடன் தொடர்ந்து செய்துவரும் எந்த சட்டவிரோத நடவடிக்கையும்” அமைப்புரீதியான குற்றத்துக்கான பா.நி.ச.வின் வரையறையாக இருக்கிறது.
அமைப்புரீதியான குற்றம் குறித்த புதிய தேசியக் குற்றச்சாட்டு ஒன்றை உருவாக்கும் தேவை இருந்தால், மாநில அரசு சட்டத்திலும் சர்வதேச சட்டத்திலும் தெளிவான வரையறைகள் இருக்கிறபோது ஏன் புதிய முற்றிலும் குழப்பமான வரையறை, அரசியல் மற்றும் சித்தாந்த எதிர்ப்பாளர்களை வழக்குவிசாரனைக்கு உட்படுத்தித் துன்புறுத்தவோ அல்லது நடுநிலைப்படுத்தவோ அல்லாமல் வெறெதற்கு பயன்படுத்தப்படுகிறது. அமைப்புரீதியான மிகமோசமான குற்றப் பிரச்சனையைத் தீவிரமாகத் தீர்ப்பது தான் நோக்கம் என்றால், அந்தக் குற்றம் பற்றிய தொழில்முறையிலான, நியாயமான குற்ற வரையறை வரைவு செய்யப்பட வேண்டும்.
IV. அரசியல் எதிர்ப்புப் பட்டினிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்
ஜனநாயக உரிமைகள் மீதான நான்காவது தாக்குதல் பட்டினிப் போரட்டத்தை அரசியல் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதை குற்றச் செயலாக்குவதாகும். பட்டினிப் போராட்டம் பெரும்பாலும் மிகவும் சக்தியற்றவர்கள் தங்கள் மனித உரிமைகளுக்காக (எடுத்துக்காட்டாக சிறைக் கைதிகள்) பயன்படுத்தும் கருவியாகும். தற்கொலையை குற்றச் செயலிலிருந்து நீக்குவது பொதுவான ஒரு விடயமாக இருக்கும் அதேவேளையில், பா.நி.ச. பிரிவு 224 (சட்டரீதியான அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நிர்ப்பந்திப்பதற்கு அல்லது தடுப்பதற்கு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சி”) கூறுவதாவது: எந்த ஒரு அரசாங்க அதிகாரியும் அவரது அலுவல்பூர்வ கடமையைச் செய்வதிலிருந்து நிர்ப்பந்திக்கும் அல்லது தடுக்கும் நோக்கத்துடன் தற்கொலை செய்துகொள்வதற்கு யாரொருவர் முயற்சி செய்தாலும் அவர் ஓர் ஆண்டு வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் சேர்த்து அல்லது இரண்டும் சேர்த்து அல்லது சமூக சேவையுடன் சேர்த்துத் தண்டிக்கப்படுவார்.” பட்டினியை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடைசெய்வது மட்டுமே அதன் முதன்மையான நோக்கம் என்று தெரிகிறது.
V ஆட்கள் திரள்வதற்கு எதிராக பலாத்காரத்தை ஊக்குவிப்பது
ஜனநாயக உரிமைகளின் மீதான ஐந்தாவது தாக்குதல் மக்கள் திரள்வதற்கு, அதாவது கூட்டங்களுக்கு, எதிராக காவல்துறை பலாத்காரத்தைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமாக சமிக்ஞையை அளிப்பதாகும். கு.ந.ச. பிரிவு 130 தற்போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அவசியமாக இருந்தால், எந்த சட்டவிரோதமான கூட்டத்தை அல்லது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய சாத்தியத்துடன் கூடுவதைக் கலைப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது. அங்கு இருக்கும் உயர்நிலைப் பதவியில் உள்ள நிர்வாக நடுவர் ஆயுதப்படைகள் மூலம் அதைக் கலைக்கலாம். பா.நி.ச. பிரிவு 149 இந்த விதிமுறையைத் திருகி, “அத்தகைய சூழ்நிலைகளில், அங்கிருக்கும் மாவட்ட நடுவர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்படும் நிர்வாக நடுவர் (அதாவது, உயர்நிலைப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) ஆயுதப் படைகள் மூலம் அந்தக் கூட்டத்தைக் கலைக்கலாம்” என்று கூறுகிறது. இப்படித் திருகுவது மக்கள் கூட்டத்தைத் கலைப்பதற்கு காவல்துறை பலாத்காரத்தைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமாக ஊக்குவிப்பதற்கு சமிக்ஞை அளிப்பதாக இருக்கிறது.
VI சங்க பரிவாரங்களுக்குக் கேடயமாக
ஆறாவது தாக்குதல் குற்றவியல் சட்டத்தை சங்க பரிவாரங்களுக்கு ஆதரவாகக் கட்சி சார்புத் திருத்தமும் சங்க பரிவரங்களை சட்டபூர்வப் பொறுப்புடமையிலிருந்து பாதுகாத்து, ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படுவதற்கான பெரும் வெளியை அனுமதிப்பதும் ஆகும்.
முன்பே குறிப்பிட்டபடி, பயங்கரவாதம் குறித்த பா.நி.ச. வரையறை, 2002 ஜூன் 13 ஐரோப்பிய பேரவை சட்டகத் தீர்மானத்தைப் பகுதியளவுக்குப் பிரதிபலிக்கிறது, அதன்படி, “ஒரு நாட்டின் அல்லது சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியல் சாசன, பொருளாதார அல்லது சமூகக் கட்டமைப்புக்களை தீவிரமாகச் சீர்குலைக்கும் அல்லது அழிக்கும் குறிக்கோளுடன் தேசியச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களாக” பயங்கரவாதச் செயல் வரையறுக்கப்படுகிறது.
அரசியல் சாசனக் கட்டமைப்புக்களின் மீதான தாக்குதல்கள், எடுத்துக்காட்டாக இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்கள், இ.த.ச. மற்றும் பா.நி.ச. ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக நிறுவப்பட்டிருந்தாலும், பா.நி.ச. இன் கீழ் பயங்கரவாதம் குறித்த வரையறை இந்தியாவின் “அரசியல் சாசனக் கட்டமைப்பு” மீதான தாக்குதல் என்பதை உணர்வுபூர்வமாக நீக்கிவிடுகிறது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். அதன் விளைவாக, இந்தியாவின் ‘அரசியல் சாசனக் கட்டமைப்பை’ அழிக்கும் அல்லது சீர்குலைக்கும் செயல் பா.நி.ச. பயங்கரவாத வரையறையின்படி பயங்கரவாதச் செயலாக ஆகாது. அதற்கு மாறாக இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை (எடுத்துக்காட்டாக, “வர்ண முறை”யை) அழிக்கும் அல்லது சீர்குலைக்கும் செயல், தீவிரமான அல்லது அடிப்படையானதாக இல்லாவிட்டாலும் பயங்கரவாதச் செயலாக ஆகிறது, பயங்கரவாதம் குறித்த ஐரோப்பிய வரையறையை இந்தியாவின் அரசியல் சாசனக் கட்டமைப்பு மீதான தாக்குதல்களை பயங்கரவாத வரையறையிலிருந்து தேவைக்கு ஏற்றவகையில் நீக்குவது சங்க பரிவாரங்கள் இந்தியாவில் இந்து இராஷ்டிரா அரசியலைக் கட்டியமைக்கும் தமது நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிச் செல்வதற்கு அனுமதியளிப்பதாகும். அந்த நிகழ்ச்சிநிரலுக்கு நடப்பு அரசியல் சாசனக் கட்டமைப்பை திருட்டுத்தனமாகவோ நேரடியோயாகவோ, பயங்கரவாதக் குற்றச்சாட்டு இல்லாமலே அழிப்பது அல்லது சீர்குலைப்பது அவசியமாகத் தேவைப்படுகிறது. அதேநேரத்தில், ஏற்கெனவே குறிப்பிட்டபடி, பாரம்பரியமான, நிலப்பிரபுத்துவ, சாதிய சமூகக் கட்டமைப்பை அழிக்கும் அல்லது சீர்குலைக்கும் அனைத்துச் செயல்பாடுகளையும் பயங்கரவாதச் செயல்பாடுகளின் வரையறைக்குள் சேர்த்துக்கொள்வதன் மூலம் தடுத்துநிறுத்துவதை பா.நி.ச சாத்தியமாக்குகிறது.
2005 இல் இ.த.ச.வில் பிரிவு 153 அ அ இல் திருத்தம் சேர்த்துக்கொள்ளப்பட்டது, அதன்படி, “எந்தப் பொது அறிவிப்புக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (2/1974) பிரிவு 144 அ வின் கீழ் பிறப்பிக்கப்பிக்கபட்ட உத்தரவுக்கும் முரணாக குற்றச்செயலுக்கான அல்லது தற்காப்புக்கான ஆயுதங்களாக வடிவமைக்கப்பட்ட அல்லது கடைபிடிக்கப்பட்ட வெடி ஆயுதங்கள், கூர்முனையுள்ள ஆயுதங்கள், தடிகள், தண்டங்கள் மற்றும் கம்புகள் உள்ளிட்ட பொருட்களும் என்று வரையறை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் நடத்துவது. அல்லது ஒருங்கிணைப்பது அல்லது பெருந்திரள் உடற்பயிற்சி அல்லது பயிற்சியில் பங்கேற்பது குற்றச் செயலாக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கு.ந.ச.பிரிவு 144 அ (“ஊர்வலம் அல்லது பெருந்திரள் உடல்பயிற்சி அல்லது பெருந்திரள் பயிற்சியில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்யும் அதிகாரம்”) சடமாக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுவரை சங்க பரிவாரங்களுக்கு எதிராக அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படாத அளவுக்கு அவை அதிகாரம் படைத்தவையாக இருக்கின்றன. இரண்டு சட்டங்களிலும் இந்த விதிமுறைகள் சத்தமில்லாமல் நீக்கப்பட்டுள்ளது, அதனால் சங்க பரிவாரங்கள் சட்டபூர்வத் தடையேதும் இல்லாமல் அதன் ஊழியர்களை ஆயுதப் பயிற்சியை மகிழ்ச்சியுடன் தொடரச் செய்யலாம்.
பா.நி.ச. பிரிவு 101, “இனம், சாதி அல்லது சமூகப்பிரிவு, பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வேறு எந்த அடிப்படையிலாவது கொலை செய்வது” என்று வரையறுக்கப்படும் விசாரணையின்றி மரணம் விளைவிப்பதற்கான குறிப்பான புதிய தண்டனையை அறிமுகப்படுத்துகிறது. இதில் வசதியாகவும் கவனிக்கத்தக்க வகையிலும் “மதம்” அடிப்படையாகக் கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது.
VII காவல்துறை ஆட்சியை அதிவிரைவாக அதிகரிக்கச் செய்தல்
இந்தச் சட்டமுன்வரைவுகள் முன்மொழிந்துள்ள, காவல்துறை அத்துமீறல்களுக்கு உள்ளார்ந்த செயல்முறையாக உள்ள, ஏழாவது மாற்றம், காவல்துறையின் கரங்களில் மிகவும் முக்கியமான அதிகாரத்தை அளிக்கிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் அவரது எந்த ஒரு கடமைமையையும் நிறைவேற்றுவதில் அவர் இடும் சட்டபூர்வமான உத்தரவுகளுக்கு ஒத்திசைந்து செல்ல அனைத்து நபர்களும் கடப்பாடுடையவர்கள்…” என்று கொடூரமான சட்டப் பிரிவு (172) அதிகாரமளிக்கிறது. “ஒரு காவல்துறை அதிகாரி அவர் இடும் எந்த உத்தரவையாவது எதிர்க்கும், மறுக்கும், புறக்கணிக்கும் அல்லது அவமதிக்கும் எந்த ஒரு நபரையும் தடுப்புக் காவலில் வைக்கலாம் அல்லது அகற்றலாம்…. மேலும் அத்தகைய நபரை நீதித்துறை நடுவர் முன்பு நிறுத்தலாம், அல்லது சிறிய வழக்குகளில் அந்த நிகழ்வு கடந்த காலத்ததாக இருந்தால் அவரை விடுவிக்கலாம்..” ஒரு நபரைக் காவலில் வைப்பது காவல்துறை அதிகாரியின் பலவந்தமான நடவடிக்கையாக இருந்தாலும் அரசியல் சாசனச் சட்டத்தின் பார்வையில் கைதாகவே இருக்கும், கைதுக்கான அரசியல்சாசன மற்றும் சட்டபூர்வத் தேவையைப் பின்பற்றாமலே தடுப்புக் காவலில் வைக்கப்படலாம் என்று இது தெரிவிப்பதாக இருக்கிறது.
VIII கைவிலங்குகளை மீண்டும் கொண்டு வருதல்
அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள் மீதான எட்டாவது தாக்குதல், கைவிலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பல தசாப்தங்கள் போராடி, நீதித்துறை மூலம் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டுகிறது. 1978 இல் சுனில் பத்ரா எதிர் டெல்லி நிர்வாகம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘சிறைகளுக்குள்ளும் சிறைகளுக்கு வெளியேயும் கை விலங்குகள் பூட்டுதல், அதுவும் இரண்டு கரங்களிலும் விலங்குகள் பூட்டுதல் மனித கண்ணியத்தை மீறுவதாக விட்டொழிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போதும் நீதிமன்றத்திலிருந்து அழைத்துவரும்போதும் பாகுபாடற்ற வகையில் கைவிலங்குகளைப் பயன்படுத்துவதும், சிறைவாசிகள் மீது விருப்பத்துக்கேற்ற முறையில் இரும்புச் சங்கிலிகளைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதமானவை ஆகும், கீழே குறிப்பிடப்படுகிற சில வகை வழக்குகளில் தவிர அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுவெளியில் முரட்டுத்தனமாகக் கைவிலங்கு பூட்டுவதும் சங்கிலிகள் பூட்டுவதும் நுண்ணிய உணர்வுகளை அவமதிப்பதும், நமது கலாச்சாரத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் ஆகும்.” என்று கூறப்பட்டுள்ளது. அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேம் சங்கர் சுக்லா எதிர் டெல்லி நிர்வாகம் வழக்கில், பொது நலனுக்காக விசாரணைக் கைதி ஒருவர் தப்பித்துச் செல்வதைத் தடுப்பது நியாயமானது, அதனால் அதற்காக அதைக் கண்டிக்க முடியாது. ஆனால் ஒரு மனிதனை கைகளையும் கால்களையும் கட்டி அவனுடைய அவயங்களை இரும்புச் சங்கிலிகளால் பூட்டுவது, தெருக்கள் வழியே கால்களை இழுத்துக்கொண்டே நடக்கச் செய்வதும், நீதிமன்றங்களில் மணிக்கணக்கில் நிற்க வைப்பதும் அவனைச் சித்திரவதை செய்வதாகும், அவ்னுடைய கண்ணியத்தை இழிவுபடுத்துவதாகும், சமுதாயத்தை வக்கிரப்படுத்துவதும் நமது அரசியல்சாசனக் கலாச்சாரத்தின் ஆன்மாவை இழிவுபடுத்துவதும் ஆகும்” என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்புக்களின் பின்னுள்ள அரசியல் சாசன அறநெறிகளைச் சீர்குலைக்கும் வகையில், பா.நி.ச.வின் பிரிவு 43 (3) “குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, காவலிலிருந்து தப்பிச்சென்ற, குற்றமிழைப்பதை வழக்கமாகக் கொண்ட, திரும்பத்திரும்பக் குற்றச் செயலில் ஈடுபடும், அமைப்புரீதியான குற்றச்செயலில் ஈடுபட்,ட, பயங்கரவாதச் செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயலில் ஈடுபட்ட, அல்லது சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து வைத்திருந்த குற்றம், கொலை, வன்புணர்வு, அமிலத் தாக்குதல், கள்ள நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் வைத்திருத்தல், மனிதக் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் விளைவிக்கும் செயல்கள் உட்பட அரசுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு நபரைக் கைது செய்யும்போது காவல்துறை அதிகாரி கைவிலங்கைப் பயன்படுத்தலாம்” என்று அனுமதியளிக்கிறது. இயந்திரகதியாக வரிசைப்படுத்தப்பட்ட இவ்வாறான குறிப்பான குற்றச் செயல்களில் காவல்துறையினர் கைவிலங்குகளைப் பயன்படுத்தலாம் என்பது பட்டியலிடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான வழக்குகளில் காவல்துறையினர் வழக்கமாகவே கைவிலங்கிடுதலைச் சட்டபூர்வ உரிமமாகப் பயன்படுத்துவார்கள். அது விரைவிலேயே பொதுவான காவல்துறை நடைமுறையாகத் தொற்றிக்கொள்ளும், அது மனிதர்களுக்கு வழக்கமாகவே விலங்குபூட்டும் மத்தியகாலக் கலாச்சாரத்துக்கு புத்துயிர் அளிப்பதாக ஆகிவிடும்.
IX காவல்துறை பாதுகாப்பில் வைப்பதை அதிகபட்சமாக்குதல்
நமது சுதந்திரத்தின் மீதான ஒன்பதாவது தாக்குதல் பா.நி.ச. பிரிவு 187 (2) விசாரணையின் போதான அச்சமூட்டும் காவல்துறை பாதுகாப்பை அதிகபட்சமாக ஆக்குவதாகும். தற்போதைய சட்டப்படி, அரசு (டெல்லி நிர்வாகம்) எதிர் தரம் பால் (1982) மற்றும் மத்தியப் புலன்விசாரணை அமைப்பு (சி.பி.ஐ) எதிர் அனுபம் ஜெ.குல்கர்னி ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்களின் படி, குற்றம் சாட்டபட்டவர் கைது செய்யப்பட்ட பிறகு நீதித்துறை நடுவர் முன்பு நிறுத்தப்படும்போது, முதல் பதினைந்து நாட்களில், பதினைந்து நாட்கள் வரையிலும் விசாரணைக்காக காவல்துறை பாதுகாப்பில் அனுப்பபடலாம், அப்போதும் கூட அந்தக் காலகட்டத்தில் காவல்துறை பாதுகாப்பில் பெறும் நாட்கள் பதினைந்து நாட்களுக்கும் குறைவாகவும் இருக்கலாம். பா.நி.ச. பீர்வு 187 (2) இந்த நீதித்துறை உத்தரவை உதறித்தள்ளுகிறது, மேலும் நீதித்துறை நடுவர் (பத்து ஆண்டுகளுக்கும் மிகாமல் சிறைத் தண்டனையுடன் தண்டிக்கத்தக்க குற்றங்களுக்கு) தொடக்க நாற்பது நாட்கள் அல்லது அறுபது நாட்களில், நீதிமன்றக் காவலின் மொத்தம் 60 நாட்களில் அல்லது (மரணதண்டனை, அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சிறைத்தண்டனையுடன் தண்டிக்கத்தக்க குற்றங்களுக்கு) 90 நாட்களில் முழுமையாகவோ பகுதிகளாகவோ பதினைந்து நாட்கள் காலத்துக்கு மிகாமல் காவல்துறை பாதுகாப்புக்கு அனுப்பலாம், இதன் விளைவாக, குற்றம்சாட்டப்பட்டவர் மீதான காவல்துறை பாதுகாப்பு அச்சுறுத்தல் விசாரணைக் காலம் முழுவதும் நீடித்திருக்கும்.
X உயிரி அளவியல் (பயோமெட்ரிக்) விதிமுறையை வலுக்கட்டாயமாகத் திணித்தல்
மக்களின் அரசியல்சாசன உரிமை மீதான பத்தாவது தாக்குதல், மாதிரிக் கையொப்பங்கள், கைரேகைப் பதிவுகள், கையெழுத்து அல்லது குரல் மாதிரிகள் ஆகியவற்றை விசாரணை தொடர்பாக, ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராக இல்லாதபோதும் அளிக்கவேண்டும் என்று அனைத்து நபர்களுக்கும் எதிராக நியாயமற்ற முறையிலும் அத்துமீறிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தம் ஆகும். “குற்றம்சாட்டப்பட்ட நபர் உட்பட எந்த ஒரு நபரையும் மாதிரிக் கையொப்பங்கள் அல்லது கைரேகைப் பதிவுகள் அல்லது கையெழுத்து அல்லது குரல் மாதிரிகளை அளிக்குமாறு” ஒரு நீதித்துறை நடுவர் “உத்திரவிடலாம்” என்று பா.நி.ச. பிரிவு 349 விதிக்கிறது. பா.நி.ச. பிரிவு 349 அண்மைக் குற்றவியல் நடைமுறை (அடையாளப்படுத்துதல்) சட்டம், 2022 இன் விதிமுறைகளை “தாய்ச்” சட்டமான தண்டனைச் சட்டத்துடன் ஒன்றிணைக்கிறது அச்சட்டம் குறிப்பிட்ட காலத்தில் நடைமுறையில் உள்ள எந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க ஒரு குற்றத் தொடர்பில் தண்டனைக் கைதிகள் அல்லது கைதுசெய்யப்பட்ட அல்லது எந்த தடுப்புக் காவலின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களிடமிருந்து “அளவுகள்” (கைரேகைப் பதிவுகள், உள்ளங்கை அச்சு பதிவுகள், காலடி அச்சுப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி, விழித்திரை ஊடுகதிர், உடலியல், உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, நடத்தை இயல்புகள், கையொப்பங்கள், கையெழுத்து அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 இன் பிரிவு 53, அல்லது பிரிவு 53 அ வில் குறிப்பிட்டுள்ள வேறு எந்த ஆய்வும் உட்பட (விதிவிலக்காக ஒரு பெண் அல்லது குழந்தைக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு குற்றம் அல்லது ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட நபர் தவிர, பிறர் உயிரியல் மாதிரிகள் எடுப்பத்தற்கு அனுமதிக்கும் கடப்பாடு உடையவர் அல்ல) எடுப்பதற்கு ஒரு காவல்துறை அதிகாரி அல்லது சிறை அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கிறது. பா,நி.ச. வின் பிரிவு 349 இன் தாக்கம் என்னவென்றால், குற்றவியல் நடைமுறை (அடையாளப்படுத்தல்) சட்டம், 2022 க்கு உட்படாத நபர்களும் கூட (அதாவது தண்டனை பெற்றவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்) இப்போது நீதித்துறை நடுவரால் அவரது “அளவுகளை” எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதாகும்.
XI காவல்துறையின் உசிதம்போல செயல்படும் அதிகாரம் அதிகரிக்கப்படுதல்
பதினொன்றாவது மாற்றத்தின்படி சக்தியற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பாக காவல்துறையின் உசிதம் போல செயல்படும் அதிகாரம் அதிகரிக்கப்படுகிறது. இது காவல்நிலையத்தில் பெறப்படும் ஒவ்வொரு தகவலும் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் அந்தத் தகவலின் நியாயத்தன்மை அல்லது நம்பகத் தன்மை குறித்து காவல்துறையினர் திருப்தியடையாவிட்டாலும் கூட விசாரிக்க வேண்டும் என்ற லலிதகுமாரி எதிர் உத்திரப்பிரதேச அரசாங்கம் (2014) வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தலைகீழாய் மாற்றுவதாகும். இந்த நீதித்துறை முடிவு சக்திவாய்ந்தவர்கள் சக்தியற்றவர்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்கள் தொடர்பாக அளிக்கப்படும் தகவல் அடிப்படையில், எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படாமலும் எந்த விசாரணையும் நடத்தப்படாமலும் இருப்பதை சக்திவாய்ந்தவர்களால் உறுதிப்படுத்திகொள்ள முடியும் என்ற உண்மை நிலைக்கு பதிலளிப்பாக வந்ததாகும். இப்போது பா.நி.ச. பிரிவு 173 (3) முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதை காவல்துறையின் விருப்ப உரிமையாக ஆக்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் ஏழு ஆண்டுகளுக்கும் இடையில் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய பிடியாணை வேண்டாக் குற்றம் இழைக்கத்தாகக் கூறப்படும் தகவல் குறித்து விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக முதலேற்பு முகாந்திரம் இருக்கிறதா என்று உறுதியாக அறிந்துகொள்வதற்கான தொடக்கநிலை விசாரணையை நடத்துவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது..
XII சிறைத்தண்டனையின் வேதனையை தீவிரமாக்குதல்
ஜனநாயகத்தின் மீதான பனிரெண்டாவது தாக்குதல் சிறைவாசத்தை அதிகரிப்பதாகும். மோசமாக மேம்படுத்தப்பட்ட மற்றும் வரம்புக்குட்பட்ட சமூக சேவையை வரம்புக்குட்பட்ட மாற்றுத் தண்டனையாக அறிமுகப்படுத்தும் நிலையில், இந்தச் சட்ட முன்வரைவுகள் உண்மையில் ஏறத்தாழ வழக்கமாக சிறைத்தண்டனைக் காலத்தை அதிகரிக்கின்றன. மரணதண்டனைக் குற்றங்கள் மற்றும் வாழ்நாள் சிறைத் தண்டனைக் குற்றங்களின் இந்தியப் பட்டியல் ஏற்கெனவே நிலவும் சட்டத்தின் கீழ் ஜனநாயகத்துக்கு அளவுக்கு மிகுதியாக நீண்டதாகும். இது ஒரு தசாப்தத்துக்கு முன்புவரை பெருமளவுக்கு இந்தியாவை ஆட்சி செய்த சமூக ஜனநாயக அரசாங்கங்கள் கூட கடைபிடித்த கொடூரமான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. புதிய சட்ட முன்வரைவுகள் குறைந்தபட்சம் மூன்று புதிய மரண தண்டனைக் குற்றங்களையும் ஆறு வாழ்நாள் சிறைத் தண்டனைக் குற்றங்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கின்றன.
வாழ்நாள் சிறைத் தண்டனை தண்டிக்கப்பட்டவரின் இயற்கையான வாழ்க்கையின் எஞ்சிய காலத்துக்கும் (14 அண்டுகளுக்குப் பதிலாக) நீடிப்பதைக் கட்டாயமாக்கும் அதேவேளையில் இப்போது மேலும் சில குற்றங்களுக்கும் உட்படுத்துகிறது. பா.நி.ச. வின் பிரிவு 4 (ஆ) தண்டிக்கப்பட்டவரின் இயற்கையான வாழ்க்கையின் எஞ்சிய காலத்துக்குமானதாக ஆக்குவது இந்தியாவில் மட்டுமே உள்ள வாழ்நாள் சிறைத் தண்டனை வடிவமாக இருக்கிறது. விசாரணைக் கைதிகளை வீட்டுக் காவலில் வைக்கும் சாத்தியம் பா.நி.ச.வின் பிரிவு 187 (5) இன் மூலம் இல்லாமல் செய்யப்படுகிறது. அதன்படி “காவல்துறைப் பாதுகாப்பில் காவல் நிலையத்தில் அல்லது நீதித்துறைக் காவலில் சிறையில் அல்லது மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் சிறையாக அறிவிக்கப்படும் இடத்தில் தவிர வேறு இடங்களில் எந்த நபரும் காவலில் வைக்கப்படக் கூடாது.” விளிம்புநிலை சமூகக் குழுக்களிலிருந்து வரும் விசாரணைக் கைதிகள் இந்தியாவின் மனிதாபிமானமற்ற அளவுக்கு மிஞ்சிய நெரிசல் நிறைந்த சிறைகளில் பெருமளவில் அடைக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களின் சிறைவாசம் அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு முன்பே தண்டனையாக ஆகிறது. இந்தக் கதவை அடைத்து, அவர்கள் அனைவரையும் சிறையிலிருக்க நிர்ப்பந்திப்பது இந்தச் செயல்முறையைத் தண்டனையாக ஆக்குவது இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
முடிவுரை
இந்தச் சட்ட முன்வரைவுகள் சட்டமாக்கப்பட்டதும் அவை அரசியல்சாசனத்துக்கு உட்பட்டவையா என்பது உச்ச நீதிமன்றத்தின் முன்பு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறபோது அதன் வரலாற்றில் மாபெரும் சோதனைகளில் ஒன்றை அது எதிர்கொள்ளும்.
குற்றவியல் சட்டம் எளிய மக்களையே ஆழமாகப் பாதிக்கிறது. அரசாலும் சமுதாயத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளாலும் இழைக்கப்படுகிற குற்றங்களுக்கு அப்பால் குற்றம் என்பது பெரும்பகுதி ஏழை ஆண்களுக்கும் ஏழைப் பெண்களுக்கும் எதிராக ஏழை ஆண்களால் மேற்கொள்ளப்படும் வன்முறையாக இருக்கிறது. எனவே இந்தியாவின் சாமானிய மக்கள் அவர்களுடைய உரிமைகளை, இன்றைய அரசாங்கமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் சாசன விரோத சித்தாந்த இயக்கத்தின் நலன்களுக்கு எதிராகச் சமநிலைப் படுத்தாமல், தங்களுடைய அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட அரசுக்கு எதிரான இந்த உரிமைகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் இருத்தல், மற்றும் இல்லாமை, அவற்றின் தன்மை அல்லது அளவு குறித்த துல்லியமான தீர்மானத்திற்கு உச்ச நீதிமன்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
***
(ஜனதா வீக்லி இதழில் வெளியான ஜி.மோகன் கோபால் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். ஜி.மோகன் கோபால் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் புகழ்பெற்ற சட்டக் கல்வியாளரும் ஆவார்.)
தமிழில்: நிழல்வண்ணன்