நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், வட மாநிலங்களில் வேலையின்மை, வறுமை போன்ற வாழ்வாதார சிக்கல்கள் மேலோங்கி இருக்கின்றன. பாஜகவின் வழக்கமான இந்துத்துவ கோஷம் இந்தத் தேர்தலில் எடுபடப் போவதில்லை, இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்தியா கூட்டணி தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமைகளையே அதிகம் முன் வைக்கின்றனர். பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரிடம் இதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

குறிப்பாக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 10 நாட்களாக அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் “ஜன் விஸ்வாஸ்’ பரப்புரையின் நிறைவுக் கூட்டத்தை நடத்தினார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், 15 நேரம் விட்டு விட்டு பெய்த மழை, போக்குவரத்து நெரிசலையும் மீறி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சமீபத்தில் நடந்த பாஜகவின் கூட்டங்களில் எங்குமே இந்த எழுச்சியை பார்க்க முடியவில்லை.

இதை நன்கு உணர்ந்திருக்கும் பாஜக, இம்முறை வடமாநிலங்களை மட்டுமே நம்பினால் உதவாது என்ற நிலையில்தான் தென் மாநிலங்களையும் குறி வைத்திருக்கிறது. அதனால்தான் தென் மாநிலங்களுக்குள் இந்து, இந்தி முழக்கங்களை மட்டுப்படுத்தி வளர்ச்சியை மையப்படுத்தி பேசுவது போல நாடகமாடுகிறது பாஜக. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஜனவரியில் இருந்து இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டு பாஜகவே ரவுடிகள், ஊழல்வாதிகளின் கூடாரம் என்பதை மறந்துவிட்டு பிரதமர் மோடி ஊழல் எதிர்ப்பு பேசுவதைப் பார்க்கும்போதே பரிதாபம்தான் ஏற்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளாக கட்டுமான பணியை தொடங்காமல் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு தற்போது அவசர அவசரமாக தொடங்கியிருப்பது ஏன்? அதிமுக- பாஜக கூட்டணி முறிவே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான ஏற்பாடுதான் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

 “வடக்கு வேறு- தெற்கு வேறு என்று பிரிக்கப் பார்க்கிறார்கள், ஒரே பாரத நாடுதான்” என்றெல்லாம் பாஜகவினர் சமீப காலமாக அடிக்கடி புலம்புவதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது போல வடக்கும், தெற்கும் ஒன்றல்ல. மிக எளிதாக இங்கே காலூன்றி விட முடியாது. இதை ஆணித்தரமாக நிறுவும் வகையில் “இந்தியாவின் எதிர்காலத்தைப் பார்க்க, தெற்கே செல்லுங்கள்” என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி (முதல் பக்க கட்டுரை) தீட்டியிருக்கிறது ‘தி எகனாமிஸ்ட்’ ஊடகம்.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 20% மட்டுமே பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்தியாவின் வளர்ந்த மற்றும் நகரமயமான மாநிலங்களாக இவை இருக்கின்றன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் தெற்கு நோக்கியே பறக்க விரும்புகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய முதலீடுகளில் 35 விழுக்காட்டை ஈர்த்திருக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த 5 மாநிலங்கள் மட்டுமே 31% பங்கு கொண்டிருக்கின்றன. சிறப்பான கல்வி, அரசு நிர்வாக வசதிகளையும் இம்மாநிலங்கள் கொண்டுள்ளன.

இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 46% தென் மாநிலங்களுக்கு சொந்தமானது. புத்தாக்கத் தொழில் நிறுவனங்களில் (ஸ்டார்ட் அப்) யுனிகார்ன் அங்கீகாரத்தை எட்டிய நிறுவனங்களில் 46% தென் மாநிலங்களில் இருந்து இயங்குபவை. தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி சேவையில் 66% தென் மாநிலங்கள் கொண்டிருக்கின்றன. உலகத்தரத்திலான தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் தென்னிந்தியாவில்தான் 79% இருக்கிறார்கள். இப்படி இந்தியாவின் பொருளாதார என்ஜினாக தெற்கு இருந்தாலும், அதன் அரசியல் வடக்கில் ஒரு தனி கிரகத்தில் இருக்கிறது என சாடியிருக்கிறது எகனாமிஸ்ட் ஊடகம். இந்தி, ஆணவ இந்து அடையாள அரசியல், இசுலாமியர்களுக்கு எதிரான மூர்க்கத்தனம்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அதனால்தான் பாஜகவின் அரசியல் ஃபார்முலா தெற்கில் எடுபடவில்லை. 1960-களில் இருந்தே மக்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளை ஆதரிப்பவர்களையே ஆதரிக்கிறார்கள் என்றும் கூறுகிறது எகனாமிஸ்ட் ஊடகம். தென்னகத்தின் வளர்ச்சியை இந்தியா முழுக்க எடுத்துச் செல்வதற்கான வழிகளையும் இந்த கட்டுரை ஆராய்கிறது. அதேவேளையில் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியலமைப்பு பலம் இழக்கலாம்.

நாடாளுமன்றத் தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட்டு, அதில் தெற்கு இழப்பை சந்திக்கலாம். இந்தி தேசிய மொழியாக்கப்படலாம். நிதி பகிர்வில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நியாயமற்ற பகிர்வை முன்வைத்து மோதல்கள் அதிகரிக்கலாம். இந்த மோதல்கள் இந்தியா உடைவதற்கான வழிகளில் கூட இட்டுச் செல்லலாம் என்றும் எச்சரிக்கிறது அக்கட்டுரை. எனவே இந்தியா பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் கூட அதற்கும் பாஜக வீழ்த்தப்பட வேண்டியது அவசியம்.

மோடி ஆட்சியின் வாழ்வாதாரச் சிக்கலோடு, இந்த எச்சரிக்கையையும் உணர வேண்டிய நெருக்கடிக்கு வட மாநிலங்களை தள்ளியதுதான் பாஜகவின் 10 ஆண்டுகால சாதனைகளில் மிக முக்கியமானது.

விடுதலை இராசேந்திரன்

Pin It