கீற்றில் தேட...

கடந்த 2022 டிசம்பரில் வேங்கைவயலில் நிகழ்ந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தின் மீது உண்மையான பரிவுகொண்ட வெகுசிலர் அது குறித்து தம் கவலைகளை வெளிப்படுத்தினர். அதைத் தாண்டி பெருமளவில் கடைப்பிடிக்கப்பட்ட மெளனம் ஒரு வருடமாகியும் இன்னும் களையவில்லை. அரசுத் தரப்பில் விசாரணை போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைகளும், கொலைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சில சம்பவங்களுக்காக ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். எதிர்கட்சிகளும் சமூக நல இயக்கங்களும் தன் பங்கிற்கு வினையாற்றின. விளைவுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

2022 ஜூலை 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை தரும் குற்றச் செயல்களின் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகள் முறையை 1144, 1274, 1376 என்கிற எண்ணிக்கையில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாதவைகளின் மொத்த எண்ணிக்கை நிச்சயம் இதைவிட அதிகமாகவே இருக்கும். இப்படி ஏதோ ஒருவகையில் பல தரப்பாலும் கவனிக்கப்பட்ட, படுகிற சாதிய வன்கொடுமை ஏன் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது? இதற்கு எது காரணம்? இப்பிரச்சினை குறித்து அறிவுஜீவிகள், மக்களின் மனவோட்டம் தான் என்ன? என்கிற யோசனை தேவையாகப் படுகிறது.nanguneri dalit student issueகல்விப்புலங்களில் இடைநிற்றல்

கோவிட் காலத்திற்குப் பிறகு கல்விப்புலத்தில் குறிப்பாக, அரசுப்பள்ளி, கலை அறிவியல் கல்லூரிகளில் நிகழ்ந்த முக்கியமான சரிவு மாணவர்களின் இடைநிற்றல் ஆகும். இடைநின்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கான கண்காணிப்பு விவரம் யாரிடமும் இல்லை. நிரந்தர வருவாயற்ற தினசரி கூலிகளாகும் நிலையில் இருக்கும் அவர்கள், பெரும்பாலும் ஏற்கனவே கூலிகளாய் இருக்கும் பெற்றோர்களின் கண்காணிப்பிலும் முழுமையாக இல்லை. யாருடைய அனுமதியும் தேவைப்படாத ‘தனிமை’யை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கான சகல வாய்ப்பும் அவர்களுக்கு மலிவாகக் கிடைக்கின்றன. இதை ஆங்கிலத்தில் IWSWC (Isolation with the socio web crowd) என்கிறார்கள். அதாவது சமூக வலைத்தளக் கூட்டத்துடன் தனித்திருத்தல். இது ஒருவிதமான வாழ்க்கை முறையாகவும் பரவி வருகிறது. IWSWC உலகத்தில் தம்மை இணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதைத் தாண்டி அவர்களின் வட்டத்தில் அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலை மேலும் லெளகீகமாக்கப் போதையை நாடுகிறார்கள்.

போதையை வழக்கமாக்கிக் கொண்டவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது. போதைச் சமூகத்தின் இந்தப் பிடியில் இன்றைக்குப் படிப்பைத் தொடராமல் இடைநின்றவர்களே அதிகமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பித்து படிக்க வருகிறவர்களும் முன்னெப்போதைக் காட்டிலும் கவனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள். சமூக வலைத்தளத் தனிமை – போதை – மன அழுத்தம் என்பன மனிதருக்குள் மொத்தமாக இணையும் போது அவர்கள் ‘நார்மல்’ தன்மைக்கு அப்பாற்பட்டுப் போய்விடுகிறார்கள். கடந்த ஒரு வருட காலத்தில் நடந்த வன்கொடுமைகளோடு தொடர்புடைய இளம் குற்றவாளிகள் அனைவரும் இந்தப் பின்னணியில் உருக்கொண்டவர்களாவே இருப்பது குறிப்பிடத் தக்கது.

படிப்பும் வேலையும் குறித்து ஓர்மையற்ற சூழலில் IWSWC உலக வாசிகள் வெறுமையை உணரும்போது அவர்களுக்கு ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் சாதியை நாடுகிறார்கள். அதை விட்டுவிட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்தியாவைப் பொறுத்தமாட்டில் எந்த அடையாளம் கையை விட்டுப் போனாலும் போகாத ஓர் அடையாளமாகச் சாதி இருக்கிறது. சாதியை முன்னிருத்தி உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பிம்பம் பிற வகை அடையாள இழப்புகளை ஈடுசெய்யும் வல்லமை கொண்டதாகும். இத்தகைய சாதி அடையாளம் சார்ந்த பிம்ப வல்லமையை பட்டியல் சாதியினர் பெற்றுவிடக் கூடாது என்பதற்கான வேலைகள் புனைவுகள் உட்பட பல தளங்களில் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் ‘பண்ணை’ மனப்பான்மையே காரணம் எனலாம்.

பண்ணை மனப்பான்மை

மிகச் சமீபகாலம் வரை நிலவுடைமை சார்ந்த வாழ்க்கை ஒருபகுதியினருக்கு சொகுசு வாழ்வை உத்திரவாதம் செய்வதாகவும் அவர்களால் இன்னொரு பகுதியினரைச் சுரண்டி அடக்கி வைப்பதாகவும் நிலவியது. ‘சொகுசு’க்கு சுரண்டல் அவசியம் என்பதால் சுரண்டலை நியாயப்படுத்தியும் நியாயப்படுத்தவும் கலை இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. இப்போதும் அதன் எச்சசொச்சங்கள் இல்லாமல் இல்லை. பாவம் x புண்ணியம், நரகம் x சொர்க்கம் பற்றிப் பேசிகொண்டே சுரண்டலை நிகழ்த்தியவர்களுக்குச் சுரண்டல் ஒரு பாவச் செயலாகத் தெரியாமல் போனது தற்செயலானதல்ல. ஒருவரை இல்லாமல் ஆக்குவதால் தான் இருப்பவர்கள் இருக்க முடியும் என்பதில் அவர்கள் தெளிவு பெற்றிருந்தார்கள். ‘புண்ணியம்’ இருப்பதற்குப் பாவமும், ‘சொர்க்கம்’ இருப்பதற்கு நரகமும் இருந்தாக வேண்டும் என்கிற கருத்தியலை நிலவுடமையாளர்கள் தமது அதிகாரத்தால் பண்ணையாளர் உதவியோடு பராமரித்து வந்தார்கள். மனிதர்கள் மீது மட்டும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை. உணவு தேவைப்படும் ஒவ்வொரு உயிர்மீதும் அதிகாரத்தைச் செலுத்தினார்கள். உணவின் பொருட்டுக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நிலவுடைமை அதிகாரம் நிலைக்கும் என்பதை அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மனிதர்களைப் பொறுத்தவரை நிலவுடைமை அதிகாரம் என்பது நிலவுடைமையாளர் – பண்ணையாளர் – உழவர் என்னும் அடுக்குமுறை கொண்டது. நிலவுடைமைக்குத் தேவையான உழவரை உழவராகவே தக்கவைக்கும் வேலையைத் தான் பண்ணையாளர்களின் வழி நிலவுடைமையாளர்கள் காலங்காலமாகச் செய்து வந்தார்கள். நிலவுடைமையாளருக்கும் உழவருக்குமான உறவுக் கண்ணியைத் துண்டித்தே வைத்திருப்பதும் அப்படியான எண்ணம் உழவருக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் பண்ணையார் மேலாண்மையின் கீழ் வருவனவாகும். கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் நந்தனாரைக் கண்டிப்பதாக வரும் ‘சிதம்பரம் என்பதை விடுகொல்லைச் / சேரடியியே வந்து படுநாத்தைப் / பதத்தில் பிடிங்கினதை நடுகறுப் / பண்ணனுக்கே பலி கொடுத்திடுஎன்னும் அடிகள் பண்ணை மேலாண்மையின் கோரத்தைக் காட்டும். ‘உனக்கு சிதம்பரம் வேண்டாம். கறுப்பனே போதும்’ என்பதாக பண்ணையார் சொல்வதை நிலவுடைமையாளருக்கும் உழவருக்கும் இணைப்பு வந்துவிடக்கூடாது என்பதற்கான தடுப்பாகப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சூழலை மிகவும் நுட்பமாக எடுத்தியம்பியவை பள்ளு இலக்கியங்கள். ‘இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணை யான் எழுந்து / கசையால் அடிப்பன் என்று கண்சிவந்து கூறினானே என்னும் முக்கூடற்பள்ளு அடிகள் உழவர் மீது பண்ணையார் செலுத்திய அதிகாரத்தைக் குறிப்பிடும்.

பண்ணையாருக்குக் கையாட்களும் உண்டு. அவர்கள் உழவர்களில் ஒருவராக இருப்பர். பண்ணையார்களின் ஏவலை நிறைவேற்றுவது அவர்களின் பணி. குறிப்பாக, உழவர்களைக் கட்டுப்படுத்துவது, கண்டிப்பது ஆகியவற்றைப் பண்ணையாளர் உத்தரவில் கையாட்களே மேற்கொள்வர். அவர்களை எதிர்த்து உழவர் எதுவும் செய்ய முடியாது. ஒரு நிலவுடைமையாருக்கும் மற்றொரு நிலவுடைமையாருக்கும் இடையே இருந்த உறவும், ஒரு பண்ணையாருக்கும் மற்றொரு பண்ணையாருக்கும் இடையே இருந்த உறவும் உழவர்களை அப்படியை இருக்க வைப்பதில் அதீத கவனம் செலுத்துவதாக இருந்தன. இன்றும் கூட நிலவுடைமையின் எச்சத்தோடு வாழும் விடுதலை இந்தியாவின் நவீன பண்ணை முதலாளிகள் இருவர் சந்தித்துக் கொண்டால் அவர்களின் பேச்சில் மழை, விளைச்சல் குறித்த கேள்விகளை அடுத்து ‘வேலைக்காரன் ஒழுங்காக வேலைக்கு வருகிறானா’ என்கிற கேள்வி கட்டாயம் இடம் பெறும். இந்த விசாரிப்பு வேலைக்காரர் அல்லது உழவர் மீதான அக்கறை அல்ல. உற்பத்திப் பெருக்கத்திற்கு ஒரு உழவரின் பங்களிப்பு நிலவுடைமையின் கீழ் தொடர்வதை உறுதிப்படுத்தும் கேள்வி அது. இந்தக் கேள்வி, உழவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு எதிராகக் கிளம்பாமலோ புலப்பெயராமலோ பார்த்துக் கொள்வதற்கான உளவியலை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டவை என்பதை இவ்விடத்துக் குறிப்பிட்டாக வேண்டும்.

பண்ணையாரின் பணிகளுள் முக்கியமான மற்றொன்று உழவர்களிடம் உபரி இல்லாதவாறு பார்த்துக் கொள்வது. இதற்காக அவர்கள் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். செயற்கையாக வேலையின்மையை உருவாக்குதல், கூலியைக் குறைத்தல், பொய்க்குற்றம் சுமத்துதல், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைச் செய்யத் தூண்டுதல், கூலி குறித்து கேள்வி எழுப்பினால் தண்டித்தல் போன்றவற்றைச் செய்வதன் வழி உபரி சேராமல் பார்த்துக் கொண்டார்கள். அதனுடைய எச்சங்களை இன்றும் பார்க்க முடியும். பட்டியல் சாதியினர் மீது குறிப்பிட்ட இடைவெளிகளில் வன்முறையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தி முடிக்கும் போது அதன் நோக்கம் வெறுமனே தாக்குதலாக மட்டும் இல்லாமல் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பண்ணையாரை எதிர்த்து கேள்வி எழுமானால் எழுப்பியவரை ஊர் விலக்கம் செய்வதும் வாடிக்கையாக இருந்தது. குடும்ப வருமானத்தின் ஆதார சக்தியாக இருக்கும் ஒருவரை முற்றாக ஊர் விலக்கம் செய்வதென்பது ஆகப்பெரும் கொடுமை. புலம்பெயர்ந்து வேறொரு நிலவுடைமையாளரிடம் / பண்ணையாரிடம் வேலைக்குச் செல்ல முடியாது. ஏனெனில் பண்ணையாரின் கீழ் வேலை செய்தல் என்பது தலைமுறைதோறும் தொடரும்படியாகத் தான் இங்கு சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் திடீரென்று அறுத்துக்கொள்ள முடியாது. ஆகவே ஊர் விலக்கம் செய்யப்பட்ட உழவர் பண்ணையாரைச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உடல் உழைப்பைத் தரும் ஒருவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு அவர் பக்கத்து ஊருக்குப் புலம்பெயர்ந்து விட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் அந்த உடல் உழைப்பாளியை தன்னகத்தே வைத்திருந்த நிலவுடைமையாளர் நடவடிக்கை எடுக்கலாம். இப்படி ஒரு நடைமுறை இருந்ததை வேதநாயகம் பிள்ளை தன்னுடைய ‘இடங்கை வலங்கையர் வரலாறு’ நூலில் விவரித்திருப்பார். ஒருவரின் உழைப்பைச் சுரண்டி அடக்கியே வைத்திருக்கிற செயலை நியாயப்படுத்த நிலவுடைமையாளர்களுக்கு அவர்களின் சாதியும் மதமும் அளவற்றை அனுமதியை வழங்கியிருக்கின்றன.

1980களில் வங்கிகளில் கடன் வாங்கிச் செலுத்த முடியாதவர்களின் வீடுகளில் ஜப்தி நடக்கும். அந்தக் காலகட்டத்தில் சாண எரிவாயு அடுப்பு, வண்டி மாடு, உழவு மாடு, கிணறு வெட்டு ஆகியவற்றுக்காக கடன் வாங்கியவர்கள் தான் அதிகமாக ஜப்திக்கு ஆளானார்கள். ஓரிரு காவலர்களோடு வீட்டு வாசலில் வந்திறங்கும் வங்கி அதிகாரிகள் பாத்திரங்கள், துணிகளை மூட்டை கட்டிக் கொள்வார்கள். தானியங்கள் இருந்தால் அள்ளிக் கொள்வார்கள். அம்மி, உரல் எல்லாவற்றையும் எடுத்து முடிந்து கிளம்பும் போது மறக்காமல் அடுப்பை இடித்து விடுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பம் அவமானப்பட்டு நிற்கும். பக்கத்து ஊர்களில் மற்றொரு வீடு ஜப்தி செய்யப்படும் வரை அந்த வீடு மட்டுமே பேச்சாக இருக்கும். இதன்பொருட்டு நடந்த தற்கொலைகளும் உண்டு. வங்கி அதிகாரிகளின் இந்த இரக்கமற்ற செயல் ‘பண்ணை’ மனப்பான்மையின் எச்சம் தான். 1990களின் மத்தியில் இந்தச் செயலுக்குக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியவுடன் வங்கிகள் வாராக்கடனை வசூலிக்கும் முறையை மாற்றிக் கொண்டன. இதே மனநிலையைத் தான் பட்டியல் சாதியினர் மீது வன்கொடுமையைச் செய்கிறவர்களும் பெற்றிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம், 2023 டிசம்பர் முதல் வாரத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகில், ஒருவர் பட்டியல் சாதியைச் சார்ந்தவரிடம் புகையிலை கேட்க, அவர் ‘இல்லை அண்ணே’ என்று சொல்லியிருக்கிறார். ‘அண்ணே’ என்று சொன்னதற்காகப் புகையிலை கேட்டவர் தனது சகாக்களுடன் சேர்ந்து அந்த நபரைத் தாக்கியிருக்கிறார். ‘அண்ணன்’ என்று சொல்வது இரும்புக் கம்பியால் தாக்குகிற அளவுக்கு ஒருவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கி இருக்கிறது என்றால் அதை எப்படி புரிந்துகொள்வது? இதே போல 2023 ஜனவரியில் திருவண்ணாமலையை அடுத்த தொண்டமனூரில் பட்டியல் சாதி இளைஞர் ஒருவரை இன்னொரு சாதியைச் சார்ந்தவர் ‘மச்சான்’ என்று சொன்னதற்காகத் தாக்கப்பட்டார். உறவுப் பெயரைச் சொன்னதற்காகத் தாக்குதலைச் செய்தவர்கள் பண்ணை முறையை இழந்திருந்தாலும் ‘பண்ணை’ மனப்பான்மையில் இருந்து விடுபடவில்லை என்பதையே மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன. இது மட்டுமல்ல ‘பண்ணை’ எண்ணத்தை உடைக்கும் படியான எந்தச் செயலையும் அவர்கள் விரும்புவதில்லை. இதைப் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் 1997 ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பட்டியல் சாதியினர் தங்களைத் தாங்களே ஒழுங்கமைக்கவோ அல்லது தங்களது உரிமைகளை நிலைநாட்டவோ முயலும் போதெல்லாம் நிலவுடைமையாளர்கள் கொலைகள், பலாத்காரம், வீடுகளைச் சூறையாடுதல் போன்றவற்றை நிகழ்த்துவார்கள்’ என்பதான செய்தி உறுதிப்படுத்தும்.

பிரிட்டிஷ் இந்தியாவில் மானியம் பெற்று வாழ்வதற்காகவே சில குடும்பங்களுக்குத் தம்மை அரச வம்சமாகக் காட்டிக் கொள்ளக் கதைகள் தேவைப்பட்டதைப் போல, பண்ணை மனநிலையை தக்க வைப்பதற்காகவே பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை அவர்களுக்குத் தேவையாக இருக்கும் போல் தெரிகிறது. பட்டியல் சாதியினர் உள்ளாட்சி நிருவாகம் முதலியவற்றில் அதிகாரத்திற்கு வரும்போதும் தற்சார்பு வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் போதும் தொடுக்கப்படும் வன்முறைக்கு விதவிதமான காரணங்களைச் சொன்னாலும் நோக்கம் ஆதிக்க மனப்பான்மையைத் தக்கவைக்கும் ஒன்றாகத் தான் இருக்கிறது.

டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸின் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த ஸ்மிருதி சர்மா 2015 இல் ‘இந்தியாவில் வெறுப்பு குற்றங்கள்- பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை மற்றும் அட்டூழியங்கள் பற்றிய பொருளாதார பகுப்பாய்வு’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். Journal of Comparative Economics – இல் வெளியானது. அக்கட்டுரையில் அவர், பட்டியல் சாதியினருக்கும் அவர்கள் மீது தாக்குதலைச் செய்யும் சாதியினருக்குமான பொருளாதார இடைவெளிகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைகள் இருக்கின்றன. குறிப்பாக, தாக்குதலைச் செய்யும் சாதியினரின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே பட்டியல் சாதியினர் மீது தாக்குதலைச் செய்யக் காரணமாக இருக்கின்றன. பட்டியல் சாதியினர் மீதான தாக்குதலின் அதிகரிப்புக்கும் தாக்குதலைச் செய்வோரின் செலவின அதிகரிப்புக்கும் நேர்மறையான தொடர்பு உண்டு என்கிறார். இது முக்கியமான அவதானிப்பு.

குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவதில் வேகமும் வன்கொடுமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சமரசமற்ற தன்மையும் இருக்குமானால் வன்கொடுமையைக் கட்டுக்குள் வைக்கலாம். தவிர, சாதியை யாருமே விட்டுவிடத் தயாரில்லை அல்லது விட்டுவிட முடியாது என்ற நிலையில் குறைந்த பட்சம் ‘பண்ணை’ மனப்பான்மையில் இருந்தாவது உரியவர்கள் விடுபட வேண்டும். அதற்காக அவர்களில் இருந்து முகிழ்த்த அறிவுஜீவிகள் தங்களது மெளனத்தைக் களைக்க வேண்டியது அவசியமாகும்.

ஞா.குருசாமி