ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அடுத்தவர்களிடம் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள். காரணம் அதை வைத்து தான் கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகநேருமே என்ற அச்சமும் மானம் பற்றிய உணர்வுமே காரணமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தன்னைப்பற்றிய அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாத்திட முழு உரிமையும், சுதந்திரமும் உள்ளது. அதை உத்திரவாதம் செய்யவேண்டியது அரசின் முழுப்பொறுப்பாகும். அதுவே ஒரு நேர்மையான அரசுக்கு அழகாகும். ஆனால் பாசிசத்தைத் தவிர வேறு எதையுமே அறியாத பெரும்பாண்மை உழைக்கும் மக்களை சூத்திரன் என்றும் தாழ்த்தப்பட்டவன் என்றும் முத்திரை குத்திய ஒரு சித்தாந்தத்தை தனது கொள்கையாக வரித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசு அடுத்தவர்களின் அந்தரங்கத்தை பற்றி என்ன மாதிரியான கருத்தை வைத்திருக்கும்?

modi ambani tata

 “அந்தரங்கம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை இல்லை”

 “ஆதார் அட்டை பெறுவதற்காக தனது சொந்த தனியுரிமை அல்லது அந்தரங்கத் தகவல்களை விட்டுக் கொடுக்க நாட்டில் ஏழைமக்களும் வறியோர்களும் தயாராக உள்ளனர். இது அவர்களுக்கு உணவையும் வருவாயையும் வழங்கும். எனவே ஆதார் அட்டைத் திட்டத்தின் வழியில் நிற்கவேண்டம்” ஆதார் அட்டை மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பாக வழக்காடிய அரசு வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி கூறியதுதான் மேற்கண்ட வாசகங்கள்

 நாட்டின் ஏழைமக்கள் மீது எவ்வளவு வக்கிரம் நிறைந்த பார்வையை வைத்துக்கொண்டிருந்தால் ஒரு அரசு இப்படி சொல்லும். இதன் அர்த்தம் என்பது சோற்றுக்காக ஏழை மக்கள் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்பதுதான். இப்படிப்பட்ட ஒரு அரசை தான் இந்தப் பாவப்பட்ட மக்கள் பெரும்பாண்மையாக தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கின்றார்கள்.

 ஒவ்வொரு இந்தியனின் கைவிரல் ரேகை, கருவிழி போன்றவற்றை உள்ளடக்கிய உயிர் அளவையை (பயோமெட்ரிக்) வைத்துக்கொண்டு இந்த அரசு அனைவருக்கும் மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் போடப்போவதாக சொல்கின்றது. நம்மையும் அதையே நம்பச்சொல்லி ஊடகங்களின் வாயிலாக தொடர்பிரச்சாரமும் செய்கின்றது. பெரும்பாண்மையான மக்கள் அதிலும் குறிப்பாக நடுத்தரவர்க்க மக்கள் இந்த ஆதார் திட்டத்தை வெகுவாக புகழ்ந்து பேசுவதை நாம் பார்க்கலாம். இதன்மூலம் தகுதியானவர்களுக்கு மானியம் சென்று சேர்கின்றதாம். அப்படி ஆதார் அட்டையை பயன்படுத்தி சமையல் எரிவாயு வழங்கியதில் ரூ 15000 ஆயிரம் கோடிகளும், பொதுவிநியோகத் திட்டத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தியதன் வாயிலாக ரூ 2300 கோடியும் சேமிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி கூறுகின்றார். அது உண்மையாகவே கூட இருக்கலாம். ஆனால் பெரும்முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை சில லட்சம் கோடிகளை மானியமாக ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க கூச்சப்படாத மோடியும், அருண்ஜெட்லியும், சொந்த நாட்டு மக்களை அடித்து உதைப்பதற்கும், அவர்களை காக்கை குருவிகளைப்போல சுட்டுத் தள்ளுவதற்கும் , பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தவும் சில லட்சம் கோடிகளை இராணுவத்திற்கு ஒதுக்கும் மோடியும், அருண்ஜெட்லியும் இந்த 17300 கோடியை மிச்சப்படுத்த தான் ஆதார் அட்டையை கொண்டுவருகின்றார்கள் என்று நீங்கள் நிச்சயம் நம்புகின்றீர்களா?

 இவர்களின் உண்மையான நோக்கம் என்பது மானிய சுமையைக் குறைப்பது எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்தியாவெங்கும் இந்தப் பாசிச ஆளும்வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களை ஒழித்துக்கட்டுவது தான் இந்த ஆதாரின் உண்மையான நோக்கமாகும். கடுமையான பொருளாதார நெருக்கடியும், பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வும், நாட்டின் வளங்களை ஒரு சில பன்னாட்டு முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்த்தலும் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும், தேசிய இன போராட்டங்கள் போன்றவற்றையும் வன்முறை மூலம் ஒடுக்குவதற்கான ஆயுதமே இந்த ஆதார் ஆகும். இனி எங்காவது அரசுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டு கைதானீர்கள் என்றால் போலியான முகவரியைக் கொடுத்து முன்புபோல தப்பவெல்லாம் முடியாது!.

  உங்களது கைவிரலை வைத்தாலே போதும் உங்களுடைய பெயர், முகவரி, வங்கிக்கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை , மருத்துவக்காப்பீடு என அனைத்தும் அரசின் கைகளில் போய்விடும். பின்பு என்ன நடக்கும். எதுவேண்டும் என்றாலும் நடக்கும். உங்களுக்கு வழங்கப்பட்ட அரசின் அத்தனை சலுகைகளும் ரத்துசெய்யப்படலாம், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நீங்கள் விரட்டப்படலாம், நீங்கள் ஒரு மாணவர் எனில் உங்களைப்பற்றிய விவரங்கள் உங்களது பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ தெரிவிக்கப்பட்டு நீங்கள் வெளியேற்றப்படலாம், உங்களைப்பற்றி உள்ளூர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு நீங்கள் தொடர்ச்சியாக போலீசின் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படலாம். ஆகமொத்தம் நீங்கள் உள்நாட்டுக்குள்லேயே நடைபிணம் ஆக்கப்படலாம். நீங்கள் இதை நம்பாமல் போகலாம். ஆனால் நிச்சயம் இது நாளை நடக்கும்.

  எதிரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். உங்களுடைய அனைவரின் அந்தரங்கமும் இப்போது அரசின் கையில், உங்களால் இனி அரசுக்கு எதிராக போராடுவது என்பது இயலாத காரியம். அப்படி போராடும் பட்சத்தில் மேலே சொன்ன எதாவது ஒன்று உங்களுக்கு நிச்சயம் நடக்க வாய்ப்பிருக்கின்றது. நம்மைப்பற்றிய இந்த அந்தரங்கத் தகவல்கள் அரசின் கைகளில் இருப்பது அதுவும் தன் சொந்த நாட்டுமக்களை பெரும் தொழில் நிறுவனங்களுக்காக அழித்தொழிக்கும் ஒரு அரசின் கைகளில் இருப்பதென்பது பயங்கரவாதிகளின் கைகளில் மாட்டிய அணுகுண்டு போன்றது. நிச்சயம் அது தவறான வழியில் பயன்படுத்தபட மாட்டது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

 “ பேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் காலத்தில் உள்ளோம். இது போன்ற சாப்ட்வேர்களை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றார்கள். இதில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை அந்தச் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் நமக்குத் தெரியாமலேயே எளிதாக திரட்ட முடியும். ஆயினும் அதை பொருட்படுத்தாமால் மக்கள் அனைவரும் அதனை விரும்பி பயன்படுத்துகின்றனர்”.

 “ ஸ்மார்ட் போன்களில் இருக்கும் சில சாப்ட்வேர்கள் நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள், செல்ல வேண்டிய இடத்துக்கு எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்பதை துல்லியமாக தெரிவிக்கின்றன. இதில் தனிமனித ரகசிய பாதுகாப்புக்கு எங்கு இடம் இருக்கின்றது”.

“ஆதார் அட்டை மக்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பெறப்படுகின்றது” இதுவும் மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி உச்சநீதி மன்றத்தில் சொன்னதுதான். முகுல் ரோஹட்கி வைத்த இந்தக் கேடுகெட்ட வாதத்தை அடுத்துதான் மீண்டும் உச்ச நீதிமன்றம் ஆதாருக்கு தடைவிதித்தது.( சில திட்டங்களுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தது)

 இந்தச் சூழ்நிலையில்தான் மத்திய அரசு ஆதார் அட்டையை சட்ட பூர்வமாக்க பாராளுமன்றத்தில் அதனை பண மசோதாவாக கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கின்றது. சாதாரண மசோதாவாக கொண்டுவந்தால் மேல் சபையில் அதற்கு அனுமதிவாங்க வேண்டும் ஆனால் பண மசோதாவாக கொண்டுவந்தால் மேல் சபையில் அனுமதிவாங்கத் தேவையில்லை. அதனால் மேல் சபையில் பெரும்பாண்மை இல்லாதா பா.ஜ.க திட்டமிட்டே இதை பணமசோதவாக கொண்டுவந்து மக்களவையில் தனக்குள்ள பெரும்பாண்மையைப் பயன்படுத்தி நரித்தனமாக நிறைவேற்றி இருக்கின்றது.

 இதன் முலம் தனது பாசிச நடவடிக்கைகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இனி அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். உங்களது விளைநிலங்களைப் பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்குக் கொடுக்கலாம், மக்கள் சொத்தான இயற்கை வளங்களைக் கணக்கு வழக்கில்லாமல் கொள்ளையடிக்கலாம், உணவுப்பொருட்களைப் பதுக்கி தாறுமாறாக விலையேற்றலாம், பன்னாட்டு நிதிமூலதனக் கும்பலின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றலாம் யாரும் அவர்களை எதிர்த்து பேசமுடியாது. பேசினால் அவர்களது கதை அவ்வளவுதான்!. எந்த ஆயுதமும் இல்லாமல் ஒரு ஆதார் அட்டையை வைத்து அரசு உங்களை மண்டியிட வைக்கப்போகின்றது. அதுமட்டும் அல்ல விஜய் மல்லையா நாட்டைவிட்டுப் போனதையே தடுக்க துப்பில்லாத இந்தக் கும்பல்தான் உங்களது அந்தரங்கத்தைப் வேறு பாதுகாக்கப் போகின்றது. இதுதான் இனி இந்தியாவில் அரங்ககேறப்போகும் புதிய ஜனநாயகம்!

- செ.கார்கி

Pin It