இன்றைக்கு உலகமே முடங்கிக் கிடக்கிறது. என்றும் இல்லாத அளவிற்கு அமெரிக்கப் பொருளாதாரம் நாளும் சரிந்து வருகிறது. இருப்பினும் அமெரிக்க மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் படுபாதாளத்தில் விழாமல் இருப்பதற்கு அங்குள்ள மாநிலங்களே முதன்மையான காரணங்களாக உள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் இந்தக் கொடிய நோய்த் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் திட்டங்களைப் பெருமளவில் நிறைவேற்றி வருகின்றன. இதற்கு முதன்மையான காரணம் மாநிலங்கள் வரி விதிப்பதிலும் வரி திரட்டுவதிலும் தன்னாட்சி உரிமையைப் பெற்றுள்ளன. அமெரிக்காவின் மாநிலங்கள் மாநில வருமான வரியை (State Income Tax) விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
மாநிலங்கள் மிகக் கடுமையான சோதனைக் காலத்திலும் பெருமளவு நிதிச்சரிவைச் சந்திக்காமல் இருப்பதற்கு காரணம் அங்குள்ள முழுமையான நிதிக்கூட்டாட்சி இயலே (Fiscal Federalism) ஆகும். புரட்சியாளர் மாவோ அவர்களின் நீண்ட நாள் அமெரிக்க நண்பரும் எழுத்தாளருமான எட்கர் ஸ்னோ அவர்களைத் தனது இறுதிக் காலத்தில் சந்தித்து உரையாடினார்.
அப்போது அமெரிக்காவின் மாநிலங்களின் தன்னுரிமையைப் பற்றி எட்கார் ஸ்னோவிடம் கேட்டறிந்தார். ஸ்னோ அவர்கள் அமெரிக்காவில் 50 மாநிலங்கள் மக்களோடு தொடர்புடைய எல்லாப் பணிகளையும் திட்டங்களையும் தனித்தே செயல்படுத்த முடியும். காரணம் அங்குள்ள கூட்டாட்சி அரசு (Federal Government) மாநிலங்களின் உரிமைகளில் தலையிடவே முடியாது என்று கூறினார். மாசேதுங் அவர்கள் இந்தச் செய்தியைக் கேட்டு வியந்து போனார்.
அமெரிக்கா 50 மாநிலங்களுக்கிடையே தனது செல்வத்தையும் பொறுப்புகளையும் விரிவாக்கி அதிகாரப் பரவலை மேற்கொண்டு பகிர்ந்து வளர்ந்த முறையை சீனா கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மத்திய அரசு எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. மாநில உள்ளாட்சி அமைப்புகளை நம்பித்தான் செயல்பட வேண்டும் என்று மாசேதுங் குறிப்பிட்டதாக எட்கர் ஸனோ தனது நூலில் குறித்துள்ளார்.
அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ்க் குவிந்திருப்பது நாட்டின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதித்துவிடும். ஒரு மத்திய அரசே எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்திவிட முடியாது. மேலும் திறமையின்மையும் ஊழலும் அதிகாரக் குவிப்பால் பெருமளவு பெருகிவிடும். மக்கள் தான் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என மாவோவுக்குப் பின் வந்த சீனாவின் அரசியலில் செல்வாக்கோடு இருந்த தலைவர் டெங் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
இதன் காரணமாகத்தான், இன்றைய சீனாவின் பொருளாதாரம் பன்மடங்காக வளர்ச்சி பெற்று உலகின் வலிமையான நாடாக அமெரிக்கா அச்சுறும் வகையில் தனது செல்வாக்கை, உயர்த்தி வருகிறது. உலகில் தொழிற்புரட்சி தொடங்கியது இங்கிலாந்து நாட்டில்தான். அந்தத் தொழிற்புரட்சி முதன்முதலில் பரவியது இன்றைய ஐரோப்பிய நாடுகளில்தான். ஆனால் சீனா மின்சாதனப் பொருள்கள் மருத்துவத் துணைக் கருவிகள் மற்றும் பல மூலதனப் பொருள்களை பிரான்சு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்குத் தனது பொருளாதாரக் கட்டமைப்பைச் சீனா வளர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவச் சாதனங்களையும் மருந்து மூலப்பொருள்களையும் 40 விழுக்காட்டிற்கு மேல் இந்தியா சீனாவிடமிருந்தே இறக்குமதி செய்கிறது. இதுபோன்ற பொருளாதார அரசியல் படிப்பினைகளை இந்தியா முற்றிலும் புறந்தள்ளி, மாநிலங்களைத் தனது அடிமைகளாக மாற்றும் முயற்சியிலேயே கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் மத்திய அரசும், அதனை ஆட்சி செய்தவர்களும் செயல்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகத்தான் இன்று இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருளாதாரமே சரிவு நிலைக்குச் சென்றுவிட்டது. ஆனால் சீனப் பொருளாதாரம் வளர்ந்ததற்கு மாநிலங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தன்னாட்சி வழங்கியதே முதன்மையான காரணமாக அமைகின்றன.
கொரனா நோய்த் தொற்று முதலில் தொடங்கிய ஊகான் நகர் அமைந்துள்ள ஊபே மாநிலத்திற்கு, இக்கட்டுரையாசிரியர் இரண்டு முறை பயணம் செய்தபோது, சீனாவின் அரசியல் ஒரு கட்சியின் கீழ் இயங்கி வந்தாலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ள நிலையை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இக்கருத்தைத்தான் இன்றைய மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
விரைவில் சீனாவின் 14வது ஐந்தாண்டுத் திட்டம் (2021-25) நடைமுறைக்கு வரவிருக்கிறது. முதலில் வெளியிடப்பட்டுள்ள அணுகுமுறை திட்ட அறிக்கையில் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கோடு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன எனப் பல வெளிநாட்டு ஊடகங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. கூட்டாட்சி இயல் என்ற முறையைச் சீன அரசு அறிவிக்கவில்லை என்றாலும் அங்கு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டதன் காரணமாக ஊபே மாநிலம் விரைந்து இந்த கொரானா நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது.
சீனாவினுடைய மத்திய அரசு இந்த நோய்த் தடுப்பு முறைகளில் சில குறைகளைச் சுட்டிக் காட்டியது. ஆனால் அங்குள்ள மருத்துவ வல்லுநர்கள் பின்பற்றிய அணுகுமுறையே சிறந்த அணுகுமுறை என உலக சுகாதார நிறுவனமும் மற்ற நாட்டின் வல்லுநர்களும் பாராட்டினர். இதற்குப் பிறகு சீனாவின் அதிபர் ஜின்பிங் நோய்க் கட்டுப்பாட்டிற்கு வந்தவுடன் ஊகான் நகருக்குச் சென்று நோய்த் தடுப்பு நடவடிக்கை யைப் பார்வையிட்டார். ஊபே மாநில அரசு கையாண்ட அணுகுமுறையைத் தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.
கூட்டாட்சி இயலில் பல கருத்துரைகள் வழங்கப்பட்டாலும், எல்லாக் கூட்டாட்சி அறிஞர்களும் ஒரு கருத்தை ஒருமித்த அளவில் சுட்டுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் சமூக பொருளாதாரக் கட்டமைப்புகள் வெவ்வேறு வடிவில் அமைந்துள்ளன. இனம் மதம் மொழி பண்பாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருப்பினும் அக்கூறுகளை ஆக்கப்பூர்வமாக அரவணைத்துச் செல்வதே கூட்டாட்சி இயலை வலிமைப்படுத்தும் எனக் கூறி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது பல நாடுகளின் பல தரப்பட்ட வேற்றுமை கூறுகளைக் கொண்டுள்ளது. ஒற்றையாட்சி முறையைப் பின்பற்றிய பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில் கூட ஒரு மத்திய அரசால் இந்திய நிர்வாகத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியாது என உணர்ந்தனர். இதன் காரணமாகத்தான் 1919ஆம் ஆண்டிலும், 1935ஆம் ஆண்டிலும் இரு அரசமைப்புச் சட்டங்களை இயற்றி மாநிலங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரப் பகிர்வுகளை அளித்தது.
தமிழ் மாகாணத்தில் 1919ஆம் ஆண்டு சட்டத்தின் படி 1921இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, கல்வி உட்பட இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்ற பள்ளிக் கல்வி தொடங்கி, உயர்கல்வி வரை பல சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தது. சமூக நீதிக் கொள்கை நீதிக்கட்சியின் வழியாகத்தான் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கூட்டுறவு கூட்டாட்சி இயலைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு பிரதமர் மோடி “நீட்” தேர்வு புதிய கல்விக் கொள்கை இந்தி, சமற்கிருதத் திணிப்பு புதிய சுற்றுச்சூழல் சட்டவரைவு போன்ற மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி மாநிலங்களின் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து வருகிறது. 2014 முதல் மோடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சட்டமும் பிரித்தானிய ஒற்றை ஆட்சி முறையில் கூட நடைமுறைப் படுத்தப்படாத சட்டங்களாகும்.
கூட்டாட்சி இயல் மக்களிடத்தில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலை உருவாகி வருகிறது. மேற்கு வங்கம், ஒரிசா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தற்போது சரக்கு சேவை வரியின் பாதிப்பு களைக் குறிப்பிட்டு, மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட முடிவெடுத்துள்ளன.
அதே போன்று பொது நிதியியல் அறிஞர்கள் பலர் சரக்கு சேவை வரி முற்றிலுமாகப் பொருளாதாரத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி வரிச் சுமையை மக்கள் மீது சுமத்தி இவ்வரி அமைப்பு முறை முழுமையான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறி வருகின்றனர்.
அண்மையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா காஷ்மீர் மாநில மக்களின் சனநாயக உரிமைகள் முற்றிலுமாக முடங்கிவிட்டது என்றும், மக்கள் மோடி அரசின் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் காஷ்மீர், ஜம்மு, லடாக் எனப் பகுதிகளாகப் பிரித்து காஷ்மீர் மாநிலத்தின் கட்டமைப்பை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது என்றும் இது இந்திய ஒற்றுமைக்கு விடப்பட்ட அறைகூவலாகத்தான் எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும். இந்திய அரசமைப்புச் சட்டம் 370வது பிரிவில் திருத்தங்கள் மேற்கொண்டால் காஷ்மீர் சட்ட மன்றம் அந்தத் திருத்தத்தை ஏற்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டப் பிரிவை மோடி அரசு அவமதிப்புச் செய்துவிட்டது. இதில் ஒரு வியப்பிற்குரிய நிகழ்வும் நடந்தேறியுள்ளது. இந்த அரசமைப்புச் சட்ட அவமதிப்பை உச்ச நீதிமன்றம் உடனடியாகக் கண்டிக்காமல், அதற்குரிய தீர்வைத் தீர்ப்பாக வழங்காமல் இது தொடர்பான வழக்கினைத் தள்ளி வைத்துள்ளது. காஷ்மீரில் கொண்டு வந்த சர்வாதிகாரமான அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் எதிர்பார்த்த பலன்களில் ஒரு விழுக்காடு கூடக் கிட்ட வில்லை.
சான்றாக இந்தத் திருத்தங்கள் வழியாக காஷ்மீர் சுற்றுலா வளர்ச்சிக்காக உள்நாட்டு பன்னாட்டு முதலீடுகள் பெருகி காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். காஷ்மீரில் ஒரு சொர்கத்தைக் காணலாம் என மோடி, அமித்ஷா தொடங்கி எல்லா சங்கிகளும் துள்ளிக் குதித்தனர். ஆனால் ஒரு நூறு ரூபாய் அளவிற்குக்கூட முதலீடுகள் காஷ்மீரில் வரவில்லை என்பதுதான் உண்மை.
சனநாயகத்தை மதிக்கின்ற உலக நாடுகளில் இது போன்ற நிகழ்வுகள் எதுவுமே நிகழ்ந்தது இல்லை. பல கூட்டாட்சி இயல் வல்லுநர்கள் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு ஒற்றுமையாக வலிமையாக முன்னேற்றப் பாதையில் நடக்க வேண்டுமென்றால் பன்முகத்தன்மை கொண்ட மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.
மக்களாட்சி இயலும் அதிகாரப் பரவலாக்கல் முறையும் ஒன்றிணையும் போது அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்ச்சி, நேர்மை, சிக்கனம், திறமை, நடுநிலைமை ஆகிய வாய்ப்புகள் பொது மக்களுக்குக் கிடைக்கும் எனக் கூட்டாட்சி வல்லு நர்கள் வாதாடுகின்றனர். ஆனால் பாசக அரசு அமைந்த 2014 முதல் இந்தியாவில் இது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது.
இந்தியா 1935ஆம் ஆண்டில் அடிமை நாடாக இருந்த நிலையில் எழுதப்படாத அரசமைப்புச் சட்டமாகிய (Unwritten – Unitary Constitution) பிரித்தானிய அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி உள்ளோம். இது விடுதலை பெற்ற இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்திற்குரிய அடித்தளமாக இருக்க முடியாது என்று, மும்பையைச் சேர்ந்த இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கும் அவையில் இடம் பெற்ற உறுப்பினர் எச்.வி. பட்டாஸ்கர் குறிப்பிட்டார். இன்று பட்டாஸ்கரின் கணிப்பு தான் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்ட அவையின் விவாதத்தின் போது, பலர் குறிப்பிட்ட கருத்துகள் இன்று மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 70 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம் சார்ந்த பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்புகள் எல்லாம் ஒரு வகையில் மக்களுடைய-மாநிலங்களுடைய உரிமை களைக் கட்டுப்படுத்தியே வந்துள்ளன.
செப்டம்பர் திங்களில் கேரள சாமியார் கேசவானந்த பாரதி இறந்ததைப் பற்றியும், அதை ஒட்டிப் பல கருத்து களும் வெளி வந்தன. அதில் இந்தச் சாமியார் போட்ட வழக்கால்தான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு காப்பாற்றப்பட்டது என்ற ஒரு செய்தியைக் குறிப்பிட்டனர்.
ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் குறிப்பாக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் காணப்படும் கூறுகளையும் அவைகள் சாதாரண பாமர ஏழை மக்கள் மீது ஏற்படுத்திய விளைவுகளையும் ஆய்ந்தால், இந்தக் கூற்று முற்றிலும் தவறு என்பதை உணரலாம்.
ஒரு நாட்டின் ஆட்சி இயலோடு தொடர்பு டைய எந்த ஒரு அமைப்பையும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் முற்றிலுமாக ஏற்பது என்பது அறிவு சார்ந்த அணுகுமுறையைப் புறந்தள்ளிவிடும். 1950, 1960களில் இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது எனப் பல அரசியல் தலைவர்களும் சில ஆய்வாளர்களும் குறிப்பிட்டனர். ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் நீதி, நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்புகளில் யார் அதிகமாக இடம் பெற்றுத் தங்களின் செல்வாக்கினை நிலைநிறுத்தி வருகின்றனர் என்பதை ஆய்வு செய்யும் போது பல உண்மைகள் வெளிப்படுகின்றன.
வைத்தால் முடி சிரைத்தால் மொட்டை என்பதுதான் இந்த மூன்று முதன்மையான அமைப்புகளில் இடம் பெற்றுள்ள உயர் சாதி வர்க்கத்தினரின் கருத்தாக உள்ளது. இவர்கள் வழங்குவதுதான் சட்டம்-இவர்கள் வழங்குவதுதான் நீதி. இவர்கள் வழங்குவதுதான் ஒழுக்கம் என்று சனாதன முறையைப் புதிய வடிவில் இந்திய ஆட்சியியலில் புகுத்திப் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துப் புறக்கணித்து வருகின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கட்டமைப்பு என எங்குமே இடம் பெறவில்லை. இடம் பெறாத ஒரு சொல்லை வைத்துக் கொண்டு இதுதான் தீர்ப்பு, இதுதான் நீதி, என்று சொல்வது என்பது மக்களாட்சி முறைக்கு எவ்வாறு பொருந்தி வரும். இது ஒரு வகையில் இருட்டறையில் இல்லாத கறுப்பு பூனையைத் தேடும் முயற்சியாகும்.
சனநாயகத்தின் நான்காம் தூண் என்கிற முதலாளித்துவ ஊடகங்கள் உயர்சாதி எழுத்தாளர்களைத் தங்களின் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, இந்த மூன்று அமைப்புகள் ஒன்று சேர்ந்தோ தனித்தனியாகவோ எடுக்கும் முடிவுகள்தான் சரியானவை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று கட்டுரைகளைத் தீட்டி வருகின்றன.
இந்த சனா தனவாதிகள் தங்களின் செல்வாக்கிற்குப் பாதிப்பு ஏற்படுமானால், பேனாவைக் கத்தி போன்று எடுத்துச் சுழற்றுவார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் உண் மையில் கூட்டாட்சி அமைப்பைச் சார்ந்த சட்டமாக இயங்கி இருந்தால், இன்றைக்கு நீதி, நிர்வாகம், வரி அமைப்பு பொருளாதாரம் எல்லாம் முழுமையாக வீழ்ந்திருக்காது அல்லவா?
உண்மையில் மாநிலங்கள்தான் இந்திய அரசின் நிருவாகத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளாக இன்று இயங்கி வருகின்றன. இந்தக் கொடிய கொரானா நோய்க் காலத்திலும் மாநில அரசுகள்தான் மக்களிடம் நேரடியாகச் சென்று துயர் துடைப்புப் பணிகளை மருத்துவப் பணிகளை ஆற்ற முடிகிறது.
ஆனால் ஒன்றிய அரசு நிறை வேற்றி நடைமுறைப்படுத்திய ஒற்றையாட்சிக் கூறுகளை உள்ளடக்கிய சட்டங்களை நீதிமன்றம் தனது தீர்ப்புகளால் ஆதரவு அளித்ததன் காரணமாக இன்று இந்தியா ஒற்றையாட்சிப் பாதையை மீறி சர்வாதிகாரப் பாதையில் பயணம் செய்கிறது. சனநாயகத்தில் போற்றப்பட வேண்டிய எதிர்ப்புக் குரல்கள் அடக்கப்படுகின்றன.
மக்களுக்கான போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. நீதியை நேர்மையை எடுத்துக்காட்டிய அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கொடுமையான பாதுகாப்புச் சட்டத்தின் கீழச் சிறைப்படுத்தப்படுகின்றனர். சான்றாக பாசகவின் ஆதரவோடு காமீரின் முதல்வராக இருந்த மெகபுபா முக்தி இன்றும் சிறையில் இருக்கிறார்.
ஒன்றிய அரசின் எதேச்சதிகார முடிவுகள்தான் சனநாயகம் என்றால், இந்தியா எங்குச் செல்கிறது என்ற வினா எழுகிறது? இதை எப்படித் தடுக்க முடியும்? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், என்கிற பாசிச முழக்கம் இந்தியா நாட்டின் ஒற்றுமையை வேரோடு சாய்த்துவிடும்.
இதைத் தடுப்பதற்கான ஒரே வழி அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தன்மைகளைப் போற்றும் வண்ணம் இந்திய அரசியல் சமூக அமைப்பில் காணப்படுகின்ற வேறுபாடுகளை உறுதி செய்யும் வண்ணம் மாநிலங்களுக்குத் தன்னாட்சி உரிமைகளை வழங்கி அதற்குரிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதுதான் ஒரே வழி.
-குட்டுவன்