2016 நவம்பர் 8 ஆம் தேதியை இந்திய மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். கருப்புப் பணம் என்றால் என்ன? வருமான வரி என்றால் என்ன? பங்குச் சந்தை என்றால் என்ன? என்று நவீன உலகம் பேசும் எந்த பொருளாதார வார்த்தைகளும் தெரியாத சாமானிய மக்கள் குழந்தைகளின் படிப்புக்காகவோ, திருமணத்திற்காகவோ மருத்துவ செலவுகளுக்காகவோ சேர்த்து வைத்திருந்த மொத்த பணமும் மோடியின் வாயில் இருந்து வந்த ஒரே ஒரே அறிவிப்பால் செல்லாக் காசுகளாக மாறிப் போனது.

பதற்றமும் பயமும் தொற்றிக் கொள்ள கையில் வைத்திருந்த கொஞ்சம் நஞ்சம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மக்கள் வேலையை விட்டுவிட்டு தெருத்தெருவாக அலைந்தார்கள்.

"செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப் பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என மோடி சொன்னது தினம் தினம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வாழும் கோடான கோடி மக்களின் செவிகளில் விழவே இல்லை.People Queue Line in ATMஅவர்களைப் பொருத்தவரை தன்னிடம் இருந்த சிறுதொகையையும் மோடியால் செல்லாமல் போய்விட்டது என்பதும், பணக்காரர்களிடம் இருந்து மோசடியாக சேர்க்கப்பட்ட பணத்தைக் கைப்பற்ற துப்பில்லாத மோடி தங்களிடம் இருந்த சிறிய தொகையைக்கூட செல்லாமல் ஆக்கி விட்டார் என்பதாகவுமே அவர்களின் மனக் குமுறல் இருந்தது.

மோடியைப் பற்றிய அவர்களின் எண்ணம் கற்பனையானது கிடையாது. ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம் வாசலில் பல மணி நேரங்கள் இரவு பகல் பாராமல் காத்துக் கிடந்த போது, திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த, ஓ. பன்னீர் செல்வத்தின் நண்பரான சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து 24 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்டன. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர், சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிந்து கைது செய்தனர். ஆனால் சிபிஐ நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை, எனவே வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டு சென்னை சிபிஐ நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

கடைசிவரை சேகர் ரெட்டிக்கு எப்படி பணம் வந்தது என்பதை சிபிஐயோ, அமலாக்கத் துறையோ நிரூபிக்கவே இல்லை. அதை நீதிமன்றமும் கேட்கவில்லை.

அதே போல, அமித் ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் மட்டும் ரூ.745.59 கோடி மதிப்பிலான 1000, 500 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன.

உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் சாமானிய மக்களுக்கு மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் மோடியின் ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் அது பல நாட்களுக்கு முன்பே தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் தங்களின் கைவசம் இருந்த பணங்களை தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையிலும் பாதுகாப்பாக முதலீடு செய்து கொண்டார்கள்.

ஆனால் கையில் 1000, 500 என சொற்ப தொகையை வைத்திருந்த மக்கள் அதை மாற்ற முடியாமல் மணிக்கணக்கில் வங்கிகளின் முன் காத்துக் கிடந்தார்கள்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 58 மனுக்களை ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகளின் மீதும்‘மோடி ஆட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அப்துல் நாசிர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஒரே ஒரு நீதிபதி மட்டுமே இதற்கு மாறுபட்ட, ஆனால் ஏறக்குறைய மற்ற நீதிபதிகளின் தீர்ப்பையே ஒத்துப் போகும்படியான தீர்ப்பை அளித்து இருக்கின்றார்.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், "பண மதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட முடிவு. போலி ரூபாய் நோட்டுகள், பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது, கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் பண மதிப்பிழப்பு. அதேபோல பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு நல்ல பலன்கள் இதனால் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, பண மதிப்பிழப்பை தோல்வி எனக் கருத முடியாது" எனத் தெரிவித்திருந்தது.

ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் தொடங்கிய சில நட்களிலேயே நாட்டின் பல பகுதிகளில் 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் அச்சிடப்பட்டன. கர்நாடகா மாநிலம், சிக்மகளூரில் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.

கடந்த ஓராண்டில் மட்டும் மத்திய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு சோதனைகளில் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர்.

1000, 500 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டு மோடி கொண்டு வந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பெரிய அளவிலான தொகையை மறைத்து வைப்பதை எளிமைப்படுத்தியுள்ளன என்பதுதான் உண்மை.

இந்த நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு 55 சதவிகிதம் அதிகரித்திருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மோடி ஒழிப்பதாக சொன்ன அந்த கருப்புப் பணமாவது ஒழிந்ததா என்று பார்த்தால் அப்படியான எந்த நல்ல செய்தியும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை.

காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளில், 99.3% மதிப்புள்ள நோட்டுகள் திரும்பவும் வங்கிக்கே வந்துவிட்டன. அதாவது, மக்களின் பயன்பாட்டிலிருந்த 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்வரை திரும்ப வந்து விட்டதாகவும், பத்தாயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பப் பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கியே அறிவித்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு 2016-17ஆம் ஆண்டில் மட்டும் 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் செலவானதாக கடந்த 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு புள்ளி விவரத்தை வெளியிட்டு இருந்தது. 2022 வரை கணக்கிட்டால் இந்த தொகை ஏறக்குறைய 30 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கலாம். இப்படியான பொருளாதார ஆளுமையை உலகில் வேறு எந்த நாட்டிலும் நாம் பார்க்க முடியாது.

ஒவ்வொரு முறையும்  தான் செய்யும் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளை எல்லாம் தேசபக்தி என்ற மூடுதிரையில் மோடி மூடிவிடுவார். அப்படித்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கூட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே சித்தரித்தார். ஆனால் 2019இல் நடந்த புல்வாமா தாக்குதல் மோடியின் யோக்கியதையை அம்பலப்படுத்தியது. அந்தத் தாக்குதலில் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் ஏறக்குறைய 120க்கும் மேற்படவர்கள் உயிரிழந்தார்கள்.கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்தார்கள். லட்சக்கணக்கான சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இறுதியில் தீவிரவாதத்தால் இராணுவ வீரர்களும் பலி கொடுக்கப்பட்டார்கள்.

ஆனால் நீதிமன்றமோ எந்தவித கூச்சவுணர்வோ குற்றவுணர்வோ இல்லாமல் “சரியாக ஆலோசித்து மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. அதேபோல எல்லா பணத்தையும் மதிப்பிழப்பு செய்யாமல் குறிப்பிட்ட தொகையில் மட்டும்தான் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமும் மத்திய அரசு ஆலோசித்திருப்பதை கவனிக்க முடிகிறது. எனவே, பண மதிப்பிழப்பு முடிவை இனி திரும்பப் பெற முடியாது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்" எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு கொடுத் நீதிபதி நாகரத்னா கூட "பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்ற தீர்ப்பில் மாறுபடுகிறேன். பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாகச் செய்ய வேண்டுமென மத்திய அரசு கருதியிருந்தால், அதை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே. நாட்டின் மறு உருவமாக நாடாளுமன்றம் விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்பே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும், எந்தப் பரிசீலனையையும் மேற்கொள்ளாமல், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே, பண மதிப்பிழப்பு சரியே என்ற கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்" என்ற  தீர்ப்பையே வழங்கி இருக்கின்றார்.

அதாவது ‘சட்டப்படி கொல்’ என்பதுதான் அவரின் மாறுபட்ட தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பு வழங்கிய ஒரு நீதிபதிக்குக்கூட பணமதிப்புழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதைப் பற்றியோ, ஒரு ரூபாய் கருப்புப் பணத்தைக் கூட மோடி அரசாங்கம் கைப்பற்றவில்லை என்பதோ, கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்ததைப் பற்றியோ துளிகூட கவலை கிடையாது என்பதோடு, அதை எல்லாம் யோசிக்கும் அளவுக்கு கூட அவர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்தும், குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்தும், குஜராத் கலவர வழக்கில் இருந்தும் அனைத்து காவி பயங்கரவாதிகளையும் விடுவித்த நீதிமன்றங்களிடம் இருந்து இப்படியான தீர்ப்புகள் வராமல் இருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

நீதிமன்றங்கள் என்பது சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கும் இடமல்ல, அது காவி பாசிஸ்ட்டுகளின் அயோக்கியத்தனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் கூடாரம் என்பது தெளிவாகத் தெரிகின்றது

- செ.கார்கி

Pin It