நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் காதொடிந்த ஊசி நன்மைக்கூட ஏற்படவில்லை என்பது மட்டு மல்ல; மிக மோசமான கேடு களையும் உருவாக்கியிருக் கிறது. இது குறித்து நாடாளு மன்றக் குழுவின் அறிக்கை தயாராகிவிட்டது. எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே அறிக்கையின் முக்கிய பகுதிகளை ‘டெகல்கா.காம்’ இணைய இதழ் வெளியிட்டு விட்டது.

அதன் முக்கிய பகுதிகள் :

மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரும் தவறு; அந்த நோக்கத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. ரூ.1000, 5000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 5-லிருந்து 7 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே வந்து விடும் என்று மோடி அறிவித்தார். ஆனால் ரூ.4,172 கோடி அளவிலான பணம் தான் கறுப்புப் பணம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்டறியப்பட்டிருக் கிறது என்று நிதியமைச்சகமே ஒப்புக் கொள்கிறது.

பயங்கரவாதிகளிடம் பதுங்கியுள்ள கறுப்புப் பணம் முடக்கப்படும்; பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் பொய்த்துப் போய்விட்டது. பண நோட்டு பரிமாற்றம் குறைந்து கிரெடிட், டெபிட் கார்டு என்று டிஜிட்டல் பரிமாற்றம் வந்துவிடும் என்றார் மோடி. அதுவும் நடக்கவில்லை. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 2016 நவம்பர்

8 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலைதான் அப்படியே நீடிக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, சிறு தொழில்களை முற்றாக நசுக்கியதோடு ஒழுங்கமைக்கப்படாத துறைகளையும் கடுமையாக பாதித்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தொழிற் சங்கமான பாரதிய மஸ்தூர் சங் அமைப்பே மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்பால் 4 கோடி வேலைகள் பறிபோய் விட்டன. 3 இலட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன என்று ஒப்புக்  கொள்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்குத்தான் உண்டு. ஆனால் அமைச்சரவையையோ ரிசர்வ் வங்கியையோ கலந்து ஆலோசிக்காமல் மோடி தன்னிச்சையாக அறிவித்தார். 1000, 500 ரூபாய் நோட்டுகளை புதிதாக வெளியிடாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே அரசு வெளியிட்டது. அதுவும் ஏ.டி.எம். எந்திரத்துக்கு பொருந்தி வரக்கூடிய அளவில் வெளியிட வேண்டும் என்பதைக் கூட திட்டமிடாமல் வெளி யிட்டார்கள். தேவையான எண்ணிக்கையிலும் நோட்டுகள் இல்லாததால் ஏ.டி.எம். வங்கிகள் மக்களுக்கு பணம் வழங்க முடியாமல் திணறிப் போய் நின்றன. மக்கள் மணிகணக்கில் கியூவில் காத்திருந்தார்கள். கிராமப்புற ‘ஏ.டி.எம்.’களில் இப்போதும் பணம் இல்லை.

இந்த மோசமான நடவடிக்கையால் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய சேவைத் துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாமல் நிதிக் குறைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகியது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது கல்வித் துறை. நிதி ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டன; கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டது; ஆய்வுக்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டன; சேமிப்பு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.

திட்டமிட்ட இந்த படுமோசமான அறிவிப்புக்கு  பொறுப்பேற்கப் போவது யார்? இந்த அறிவிப்புக்குப் பிறகு மோடியின் சாதனையாக ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்வதற்கும் அச்சடிக்கப் பட்டு புதிய நோட்டுகளை வங்கிகளில் கொண்டு போய் சேர்ப்பதற்கும் அரசு செலவிட்ட தொகை ரூ.30,000 கோடிக்கும் அதிகம். இந்த வீண் விரயத்துக்கு யார் பொறுப்பு?அது மட்டுமின்றி உரிய நேரத்தில் பணம் கிடைக்காமலும் கியூ வரிசையில் மணி கணக்கில் நின்றதாலும் மரணமடைந்தவர்கள் 180க்கும்  அதிகம். மோடி இதற்கு மக்களிடம் பதில் சொல்வாரா? அல்லது இந்தியாவின் வரலாற்றில் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் சர்வாதிகார முடிவை எடுத்த மனிதர் என்ற வரலாற்று அவப்பெயரை சுமக்கப் போகிறாரா? இந்த அறிக்கையை வெளி வராமல் தடுக்கும் முயற்சிகளில் மத்திய அமைச்சர் ஒருவர் கடுமையாக முயன்று வருகிறார். ஊடகங்கள் இந்த மூடி மறைக்கும் முயற்சிகளை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இவ்வாறு டெகல்கா.காம் செய்தி வெளியிட்டுள்ளது.

Pin It