நவம்பர் 7 2022 ஆம் தேதியன்று, உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வின் (Constitution Bench) பெரும்பான்மை முடிவு உயர்சாதியினரிடையே உள்ள பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) அளிக்கும் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த யூ. யூ. லலித்தும், மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட்டும் EWS ஒதுக்கீட்டிலிருந்து பட்டியல் சாதிகள் (SC), பழங்குடிகள் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC, MBC) ஆகிய சமூகங்களை விலக்குவதற்கு இணங்கவில்லை. இருப்பினும், அவர்கள் மற்ற மூன்று நீதிபதிகளான ஜே. பி. பர்திவாலா, பேலா திரிவேதி, தினேஷ் மகேஸ்வரி ஆகியோருடன் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பொருளாதார அடிப்படை சரியான காரணம் என்பதில் உடன் பட்டனர். இவர்களில் நான்கு பேர் உயர்சாதி இந்துக்கள். பர்திவாலா பார்சி இனத்தைச் சேர்ந்தவர்.

பல சட்ட வல்லுநர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இத்தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியமான அம்சங்களையும், உச்சநீதிமன்றம் உருவாக்கிய சட்ட முன்மாதிரிகளையும் புறக்கணித்துள்ளது எனக் கூறுகின்றனர். மேலும், இந்த அமர்வு EWS வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் கல்வி, வேலைவாய்ப்புகள், தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளது. எதேச்சையான கருத்துக்கள் எனக் குறிப்பிடப்படும் இந்தக் கருத்துக்கள் சட்ட ரீதியாகக் செல்லுபடியாகக் கூடிவையல்ல என்றாலும், அவை நீதிபதிகளின் சார்புநிலைகளை உணர்த்துகின்றன. பர்திவாலாவின் கடந்தகால கருத்துக்கள் அவர் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை கொண்டவர் என்பதைக் காட்டுகிறது. இது EWS வழக்கை விசாரித்த நீதிபதிகளின் தேர்வை கேள்விக்குள்ளாக்குகிறது என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.supreme court 30910% EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனுதாரர்கள் EWS ஒதுக்கீட்டிற்கு எதிராக மூன்று முக்கியமான வாதங்களை முன்வைத்தனர். முதலாவதாக, சமூகநீதியை உறுதிசெய்யும் இட ஒதுக்கீடு நடவடிக்கைக்கு சமூக, கல்வி அடிப்படையில் பின்தங்கிய நிலையை மட்டுமே அரசியலமைப்பு சட்டம் அனுமதிப்பதால் பொருளாதார அளவுகோள்களின் அடிப்படையிலான எந்த இட ஒதுக்கீடும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கருதப்பட வேண்டும். இரண்டாவதாக, பட்டியல் சாதிகள் (SC), பழங்குடிகள் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC & BC) ஆகிய சமூகங்களை பத்து விழுக்காடு EWS ஒதுக்கீட்டிலிருந்து விலக்குவதன் மூலம் EWS ஒதுக்கீடு அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. மூன்றாவதாக, EWS ஒதுக்கீடு 1992 ஆம் ஆண்டின் இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு முதற்கொண்டு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறியாக விளங்கிவரும் 50 விழுக்காடு உச்சவரம்பை மீறுகிறது.

10% EWS ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதல்ல என்ற தீர்ப்பை நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் ஏற்கவில்லை. வஞ்சித் பகுஜன் ஆகாதி (Vanchit Bahujan Aghadi) கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் இத்தீர்ப்பை, “அறிப்பூர்வமான ஊழல் (Intellectually Corrupt)” என்றழைத்தார். ”ஏற்கனவே அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சமூகக் கொள்கைகளை மாற்றவோ, நீக்கவோ மட்டுமே” நாடளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று அவர் டிவிட்டரில் எழுதினார். அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத ஒரு புதிய கொள்கையை (பொருளாதார அடிப்படை) அரசு அறிமுகப்படுத்தியிருப்பதால் ”நாடாளுமன்றம் இந்த உரிமையை எந்த மூலத்திலிருந்து பெறுகிறது” என்பதை உச்சநீதி மன்றம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் எழுதி இருந்தார். இது எந்தச் சூழ்நிலையிலும் நீடிக்க முடியாது. மேலும், சமூகரீதியிலான இட ஒதுக்கீட்டுப் பயனைப் பெறுபவர்கள் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டுப் பயனைப் பெற முடியாது என்ற நிபந்தனை உண்மையில் மனுஸ்மிருதியை பின்வாசல் வழியாக மறைமுகமாக அனுமதிப்பதாகும். இது சமூக அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூகத்தைப் பிளவுபடுத்தியிருக்கிறது.” இந்தப் பிளவுபடுத்தல், ”அரசியலமைப்பின் கட்டுமானத்தை சேதப்படுத்தியும், அழித்தும் இருக்கிறது” என்றும் அவர் டிவிட்டரில் கூறி இருந்தார்.

தமிழ்நாட்டின் முதல்வரும், இவ்வழக்கின் மனுதாரருமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் இத்தீர்ப்பை, ”பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என்றழைத்தார். இன்னொரு மனுதாரரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இத்தீர்ப்பு, ”சமூக நீதிக் கொள்கைக்கும், அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கும் எதிரானது” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, ”EWS இட ஒதுக்கீடு மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தீவிரமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதைப் பெரிய நீதிமன்ற அமர்விற்கு அனுப்பவேண்டும். இட ஒதுக்கீடு ஏழ்மையைப் போக்கும் திட்டமல்ல. மாறாக வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் பங்கை உறுதிசெய்யும் நடவடிக்கை” என்று டிவிட்டரில் எழுதினார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இத்தீர்ப்பை வரவேற்றிருந்த போதிலும், கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சி. சித்தராமய்யா இட ஒதுக்கீடு ஒருபோதும் பொருளாதாரச் சமத்துவமின்மையை சரிசெய்யும் நோக்கத்தைக் கொண்டதில்லை என்பதை வலியுறுத்தினார். “சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றே அரசியலமைப்பு கூறுகிறது. இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை பொருந்தும் என்பது அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை” என்று அவர் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட தரவுகளின்படி இந்தியாவில் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள். அவர்களில், பட்டியல் சாதியினர் 7.74 கோடி, பழங்குடியினர் 4.24 கோடி, பிற்பட்ட வகுப்பினர் 13.86 கோடி என மொத்தமாக 25.84 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வருகின்றனர். இவை பட்டியல் சாதிகள், பழங்குடிகள், பிற்பட்ட வகுப்புகள் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையில் முறையே 38 விழுக்காடு, 48 விழுக்காடு, 33.1 விழுக்காடு என்ற அளவுகளில் இருக்கின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மீதி 5.8 கோடி மக்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்சாதிகளின் மக்கள் தொகையின் 18.2 விழுக்காடு ஆக இருக்கிறது. பெரும்பான்மை தீர்ப்பிற்கு எதிரான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பட், லலித் ஆகிய இருவரும் 10% EWS ஒதுக்கீடு பட்டியல் சாதிகள், பழங்குடிகள், பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளை விலக்கி வைக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டனர்.

இவ்வழக்கின் மனுதாரர்கள் தீர்ப்பு தாங்கள் வைத்த வாதங்களைப் பெருமளவில் புறக்கணிக்கிறது என்று கூறியுள்ளனர். “பட்டியல் சாதிகள், பழங்குடிகள், பிற்பட்ட வகுப்புகள் ஆகிய சமூக ஏழைகளை விலக்கி அரசியலமைப்பு அளிக்கும் சமத்துவத்திற்கு எதிராக இருப்பதால் இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா (விசிக சார்பில் வாதாடியவர்) முன்வைத்த வாதத்தை ஏன் பெரும்பான்மை தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் நிராகரித்தார்கள் என்பதற்கான எந்த காரணங்களையும் அளிக்கவில்லை” என திருமாவளவன் சுட்டிக் காட்டினார். தீர்ப்பில், நீதிபதி மகேஸ்வரி பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டப் பிரிவுகள் ஏற்கனவே கிரீமிலேயர் எனப்படும் எட்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக குடும்ப வருவானம் உள்ளவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு வைக்கிறது என்ற காரணத்தைக் காட்டி EWS இட ஒதுக்கீட்டிலிருந்தும் அவர்களை விலக்குவதை நியாயப்படுத்தினார். அவருடைய கூற்றின்படி, பட்டியல் சாதிகள், பழங்குடிகள், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரின் இட ஒதுக்கீடுகள் ஏற்கனவே விலக்கும் இயல்புடையவை (exclusionary nature). அவர் குறிப்பிடத் தவறியது என்னவென்றால் கிரீமிலேயர் என்ற கருத்தாக்கம் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டதேயன்றி அது ஒருபோதும் அரசியலமைப்பின் அல்லது நாடாளுமன்றத்தினாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல.

1990 இல், ஒன்றிய அரசு பிற்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகு, இந்திரா சஹானி என்ற உயர்சாதி பத்திரிகையாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டின் அரசியலமைப்பு அடிப்படையை கேள்விக்குள்ளாக்கி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. இருப்பினும் மொத்த இடங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு தருவதற்கு தடை விதித்தது. இந்த இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு மீண்டும் 2018 இல் இன்னொரு தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அண்மையில், அதாவது மே 2021 இல், உச்ச நீதிமன்றம் 50 விழுக்காடு உச்ச வரம்பைச் சுட்டிக்காட்டி மகாராஷ்டிர மாநில அரசு மராட்டா சமூகத்திற்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டியது. இருப்பினும், இப்படியான எல்லா முன்னோடித் தீர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு நவம்பர் 7 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் இருபிறப்பாளர் (உயர்சாதிச்) சமூகங்களுக்காக தான் ஏற்படுத்திய 50 விழுக்காடு உச்சவரம்பிற்கே விதிவிலக்கை அனுமதித்தது.

2015 டிசம்பர் 1 ஆம் தேதி, அப்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த பர்திவாலா குற்றவியல் வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கும்போது சம்பந்தமில்லாமல் இட ஒதுக்கீட்டைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவு செய்தார். “இரண்டு விஷயங்கள் இந்நாட்டை அழித்தன அல்லது சரியான திசையில் முன்னேறவிடாமல் செய்தன. அவை (1) இட ஒதுக்கீடு, (2) ஊழல்.” மேலும், “நமது அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது, இட ஒதுக்கீடுகள் பத்தாண்டு காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்று புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் அது தொடர்கின்றது” என்றும் கூறினார் பர்திவாலா. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் பர்திவாலாவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்.

”பட்டியலின, பழங்குடியின உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தனித் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறைக்கு மட்டுமே பத்தாண்டு கால வரம்பு பரிந்துரைக்கப்பட்டது. கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்குமான இட ஒதுக்கீட்டிற்கு அல்ல” என்று சுட்டிக்காட்டிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களுடைய பதவி நீக்கத் தீர்மானத்தில், “நீதிபதி பர்திவாலா பட்டியல் சாதிகள், பழங்குடிகள் தொடர்பான அரசித்மைப்புக் கொள்கையை அறியாதிருப்பது வேதனையளிக்கிறது. இது அரசியலமைப்பிற்கு எதிரானது. என்பதால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என கூறினர். இத்தீர்மானம் கொண்டுவரப்பட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு பர்திவாலா தன்னுடைய இக்கருத்துக்கள் வழக்கிற்கு ”தொடர்பில்லாதது, தேவையற்றது” என்று கூறி தீர்ப்பிலிருந்து நீக்கிவிட்டார்.

பர்திவாலாவின் கருத்துக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு தொடர்பில்லாதது மட்டுமல்ல. அது உண்மையுமல்ல. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், ஜிண்டால் உலக சட்டப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான அனுராக் பாஸ்கர் பட்டியல் சாதிகள், பழங்குடிகள், பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிற்கு பத்தாண்டு கால வரம்பு அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்பது ஒரு கட்டுக்கதை என்று ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் (constituent assembly) விவாதங்களையும், சிறுபான்மையினர் துணைக் குழுக் கூட்டங்களின் குறிப்புகளையும் முதன்மை தரவுகளாகப் பயன்படுத்தி பத்தாண்டு கால வரம்பை வேலைவாய்ப்பிற்கும், கல்விக்கும் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பரிந்துரைக்கவில்லை என்பதை பாஸ்கர் தனது ஆய்வுக் கட்டுரையில் நிறுவினார். பட்டியல் சாதிகளுக்கும், பழங்குடிகளுக்கும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் தரப்படும் அரசியல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே இந்த 10 ஆண்டுகால வரம்பை அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்டது. இந்தக் கால வரம்பு பத்தாண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் மீளாய்வுக்கு உட்பட்டது. அப்படியான ஒவ்வொரு மீளாய்விற்குப் பிறகும், நாடாளுமன்றம் அரசியல் இட ஒதுக்கீட்டை நீட்டித்து வருகிறது. அந்த வகையில் நீதிமன்றத்தின் கருத்து வரலாற்று உண்மையை கணக்கில் எடுக்காமல், அதற்குப் பதிலாக கட்டுக்கதையையும், பொய்யையும் அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால், நீதிமன்றத்தின் உயர்சாதி சார்புநிலையைக் குறிக்கிறது.

தன்னுடைய கருத்துக்களை நீக்க நிர்பந்திக்கப்பட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு அதே கருத்தை மீண்டும் EWS தீர்ப்பிலும் கூறியிருக்கிறார் பர்திவாலா. கடந்த மே மாதம் (2021) உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற பர்திவாலா 2028 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்பதற்கான வரிசையிலும் இருக்கிறார்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பில் தொடர்பில்லாத, கேள்விக்குட்படுத்தப்படாத விஷயங்களை கொண்டுவந்தது பர்திவாலா ஒருவர் மட்டுமல்ல. பட்டியல் சாதிகளுக்கும், பழங்குடிகளுக்கும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் உள்ள அரசியல் இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவது, ”சமத்துவம் கொண்ட, சாதியற்ற, வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் செல்வதற்கான வழியினை வகுக்கும்” என்று திரிவேதி எழுதினார். இவ்வழக்கில் இந்த இரண்டு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றிய கேள்வியே எழவில்லை.

“இட ஒதுக்கீட்டிற்கு எதிராக குரலெழுப்பும் நீதிபதி ஏன் இந்த அமர்வில் இருந்தார்?” என்ற கேள்வியை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் கேட்டார். “அரசியலமைப்பு அமர்வுகளை அமைக்கும்போது அதற்கான தரநிலைகளையோ, நடுநிலையையோ எதிர்பார்க்க முடியாதா?” எனவும் அந்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அரசியலமைப்பு அமர்வுகளின் அமைப்பை நிர்ணயிப்பற்கான அதிகாரம் தலைமை நீதிபதியிடம் இருக்கிறது. பட்டியல் சாதிகள், பழங்குடிகளின் அரசியல் இட ஒதுக்கீடுகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற தனது உள்ளார்ந்த விருப்பத்தை ஏன் நீதிபதி திரிவேதி இந்த தீர்ப்பில் நுழைத்தார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்று மற்றொரு வழக்கறிஞரும் குறிப்பிட்டார். ”பட்டியல் சாதிகள், பழங்குடிகளின் இட ஒதுக்கீடு பற்றிய கேள்வி நீதிமன்றத்தின் முன் எழாதபோது அப்படிப்பட்ட கருத்தைக் கூறும் அளவிற்கு நீதிபதியிடம் ஏன் பதற்றம் ஏற்படவேண்டும்?” என்ற கேள்வியையும் அந்த வழக்கறிஞர் எழுப்பினார்.

நீதித்துறையில் இருபிறப்பாளர் (உயர்சாதி) சமூகங்களின் மிகையான பிரதிநிதித்துவத்தை கேள்விக்குள்ளாக்கியும், அது நடுநிலையின்மையின் மீது செலுத்தும் தாக்கத்தைப் பற்றியும் முக்கியமான, பல்வேறு அரசாங்க அறிக்கைகள் வெளி வந்துள்ளன. 2000 ஆம் ஆண்டு, பட்டியல் சாதிகள், பழங்குடிகளின் நலனுக்கான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கரிய முண்டாவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழு நீதிமன்றங்களில் பட்டியல் சாதிகள், பழங்குடிகள், பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நீதிபதிகள் மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டியது. அந்தக் குழுவில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம் அவர்களும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். ”அரசியமைப்பு சட்டத்தின் மாண்பை காப்பாற்றுவதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நீதிபதிகளில் சிலர் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதின் மூலம் தீண்டாமையைக் கடைபிடித்து அரசியலமைப்பின் 16(4) ஆம் பிரிவையும், 16(4A) பிரிவையும் அவமதிக்கின்றனர்” என்று அந்த குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது. ஒடுக்கப்பட்ட பிரிவினைச் சேர்ந்த மக்களுக்கு நீதித்துறையில் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்க தேவையான நடவடிக்கைகள் ஒன்றிய அரசு எடுக்கவேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்தது.

தேசிய அளவில் சமூக சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்டும் குறிக்கோளை அடைவதற்கு போதுமான நீதித்துறைக் கட்டமைப்பு இல்லை என்று 2013 ஆம் ஆண்டில், தேசியப் பட்டியலின ஆணையம் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டது. ”நீதிபதிகள் அவர்களின் தீர்ப்புகளில் எவ்வளவு தான் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தாலும், அவர்களின் விருப்பு வெறுப்புகளும், சாய்வுகளும் முன்முடிவுகளும் அத்தீர்ப்புகளின் மீது செல்வாக்கு செலுத்தவே செய்கின்றன. இந்திய சமுகத்தில் உள்ள சமுக ஏற்றத்தாழ்வின் காரணமாக நடக்கும் சமுகப்போராட்டங்களின் விளைவாக சண்டையிட்டுக் கொள்ளும் (அவரவர் சார்ந்த) சமூகங்களின் உணர்வுகளை நீதிபதிகள் வெளிப்படுத்துவதால் அவர்களின் தீர்ப்புகள் நடுநிலைத்தன்மை கொண்டதாகவும் நேர்மையாகவும் இருப்பதில்லை”, என்று அவ்வறிக்கை கூறியது. நீதிபதிகளின் அவரவர் சமூகம் சார்ந்த உணர்வுகள் இட ஒதுக்கீடு, சாதிக் கொடுமைகள் குறித்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என்பதை அவ்வறிக்கைச் சுட்டிக்காட்டியது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நீதித்துறையில் போதுமான இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று அவ்வறிக்கைக் கோரியது. ஆனால் இந்திய நாடாளுமன்றம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்தப் பரிந்துரைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சட்டப்பிரிவினை நீக்குவதற்கான பெருமுயற்சியாகவே இந்த EWS தீர்ப்பு இருக்கலாம் என்று பல சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ”உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் 187 பத்தியில் (Paragraph) ”EWS ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் நீதிபதி பர்திவாலா இது சாதி அடைப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழித்துகட்டிவிடும் என்று கூறுகிறார்” என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தீஷா வடேகர் குறிப்பிடுகிறார். “இது சட்டமானால், SC, ST, BC, MBC இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும். பொத்தாம் பொதுவான கருத்தாக மட்டுமே இது சொல்லப்பட்டிருந்தாலும் இட ஒதுக்கீடு ஒழிப்பே இதன் பின்னிருக்கும் உண்மையான காரணம். இத்தகையக் கருத்துகள் விசாரணையில் இருக்கும் மற்ற வழக்குகளை கட்டுப்படுத்தக் கூடியவையல்ல என்றாலும். இத்தகையக் கருத்துகள் சட்டரீதியான விவாதங்களின் ஒரு பகுதியாக மாறி விடுவதில் போய் முடியும். இத்தகைய மேலோட்டமான கருத்துகள் தீர்ப்புகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதையும், அடிக்கடி முன்னுதாரணங்களாக பயன்படுத்தப்படுவதையும் நாம் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். அவை சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான காரணமாக அமைகின்றன.”

- சாகர்

தமிழில்: மு.சுந்தரமூர்த்தி

Pin It