உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்!
இந்தியா சுதந்தரம் பெற்ற ஒரு நாடு.
சுதந்தரம் பெற்று 70 ஆண்டு ஆகப் போகிறது.
சுதந்தரம் பெற்ற நாள் முதல் “பார்ப்பான் பண் ணையம் கேட்பார் இல்லை” என்கிற தன்மையில் தான் இன்றும் இந்திய அரசு நீடிக்கிறது.
30 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட காங்கிரசுக் கட்சி ஆட்சிகள் காலத்தில் நடந்த அழிம்பு களைவிட, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் பாரதிய சனதாக் கட்சி ஆட்சி படுகேவலமாக - மோசடியானதாக இருக்கிறது. எப்படி?
இந்தியாவிலுள்ள 127 கோடி மக்களும் உண்ண, உடுக்க, வைத்தியம் பெற, பயணம் போக, குழந்தை களைப் படிக்க வைக்க தோராயமாக ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் மொத்தத்தில் செலவாகும் என்கிற புள்ளிவிவரம் இந்திய அரசிடம் உள்ளது. ஒருவருக்கு, எல்லாவற்றுக்கும் ரொக்கமாகப் பணம் தேவைப் படுகிறது.
பழைய 1000; 500 பணத்தாள்கள் செல்லாது என்று, 8.11.2016 இரவு பிரதமர் மோடி அறிவித்தார். வங்கியில் பணம் எடுக்காமல் ஓர் இரண்டு, மூன்று நாள்களுக்கு அக்கம் பக்கத்தாரிடம் கடன் வாங்கி அன்றாடச் செலவுகளைச் செய்ய முடியும்.
இந்த இரண்டே நாள்களில், போதிய அளவில் ஏற் கெனவே அச்சடிக்கப்பட்ட புதிய பணத்தாள்களை இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிக் கிளைகளுக்கு அனுப்பி யிருக்க முடியும். அதற்கு ஏற்பாடு செய்யவும், இரண்டு நாள்கள் கழித்து, அவரவர் சேமித்துள்ள பணத்தை அன்றாடம் வேண்டிய அளவு எடுத்திடவும், ஏன் அரசு தடைபோட வேண்டும்?
அந்தத் தடை 53, 54 நாள்களுக்கு ஏன் நீடிக்க வேண்டும்?
இந்திய அரசு பணத்தாள் அச்சிடும் பணியையும், நாணயங்கள் வார்க்கும் பணியையும் மிக முன்கூட் டியே செய்யாதது ஏன்?
மோடி அரசு பணத்தாள் அச்சிடுவதிலேயே மாபெரும் மோசடி செய்திருப்பதை நம்மால் நம்பிக்கையாக 9.12.2016இல் பெங்களூரில் அறிய முடிந்தது. அதன் விவரம் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கியின் 23ஆம் ஆளுநராக டாக்டர் ரகுராம்ராஜன் என்பவர் அமர்த்தப்பட்டார். அவர் 4.9.2013 முதல் 4.9.2016 முடியப் பதவியில் இருந்தார். அந்த மூன்றாண்டுக் காலம் வரையில் பணத்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
ரகுராம்ராஜனை அடுத்து, டாக்டர் உர்ஜித் ஆர். படேல், 24ஆம் கவர்னராக 4.9.2016 அன்றே கவர் னர் பொறுப்பை ஏற்றார்.
பிரதமர் மோடி 8.11.2016 இரவு தான், பழைய 1000; 500 பணத்தாள்கள் செல்லமாட்டா என அறி வித்தார். அத்துடன் அந்தப் பழைய 1000, 500 பணத் தாள்களாக உள்ள பணத்தில், உடனே எவரும் 2.50 இலட்சத்தை வங்கியில் செலுத்தலாம் என்றும், அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்தினால், வருமானவரி மற்றும் தண்டத்தொகை போக, மீதத்தொகையை அவரவர் பெறலாம் என்றும் மோடி அறிவித்தார்.
அதை அப்படியே பின்பற்றி, கருநாடக மாநி லத்தில், பெங்களூரில் உள்ள விசய நகரில் இயங்கிவரும் “சர்.எம். விஸ்வேஸ்ரய்யா கூட்டுறவு வங்கி லிமிடெட்” என்னும் கிளையில் கணக்கு வைத்துள்ள ஒருவர், 29.11.2016 அன்று நான்கு 2000 பணத்தாள்களாக இந்த வங்கிக் கிளை யில் ரூபா 8,000 பணம் பெற்றார்.
அதில் இரண்டு பணத்தாள்களில், 4.9.2016 இல் பதவியிலிருந்து விலகிய ரகுராம்ராஜன் கையொப்பமிட்டுள்ளார். மீதி இரண்டு பணத்தாள் களில் 4.9.2016 அன்று பொறுப்பேற்ற உர்ஜிர் ஆர். படேல் கையெழுத்திட்டுள்ளார். இவற்றி லிருந்து நாம் அறிவது என்ன?
ரகுராம்ராஜன் ஆளுநராக இருந்த போதே, மோடி அரசால், புதிய 2,000 ரூபா பணத்தாள் அச்சிடப்பட்டிருக்கிறது என்பதுதான்.
ஒரு செய்தி இரண்டாம் பேருக்குத் தெரியாமல் காக்கப்பட்டால்தான் அது கமுக்கம் (அ) இரகசியம். புதிய 2000 ரூபா பணத்தாள் அச்சடிப்பு 4.9.2016க்குப் பிறகு தொடங்கப்பட்டிருந்தால், அச்செய்தி முதலாவதாக பிரதமர் மோடிக்கும், இரண்டாவதாக கவர்னர் உர்ஜித் சிங் ஆர். படேலுக்குந்தான் தெரிந்திருக்க வேண்டும். படேல் கையெழுத்து மட்டும்தான் பணத்தாளில் இடம் பெற முடியும். அதுபோலவே ரகுராம்ராஜன் கையெழுத்து புதிய பணத்தாளில் இடம்பெற்றிருக்க முடியாது; கூடாது. ஆனால் அவருடைய கையெழுத்தும் புதிய பணத்தாளில் இருந்தது.
இதை நாம் என்னவென்று சொல்வது?
4.9.2016-க்கும் முன்னரே புதிய பணத்தாள் அச்சடிப்பு தொடங்கிவிட்டது என்று தானே நாம் கொள்ள வேண்டும்! இதுவே உண்மை.
அப்படி, 4.9.2016க்கும் 8.11.2016இல் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கும் இடையில் 26 + 31 + 7 = 64 நாள்கள் இடைவெளி இருந்தபோது புதிய பணத் தாள் 2000 ரூபா கௌதாம் அதானி போன்ற பல பகாசுர முதலாளிகளுக்கு 8.11.2016க்கு முன்னரே தெரிந் திருந்து, அவர்கள் பழைய பணத்தாளுக்கு மாற்றாக, புதிய 2000 ரூபா பணத்தாளை ஆயிரக்கணக்கான மதிப்புள்ள கோடிகள் தொகைக்கு மாற்றாகப் பெற்றிருக் கிறார்கள் என்பது உறுதி.
இவை மட்டுமா?
பணத்தாள் அச்சடிக்கும் தொழிற்சாலை இயக்குநர் பணத்தாள் மற்றும் பணியாள்கள், ரிசர்வ் வங்கி கவர் னர்கள் மற்றும் அலுவலர்கள், வங்கிக் கிளைகளின் மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள், பணத்தாள் மாற்றும் தொழிலை மேற்கொண்ட தரகர்கள், மாற்றப்பட்ட புதிய பணத்தாள்களைப் பெற்றுக் கொண்ட திருடர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் கருப்புப் பணம் வளர இடந் தந்துவிட்டார்கள் என்பதே விளைவு.
இது மோடி அரசின் மிகப்பெரிய மோசடி அல்லவா?
இதுபற்றிய உண்மை என்ன என்பதைத் தானே முன்வந்து (Suomotto) ஆராய்ந்து அறிய வேண்டும் என, மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களை வேண்டுகிறோம்.