தற்போதைய 10% EWS இட ஒதுக்கீடு உயர் சாதி ஏழைகளுக்கானது. 'பொருளாதாரத்தில் பின்தங்கிய' என்ற பிரிவு நாட்டில் எப்போது எங்கு ஆரம்பிக்கப்பட்டது? இந்த பிரிவு முதலில் கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) உருவாக்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள 'பொருளாதாரத்தில் பின்தங்கிய' பிரிவு பட்டியலின, பழங்குடியினப் பிரிவினரை உள்ளடக்கியது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆழமாக பார்க்கையில் அப்படி இல்லை. ஆனால் இப்போது பாஜக அரசு கொண்டு வந்துள்ள 10% EWS இட ஒதுக்கீடு நேரடியாக உயர்சாதியினருக்கானது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களைத் தவிர்த்த உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் EWS இட ஒதுக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. EWS இட ஒதுக்கீட்டில் நேர்மறை விஷயத்தையும், எதிர்மறை விஷயத்தையும் சரிவிகிதத்தில் கலந்து மக்களைக் குழப்புவதற்காக EWS இட ஒதுக்கீடு தந்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களை நேரடியாக ஏமாற்றுவது கடினம் என்பதால் நேர்மறை, எதிர்மறை என இரண்டையும் கலந்து புதிய குழப்பம் ஒன்றை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் இது ஒருவித திரிசங்கு நிலையை பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

பல தீர்ப்புகள் மூலம் உச்ச நீதிமன்றம் வரையறுத்த, 50 விழுக்காடு உச்ச வரம்பை மீறி இட ஒதுக்கீடு தரலாம் என்பது EWS இட ஒதுக்கீட்டின் நேர்மறை அம்சம். பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் கொள்கை எதிர்மறையானது மட்டுமல்ல, தீங்கானதும் கூட.

உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதற்காக 50% உச்சவரம்பை தாண்டலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் EWS இட ஒதுக்கீட்டை எதிர்க்காது என மக்கள் நம்புகின்றனர். அவ்வகையில் 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 27 விழுக்காட்டிற்கு மேல் தங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) நம்ப வாய்ப்புண்டு. உயர் சாதியினருக்காக 50% உச்ச வரம்பு மீறலை உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமானால், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதைப் பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கும் என்ற அனுமானம் ஒடுக்கப்பட்ட தலைவர்கள் மத்தியில் இருக்கிறது. ஏன் 10% EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்தாய் என்ற கேள்வி எழுமானால், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை மீறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், அதை ஆதரித்தோம் எனச் சொல்லக் கூடும். அதனால் நமக்கும் சில நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்கும், அதை பெறுவதற்காகத்தான் ஆதரித்தோம் என்று சொல்வார்கள்.

ஆக, ஒருபுறம் 50% உச்ச வரம்பு இட ஒதுக்கீட்டை மீறலாம். மறுபுறம் பொருளாதார அளவுகோல் எனும் புதிய, ஆபத்தான காரணி இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் என்ற நிலையும் ஏற்படலாம். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்மறை, நேர்மை என இரண்டு விஷயங்களுக்கு இடையே ஒன்றைத் தேர்வு செய்ய முடியாது, இரண்டும் மொத்தமாக மட்டுமே வந்து சேரும். EWS இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால் நேர்மறை, எதிர்மறை என இரண்டும் சேர்ந்தே நிறைவேற்றப்படும். நிராகரிக்கப்பட்டால் இரண்டும் இணைந்தே நிராகரிக்கப்படும். ஆம், அது போன்ற நிலை தான் உள்ளது. அவற்றை தனித்தனியாக பயன்படுத்த முடியாது.

இதுவரை இட ஒதுக்கீடு பற்றி பரப்பப்பட்டு வந்த அவதூறுப் பிரச்சாரமும் சமூக களங்கமும் குறைய வாய்ப்புண்டு என்று கருதுவோரும் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. இட ஒதுக்கீட்டின் மீது வன்மம் ஒருபோதும் யாருக்கும் இருந்ததில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான் வன்மமே இட ஒதுக்கீடு குறித்த அவதூறு பிரச்சாரத்திற்கு காரணம். பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான களங்கம் அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு காரணமாக அல்ல, மாறாக அவர்களின் சாதியினால் ஏற்பட்டது. இதுவரை நாடு முழுக்க இருந்து வரும் இட ஒதுக்கீட்டிற்கு ஒருபோதும் களங்கம் ஏற்பட்டதில்லை. பட்டியலின, பழங்குடியினர் மீதான வன்மம், தீண்டாமை, வெறுத்தொதுக்குதல் போன்றவை இடஒதுக்கீடு காரணமாக அல்ல, மாறாக அவர்களின் சமூகப் படிநிலையால் ஏற்படுகிறது. இது சமூகவியல் சார்ந்த ஒரு ஊகம். ஏனென்றால், இடஒதுக்கீடு SC, ST மக்கள் மீதான களங்கத்தை நீக்க பயன்பட்டிருந்தால், SC மக்கள் பல்வேறு பிரிவாக இருந்திருக்க மாட்டார்கள். SC, ST, OBC மக்களிடையே ஒற்றுமை இருந்திருக்கும். களங்கத்தை நீக்குவதற்குத் தான் இடஒதுக்கீடு என்ற நிலை இருக்குமானால், பட்டியலினத்திற்குள் (SC) பல்வேறு உட்பிரிவுகள், படிநிலைகள் இருக்காது.

அதனால் புதிய 10% EWS இட ஒதுக்கீட்டினால், இங்கே இருந்து வரும் இட ஒதுக்கீட்டோடுத் தொடர்புடைய பழைய களங்கம் ஒன்று களையப்படும், என்பதற்கான பேச்சுக்கே இடம் இல்லை. இட ஒதுக்கீட்டினால் களங்கம் என்ற ஒன்று, இங்கே எந்நாளும் இருந்ததில்லை. அவ்வாறு, ஒரு களங்கம் இருப்பதாக நம் மனதில் தவறாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இங்கு யார் நினைத்தாலும், 10% EWS இட ஒதுக்கீட்டை புதிதாக அனுபவிக்க இருக்கும் உயர்சாதி பார்ப்பனர்கள் மீது வன்மோ களங்கமோ கற்பிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் களங்கத்திற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் தொடர்பில்லை. அவ்வகையில், புதிய 10% EWS இட ஒதுக்கீடு, சாதி ரீதியான இட ஒதுக்கீடு மீதான பழைய களங்கத்தை போக்க உதவுமா? இந்த நாட்டில் உயர்சாதிக்கு இட ஒதுக்கீடு பயன்பட்டால், அந்த இட ஒதுக்கீடும் மூலம் களங்கம் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படாது, இங்கு யார் இட ஒதுக்கீட்டின் கீழ் பயனாளிகளாக வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே களங்கமா, நன்மதிப்பா என முடிவு செய்யப்படுகிறது. எனவே இந்த EWS இட ஒதுக்கீடு குறித்த களங்கத்தை நீக்கும் என்று கருதுகோளோடு உடன்பட இயலாது.

உயர்சாதிக்கான 10% EWS இட ஒதுக்கீட்டை நாட்டில் உள்ள எளிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் எதிர்ப்பதே சிறந்த உத்தியாகும். அதுவே நியாமானதும் கூட. அரசு, தனியார் துறைகளில் உயர்சாதியினர் அளவுக்கதிகமான பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும், ஏனென்றால் நாகராஜ் வழக்கில் (2006) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பிரதிநிதித்துவ விவரங்களை, தரவுகள் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதே உச்சநீதிமன்றம் தான். ஆனால் குரூப் ஏ, பி, சி, டி வகை வேலை இடங்களில் எத்தனை சதவீதம் பேர் உயர் சாதியினர் உள்ளனர் என்பதற்கான தரவுகள் ஏற்கனவே உள்ளன. அதை அனைவரும் அறிவோம். ஆனால், இந்த உண்மைத் தரவுகளை முன்வைத்து ஏன் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு பயன்படுத்தப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. உண்மை மட்டுமே வேலை செய்யும் என்று நாம் நம்புவது தவறு. உண்மைத் தரவுகளையும், தர்க்கத்தையும் முன்வைத்து வாதாடினாலும், அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளுமா?

சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் போது, உண்மைத் தரவுகளையும் தர்க்கத்தையும் முன்வைக்கின்றனர். இருப்பினும் உண்மைத் தரவுகளையும் தர்க்கத்தையும் மட்டுமே முன்வைத்து வழக்குத் தொடுக்கும் உத்தி வேலை செய்யாது. ஏனென்றால் நீதிமன்றங்கள் உண்மையும், தர்க்கத்தையும் செவி மடுத்துக் கேட்காமல், தீர்ப்பு வழங்கும் என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஓர் எடுத்துக்காட்டு, கிரீமிலேயரைக் (Creamy layer) காரணம் காட்டி, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் தீர்ப்புகளில் என்ன தர்க்கம் உள்ளது? அரசு வேலையில் நுழையும் போது இல்லாத கிரிமிலேயர், அரசு வேலையில் நுழைந்து, பதவி உயர்வு பெறும்போது எப்படி கிரிமி லேயர் உருவாகிறது? இதில் என்ன தர்க்கம் உள்ளது? உள்ளது? அரசு வேலையில் நுழையும் ஆரம்ப கட்டத்தில் ஒருவரது தாய் - தந்தை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை கணக்கில் எடுக்காமல், பதவி உயர்வின் போது, அவர்களுடைய வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு கிரிமி லேயர் என்று சொல்லி, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதை தடுப்பதில் என்ன தர்க்கம் உண்டு? ஒருவர் வேலையில் சேர்ந்த பிறகு அவர் தனி மனிதர் ஆகிவிடுகிறார். அந்நிலையிலும் கூட அவரின் தந்தையின் வருமானத்தை கணகிட்டு, அதை அடிப்படையாக வைத்து அவரை கிரீமிலேயர் எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வை மறுப்பது எந்த வகையில் நியாயம்?

ஒருவர் அரசு வேலைக்கு சேர்ந்தபின்னர் அவரது வருமானத்தை, அவரது தந்தையின் வருமானத்தில் இருந்து பிரிக்க வேண்டும். ஏனெனில், வயதுவந்த ஒருவருடைய வருமான வரம்பை கண்டறிய முற்படும்போது, தனி நபராக அவருடைய வருமானம் எவ்வளவு என்பதை மட்டும் கணக்கில் எடுக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பெண் திருமணம் முடிந்து வீட்டை விட்டு வெளியேறிய ​​பின்னர், அவளுடைய தந்தையின் வருமானம் கோடிகளில் இருக்கலாம். ஆனால், தந்தையின் வருமானம் அவள் கணக்கில் எழுதப்படுவதில்லை. மாறாக அந்தப் பெண்ணின் வருமானம் கணவரின் வருமானத்துடன் தொடர்புடையதாக இருக்கும். அதைப்போலவே ஒருவர் வேலையில் சேர்ந்தபிறகு, அவரின் வருமானம், அவரது தந்தையின் வருமானத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, தனியாகக் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும். இருப்பினும், ஒருவருடைய தந்தையின் வருமானத்தை முன்வைத்து பதவி உயர்வை மறுக்கும் உச்சநீதிமன்றத்தை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை.

இன்னொரு உதாரணம். மகாஜன் வழக்கில் (டாக்டர். சுபாஷ் காஷிநாத் மகாஜன் எதிர் மகாராஷ்டிரா அரசு - 2018) என்ன நடந்தது? 2007 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கராட்டில் உள்ள அரசுக் கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்த பாஸ்கர் கெய்க்வாட், கல்லூரி முதல்வர் சதீஷ் பிசேசின் முறைகேடுகளை சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். திரு. கெய்க்வாட் பட்டியல் சாதியைச் (SC) சேர்ந்தவர். கல்லூரி முதல்வர் பிசே தலித் அல்லாத சாதியைச் சார்ந்தவர். பாஸ்கர் கெய்க்வாட் சுட்டிக்காட்டிய படி கல்லூரி முதல்வர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்ததா? இல்லை. மாறாக கல்லூரி முதல்வர் சதிஷும், பாஸ்கர் கெய்க்வாட்டின் மேலாளர் கிஷோர் புரடேவும் இணைந்து பாஸ்கர் கெய்க்வாட்டின் மீது குற்றம் சுமத்தினர். சாதி ரீதியாக அவமானப் படுத்தினர். துறை ரீதியான ஆவணங்களில் பாஸ்கர் கெய்க்வாட் மீது பொய்யான தகவல்களை பதிவு செய்தனர். அதை அறிந்த பாஸ்கர் கெய்க்வாட், அவர்கள் இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தார். நீதி கிடைத்ததா? உச்சநீதிமன்றம் வரை தொடர்ந்த சட்டப் போராட்டம் இறுதியில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் இடத்திற்கு வந்து நின்றது. உண்மைத் தகவல்களையும், தர்க்கத்தையும் முன்வைத்து வாதாடிய போதும், அதைக் கணக்கில் எடுக்காமல், உச்ச நீதிமன்றம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செல்லாக்காசாக்கும் வகையிலான தீர்ப்பை வழங்கியது.

பட்டியிலின, பழங்குடியின மக்கள் சார்ந்த வழக்குகளில், உள்ளூர் காவல்துறை முதலில் சட்டத்திற்கு புறம்பாக, ஒரு தீர்ப்பு வழங்குகிறது. பின்னர் வேறொரு முறையில் நீதிமன்றங்கள் சட்டத்திற்கு புறம்பான இன்னொரு தீர்ப்பு வழங்குகின்றன. இந்த இருவகை சட்ட மீறல்களை இணைத்துப் பார்த்தால், நமக்கு கிடைக்கும் புள்ளிவிவரங்கள் முற்றிலும் நியாயமற்றவை. ஆனாலும், நீதிமன்றத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. எனவே, உண்மையும், தர்க்கமும் எப்போதும் நீதிமன்றத்தில் வேலை செய்யும் என்று நினைப்பது தவறு. அதை நாம் போதுமான அளவுக்குப் பார்த்துவிட்டோம் குற்றவியல் நடைமுறைகள் (Technical Grounds) நீதிக்குத் தடையாக இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை அன்று. எடுத்துக்காட்டாக, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்துசெய்யக்கூடிய இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 (CRPC 482) அடிப்படையில் எல்லையற்ற அதிகாரத்தை கொண்டது. அதாவது, நீதிக்கு (நீதிமன்றத்திற்கு) முன் குற்றவியல் நடைமுறைகள் முக்கியமில்லை. பழங்குடியினரை காடுகளில் இருந்து வெளியேற்றுவது தொடர்பான வழக்கில் (2019), ஒன்றிய அரசு தனது வழக்கறிஞரை அனுப்பாத நிலையில், உச்ச நீதிமன்றம் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று காத்திருந்து இருக்கலாம். அல்லது, ஒன்றிய அரசைத் தனது வழக்கறிஞரை அழைத்து வருமாறு ஆணையிட்டு காத்திருக்கலாம். மாறாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வராததை காரணம் காட்டி, உச்சநீதிமன்றம் பழங்குடி மக்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அரசு வழக்கறிஞர் வரவில்லை என்ற நடைமுறைக் காரணத்தை (Technical Ground) முன்வைத்து தீர்ப்பு வழங்குவது அவசியமில்லை, அது நீதியும் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் அதைச் செய்துள்ளது. எனவே உண்மையும் தர்க்கமும் நீதிமன்றத்தில் வெல்லும் என நம்புவதே தவறு. இப்போது உள்ள நீதிமன்றத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. 

இப்போது உண்மையான பிரச்சினை தான் என்ன? தர்க்கமோ, தரவுகளோ, உண்மைகளோ, நாடாளுமன்றங்களோ பிரச்சினை இல்லை. உச்சநீதிமன்றம் எவ்வளவு காலம் தான் நீதிக்கு புறம்பான தீர்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கும்? சமத்துவத்திற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து போடப்படும் சீராய்வு மனுக்களும், அரசாணைகளும் எவ்வளவு காலம் தேவைப்படும்? பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன் உள்ள பிரச்சனையின் வேர் என்னவெனில், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறை ஒன்று இந்தியாவில் இல்லாததுதான். இதை உணர மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மக்களுடன் நீதித்துறைக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால், இந்தியாவில் உள்ள நீதித்துறை 'இந்தியாவின் நீதித்துறையாக' இல்லை எனலாம். மேலும் 'இந்தியாவில் உள்ள நீதித்துறை’ நீதி வழங்குவதும் இல்லை.

இந்திய நீதித்துறை தன்னைத் தானே தேர்ந்தெடுத்து நியமித்துக் கொள்கிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை இந்திய நீதிமன்றங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இதுவே நீதித்துறை சுதந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கொலிஜியம் (Collegium) அமைப்பு அரசுக்கு நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அனுப்பினால், அரசு அதை ஏற்கவேண்டும். ஒரு வேளை, அரசு கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பினால், அந்தப் பரிந்துரையின் மீது வேறு எந்த மாற்றங்களும் செய்யாமல், மீண்டும் ஒரு முறை கொலிஜியம் அதே பரிந்துரையை அரசுக்கு அனுப்பினால், அதை அரசு ஏற்க வேண்டும், அதுதான் சட்டம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு ஒப்பான சட்ட நடைமுறை குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையிலான பரிமாற்றங்கள் குறித்த அரசியலமைப்பு சட்டப்பிரிவிலும் உள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க மறுத்து குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினால், அதை அப்படியே இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை அனுப்பினால், அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் பொருள், இது மக்களாட்சி என்பதாலும், அமைச்சரவை நேரடியாக மக்களால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதாலும், அவர்களின் அதிகாரம் குடியரசுத் தலைவரை விட அதிகமாக இருக்க வேண்டும். எனவே, குடியரசுத் தலைவரை விட பிரதமரும், அமைச்சர்களும் அதிக அதிகாரம் வாய்ந்தவர்கள்.

அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவர் நீதிபதிகளை நியமிக்கிறார். அமைச்சரவை குடியரசுத் தலைவர் நியமித்த நீதிபதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். இது ஒருவித முரண்பாடாகத் தோன்றுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, அரசின் தலைவராக குடியரசுத் தலைவர் இருந்தாலும், அமைச்சரவையை மீற முடியாதவர். ஆனால் குடியரசுத் தலைவர் நியமித்த நீதிபதிகளுக்கு அமைச்சரவை கட்டுப்பட வேண்டும். இந்த முரண்பட்ட கொலீஜியம் முறையை ஒருவர் எப்படி ஆதரிக்க முடியும். அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றி இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. அவ்வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்மாதிரி அரசிலமைப்பைக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்தியாவில் இருக்கும் கொலிஜிய அமைப்பு முறை இல்லை. கொலிஜிய முறை மக்களாட்சிக்கு உகந்த ஒன்றாக இருந்திருந்தால் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், இன்னும் பிற நாடுகளில் கூட இருந்திருக்கும். ஆனால் அங்கெல்லாம் அப்படியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. 

supreme court 255நீதிபதிகள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்து, நியமித்துக் கொள்வதை நீதித்துறை சுதந்திரம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டவியல் கோட்பாட்டியலில் (Jurisprudence) இதற்கு பொருள் ஏதும் இருக்காது. தத்துவங்களில் உள்ள 'நல்லது' என்ற கருத்தாக்கத்தை போன்றே, நீதித்துறையிலும் 'சுதந்திரம்' என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது. ”நல்லது” என்ற கருத்தாக்கம் உண்மையில் பொதுவாக சிறந்தது போன்று காட்சியளிக்கக் கூடியது. ஆனால் எதெல்லாம் நல்லது? எல்லாமும் நல்லதே. நல்லது என்பதே ஒரு நல்லொழுக்கம் தான். சுதந்திரம் என்பது சில வரம்புகளுடன் கூடிய நல்லொழுக்கம். அவ்வகையில் நீதித்துறை சுதந்திரம் என்பது சில வரம்புகளுடன் அமைந்த ஒன்றாகும். நீதித்துறை சுதந்திரத்தின் வரம்புகளை வரையறுக்க வேண்டும்.

உண்மையில், நீதித்துறையின் 'சுதந்திரம்’ அதன் ஒரு தனித்துவமான அடிப்படைப் பண்பு என்று எந்த ஒரு சட்டவியல் கோட்பாடியலிலும் கூறப்படவில்லை. ஆம், நீதிபதிகள் பாரபட்சமற்று செயல்பட வேண்டுமெனில், நீதித்துறைக்குச் சுதந்திரம் தேவை. ஒருவர் சுதந்திரமாக இல்லாவிட்டால், அவர் பாரபட்சமற்றவராக இருக்க முடியாது என்பது அடிப்படை நியதி. நீதித்துறையைப் பொருத்தமட்டில், சுதந்திரம் என்பதே அதன் ஒரு தனித்துவ அடிப்படை பண்பன்று. நீதி வழங்குதலில் பாரபட்சமற்ற தன்மைக்குச் சுதந்திரம் அவசியம் என்பதால் மட்டுமே அது தேவைப்படுகிறது. வேறேதும் காரணத்திற்காக அது வழங்கப்படவில்லை. நீதி என்பது வெறுமனே நீதி வழங்குதில் மட்டுமில்லை. நீதி வழங்கப்படுவதை மக்கள் வெளிப்படையாக பார்க்க வேண்டும். அதனால் தான், திறந்தவெளி நீதிமன்றங்கள் உள்ளன. அதேபோல் பாரபட்சமின்மை என்பது பின்பற்றப்படுவதில் மட்டுமில்லை. பாரபட்சமின்மை பின்பற்றப்படுவதை மக்கள் ஒளிவுமறைவின்றி பார்ப்பதிலும் உள்ளது. சுதந்திரமான, திறந்தவெளி நீதிமன்றங்களுக்குள் இரகசிய நடைமுறைகளுக்கும் ரகசிய நியமனங்களுக்கும் என்ன அவசியம் வேண்டியுள்ளது? மக்களாட்சியின் முக்கியத் தூணான ஓர் அமைப்பிற்கு, இரகசியங்களும் மூடுமந்திரங்களும் ஏன்? கொலிஜியம் அமைப்பில் நடப்பது யாவும் வெளிப்படையானது அல்ல. பிறகு அது பாரபட்சமற்றது என்பதை எப்படி மக்கள் அறிந்துகொள்வார்கள்? நீதிமன்றங்களின் பாரபட்சமற்றதன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளோ, முகாந்திரங்களோ இன்னும் தென்படவில்லை. எனவே தான் இந்தியாவில் உள்ள நீதித்துறை, 'இந்தியாவின் நீதித்துறையாக’ இல்லை.

டுத்து என்ன செய்ய வேண்டும்?

இன்றைக்கு நாட்டின் உச்ச நீதிமன்றமே இலட்சக்கணக்கான பழங்குடி மக்களை வெளியேற்ற உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதைத் தாண்டி வேறேதும் செய்யப்படாத வகையில் தான் இந்த அமைப்பு செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம் என்று ஒருபோதும் வெளிப்படையாகக் கூற முடியாது, ஏனெனில் அப்படிச் சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான நிலைமையில்தான் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களும் ஒன்றிணைந்து தாங்கள் முழு பலத்தைத் காட்டி போராடி, நீதித்துறையில், குறிப்பாக உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு பெறும் போராட்டத்தை துவங்க வேண்டும். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவம் கொண்ட, விகிதாச்சார வகையிலான நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களை அமைப்பது காலத்தின் கட்டாயம். அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய சமத்துவ நீதித்துறையை அமைக்க பன்னாட்டு அமைப்புகளுக்கு செல்லவேண்டும். உதாரணமாக, 20 லட்சம் பழங்குடி மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு இனப்படுகொலைக்கு சமம். இனப்படுகொலை போன்ற குற்றங்களில் ஐநா மன்றமும் பன்னாட்டு அமைப்புகளும் தலையிடுகின்றன.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் நீதித்துறை பிரதிநிதித்துவ குறைபாட்டை சர்வதேச மன்றங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சமூக மாற்றத்தை முன்வைத்து இயங்கும் இயக்கங்கள் டெல்லியில் மையமிட்டு முடிவெடுக்கின்றனர். போராட்ட வடிவங்களை டெல்லியை நோக்கி குவித்து வருகிறார்கள். போராட்டங்களை ஒருமுகப் படுத்தும் இந்த அணுகுமுறை ஒருவகையில் சரியென்றாலும், போராட்டங்கள் கீழேயும் நடத்தப்பட வேண்டும். மேலிருந்து கீழ் மட்டுமல்ல. கீழிலிருந்து மேல் என்ற வகையிலும் சமுக மாற்றத்திற்கான இயக்கங்கள் செயல்பட வேண்டும். சமூக இயக்கங்கள் செலவு-பயன் (Cost - Benifit) அணுகுமுறை பற்றியும் சிந்திக்க வேண்டும். அனைத்திற்கும் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற அணுகுமுறையை மாற்றுதல் வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும் போராட்டங்களை மாநில உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வாயில்களில் நடத்த வேண்டும். நீதிமன்றங்களில் சரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை மையப்படுத்திய போராட்டங்களை கீழமை மாவட்ட நீதிமன்ற வாயில்களில் நடத்தினால், அவை உயர் நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டும். அதிகாரத்தைப் பரவலாக்க போராட்டங்களையும் பரவலாக்க வேண்டும்.

ஸ்தபீர் கோரா

நன்றி: Round Table India இணையதளம் (2019, மே 5 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: டாக்டர் ஈஷ்வர்

Pin It