இது தரவுகளின் உலகம். நவீன கால அரசுகள் தரவுகளின் அடிப்படையில் தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்றன. இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு இடஒதுக்கீடுகள் தரவுகளின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பிடப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தரப்படுகிறது.
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 16.6% உள்ள பட்டியலின வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீடும், 8.6% உள்ள பழங்குடியின வகுப்பினருக்கு 7.5% இடஒதுக்கீடும் தரப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் 20.1% உள்ள பட்டியலின வகுப்பினருக்கு 18% இடஒதுக்கீடும், 1.1% உள்ள பழங்குடியின வகுப்பினருக்கு 1% இடஒதுக்கீடும் தரப்படுகிறது. தரவுகள் இன்றி இடஒதுக்கீடு தரக்கூடாது என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பதவி உயர்வில் SC, ST வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தரும்வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 16(4A) எனும் புதிய உட்பிரிவை சேர்ப்பதற்காக நிறைவேற்றப்பட்ட 85 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட எம். நாகராஜ் (2006) வழக்கில், உச்சநீதிமன்றம் கீழ்க்காணுமாறு கூறியது.
இடஒதுக்கீடு வழங்கும்முன், ஒவ்வொரு முறையும், பின்தங்கிய நிலை, பிரதிநிதித்துவத்தின் போதாமை, ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் போன்ற அழுத்தமான காரணங்களின் இருப்பை தொடர்புடைய அரசு நிரூபிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அரசுகள் இடஒதுக்கீடு தர விரும்பினால், இடஒதுக்கீடு பெறவிருக்கும் அந்த வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தின் போதாமையைக் காட்டும் தரவுகளை அரசு சேகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அவ்வழக்கில் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வழங்கிய 10.5% வன்னியர் சாதியினருக்கான உள் இடஒதுக்கீட்டை போதுமான தரவுகள் இல்லை என்ற காரணத்தை கூறி சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்தன. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களை தனிப்பிரிவாக கருதுவதற்கு போதுமான தரவுகள் இல்லை என்றது எல். நாகேஷ்வர ராவ், பி. ஆர் கவாய் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு.
மராத்தா இனத்தவருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 16% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2018இல் மகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அசோக் பூஷண், எல். நாகேஸ்வரராவ், எஸ். அப்துல் நஸீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், அரசுப் பணிகளில் மராத்தா சமூகத்தினர் பெற்றுள்ள இடங்களை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மராத்தாக்கள் போதுமான அளவில் அரசுப் பணிகளில் இடம்பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டது. ஒரு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16(4) இன் படி போதுமான அளவில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்க வேண்டும். மாறாக, விகிதாசார அளவில் பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறி இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்ற நீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீட்டை ரத்துசெய்து விட்டது.
EWS இடஒதுக்கீட்டிற்கு தரவுகள் தேவையில்லையா?
முதலாவதாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(4) இன் படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தரவேண்டும் எனில், அரசின் கீழ் உள்ள துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை எனக் காட்டவேண்டும். வேலைவாய்ப்பில் EWS இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16(6)ஐ பொருத்தவரை போதுமான பிரதிநிதித்துவம் என்ற கருத்தாக்கம் கைவிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, இடஒதுக்கீட்டிற்கு தரவுகள் வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்த உச்சநீதிமன்றம் EWS இடஒதுக்கீட்டிற்கு போதுமான தரவுகள் உள்ளனவா என்ற கேள்வியை 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேட்கத் தவறிவிட்டது.மூன்றாவதாக, ஒன்றிய பாஜக அரசின் இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தவறான முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்திருத்தத்தின் காரணங்களையும் நோக்கங்களையும் விளக்கும் பகுதியில் (Statement of Object and Reason) கீழ்க்காணுமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
"பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடிமக்கள் உயர்கல்வி நிறுவனச் சேர்க்கை, பொது வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான போட்டியில், பொருளாதார வசதியின்மை காரணமாக, பொருளாதாரத்தில் அதிக வசதி பெற்ற நபர்களுடன் போட்டியிட இயலாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர்”.
இது பொய்யான அனுமானம். ஏனெனில் இந்த அனுமானத்தை ஆதரிக்க பாஜக அரசு எந்த தரவையும் வெளியிடவில்லை. உண்மையில், ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள உயர் சாதி தனிநபர்கள், அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் போதுமான பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதை நிரூபிக்க, ஒன்றிய, மாநில அரசுகளிடம் அத்தகைய தரவு எதுவும் இல்லை.
SC, ST வகுப்பினரின் ஒதுக்கீடு அவர்களின் மொத்த மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC மக்கள் தொகை 52%, ஆனால் உச்சநீதிமன்றம் வரையறுத்த 50% உச்சவரம்பு இருந்ததால், அவர்களுக்கு 27% இடஒதுக்கீடு மட்டுமெ தரப்பட்டது. ஆனால் EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கான காரணம் என்ன? இதற்கான தரவுகள் இல்லாமல் பாஜக அரசால் தன்னிச்சையாக EWS இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.
பாஜக அரசின் பொய்யான வாதம்:
நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக, ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் 2021 ஜுலை 29 அன்று வெளியிட்ட அறிவிப்பில், EWS இடஒதுக்கீட்டின் பயனாளிகளை கண்டறியும் விதிமுறைகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், EWS பயனாளிகளைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல்களைக் வரையறுக்கும் முன், அதற்கான தரவுகளை சேகரிக்கும் ஆய்வுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டதா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் முன்வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு, ஒன்றிய அரசு 2021 அக்டோபர் 26 அன்று EWS பயனாளிகளைக் கண்டறியும் அளவுகோல்களை நியாயப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் கலந்தாலோசித்த பின்னரே EWS பயனாளிகளைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல்கள் வடிவமைக்கப்பட்டன என்று கூறிய பாஜக அரசு, 2005இல் முந்தைய காங்கிரஸ் அரசு அமைத்த மேஜர் சின்ஹோ ஆணையத்தையும் துணைக்கு அழைத்தது.
மேஜர் சின்ஹோ அறிக்கை சொல்வதென்ன?
சின்ஹோ ஆணையம் தனது அறிக்கையின் பரிந்துரைகளில், இடஒதுக்கீட்டைத் தவிர்த்த வேறுவகையான நலத்திட்டங்களை EWS பிரிவினருக்கு தரலாம் என்றது. EWS பிரிவினரை அடையாளம் காண்பதற்காக பின்வரும் அளவுகோல்களை சின்ஹோ ஆணையம் பயன்படுத்தியது.
• மாதாந்திர தனிநபர் செலவு
• வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனரா?
• தொழில் முறை மற்றும் பின்தங்கிய நிலை
• கல்வியில் பின்தங்கிய நிலை
• உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை
• குடியிருப்பு வசதிகள்
மேற்கண்ட அளவுகோல்களை ஆய்வு செய்த சின்ஹோ ஆணையம் பின்வரும் பரிந்துரைகளை செய்தது.
- சமூகப் பொருளாதார பின்தங்கிய நிலை சமூக அளவில் நிலவுகிறது, ஆனால் பொருளாதாரப் பின்தங்கிய நிலை குடும்ப அளவில் நிலவுகிறது. இதனால், EWS பிரிவினரை அடையாளங்காணும் அலகாக குடும்பம் இருக்க வேண்டும்.
- வருமான வரி செலுத்தும் வரம்பை விட குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களும் EWS பிரிவினராக கருதப்பட வேண்டும்.
உயர்சாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த காங்கிரஸ் அரசின் சின்ஹோ ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்திய பாஜக அரசு, சின்ஹோ ஆணையத்தின் பரிந்துரைகளை பயன்படுத்தவில்லை.
இந்நிலையில், 2021 நவம்பர் 30 அன்று, ஒன்றிய அரசு EWS இடஒதுக்கீட்டிற்கான 8 இலட்ச ரூபாய் வருமான வரம்பை மறு ஆய்வு செய்ய முன்னாள் நிதிச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, ICSSR உறுப்பினர்-செயலாளர் பேராசிரியர் வி.கே. மல்ஹோத்ரா, ஒன்றிய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சய் சன்யால் ஆகியோரைக கொண்ட குழு ஒன்றை அமைத்தது. ஆண்டுக்கு 8 இலட்சம் குடும்ப வருமானம் என்ற ஒன்றிய அரசின் அளவுகோலை பாண்டே ஆணையம் நியாயப்படுத்தி அறிக்கை ஒன்றை 2021 டிசம்பர் 31இல் சமர்ப்பித்தது.
ஆண்டுக்கு 8 இலட்சம் என்ற ஒற்றை வருமான வரம்பின் அடிப்படையிலான அளவுகோல் மிகவும் பொருத்தமானது என்று பாண்டே ஆணையம் கூறியது. ஏனெனில், EWS பிரிவினரை அடையாளங்காண பல அளவுகோல்களை பயன்படுத்தினால், பெரிய அளவிலான ஆய்வுகள் தேவை. மேலும் 8 இலட்சம் ஆண்டு வருமானம் கொண்ட OBC வகுப்பினரை கிரீமி லேயர் என அடையாளங்கண்டு, அவர்களை இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர்களாக ஒதுக்கும் அதே தர்க்கத்தை EWS பயனாளிகளைக் கண்டறியவும் பயன்படுத்தலாம் என்ற முடிவை பாண்டே ஆணையம் எடுத்தது.
தற்போதைய நிலவரத்தின் படி, ஆண்டுக்கு 2.5 இலட்சத்திற்கு குறைவான வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கட்டத் தேவை யில்லை. சின்ஹோ ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில் தான் EWS பயனாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என ஒன்றிய பாஜக அரசு வாதிட்டாலும், தற்போதைய வருமான வரிவிலக்கு அளவுகோலைப் பயன்படுத்தவில்லை. சின்ஹோ ஆணையத்தின் பரிந்துரையை தற்போதைய சூழ்நிலைக்கு ஒப்பிட்டால், 2.5 இலட்சம் ஆண்டு வருமானத்திற்கு கூடுதலான வருமானம் உள்ளவர்கள் EWS இடஒதுக்கீட்டின் பயனாளிகளாகத் தகுதிபெற மாட்டார்கள். மாறாக ஒன்றிய பாஜக அரசும், பாண்டே ஆணையமும் 8 இலட்சம் ஆண்டு வருமானம் எனும் அளவுகோலின் படி EWS பிரிவினரை கண்டறிவது சரியான செயல் என வாதிடுகிறார்கள்.
மேலும் சரியான முறையில் சேமிப்புகள், வீட்டுக்கடன் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிதித் திட்டமிடல் செய்வாரெனில், 2019-2020 நிதியாண்டு நிலவரப்படி 8 இலட்சம் வரை வருமானம் உள்ளவர் வருமான வரி கட்டத் தேவையில்லை. எனவே 8 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்ற இலக்கு சரியே என்று பாண்டே ஆணையம் புது விளக்கம் அளித்தது.
2005இல் அமைக்கப்பட்ட சின்ஹோ ஆணையம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்து, 2010இல் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. பாண்டே ஆணையமோ 3 வாரங்களில் அறிக்கை சமர்ப்பித்துவிட்டது. 8 இலட்ச ஆண்டு வருமானத்தை நியாயப்படுத்த, எவ்வித ஆய்வுகளையும் கணக்கெடுப்புகளையும் பாண்டே ஆணையம் மேற்கொள்ளவில்லை.
OBC வகுப்பைச் சேர்ந்த கிரீமிலேயரைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் 8 இலட்சம் ஆண்டு வருமானம் எனும் அளவுகோலைப்பயன்படுத்தியே EWS பிரிவினரும் அடையாளம் காணப்படுகின்றனர். OBC வகுப்பினர் சமூக, மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையால் பாதிக்கப்படுகின்றனர். EWS பிரிவினருக்கு சமூகப் பின் தங்கிய நிலையால் பாதிப்பில்லை. OBC வகுப்பினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப் பயன்படுத்தும் அளவுகோல்களை EWS பிரிவினரை சேர்க்கப் பயன்படுத்த முடியாது போன்ற கேள்விகளுக்கு ஒன்றிய அரசு தரவுகளின் அடிப்படையில் இதுவரை பொருத்தமான பதிலளிக்கவில்லை.
OBC வகுப்பைச் சேர்ந்த கிரீமிலேயரைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோலை EWS இடஒதுக்கீட்டின் பயனாளிகளைக் கண்டறிய பயன்படுத்தலாம் என்ற பாண்டே ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு, அதை நியாயப்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தை துணைக்கு அழைத்தது.
OBC க்ரீமிலேயர், EWS பிரிவினர் ஆகியோரைக் கண்டறியும் வருமான அளவுகோல்கள் குறித்து பாஜகவைச் சேர்ந்த உறுப்பினரான தர்மேந்திர காஷ்யப் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பௌமிக், ஒரே நாட்டிற்குள் இரண்டு சமூகங்களின் பொருளாதார சமத்துவத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வெவ்வேறு அளவுகோல்களை வழங்கவில்லை என்று கூறினார்.
குடும்ப வருமானம் மற்றும் பிற பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் EWS பிரிவினர் தொடர்புடைய அரசுகளால் அடையாளங்காணப்படுவர் என திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 15 & 16) கூறுகிறது. எனினும் எந்த மாநில அரசையும் பாண்டே ஆணையம் கலந்தாலோசிக்கவில்லை. கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தான் 8 இலட்ச ஆண்டு வருமான அளவுகோல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் பாண்டே ஆணையம், கிடைத்ததாகச் சொல்லும் தரவு எதையும் சமர்ப்பிக்கவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் EWS இடஒதுக்கீட்டின் செல்லுபடித்தன்மை குறித்த வழக்கில் (2022), நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி (Multi-Dimensional Poverty Index) தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் EWS பயனாளிகள் மதிப்பிடப்படுவதாக அரசியலமைப்பு அமர்வு முன் ஒன்றிய அரசு வாய்மொழியாக கூறியது. அந்த தரவுகளின் அடிப்படையில், 18.2% உயர்சாதியினர் (General Category) EWS பிரிவின் கீழ் வருவார்கள் என ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறினார். அதன்படி சுமார் 3.5 கோடி மக்கள் EWS பிரிவினர் என்ற தகுதியைப் பெறுவர்.
ஆனால் 2022 டிசம்பர் 20 அன்று, EWS இடஒதுக்கீட்டிற்கு தகுதியான பயனாளிகளை அடையாளங்காண எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை, மேலும் அப்படிப்பட்ட ஒரு திட்டமும் ஒன்றிய அரசிடம் இல்லை என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மக்களவையில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்தா அகமது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறான வாதங்களை ஒன்றிய வைத்தது.
இவ்வழக்கை விசாரித்து, EWS இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்த நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, EWS பிரிவினரைக் கண்டறிய தொடர்புடைய தரவுகளும் காரணிகளும் உள்ளனவா என்ற கேள்விக்கு தேவைப்படும் நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கலாம், ஆனால் இவற்றை காரணங்களாக் கொண்டு EWS இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள அரசின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த முடியாது என்றார். நேரடி வார்த்தைகளில் சொல்வதானால், தரவுகள் இல்லாமல் EWS இடஒதுக்கீடு தர அரசுக்கு அதிகாரம் உண்டு. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratice Alliance - NDA) அரசை தரவில்லா அரசு (No Data Available – NDA Government) என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அழைத்தார். மேற்கண்ட வாதங்களில் இருந்து, 10% EWS இடஒதுக்கீட்டை, தரவில்லா அரசு வழங்கிய தரவில்லா இடஒதுக்கீடு (No Data Reservation) என்றழைக்கலாம்.
- சு.விஜயபாஸ்கர்