அனு ராம்தாஸ்: பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act 2009) எந்தளவிற்கு முக்கியம்?

நாஸ் கைர்: 1950 இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டம் (பிரிவு 45) ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க அரசை கட்டாயப்படுத்தியது. இருப்பினும், இந்த ஏற்பாடு அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கைகள் (Directive Principles of State Policy) வடிவத்தில் உருவாக்கப்பட்டதால், நீதிமன்றங்களால் அரசின் செயல்பாட்டை கண்காணித்து, செயல்படுத்த முடியாதபடி ஆகிவிட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் 86 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி ஒரு அடிப்படை உரிமையாக மாறியது. இதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் குழந்தைகளின் கல்வி உரிமைகள் குறித்த பிரச்சாரங்கள் உருவாகி, அது குறித்த இயக்கங்களும் தொடர்ந்து செயல்பட்டன. ஐக்கிய நாடுகள் மன்றம் குழந்தை உரிமைகளில் ஒன்றாக கல்வி கற்கும் உரிமையை ஐநா குழந்தை உரிமைகள் மாநாடு ஒன்றில் ஏற்றுக் கொண்டது. உலக வங்கியும் ஜரோப்பிய ஒன்றியமும் மற்ற பல அமைப்புகளும் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும் வழிமுறைகளை உருவாக்கி, பல்வேறு நாடுகளுக்கு அறிவுரை வழங்கியும், அவற்றை வழிநடத்தியும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை செய்தன.

86 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, கல்விக்கான உரிமை (பிரிவு 21A) வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் (பிரிவு 21) ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. 2002 இல் உருவாக்கப்பட்ட கல்விக்கான அடிப்படை உரிமைக் கோட்பாடுகள், 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act 2009) மூலம் நடைமுறைக்கு வந்தது. கல்வியை அடிப்படை உரிமையாக அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளித்ததின்படி, அடிப்படை உரிமையாகக் கல்வியை நடைமுறைப்படுத்த விதிகளை கல்வி உரிமைச் சட்டம் (RTE 2009) வகுத்தது. ஏப்ரல் 1, 2010 தேதி முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) கல்வி கற்பித்தல் நடைமுறையில் உள்ள பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்ததால் பரவலாக கொண்டாடப்பட்டது. சாதி, மதம், பாலினம், இனம், மொழி, உடல்குறைபாடு உடையோர் உள்ளிட்ட பல வேறுபாடுகளைக் களைந்து 6 – 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சம அளவில் கல்வி அடிப்படை உரிமை என்பதை கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியது . சமூகத்தின் சில பிரிவுகளும் குழுக்களும் மட்டுமே பெற்றுவந்த கல்வியை, அனைத்துப் பிரிவினரும் கொண்டுசேர்க்கும் நோக்கில், முன்னர் இருந்த சமூக, பாரம்பரிய மற்றும் வரலாற்றுப் பாகுபாடுகள் அகற்றப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனைவருக்குமான கல்வி என்ற நோக்கத்திற்கு எதிரான அனைத்து தடைகளும் அகற்றப்பட்டன. காலங்காலமாக கல்வி கற்க போராடும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு (SC, ST, BC, MBC, Backward Muslims) கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.tamil children1961 இல், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதம் 28.31 விழுக்காடாக இருந்தது. அதில், பட்டியலின மக்களில் 10.27 விழுக்காட்டினரும், பழங்குடியின மக்களில் 8.53 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். 50 ஆண்டுகள் கழித்து, 2011 ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதம் 74.04 விழுக்காடாக உயர்ந்தபோது, பட்டியலின மக்களில் 66.07 விழுக்காட்டினரும், பழங்குடியின மக்களில் 59 விழுக்காட்டினரும் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலுவையில் உள்ளதால் கல்வியறிவு பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் விகிதச்சார புள்ளிவிபரங்கள் நம்மிடையே இல்லை. இருப்பினும், சுர்ஜித் பல்லா தயாரித்த கல்வித் தகுதி குறியீட்டிற்கான (Index of educational attainment) ஆய்வறிக்கையின்படி, 1999 ஆம் ஆண்டில் 7.1 என்ற அளவில் இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வித் தகுதிக்கான குறியீடு 2011 ஆம் ஆண்டில் 10.7 என்ற அளவுக்கு அதிகரித்தது.

முஸ்லிம்களுக்கான கல்வி வளர்ச்சிக் குறியீடு 1999 ஆம் ஆண்டில் 6.3 என்பதாகவும், 2011 ஆம் ஆண்டில் 8.4 என்ற அளவிலும் இருந்தது. 2011 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் கல்வியறிவு மற்ற மதங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களோடு (கிறிஸ்தவ, இந்து மற்றும் சீக்கியர் மதங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட) ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும், பட்டியலின, பழங்குடியின மக்களை விட மிக குறைந்த அளவில் (0.3 புள்ளிகள்) மேம்பட்டு இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவித்தன. ஆகவே, சுதந்திரத்திற்கு பிறகு பெரிய அளவில் கல்வி விரிவாக்கமும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் செய்யப்பட்ட பின்னரும், கல்வியில் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து இருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. கல்வி கற்பதில் வெவ்வேறு சமூகஙகளுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எதிர்காலத்தில் நீக்கும் வாக்குறுதியை கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) அளித்திருந்தது. இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்திற்கு பிந்தைய காலத்தில் குழந்தைகளின் கல்வி உரிமைகள் திட்டமிட்ட முறையில் சிதைக்கப்படுவதை மட்டுமே காண்கிறோம்.

குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2016) திருத்தச் சட்டத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறை, முக்கியமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, முஸ்லிம்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட புதிய கல்விக் கொள்கை, கல்வி உரிமைச் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மாற்றுப் பாதையில் செல்கிறது. 10 விழுக்காட்டிற்கும் குறைவான பள்ளிகளே கல்வி உரிமைச் சட்டத்தின் (Right to Education Act – 2009) கீழ் வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு, பள்ளிக்கல்வியை தனியார்மயமாக்கும் வகையில் கல்வித் தொழிற்சாலைகளின் பெருக்கம் மிக வேகமாக நடைபெறுகிறது. ஆரம்பக் கல்வியில் இடைநிற்றலை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முக்கியமான சட்டப் பாதுகாப்பு கல்வி உரிமைச் சட்டத்தின் சமீபத்திய திருத்தத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்ச்சியடையாதவர்கள் என்ற பெயரில் குழந்தைகளை ஒரே வகுப்பில் பலகாலம் நிறுத்தி வைக்காமல் இருப்பதின் மூலம் கல்வி இடைநிற்றலை குறைப்பதால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த (பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, முஸ்லிம்) குழந்தைகளுக்கான நல்வாய்ப்பாக இருந்த, ஆரம்பக் கல்வியில் இடைநிற்றலை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. வரலாற்று ரீதியாக கல்வி கற்பதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, முஸ்லிம் குழந்தைகளின் மத்தியில் இடைநிற்றல் தவிர்க்க முடியாதது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாகவும், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் என்ற முறையிலும் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் கல்வித் துறையில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, பட்டியலின, முஸ்லிம் மக்கள் முன்னேறுவதற்கு கூடுதல் காலம் தேவைப்படும். எனவே, கல்வியில் இடைநிற்றலை தடுக்கும் சட்டப்பிரிவுகள் அம்மக்களின் கல்வி கற்கும் உரிமைக்கு பெரிதும் உதவின. அந்தவகையில். பாஜக அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை (2016) மனித உரிமையாகவும் அடிப்படை உரிமையாகவும் உள்ள கல்விபெறும் உரிமையை ஒட்டுமொத்தமாக முடக்கும் அளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது!

அனு: பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) எவ்வாறு பயன்படுகிறது?

நாஸ்: கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) C அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளிலும், சிறப்புப் பள்ளிகளிலும் (கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் போன்றவை) பின் தங்கிய பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கான (நலிவடைந்த பிரிவுகள் - EWS, பின்தங்கிய குழுக்கள் – Disadvantaged Groups) 25 விழுக்காடு இடங்களை ஆரம்பக்கல்வியில் உறுதிசெய்தது. இருப்பினும், இன்னார் தான் நலிவடைந்த பிரிவினர் என்றும், இன்னார் தான் பின்தங்கிய குழுவினர் என்றும் கல்வி உரிமைச்சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு மாநிலங்கள் நலிவடைந்த பிரிவினரையும் பின்தங்கிய குழுவினரையும் வெவ்வேறு விதமாக வரையறுத்துள்ளன. பல மாநிலங்களில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமானதாகவோ, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகளுக்கு மட்டுமானதாக மட்டுமே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை.

சில மாநிலங்களில் பெற்றோர் இல்லாத குழந்தைகளையும், எயிட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும், வீடற்ற குழந்தைகளையும் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும், மரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளையும், ஊனமுற்ற பெற்றோர்களின் குழந்தைகளையும் உள்ளடக்கியுள்ள வகையில் நலிந்த பிரிவும்(EWS) பின்தங்கிய பிரிவும் (Disadvantaged Group) உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கர்நாடகா 11 வகையான பிரிவினரை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (EWS and DG) இட ஒதுக்கீடுகளுக்குத் தகுதியானவர்களாக வரையறுக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் (EWS) கீழ், பட்டியலின, பழங்குடி பிரிவினர் உள்ளிட்டோரை கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) 12 (1) C பிரிவின் படி கொண்டு வந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்தப் பிரிவில் இடமில்லை. ஒரிசாவில் 12 (1) C பிரிவின் கீழ், பிற்படுத்தப்பட்ட மக்களைத் தவிர்த்துவிட்டு, கையால் மலம் அள்ளுபவர்கள், வீடற்ற குழந்தைகள், தெருவோர குழந்தைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் போன்றவர்களின் குழந்தைகளை உள்ளடக்கி ‘கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய வகையினர்’ உருவாக்கப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்கள் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 12 (1) C இன் கீழ் குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தோரை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்ற வரையறைக்குள் கொண்டுவந்துள்ள பல எடுத்துக்காட்டுகள் நம்மிடையே உள்ளன. உதாரணம் கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள். பஞ்சாப் மாநிலத்தில் பட்டியலின சேர்க்கைக்கு வருமான வரம்பை அடிப்படையாக வைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்ட மக்களும் (OBC & SBC) சேர்க்கப் பட்டுள்ளனர். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சாதிகளை வருமான உச்சவரம்புடன் இணைத்து பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் (EWS) கீழ் ராஜஸ்தான் அரசு சேர்த்துள்ளது. திரிபுராவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினைரை உள்ளடக்கியே பின்தங்கிய குழு (DG) உருவாக்கப்பட்டுள்ளது. மேகாலயாவின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு பட்டியலின, பழங்குடியின மக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஜார்க்கண்ட்டில் பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினரை வருமான உச்சவரம்புடன் இணைத்து பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக பின்தங்கிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

naaz khairகல்வி உரிமைச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கிய சிக்கல்கள் உள்ளன. போலி வருமானச் சான்றிதழ்கள், போலி சாதிச் சான்றிதழ்கள், வருமான, சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் மத்தியில் காணப்படும் அதிகமான இடைநிற்றல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களைப் பற்றிய பிரிவு வாரியான முறையான தகவல்கள் இல்லாமை உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளன.

அனு: கல்வி உரிமைச் சட்டத்தை (2009) 10% EWS இட ஒதுக்கீட்டின் முன்னோடியாக பார்க்கிறீர்களா?

நாஸ் கைர்: பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பல ஆண்டுகால சாதி எதிர்ப்பு போராட்டத்தின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி. அந்த வெற்றியை தடுப்பதிலும், அதை செயல்படுத்த விடாமல் குறுக்கீடு செய்வதிலும் உயர்சாதியினர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சாதியினால் தங்களுக்கு அடிமைகளாக இருந்த மக்களுக்கு எதையும் விட்டுக்கொடுக்க உயர்சாதியினர் முன்வரமாட்டார்கள். அவர்களால் முன்வரவும் இயலாது. சாதிய பாகுபாட்டை களைய உதவும் வகையில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்புகள் இருந்தபோதிலும், சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கொள்கை அளவிலும் நடைமுறைப்படுத்தலிலும் அனைத்து மட்டங்களிலும் வளர்த்தெடுக்கப்படுவதையே நம்மிடையே உள்ள சான்றுகள் உணர்த்துகின்றன.

முழுமையாக நடைமுறையில் செயல்படுத்தப்படாமல் இத்தனை ஆண்டுகாலமாக இட ஒதுக்கீடு இருக்கின்ற நிலையில், இன்றும் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை கண்டுபிடித்து அவர்களை மேம்படுத்துவதற்கு பதிலாக பொருளாதார அளவுகோல்களைப் பயன்படுத்துவது என்பது , பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை பலவீனப்படுத்த உயர் சாதியினர் உருவாக்கியுள்ள பிளவுபடுத்தும் சாதியவாத உத்தியே தவிர வேறில்லை. வருமான வரம்பு (கிரீமிலேயர்) என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குள் பொருளாதார அளவுகோல்கள் முதலில் கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) கீழ் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 25 விழுக்காடு இடஒதுக்கீட்டிலும் பொருளாதார அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். எனவே, 10% EWS இட ஒதுக்கீட்டை கொண்டுவருவதற்கு முன்னரே பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. 10% EWS ஒதுக்கீட்டில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற கருத்தாக்கம் இல்லை, மாறாக ஆளும் வர்க்கத்தை சேர்ந்த உயர்சாதி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வழியை உருவாக்கியுள்ளது.

அனு: ஒடுக்கப்பட்டவர்களின் (பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள்) கல்வியும் வேலை வாய்ப்பும் எப்படி உள்ளது? 10% EWS இட ஒதுக்கீடு அவர்களை எவ்வாறு பாதிக்கும்?

நாஸ் கைர்: Pasmanda (கைவிடப்பட்டவர்கள் என்று பொருள்) என்ற சொல் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் மக்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பட்டியிலன முஸ்லீம்கள் இன்னும் அரசியலமைப்பின் கீழ் பட்டியலின அந்தஸ்தை (SC) பெறவில்லை. ஏனெனில் அரசியலமைப்பின் 341 வது பிரிவு மத அடிப்படையில் அவர்களை பட்டியலின பிரிவில் இருந்து விலக்கி வைக்கிறது. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையின்படி, 2004-05 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் உள்ள பட்டியலின முஸ்லீம் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (48.8 விழுக்காடு) கல்வியறிவு இல்லாதவர்களாகவும், கிராமப்புறங்களில் உள்ள பட்டியலின இந்துக்களில் 48.53 விழுக்காட்டினர் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதைப் போலவே. கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களிடையே கல்வியறிவு இல்லாதவர்கள் 47.36 விழுக்காடு என்ற அளவில் பின் தங்கியே இருக்கின்றனர். கைவிடப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்புக்களைப் பொறுத்தவரை, குளோகால் பல்கலைக்கழகத்தின் (Glocal University) பேராசிரியர் காலித் அனிஸ் அன்சாரி கைவிடப்பட்டவர்கள் அரசு வேலைகளில் மிகவும் குறைவாகவே உள்ளனர் என்றும், அதேசமயம் உயர்சாதி முஸ்லிம்களான அஷ்ரஃப் பிரிவினர் அவர்களுடையை மக்கள்தொகை விழுக்காட்டை விட கூடுதலான பிரதிநிதித்துவத்தை (சச்சார் குழு அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட மத்திய பாதுகாப்பு துறை, ரயில்வே துறை, மத்திய பொதுத்துறை, பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பல்கலைக்கழக ஊழியர்கள்) பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றுள்ளனர் என்றும் தனது ஆய்வுகளில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பல மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொருளாதார அளவுகோல்களைப் பயன்படுத்துவது, சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள், பொதுவாக சாதிய ரீதியான தவறான முன்முடிவுகள், தப்பெண்ணங்கள் போன்றவற்றால், பெரும்பான்மையான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் திறந்த பிரிவில் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். 10% EWS இட ஒதுக்கீட்டில் உயர் சாதியினருக்கான இடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த சட்டப் பாதுகாப்பு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இல்லை. ஊடகங்களில் வெளிவந்த, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உயர் சாதியினர் பொதுப் பிரிவு (Open Category) மாணவர் சேர்க்கையிலும் வேலைவாய்ப்பிலும் பெரும்பான்மை இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அதாவது பெயரளவில் பொதுப் போட்டிக்கான இடமாக இருந்தாலும் நடைமுறை அளவில் உயர் சாதியினருக்கான இடமாகவே உள்ளது. சிறுபான்மை நிறுவனங்களுக்கு கல்வி உரிமைச் சட்ட இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம் சிறுபான்மை உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சிறுபான்மை நிறுவனங்களில் கைவிடப்பட்டவர்களுக்கு (Pasmanda) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கைவிடப்பட்ட மக்கள் நலனுக்கு உழைக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு உதாரணம்.

(இது கைவிடப்பட்ட (Pasmanda) மக்கள் நலனில் ஈடுபாடு கொண்ட நாஸ் கைரின் நேர்காணலின் தமிழாக்கம். அவர் Aspire India அறக்கட்டளையின் இயக்குநர். நேர்காணலை நடத்தியவர் Round Table India பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் அனு ராம்தாஸ்)

நன்றி: Round Table India இணையதளம் (2019, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: மகேஷ்குமார்

Pin It