இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சுதந்திரத்திற்குப் முந்தைய காலகட்டத்தில் உருவான கருத்து. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இட ஒதுக்கீடு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. 1880 களில் பம்பாய் மாகாணத்தில் தோற்றுவிக்கப்பட்ட சர்வஜன சங்கம், சென்னை மாகாணத்தில் தோற்றுவிக்கப்பட்ட மகாஜன சபை முதலிய சங்கங்கள் இந்தியருக்கு அரசியல் உரிமைகள் வேண்டும் என்பதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. ஆங்கிலேய அரசு 1880 ஆம் ஆண்டில் சர் வில்லியன் வில்சன் ஹண்டர் தலைமையில் கல்வி ஆணையம் அமைத்தது. மராட்டியத்தின் ஜோதிராவ் பூலே, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என ஹண்டர் ஆணையத்தை கோரினார்.

1890 இல் மைசூர் சமஸ்தானத்தில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பார்ப்பனர் அல்லாதார் குரல் எழுப்பினர். அதன் பிண்ணனியில், 1894-95 ஆம் ஆண்டில் அப்போதைய மைசூர் அரசர் “பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பினருக்கும் மைசூர் சமஸ்தான உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு தரும் ஆணையை பிறப்பித்தார். இருப்பினும்,1918 ஆம் ஆண்டு வரை இந்த ஆணை நடைமுறைக்கு வரவில்லை. 1902 ஆம் ஆண்டில், கோலாப்பூர் அரசர் சத்ரபதி சாகு மகாராஜ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதவர்களைக் குறிக்கிறது. கோலாப்பூர் சமஸ்தானமும் போலவே பரோடா, கோலாப்பூர் உள்ளிட்ட மற்ற சமஸ்தானங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கைகளில் இறங்கின. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்தில் கொண்டிருந்த அக்கறையின் விளைவாக இட ஒதுக்கீடு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

1921 ஆம் ஆண்டில், நீதிக்கட்சியைச் சார்ந்த சுப்பாராயலு ரெட்டியார் தலைமையிலான மெட்ராஸ் மாகாண அரசு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்கள், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு தலா 16%, தலித் மக்களுக்கு 8% அரசு வேலைகளை ஒதுக்கியது. 6 ஆண்டுகள் கழித்து, 1927 ஆம் ஆண்டில் சுப்பாராயன் தலைமையிலான அரசால் Communal G.O என்றழைப்படுகிற மேற்சொன்ன வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து 1950 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த இந்த அரசாணை வேலைவாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் பயன்படுத்தப்பட்டது

இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் தலித்துகள் தங்களது பிரதிநிதிகளைத் தாங்களே தேர்வு செய்யும் வகையில், அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதி உள்ளிட்ட கோரிக்கைகளை அம்பேத்கர் முன்வைத்திருந்தார். அம்பேத்கரின் கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. இதற்கு காந்தி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். “இந்து சமுதாயத்துக்குள் இந்த முடிவு பிளவை ஏற்படுத்திவிடும்” என்று அவர் கருதினார். தலித் மக்களுக்குத் தனித்தொகுதி வழங்கும் பிரிட்டிஷ் அரசின் முடிவுக்கு எதிராக, சிறையில் இருந்தபடியே, 1932 செப்டம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரத்தைத் தொடங்கினார். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவானது. தலித் மக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் அபாயமும் ஏற்பட்டது. எனவே, தனித்தொகுதி கோரிக்கையைக் கை விடுமாறு மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரிடம் பேச்சு நடத்தினார்கள். அச்சமயம் சோவியத் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தந்தை பெரியார் 'ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது தற்கொலைக்கு ஒப்பானது. கையொப்பம் இடாதீர்கள்' எனத் தந்தி மூலம் அம்பேத்கருக்கு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் காந்தியின் பிடிவாதத்தின் காரணமாக நாட்டில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டதால், தனது கோரிக் கையை அம்பேத்கர் கைவிட்டார். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனடிப்படையில் மாகாண சட்டசபைகளில் 148 இடங்களும், ஒன்றிய பாராளுமன்றத்தில் 10% இடங்களும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கின் கீழ் உள்ள 36 முதல் 51 வரை பிரிவுகள் மொத்தமாக அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாட்டுகள் (Directive Principles of State Policy) என அழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் காணப்படும் பிரிவுகளை எந்த நீதிமன்றத்தின் மூலமும் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால், இப்பகுதியில் அடங்கியுள்ள கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையாகும். இக்கொள்கைகளின் படி சட்டமியற்றுவது அரசின் கடமையாகும். 46 ஆவது பிரிவில் இட ஒதுக்கீடு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் நலிந்த பிரிவினர், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் கல்வி, பொருளாதார நலன்களில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி ஊக்குவிப்பதுடன், சமூக அநீதியிலிருந்தும், அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாட்டில் ஒன்றான 46 ஆவது பிரிவைப் பின்பற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16 ஆவது பிரிவுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகளை வழங்குகிறது. பிரிவு 330 மக்களவையில் பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது. பிரிவு 332 மாநிலச் சட்டப்பேரவைகளில் பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது. பிரிவு 330 பஞ்சாயத்து அமைப்புகளில் பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது. மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு இல்லை. அதே போல், உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு இல்லை.

செண்பகம் துரைராஜன் எனும் தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பெண் தொடுத்த வழக்கின் விளைவாக மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறையில் இருந்த, நீதிக்கட்சி அரசு அறிமுகப் படுத்திய, வகுப்புவாரி பிரதிநிதித்துவ (Communal GO) அரசாணை செல்லாது என 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து அன்றைய மெட்ராஸ் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுமென, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இட ஒதுக்கீடு செல்லாதென அறிவித்த உச்ச நீதிமன்றத்தை கண்டித்து, தமிழ் நாட்டின் பல பகுதிகளில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கண்டனக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணல் அம்பேத்கரும் போராட்டத்திற்கு ஆதரவளித்தார். அதன் விளைவாக அன்றைய இந்தியப் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆகியோர், இட ஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 15 வது பிரிவில் ஒரு புதிய உட்பிரிவை 15(4) ஏற்படுத்த முடிவு செய்தனர்.

சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் கல்வி, பொருளாதார நலன்களை அரசு சிறப்பு கவனத்துடன் ஊக்குவிக்க வேண்டும், மேலும் சமூக அநீதியிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அரசுக் கொள்கையின் அடிப்படையாக 46 ஆவது பிரிவி ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார அல்லது சமூக முன்னேற்றத்திற்காக அரசு செய்யும் எந்தவொரு சிறப்பு ஏற்பாட்டையும் பாரபட்சம் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பக்கூடாது எனும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 15(3) பிரிவை பொருத்தமாக மாற்றியமைக்க வேண்டும்” என்று நேரு சட்டத் திருத்தத்தை முன்வைத்துப் பேசினார். அதன்படி ஜூன் 1951 இல் கொண்டு வரப்பட்ட முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், மீண்டும் இட ஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது. தற்போது, ஒன்றிய, மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு கொள்கைகளின் ஆதாரம் இச்சட்டத்திருத்தமே ஆகும்.supreme court 309இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள்

இட ஒதுக்கீடு கொள்கைகள் நீதித்துறையின் விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. சில முக்கியமான வழக்குகளின் சுருக்கமும் அவற்றின் விளைவும் இங்கே எழுத்தாளப்பட்டுள்ளன.

அவற்றுள் முதலாவது வழக்கு மேலே குறிப்பிட்ட செண்பகம் துரைராஜ் தொடுத்த வழக்கில், “வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை, எங்கள் பார்வையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 29(2) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை தெளிவாக மீறுகிறது” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்த பெரியாரின் போரட்டத்தின் விளைவாக அரசியலமைப்புச் சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

1963 ஆம் ஆண்டில் மைசூர் மாநிலம் அரசை எதிர்த்து எம்.ஆர்.பாலாஜி தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீட்டில் "நியாயமான வரம்புகள்" என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. அன்றைய மைசூர் மாநிலத்தில் 68% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. பிரிவு 15(4) வரலாற்று ரீதியாக பின்தங்கியவர்களை பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டிருந்தாலும், சமூகத்தின் நலன்களை புறக்கணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. “சமூகத்தின் நலிந்த பிரிவினரை முன்னேற்றுவதற்கு வாய்ப்புகளை உருவாக்க இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப் படவேண்டும் என்ற போதிலும், ​​மற்ற சமூகங்களின் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் உயர்கல்விச் சேர்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வகையில் அரசியலைப்புச் சட்டப்பிரிவுகள் 15(4), 16(4) ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் இட ஒதுக்கீடு நியாயமான வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் கூறியது.

“சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் நலன்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருந்தாலும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுவாக கூற வேண்டுமென்றால், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு தரப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு குறைவாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு வரம்பு சூழ்நிலைகளைப் பொறுத்திருக்க வேண்டும்” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இட ஒதுக்கீட்டில் 50% உச்ச வரம்புக்கு அடிப்படையாக அமைந்தது. 10% EWS இட ஒதுக்கீட்டுச் சட்டம் வரும் வரை ஒன்றிய அரசைப் பொறுத்த வரையில் 50% உச்ச வரம்பு நடைமுறையில் இருந்தது.

இந்திரா சஹானி தொடுத்த வழக்கில், 1992 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மிகவும் பிரபலமான தீர்ப்பாகும். 1977 ஆம் ஆண்ச்டில் பி.பி மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையம், 1980 ஆம் ஆண்டில் (31-12-1980) தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அடுத்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மண்டல் ஆணைய பரிந்துரைகளை 1990 ஆம் ஆண்டில் (13-8-1990) வி.பி. சிங் அரசு செயல்படுத்த முன்வந்தது. அதன்படி பிறப்பிக்கப்பட்ட அரசுக் குறிப்பாணை (Office Memorandum), பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) ஒன்றிய அரசுப் பணிகளில் 27% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்தது. இந்த நிலையில் விபி சிங் அரசு கவிழ்ந்தது. அதன்பின்னர் பதவியேற்ற நரசிம்மராவ் அரசு, மேற்சொன்ன அரசுக் குறிப்பாணையில் மாறுதல்கள் செய்யப்பட்டு, புதிய அரசுக் குறிப்பாணை வெளியிடப்பட்டது. அதன் படி ஏற்கனவே உள்ள SC, ST, OBC இட ஒதுக்கீட்டில் வராத பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (உயர்சாதியினர்) அரசுப் பணிகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது. மேற்குறிப்பிட்ட அரசு உத்தரவுகளை எதிர்த்து, இந்திரா சஹானி உள்ளிட்ட பலர் வழக்குத் தொடுத்தனர். உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம், அதன் வரலாற்றிலேயே 17 வழக்குகளை மட்டுமே ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்துள்ளது. அவற்றுள் இந்த வழக்கும் ஒன்று.

உச்ச நீதிமன்றம் 6:3 என்ற விகிதத்தில் OBC இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. ஆனால் சில நிபந்தனைகளை விதித்தது. இடஒதுக்கீடு என்பது விகிதச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்டது என்ற முக்கியமான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் அளித்தது.

ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை விகிதம் நிச்சயமாக பொருத்தமானதாக இருக்கும் என்றாலும், விகிதாச்சார பிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் 16(4) ஆவது பிரிவின் மூலம் கிடைத்த அதிகாரத்தை கொண்டு வழங்கப்படும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது. நியாயமான முறையில், நியாயமான வரம்புகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றது. மேலும் "கிரீமிலேயர்" என்ற கருத்தை இத்தீர்ப்பின் மூலம் அறிமுகப்படுத்திய உச்ச நீதிமன்றம் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீண்டும் நிலைநிறுத்தியது. கிரீமிலேயர் என்பது OBC வகுப்பில் உள்ள குறிப்பிட்ட அளவு வருமானம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அத்தகையவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக் கூடாது என்றது உச்ச நீதிமன்றம். "பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே மிகவும் முன்னேறிய சமூக, கல்வி நிலையை கொண்ட பிரிவுகள் உள்ளன. இவர்கள் உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மற்ற உயர்சாதியினரைப் போலவே முன்னேறியவர்கள்” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேபோல், இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இட ஒதுக்கீடு பதவி உயர்வுகளுக்குப் பொருந்தாது என்றும் ஆரம்பநிலை நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் அடுத்தடுத்த அரசியலமைப்பு திருத்தத்தில் தீர்ப்பின் இந்த பகுதியை ரத்து செய்தது.

வி.பி.சிங் அரசு OBC வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு அளித்தது வேலைவாய்ப்பில் மட்டுமே. கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு 20.01.2006 அன்று மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அளிக்கப்பட்டது. பின்னர் அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டு 10.04.2008 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எம் நாகராஜ் (2006) வழக்கில் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை தாண்டக் கூடிய நிபந்தனைகளை வரையறுத்த இத்தீர்ப்பு முக்கியமானது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், பதவி உயர்வில் SC, ST வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்ற நாடாளுமன்றத்தின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், அத்தகைய இட ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்தது.

SC, ST வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மூன்று நிபந்தனைகளை நாகராஜ் வழக்குத் தீர்ப்பு வகுத்தது. முதலில், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெறும் வகுப்பின் பின்தங்கிய நிலையை அரசு தரவுகளுடன் நிறுவ வேண்டும். இரண்டாவதாக, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகுப்பினர் அரசுத் துறையில் போதுமான அளவில் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதைக நிரூபிக்க வேண்டும். இறுதியாக, இட ஒதுக்கீடுகள் நிர்வாகத் திறனின் நலனுக்கானவை என்பதையும் நிறுவ வேண்டும்

EWS இட ஒதுக்கீடும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்

இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16 ஆகிய பிரிவுகளைத் திருத்தி, 15(6), 16(6) ஆகிய இரு புதிய உட்பிரிவுகளைச் சேர்த்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மோடியின் பாஜக அரசு நிறைவேற்றியது. இச்சட்டத் திருத்தத்தின் படி, SC, ST, OBC அல்லாத சாதியினர் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு பெறத் தகுதி பெற்றனர். இச்சட்டத் திருத்த மசோதவிற்கு ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் ஜனவரி 7 ஆம் தேதி கிடைத்தது. ஜனவரி 8 ஆம் தேதி மக்களவையிலும், ஜனவரி 9 ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம், ஜனவரி 12, 2019 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது மற்றும் அதே நாளில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

புதிய சட்டப்பிரிவு 15(6) இன் கீழ் கொண்டுவரப்பட்ட திருத்தம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடிமக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உட்பட, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. சட்டப்பிரிவு 30(1) இன் கீழ் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர, உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் நிறுவனங்கள் உட்பட எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இத்தகைய இட ஒதுக்கீடு தரலாம் என்று சட்டத்திருத்தம் கூறுகிறது. EWS இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பு 10% ஆக இருக்கும். அதாவது EWS பிரிவில் வரும் குடிமக்களுக்கு அதிகபட்சம் 10% இடங்கள் வரை ஒதுக்கப்படலாம். இந்த 10% உச்சவரம்பு தற்போதுள்ள SC, ST, OBC இட ஒதுக்கீட்டிற்குள்ள உச்சவரம்பிற்கு மேலதிகமாகத் தரப்பட்டது. பிரிவு 16(6) அரசுப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான ஏற்பாடுகளை செய்ய உதவுகிறது. இந்த இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடுகளுடன் மேலதிகமாக 10% உச்சவரம்புக்கு உட்பட்டது.

இதனை எதிர்த்து 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மீறுவதாகவும், பிரிவு 14 இன் கீழ் உள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் கீழ்க்காணும் 5 முக்கியமான கேள்விகள் ஆராயப்பட்டன.

  1. பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
  1. EWS இட ஒதுக்கீட்டு வரம்பில் இருந்து பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வகுப்பினரை விலக்க முடியுமா?
  1. இந்திரா சஹானி (1992) வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை EWS இட ஒதுக்கீடு மீற முடியுமா?
  1. அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
  1. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை (Basic Structure Doctrine of the Consititution) EWS இட ஒதுக்கீடு மீறுகிறதா?

அப்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித், ரவீந்தர பட், ஜே.பி. பர்திவாலா, தினேஷ் மகேஷ்வரி, பி.எம். திர்வேதி என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்து, 3:2 என்ற விகிதத்தில் 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்தது.

சு.விஜயபாஸ்கர்

Pin It