மருத்துவ அறிவியல் வெகுவாக முன்னேறி இருக்கிறது. மனித உடலில் இரத்த நாளங்களின் வழி அடைபட்டுப் போனால், அதனுள் உலேகத்தினாலோ, நெகிழ்மத்தினாலோ (Plastic) செய்யப்படட செயற்கைக் குழாய்களைப் (Stent) பொருத்தி, உடலியக்கத்தைத் தடை இன்றித் தொடர வைக்கும் அளவிற்கு அது முன்னேறி உள்ளது. ஆனால் அதை முறையாகப் பயன் படுத்தும் அளவிற்குச் சமூக அறிவியல் வளர்ந்து இருக்கிறதா என்று ஆராய்ந்தால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

operation roomபண்டைய காலத்தில் மருத்துவ அறிவியலில் சிறந்து விளங்கியவர்களை "இராஜ வைத்தியர்கள்" அல்லது "அரண்மனை வைத்தியர்கள்" என்று பெயர் சூட்டி, அரண்மனைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு, வெகு மக்களுக்கு உயர் தரச் சிகிச்சை கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள். மருத்துவக் கல்வியைப் பரப்பி, மக்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு, அக்கால மக்களின் உற்பத்தி ஆற்றல் போதுமானதாக இல்லை. ஆகவே வெகு மக்கள் பல சமயங்களில் உரிய சிகிச்சை பெற முடியாமல் மாண்டு கொண்டு இருந்தனர்.

முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்குக் காரணமான தொழிற் புரட்சிக்குப் பின், மனித குலத்தின் உற்பத்தி ஆற்றல் மிகப் பிரம்மாண்டமான அளவிற்கு வளர்ந்து உள்ளது. இத்தகைய நிலையில் மனித குலத்திற்குத் தேவையான பொருட்களை / பண்டங்களைத் தேவையான அளவிற்கு மிகாமலும், குறையாமலும் உற்பத்தி செய்யும் ஆற்றலை மனித குலம் பெற்று உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் மனிதர்கள் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

மதுரையில் சரவணா மருத்துவ மனை என்ற தனியார் மருத்துவ மனையில், ஒரு ஏழை நோயாளியின் இரத்த நாளத்தில் செயற்கைக் குழாயைப் பொருத்த நேரிட்டு உள்ளது. இந்நோயாளி ஏழை என்பதால், மனதிற்குத் தோன்றியபடி எல்லாம் பணத்தை அவரிடம் இருந்து வசூலிக்க முடியாது. அவர் முதலமைச்சரின் கூட்டுச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற அனுமதிக்கப் பட்டு இருந்தார். சிகிச்சை அளிப்பதில் தவறு நேர்ந்தால், அதை எதிர்த்து அவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில், செயற்கை உறுப்புகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், தான் உற்பத்தி செய்து வைத்திருந்த செயற்கை இரத்த நாளக் குழாய்களை விற்க முடியாமல் அவை காலாவதி ஆகி இருந்தன. காலாவதியான அவ்வுறுப்புகளை வீசி எறிவதால் வரும் இழப்பைத் தடுக்க, அந்நிறுவனமும் மருத்துவ மனையும் கூட்டுச் சதியில் ஈடுபட்டன. மருத்துவர்கள் காலாவதியான செயற்கை இரத்த நாளக் குழாயை அந்த ஏழை நோயாளியின் உடலில் பொருத்தி விட்டனர்.

அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளித்ததற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திடம் கோரிய போது, அந்நிறுவனம் காலாவதியான செயற்கை உறுப்பைப் பொருத்தியதை (14.5.2015 அன்று) மோப்பம் பிடித்து விட்டது. உடனே அந்நிறுவனம் சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்த மறுத்தது. இவ்விவகாரம் பெரிதாகி, சிகிச்சையில் வேண்டும் என்றே தவறு செய்த இரு மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. உடனே இரு மருத்துவர்களும் தலைமறைவாகி, மதுரை உயர் நீதிமன்ற அமர்வில், முன் பிணைக்காக (Anticipatory bail) மனு செய்தனர். இம்மனுவில் தாங்கள் பெரிய வள்ளல்கள் என்றும், ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு என்றே ஒரு அறக் கட்டளையை நடத்துவதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

இம்மனுவை 22.3.2016 அன்று விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற அமர்வு, இந்நிகழ்வு குறித்து முதலில் தனது ஆழ்ந்த அதிர்ச்சியைத் தெரிவித்தது. மனித உயிர்களை அற்பமாக மதிக்கும் இம்மருத்துவர்களுக்குப் பிணை அளிக்க முடியாது என்றும் கூறி விட்டது.

இந்நிகழ்வில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்த முறையற்ற செயலில் மருத்துவ மனையும், செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனமும் மட்டுமே கூட்டு சேர்ந்து உள்ளன. மருத்துவக் காப்பீட்டுக் கழகத்தையும் அவர்கள் தங்கள் கூட்டுச் சதியில் சேர்த்துக் கொண்டு இருந்தால் இந்த முறையற்ற செயல் வெளியே தெரிந்தே இருக்காது. (மூன்று நிறுவனங்களும் இணைந்து எவ்வளவு முறையற்ற செயல்கள் நடக்கின்றனவோ? அதனால் எவ்வளவு ஏழை, நடுத்தர மக்களின் உடல் நல உரிமைகள் / உயிர்கள் காவு கொடுக்கப்படுகின்றனவோ? யார் அறிவார்கள்?)

காப்பீட்டு நிறுவனமும் தனது செலவினங்களைக் குறைத்து, இலாப விகிதத்தை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான், இந்த முறையற்ற செயலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதே ஒழிய, மனித நேயத்தின் அடிப்படையில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளச் சராசரி அறிவுத் திறனுக்கும் குறைவான அறிவுத் திறனே போதுமானது.

மருத்துவ மனையும், செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனமும், முதலாளித்துவ உற்பத்தி முறை பிடரியை அடித்து விரட்டும் இலாப வெறியால் தான் இத்தகைய முறையற்ற செயலகளில் ஈடுபடுகின்றன. மனித நேயர்களாகத் தங்கள் தொழிலைத் தொடங்கினாலும், சந்தைப் பொருளாதாரம் சாட்டையால் அடித்து விளாசி விரட்டும் இலாப வெறி இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டே தீர வேண்டிய நிலைக்குத் தள்ளி விடுகிறது.

இந்நிலையில், இம்முறையற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவர்களையும், செயற்கை உறுப்பு நிறுவன முதலாளிகளையும் மட்டும் தண்டிப்பது எந்த விதத்திலும் தீர்வாகாது.

மக்கள் ஆர்த்தெழுந்து, முதலாளித்துவ முறையைக் காவு கொடுத்து விட்டு, சோஷலிச முறையை அமைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும்.

- இராமியா

Pin It