modi ops epsதமிழக சட்டப்பேரவை தேர்தல்

அறிமுகம்

தமிழகத்தின் 234 உறுப்பினர் கொண்ட சட்டப் பேரவைக்கு 16-வது முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை ஆளப் போவது யார் என்பதை ஏப்ரல் 6-ம் தேதி, தமிழகத்தின் 6.2 கோடி வாக்காளர்கள் முடிவு செய்யப் போகிறார்கள்.

இந்தத் தேர்தலில் ஒரு கம்யூனிஸ்டின் நிலைப்பாடு என்ன? இந்தத் தேர்தல் தொடர்பாக என்ன பங்காற்ற வேண்டும்?

• "பாஜக/அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதோடு நிறுத்திக் கொள்வதா?” அல்லது

• “திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி கேட்பதா?” அல்லது

• "போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுவதா?"

என்ற கேள்வி கம்யூனிஸ்ட் குழுக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று நிலைப்பாடுகளில் ஒன்றை ஒவ்வொரு குழுவும் எடுத்துள்ளது.

கூடவே, மக்கள் நீதி மையம் என்ற நடுநிலைவாதிகளும், நாம் தமிழர் கட்சி என்ற தமிழினவாதிகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற முன்னாள் அதிமுகவினரும் கூட களத்தில் உள்ளனர். அவர்களது தன்மையையும் மதிப்பிட வேண்டியுள்ளது.

பாட்டாளி வர்க்க அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையேயான உறவு என்ன? இந்தத் தேர்தலில் அது குறிப்பாக எப்படி வெளிப்பட வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு, கடந்த 10 ஆண்டுகளாக (சட்டப் பேரவையின் இரண்டு பதவிக் காலங்கள்) தமிழகத்தில் நடக்கும் ஆட்சியையும், அதற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவு பற்றியும் குறிப்பாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட அரசாங்கங்களையும் அவற்றின் கீழ் அரசியல், பொருளாதார, சமூக துறைகளில் தமிழகம் எதிர்கொண்ட சாதக, பாதகங்களைப் பற்றியும் பொதுவாக பார்க்க வேண்டும்.

கூடவே, கடந்த 30 ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்நாட்டு அரசியல் பொருளாதாரத்தின் மீதும், இந்திய அரசியல் பொருளாதாரத்தின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் பார்க்க வேண்டும்.

தமிழக வரலாறும் பார்ப்பனிய - சனாதன சுரண்டல் அமைப்பும்

தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளுடனும், கடல் வழியாக உலகின் பிற பகுதிகளுடனும் நீடித்த தொடர்பைக் கொண்டவர்கள். இத்தகைய தொடர்புகளில் தமிழகத்தின் மரபுகள் என்னென்ன? அவை கடந்த 50 ஆண்டுகளில் பொதுவாகவும், கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாகவும் எத்தகைய மாற்றத்தை அடைந்துள்ளன என்பதையும் தொகுத்துப் பார்க்க வேண்டும்.

இப்போது, சுமார் 8 கோடி மக்களைக் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பான தமிழ்நாடு, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை விட அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்தப் பரந்த நிலப்பரப்பில் ஒரே மொழி பேசும், ஒரே பண்பாட்டு அடிப்படையைக் கொண்ட மக்கள் பிரிவினர் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளுடனான உறவில், குறிப்பாக கங்கை சமவெளியில் தோன்றிய ஆளும் வர்க்கத்தின் ஆரிய, சனாதான அரசியல், பொருளாதார, பண்பாட்டுடனான உறவில் தமிழகத்தின் பாதை தனித்துவமானது.

கங்கை சமவெளியில் தோன்றிய ஆரிய சனாதன சித்தாந்தத்துக்கு காலத்தால் முற்பட்ட, தன்மையால் மாறுபட்ட நாகரீகமும் பாரம்பரியமும் தளைத்து வளர்ந்த நிலப்பரப்பு, தமிழகம். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும், வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சனாதன திணிப்பை எதிர்த்து போராடிய வகையிலும், தமிழகத்தின் சமூக வளர்ச்சிப் பாதை இந்தியாவின் பிற பகுதிகளை விட மாறுபட்டு தனித்துவமாக நிகழ்ந்திருக்கிறது.

சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட, உயர்தனிச் செம்மொழியாக சுயேச்சையாக, தமிழ்மொழி வளர்ந்து செழித்திருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களும், இலக்கண நூல்களும், திருக்குறளும், சித்தர்களின் பொருள்முதல்வாத மரபுகளும், உழைக்கும் மக்களின் இலக்கியங்களும் தமிழகத்தின் பண்பாட்டு வாழ்வில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன.

இந்தியாவில் வர்க்க சமூகத்தின் தோற்றமும், வடிவமைப்பும் குலக்குழுக்களையும், இனக்குழுக்களையும் படிநிலை அடுக்காக பராமரித்து சுரண்டும் சனாதன சாதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் செய்யப்பட்டது.

அது இந்திய பொருளாதார அலகாகிய கிராம சமுதாயங்களை சாதிய படிநிலையில் அடுக்கி வைத்து மேல்தட்டு மூவர்ண சாதியினருக்கு சலுகைகளையும், சூத்திர சாதியினரையும் தலித் பழங்குடியினர் மீது ஒடுக்குமுறையையும் விதித்து சுரண்டலை நுண்ணிய அளவில் நடத்தி வருகிறது.

இன்றும், இந்து மதம், இந்திய தேசியம் என்ற பெயரில் தமிழக மக்கள் மீது அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தனது ஆதிக்கத்தை சுமத்தி வருகிறது, இந்திய பார்ப்பன - பனியா ஆளும் வர்க்கத்தின் பார்ப்பனிய - சனாதன சித்தாந்தம்.

ஆளும் வர்க்கத்தின் பார்ப்பனிய - சனாதன அரசியல் பண்பாட்டு சித்தாந்தத்தின் கீழ் தமிழகத்திலும், புராதன சமூகங்களில் தோன்றிய குலங்களும், இனங்களும் வர்க்க சமூகத்தில் சாதிய படிநிலை அடுக்காக கட்டப்பட்டாலும், வட இந்திய சனாதன ஆளும் வர்க்க கும்பலைப் பொறுத்த வரையில் விந்திய மலைக்கு தெற்கில் வாழும் அனைவரும் ஆளப்பட வேண்டியவர்கள்.

எனவே, தமிழகத்தில் சத்திரியர்கள் என்ற வர்ணம் இல்லாமல், சூத்திர மன்னர்களே அங்கீகரிக்கப்பட்டனர். வட இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆளும் வர்க்கங்களின் சித்தாந்த அடித்தளமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

மேற்கு ஐரோப்பிய சமூகங்களில் (இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி) புராதன பொதுவுடைமை சமுதாயங்களில் இருந்து வர்க்க சமூகம் தோன்றி அரசு உருவான போது, அந்த புராதன இனக்குழுக்களும் குலங்களும் ஒரே பொருளாதார அடித்தளத்தினுள் இணைக்கப்பட்டு, மேற்கட்டுமானத்தில் ஓரிறை மதமான கத்தோலிக்க திருச்சபையால் ஒன்றுபடுத்தப்பட்டன. அவற்றின் சிறுதெய்வ வழிபாடுகள் அழிக்கப்பட்டு ஒரே இறைவனைக் கொண்ட மதத்தைப் பின்பற்றும் ஒற்றை தேசிய இனங்களாக இணைக்கப்பட்டன.

இந்தியாவின் சனாதன சாதிய கட்டமைப்பு, தமிழகம் உட்பட மாநிலங்களில், அத்தகைய தேசியமாக்கம் நடைபெறுவதற்கு இன்றும் தடையாக தொடர்கிறது.

பிறப்பின் அடிப்படையில் உழைப்பாளர்களை பிரித்து, சின்னஞ்சிறு கிராம சமூக மட்டத்தில் கூட சமூகத்தை படிநிலை அடுக்குகளாக பிரித்து, அதற்கான கோட்பாட்டு, சித்தாந்த அடிப்படைகளை உருவாக்கி வளர்த்து வரும் பார்ப்பனிய - சனாதனம், மக்கள் மனங்களில் மதம், பக்தி, மூடநம்பிக்கைகள் ஆகிய வடிவங்களில் தொடர்ந்து வேரூன்றி வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இது ஆள்பவர்கள் மாறினாலும் சுரண்டலின் வடிவம் மாறாமல் நீடித்திருக்கும் இந்திய கிராம சமூகங்களின் நீடித்த தன்மைக்கு அடிப்படையாக இருந்தது.

சனாதனம் என்பது அழிவில்லாத, மாறாமல் நீடித்து நிலைக்கும் சமூக அமைப்பு என்ற அடிப்படையில் இது ஒரு மாறாநிலைவாத, பழைமைவாத, பிற்போக்கு சித்தாந்தமாக சமூக முன்னேற்றத்தை பின்னுக்கு இழுப்பதாக உள்ளது.

இந்த பார்ப்பனிய - சனாதனத்துக்கும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குமான போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் காலனிய ஆட்சியின் கீழ் இந்திய கிராமப் பொருளாதாரம் அழிக்கப்பட்டு காலனிய ஆட்சியாளர்களின் நலனுக்கான முதலாளித்துவ சுரண்டல் புகுத்தப்பட்ட போதிலும் சரி, 1947-க்குப் பிந்தைய இந்தியாவிலும் சரி, 1990-களுக்குப் பிந்தைய உலகமய சூழலிலும் சரி, வட இந்திய பார்ப்பனிய மேலாதிக்க சக்திகள் இந்த சனாதன சாதிய கட்டமைப்பு மூலம் தம்மை ஆளும் வர்க்கமாக நிலைநாட்டிக் கொண்டே இருக்கின்றன.

எனவே, தமிழக அரசியல் வரலாற்றில்,

• கிமு 5-ம் நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி இன்றும் தொடரும் பார்ப்பன மதத்துக்கும் தமிழகத்தின் சிறுதெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் இடையேயான போராட்டம்

• அடுத்த சில நூற்றாண்டுகளில் தொடங்கி நடந்த முன்பு பார்ப்பன மதத்துக்கும் பௌத்த, சமண மதங்களுக்கும் இடையேயான போராட்டம்

• ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு பார்ப்பன மதத்துக்கும் ஐரோப்பிய ஓரிறை மத கிருத்துவ மிஷனரிகளுக்கும் இடையேயான போராட்டம்

• 20-ம் நூற்றாண்டில் பார்ப்பனிய வட இந்திய ஆதிக்கத்துக்கு எதிரான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டம்
ஆகியவை இடம் பெற்றுள்ளன.

20-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பார்ப்பனிய – சனாதன எதிர்ப்புப் பாதை

பார்ப்பனிய - சனாதனத்தின் சமத்துவ மறுப்பு, ஜனநாயக மறுப்பு, சமூகநீதி மறுப்பு என்ற கொள்கைகளை எதிர்த்து அவற்றுக்கு மாறான கொள்கைகளை பின்பற்றிய திராவிட, சுயமரியாதை இயக்கம் 20-ம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது.

பார்ப்பனர் அல்லாதவர்கள் சங்கம் அமைத்து காலனிய ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் பங்கு பெற்ற தென்னிந்தியாவின் சூத்திர ஆளும் வர்க்கம், இந்தி எதிர்ப்பு, வட இந்திய ஆதிக்க எதிர்ப்பு, தன்னாட்சி ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடி வந்திருக்கிறது.

தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் பண்படுத்திய மண்ணில் திராவிட கட்சிகள் தளைத்து வளர்ந்தன. இந்தியா காலனிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடுபட்ட பிறகு, உலக அளவில் சோசலிச முகாம் செல்வாக்கு செலுத்திய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் ஆளும் வர்க்கம், அகில இந்திய ஆளும் வர்க்க (அதாவது பார்ப்பன - பனியாக்களின் சனாதான) ஆதிக்கத்தை எதிர்த்து தனக்கென தனியான பொருளாதார, அரசியல், பண்பாட்டு பாதையை வகுத்துக் கொண்டது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டது இத்தகைய வளர்ச்சிப் பாதைக்கான சாத்தியங்களை உருவாக்கிக் கொடுத்தது.

ஆனாலும், பார்ப்பனிய - சனாதனத்தின் அடித்தளமான சாதிய கட்டமைப்பு உடைக்கப்படாமல் சிறு அளவிலான மாற்றங்களோடு தொடர்ந்தது. எனவே, சனாதன சக்திகள் அரசியல் களத்தில் பலவீனமாக இருந்தாலும் சாதிய அடித்தளத்தையும் மக்களின் மத வழிபாட்டு முறைகளையும் பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்ளும் பணியை தொடர்ந்து வந்தனர்.

இத்தகைய அரசியல் பொருளாதார பின்னணியில், கடந்த 50 ஆண்டுகளில், வரலாற்றில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, கல்வி மருத்துவம், சாலை வசதி ஆகியவற்றில் பரவலான வளர்ச்சி, கல்வியறிவு வளர்ச்சியும் பகுத்தறிவும், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சுயமரியாதையை உறுதி செய்யும் சட்டங்கள், பெண்களுக்கான உரிமை இவற்றில் முன்னேற்றம் கண்டது, தமிழ்நாடு. இது தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அளவிலான தொழில் வளர்ச்சிக்கும் சேவைத் துறை வளர்ச்சிக்கும் இணையாக நிகழ்ந்தது.

திருப்பூர் பின்னலாடை, கோவை மண்டலத்தில் ஆடைத் துறை, பொறியியல் துறை, வேலூர் மண்டலத்தில் தோல் துறை ஆகியவையும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்தன.

1990-களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும், இந்திய ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொண்ட, சர்வதேச மூலதனத்தினால் கட்டளையிடப்பட்ட, தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

தமிழ்நாடு மூலதனத்தின் தேவைக்கான சர்வதேச உழைப்புப் பிரிவினையின் ஒரு பகுதியானது. வாகன உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட துறைகள் தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்தன.

மேலே சொன்ன பகுத்தறிவும், கல்வி வளர்ச்சியும், ஆங்கில மொழித்திறனும், தமிழகத்தின் நலனை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அதிமுக, திமுக என்ற தமிழ்நாட்டு இரண்டு பெரிய கட்சிகளின் அரசாங்கங்களும், அதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தன.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் கார்ப்பரேட் நிதி மூலதன பொருளாதாரத்தில் இணைந்து தாமே கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ந்தன. எல்லா அரசியல் கட்சிகளிலும் மூலதனத்தின் தாக்கம் ஊடுருவி ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளூர் தொழில்களில் அவர்கள் கூட்டாளிகள் ஆனார்கள்.

ஆனால், தமிழக முதலாளிகள் இந்திய அளவிலான ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளான பார்ப்பன-பனியா முதலாளிகளின் ஆதிக்கத்தை மீறி வளர முடியவில்லை. தமிழ்நாட்டில் சில்லறை வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நடத்துவது, ரியல் எஸ்டேட், குடிநீர் வியாபாரம், சாராய தொழில் செய்வது, பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் நடத்துவது, பேருந்து சேவை என்று தமிழ்நாட்டு அளவிலான முதலாளிகளாகவே அவர்கள் வளர முடிந்தது.

இந்தத் துறைகளிலும் கூட அவர்கள் குஜராத், மார்வாடி முதலாளிகளின் மூலதன பலத்தின் மூலம் கடும் போட்டியையும் நெருக்கடியையும் எதிர் கொள்கின்றனர். குறிப்பாக, கடந்த 6 ஆண்டுகளில் மத்தியில் பாஜக தலைமையிலான பார்ப்பனிய-சனாதன சித்தாந்தத்தை நேரடியாகவே தூக்கிப் பிடித்து அமல்படுத்தும் அரசு அமைந்த பிறகு தமிழக முதலாளிகளின் கைகள் மேலும் மேலும் கட்டப்பட்டு வரம்பிடப்பட்டு வருகின்றன.

21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவ நெருக்கடியும் தாராளவாத ஜனநாயகத்தின் வீழ்ச்சியும்

2007-08 ம் ஆண்டுகளில் உலக முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்ட பெரும் நெருக்கடியைத் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த உலகமய, தாராளமய கொள்கைக்கு எதிரான அலை உலகெங்கும் தோன்றியது. அரசியலில் தாராளவாத ஜனநாயகப் போக்கு பலவீனமடைந்து, முதலாளித்துவ நெருக்கடியால் அவதிப்பட்ட மக்களை அணி திரட்டும் மதவாத, இனவாத, வலதுசாரி அரசியல் வலுப்பெற்றது.

• 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது,

• 2014-ல் இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமரானது,

• 2019-ல் பிரேசிலில் ஜெய்ர் பொல்சொனாரோ அதிபரானது,

• 2016-ல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பெரும்பான்மை வாக்களித்தது,

• 2012-ல் ஜப்பானில் ஷின்சோ அபே பிரதமரானது,

ஆகிய முக்கியமான நிகழ்வுகள் மட்டுமின்றி, பெரும்பான்மை உலக நாடுகளில் இனவாத, தேசியவாத, மதவாத வலதுசாரிகள் வலுவடைந்துள்ளனர்.

மேலும், உலகளாவிய நிதிக்கட்டமைப்பையும், ராணுவ பலத்தையும் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ ஒழுங்குக்கு சவாலாக பொருளாதார ரீதியில் வலுவாக வளர்ந்துள்ள சீனா, அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்கொள்ள அரசியல் ராணுவ கூட்டுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. இது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய முதலாளித்துவக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் வீழ்ச்சியை நோக்கிய அதன் பயணத்தையும் இன்னும் மோசமாக்கியுள்ளது.

தாராளவாத, உலகமய கட்டத்துக்குப் பிந்தைய உலகாளவிய கார்ப்பரேட் ஏகபோக கட்டமைவுக்கு தாராளவாத முதலாளித்துவத்துக்கு பொருத்தமாக இருந்த முதலாளித்துவ ஜனநாயக முறைகள் பொருந்தவில்லை. ஏகபோக கார்ப்பரேட் மூலதனத்துக்குத் தேவையான கொள்கைகளை இரும்புக் கரம் கொண்டு அமல்படுத்தும் கொடுங்கோன்மை, ஜனநாயக மறுப்பு முறைகள் தேவைப்படுகின்றன.

தோற்றுப் போன முந்தைய தாராளவாத முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை எதிரிகளாக்கி, உழைக்கும் மக்களையும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரையும் தனது சர்வாதிகார ஆட்சிக்கு சமூக அடித்தளமாக திரட்டுவதற்கு இனவாத, மதவாத, வெளிநாட்டவர் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர், வலதுசாரி பழைமைவாத கட்சிகள்.

நவீன தகவல் தொழில்நுட்பங்களையும், புதிய நிதித்துறை கட்டமைப்பையும் பயன்படுத்தி தீவிரமாக, நுணுக்கமாக இவற்றை பின்பற்றுகின்றன, இந்தக் கட்சிகள்.

21-ம் நூற்றாண்டின் இந்த ஏகபோக கார்ப்பரேட் கொடுங்கோன்மை, தாராளவாத முதலாளித்துவத்தின் ஜனநாயகத்தை மறுத்து ஒடுக்குமுறையை தீவிரமாக பயன்படுத்தி, சமூக பிளவுகளை ஆழப்படுத்துகிறது.

இந்தியாவில் சனாதன கார்ப்பரேட் கொடுங்கோன்மை

உலக அளவிலான இந்தப் போக்கின், மிகச்சிறந்த நடைமுறையாக நரேந்திர மோடியின் பாஜக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

• தாராளவாத முதலாளித்துவ கட்சியான காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதாக சவடால் விடுவது, பிற மாநிலக் கட்சிகளையும்,மாநில உரிமைகளையும் அழித்து ஒழிப்பது

• முஸ்லீம்கள், தலித்துகள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மீது தாக்குதல், சிறை வைப்பு

• தேசவெறி, போர் வெறியை தூண்டி அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது

• பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி ஆதரவாளர்களை மூளைச் சலவை செய்யும் கோயபல்சிய சமூக வலைத்தள பிரச்சாரம்

• ஊடகங்களை மிரட்டி பணிய வைப்பது

• செயல்பாட்டாளர்களை கண்காணிப்பது

• எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மூலம் அவர்களை முடக்குவது

• இந்திய நிதிக் கட்டமைப்பின் ஏகபோக சக்திகளான குஜராத்-மார்வாடி முதலாளிகள் மூலமும், அவர்களோடு கூட்டு சேரும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் மூலமும் பெருமளவு நிதி ஆதாரத்தை குவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் எதிர்க்கட்சி தலைவர்களை விலைக்கு வாங்குவதிலும் ஈடுபடுத்துவது என்று கார்ப்பரேட்டுகளுக்குத் தேவையான வலதுசாரி பொருளாதார கொள்கைகளுக்கான அரசியல் அதிகாரத்தையும் சமூக ஆதரவையும் திரட்டிக் கொள்கின்றனர்.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நரேந்திர மோடி போன்ற ஒருவரை மக்களின் நாயகனாக கட்டமைக்கின்றனர்.

இந்தியா முழுவதையும் இணைத்து ஒற்றைச் சந்தையை உருவாக்கி ஒரு சில கார்ப்பரேட் ஏகபோக நிறுவனங்களின் சுரண்டலுக்கு விட வேண்டும் என்ற ஏகபோக கார்ப்பரேட் நலனும், இந்தியாவின் 14 பெரும் தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கையை கொண்டுள்ள சனாதன அரசியலின் நலனும் இவ்வாறு ஒன்றிணைந்துள்ளன.

அனைத்து தரப்பு முதலாளிகளுக்கும் சம உரிமை, சந்தைப் போட்டி என்பதை ஒழித்துக் கட்ட விரும்பும் கார்ப்பரேட் ஏகபோக கொடுங்கோன்மை அரசியலுக்கு, சமூகத்தை படிநிலை அடுக்காக பிரித்து வைத்து சலுகை பெற்ற பார்ப்பன-பனியா, ஆட்சியாளர் மேட்டுக் குடி வர்க்கத்துக்கு அதிகாரங்கள், உரிமைகள், வசதிகளை கொடுத்து, அவர்களுக்கு அடங்கி தொண்டூழியம் செய்யும் உழைப்பாளர்களாக பெரும்பான்மை சூத்திர சாதியினரையும் தலித்துகளையும் வைக்கும் சனாதன கட்டமைப்பு கச்சிதமாக பொருந்துகிறது.

எனவே, இந்த சாதிய படிநிலை அடுக்கை அடிப்படையாகக் கொண்ட சனாதனமும், கார்ப்பரேட் ஏகபோக கொடுங்கோன்மையை அமல்படுத்தக் கோரும் கார்ப்பரேட் சக்திகளும் கை கோர்த்துள்ளன.

அதன் மூலம்

• பொதுத்துறை நிறுவனங்களையும், அரசு சேவைகளையும் தனியார் மூலதனத்திடம் விடுவது

• கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் வழங்கும் சிறு குறு நடுத்தர தொழில்களையும், விவசாயத்தையும், சில்லறை வர்த்தகத்தையும் கார்ப்பரேட் மயமாக்குவது என்ற பாதையில் வெளிப்படையாக இறங்கியுள்ளது, பாஜக அரசு.

2016-ல் தொடங்கிய பேரழிவு தாக்குதல்

மோடி ஆட்சியின் கீழ் இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்ப்பன-பனியா பிரிவு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய மூலதனத்தின் ஆக்கிரமிப்புக்கு முழுவதுமாக அடிபணிந்து, நாட்டின் பொருளாதாரத்தின் கதவுகளை திறந்து விட்டு வருகிறது. மின்னணு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தொழில் துறை, சேவைத் துறை, அரசு நிர்வாகம் மட்டுமின்றி விவசாயத் துறையையும் சர்வதேச கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளின் பிடியில் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, மோடி அரசு 2016-ல் அமல்படுத்திய பண மதிப்பு நீக்கம், பின்னர் அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் முறைசாரா சிறு, குறு, நடுத்தர தொழில்களையும், வணிகர்களையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கின.

இந்த உற்பத்தித் துறைகளும், சில்லறை வர்த்தகத் துறையும் வட இந்திய பார்ப்பன - பனியா முதலாளிகளின் கார்ப்பரேட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்குள் நுழையும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமமும், மோடியை பைக்குள் வைத்து வளர்த்த அதானி குழுமும் மத்திய பாஜக அரசின் செல்லப் பிள்ளைகளாக உள்ளனர்.

பண மதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி தொடங்கி, சமீபத்திய கொரோனா முழு அடைப்பு வரையில் வட இந்திய பார்ப்பன-பனியா முதலாளிகள் தம்முடைய பண மூலதனத்தையும், அரசியல் ஆதிக்கத்தையும் பல மடங்கு பெருக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தொலைத்தொடர்பு, வங்கி, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, இணைய சேவை போன்ற முக்கியமான துறைகளில் தமிழ்நாட்டு முதலாளிகள் பார்ப்பன-பனியா முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மேலும், விவசாயத் துறையில் சிறு, நடுத்தர விவசாயிகளை முழுமையாக அழித்து, உணவுப் பொருள் உற்பத்தி, வினியோகம், சில்லறை விற்பனை ஆகியவற்றை அம்பானி, அதானி முதலான கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் விடுவதற்கு வழி வகுக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றியுள்ளது, மோடி அரசு.

இவை அனைத்தும் சேர்ந்து தமிழகத்தின் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அடித்தளம் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகிறது. அவர்களில் ஒரு தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிமுக பாஜகவுடன் கைகோர்த்து தமிழகத்தை கார்ப்பரேட் சனாதான கட்டமைப்புக்குள் அடகு வைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. அம்பானி, அதானி குழுமங்களும் வடநாட்டு வணிகர்களும் தமிழக பொருளாதாரத்தை விழுங்குவதற்கு இக்கட்சி வழி வகுத்து வருகிறது.

எதிர்த்தரப்பின் பிரதிநிதிகளான திமுகவினர் தமது சுயேச்சையான நலன்களுக்காக, பொருளாதார ரீதியாகவும் அரசியல் பண்பாட்டு ரீதியாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள், தமிழக முதலாளிகள், வணிகர்கள் ஆகியோரின் போராட்டங்களாலும் அழுத்தத்தாலும் உந்தப்பட்டு பாஜகவை எதிர்த்து வருகின்றனர். வேறு ஒரு சிறு பிரிவினர் இனவாத அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சியால் பிரதிநிதித்துவப்படுகின்றனர்.

முதல் தரப்பினரின் பிரதிநிதிகளாகி விட்ட அதிமுக கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் உள்ளது. 2016-க்குப் பிறகு, அக்கட்சித் தலைவி ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், அக்கட்சி பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு பலவீனமடைந்து, சனாதன பாஜக ஆட்சி செய்யும் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழகத்தின் எடப்பாடி - பன்னீர் செல்வம் அரசு மாறியது.

குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில், இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்துவது, வரி விதிப்பு, மின் வினியோகம், மருத்துவக் கல்வி, பள்ளிக் கல்வி ஆகியவற்றில் மாநில உரிமைகளை பறி கொடுத்தல், பார்ப்பனிய-சனாதன அரசியலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பது, போராடும் மக்கள் மீதான அதிகார வர்க்க அடக்குமுறை என்று தமிழகம் அடுத்தடுத்த கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு இன்று ஒரு தீர்மானகரமான திருப்பு முனையில் உள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் வணிகர்கள் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டது, தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல், சமஸ்கிருத/இந்தித் திணிப்பு, சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, அதானி முதலான வடஇந்திய பனியாக்களின் பிடி இறுகுதல், மின் வினியோகம், வரி விதிப்பு போன்றவற்றில் மாநில உரிமை இழப்பு என தமிழகம் அடுத்தடுத்த அடிகளை எதிர்கொண்டு வருகிறது.

மறுபக்கம், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், அக்கட்சியின் பாரம்பரியமான பார்ப்பனிய-சனாதன எதிர்ப்பு சித்தாந்தம் மேலும் பலவீனமடைந்து, அக்கட்சி சில 10 குடும்பங்களின் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் சரணடைதல் கொள்கைகளையும், பாஜகவின் சனாதன ஆதரவு நடவடிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க முடியாத அளவுக்கு நிறுவனமாக்கப்பட்ட கட்சியாக மாறி நிற்கிறது. தமது தொழில் நலன்களை காப்பாற்றிக் கொள்ளவும், மத்திய அரசின் வேட்டை நாய்களான வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, புலனாய்வு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் சமரசம் செய்து கொள்ளும் நிலையில் அக்கட்சி உள்ளது.

இருந்தாலும், தம்மை தக்க வைத்துக் கொள்வதற்காக, திராவிடர் கழகத்தின் பல்வேறு பிரிவுகள், விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் போன்ற அம்பேத்கரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் குழுக்கள் ஆகியோரால் தூக்கிப் பிடிக்கப்படும் அரசியலை முன்வைத்து அதிமுக/பாஜக கூட்டணியை எதிர்த்து நிற்கிறது, திமுக.

இவ்வாறு, இப்போது நடைபெறவிருக்கும் தேர்தல் வட இந்திய ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் சனாதன அரசியல் தமிழகத்தை விழுங்கத் துடிப்பதற்கும், அதை எதிர்த்த தமிழகத்தின் தேசிய முதலாளித்துவ வர்க்கப் பிரிவின் கட்சிகளில் ஒன்றான திமுகவின் பலவீனமான தலைமையின் கீழான எதிர் போராட்டத்துக்கும் இடையேயானதாக நடக்கிறது.

சாதிய சனாதன சித்தாந்தத்துக்கு அடிபணிந்து விட்ட அதிமுக, அந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட பாமக போன்ற கட்சிகள் சனாதன பாஜகவுடன் ஒரு அணியிலும். பாஜகவை அரசியல் பொருளாதார ரீதியாக எதிர்க்கும் திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளும் அதை சித்தாந்த ரீதியிலும் எதிர்க்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் ஆகியவை எதிரணியிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் தமிழக மக்களின் கடமை என்ன? தமிழக கம்யூனிஸ்டுகளின் முன் இருக்கும் பணி என்ன?

• சனாதன சக்திகளான அதிமுக, பாஜக, பாமக கட்சிகளின் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

• சித்தாந்த அடிப்படை இன்றி போட்டியிடும் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்றவை மறைமுகமாக சனாதன சக்திகளை வலுப்படுத்துகின்றன. எனவே, அவற்றை நிராகரிப்பது.

• திமுகவின் ஊசலாடும் சமரசப் போக்கையும், ஆளும் வர்க்க சுரண்டல் அரசியலையும் எதிர்க்கும் வகையில் தெளிவான உறுதியான செயல்திட்டம் ஒன்றை முன் வைத்து, கார்ப்பரேட் பார்ப்பனிய-சனாதன கூட்டணியை எதிர்க்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், தேசிய முதலாளிகளின் நலனை அமல்படுத்தும் வகையிலான இயக்கத்தை முன்னெடுப்பது.

பார்ப்பனிய - சனாதன, கார்ப்பரேட் கொடுங்கோன்மையை முறியடிக்க...

• வெளியுறவு, நாணயம் பாதுகாப்பு தவிர்த்த ஏனைய அனைத்துத் துறைகளிலும் மாநில அரசுகளுக்கு தன்னாட்சி உரிமை!

• விவசாயம், அமைப்புசாரா தொழில்துறை, சிறு வணிகம் ஆகிய துறைகளில் கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி மறுப்பு!

• மக்களை ஒன்றுபட்ட தேசிய இனமாக உருவாவதைத் தடுக்கும் பார்ப்பனிய - சாதிய பண்பாடுகளை நிராகரிப்பது!

• கடவுள், மத நம்பிக்கைகளை அரசியலில் இருந்து பிரித்து இவற்றை தனிமனித உரிமைகளாக்குவது!

• கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சமூக நீதி கொள்கையை உயர்த்திப் பிடிப்பது!

பார்ப்பனிய-சனாதன கார்ப்பரேட் கொடுங்கோன்மை பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டணியும், பல்வேறு சமூக நல அமைப்புகளை கொண்ட கூட்டமைப்புகளும்,மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்து தங்களை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமாகத்தான் எதிரியை எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் முடியும்!

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு (மார்ச் 18, 2021)