cuban doctors fighting coronaஉலக அளவில் கொரோனா வைரசின் பரவல் மீண்டும் ஒருமுறை மேற்கத்திய முதலாளித்துவப் பொருளாதார நாடுகளின் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. சோசலிசப் பொருளாதாரம் மக்கள் உடல்நலத்திற்கும் சமூக நலத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது, அதே நேரத்தில், பிற பெருந்தொற்றுக் காலத்தில் இலாபமடைய முயற்சி செய்கின்றன. இலாபங்களுக்கான இந்தப் பேராசையின் பின்விளைவுகளின் பெரும் அளவு குறித்து இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்தப் பேரழிவுக்கு நிவாரணம் தேடுவதில் ஏன் இவ்வளவு பெரிய மெத்தனம்?

நொறுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பு 

'கொரோனா அதிர்ச்சிக்கு' எதிராகத் தங்களுடைய மருத்துவப் பராமரிப்பு முறை சீட்டுக்கட்டு வீடு போலச் சரிந்து விட்டதை முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா பிற வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து தெளிவாக ஒப்புக் கொள்கிறது. அதற்கு மாறாக, உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, சீனா மட்டுமே வாரம் ஒன்றுக்கு (1.6 மில்லியன்) கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டது, பரிசோதனை எண்ணிக்கையில், வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளை நூற்றுக்கணக்கான மைல்களுக்குப் அப்பால் அது பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளது.

இவ்வளவு பெரிய வேறுபாட்டுக்கு என்ன காரணம்? (பெருந்தொற்றுக் காலத்தில் கூட) முதலாளித்துவ பொருளாதார நாடுகள் முற்றிலும் தனியார் இலாபமீட்டலைச் சார்ந்திருக்கும் நேரத்தில், வைரஸ் தொற்றுத் தொடங்கியதிலிருந்து, அனைவருக்குமான மருத்துவப் பராமரிப்பை முற்றிலும் இலவயமாக அளித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மருத்துவப் பராமரிப்பு முறை மிகப் பெரிய அளவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அளவுக்கு பெரிதும் சார்ந்திருக்கிறது. அதனால் கொரோனா பரிசோதனை இலவயமாகச் செய்யப்பட்டாலும், மருத்துவம் இலவயமாகக் கிடைக்காது.

மொத்த மக்கள் தொகையில் 30 மில்லியன் மக்களுக்கும் மேலாக இந்த மிகவும் செலவு பிடிக்கக் கூடிய மருத்துவக் காப்பீட்டிற்குள் வருவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவச் சூழல் அறிக்கைப்படி, வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் தங்கள் சொந்தப் பணத்தைச் செல்வழித்துத்தான் மருத்துவப் பராமரிப்பைப் பெற முடியும். அமெரிக்கப் பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் வெளியிருந்து பெறப்படும் மருந்துகள் சேராது. அதன் விளைவாக, மக்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

உலக வங்கித் தரவுகளின்படி, உலகெங்கும் மருத்துவம் தொடர்பான செலவுகளீல் 79 விழுக்காடு 46 வளர்ந்த நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இது உலக மக்கள் தொகையின் 16 விழுக்காடு ஆகும், இது வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளால் மொத்த செலவழிக்கப்படும் மொத்த மருத்துவச் செலவில் 11 விழுக்காடு ஆகும். இது உலக மக்கள் தொகையின் 71 விழுக்காடு ஆகும். மருத்துவப் பராமரிப்பை அமெரிக்கா ஒரு பண்டமாகப் பார்க்கிறது. யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்களுக்கு அது கிடைக்கும், யாரிடம் பணம் இல்லையோ அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்புக் கிடைக்காது. அதன் விளைவாக, “அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு” என்ற முழக்கம் அமெரிக்காவில் மிகவும் விரைவாகப் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது.

மருத்துவப் பராமரிப்பில் இலாபம்

1995 இல் உலக சுகாதார நிறுவனம் சில முக்கியமான வர்த்தக உடன்படிக்கைகளை முன்வைத்தது. அவற்றில் ஒன்று அறிவுசார் சொத்துடைமை உரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டதன் மூலம், காப்புரிமை ஏகபோகம் பெற்ற உலக மருந்துப் பெருங்குழுமங்கள், மருந்து விலைகளை உலக அளவில் நிர்ணயிக்கும் சுதந்திரத்தைப் பெற்றன. புதிய தாராளவாத சிக்கன நடவடிக்கையில், தனியார் மூலதனத்திர்கு வழியேற்படுத்தித் தருவதற்காக, மருத்துவப் பிரிவில் வேலைவாய்ப்பு, படுக்கைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறைப்பதும், வட்டார மருத்துவ நல மையங்களைக் குறைப்பதும், மருத்துவப் பராமரிப்பு செலவினம், மருந்து விலைகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கருவிகள் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைக் குறைப்பதும், மருத்துவப் பராமரிப்பு முறையை தனியார்மயமாக்குவதும், பொது மருத்துவத்தையும் மருத்துவ ஆராய்ச்சிகளையும் குறைப்பதும் அடங்கும்.

இப்போது, புதிய தாராளவாதப் பொருளாதாரத்தை வழிபடுவோர் “ஒத்திகை பார்க்கப்படாத நெருக்கடிகள்” என்ற தங்கள் இலட்சியங்களுக்கு ஆதரவு தருவார்கள். அவர்கள் பெருந்தொற்று பொருளாதாரத்தின் உள்ளாற்றலை அழித்து விட்டதாகக் குறிப்பிட முயற்சி செய்வார்கள். அதுவே ஓர் அப்பட்டமான பொய்யாகும். பொருளியல்ரீதியாக புதிய தாராளவாதப் பொருளாதாரம் ஊதிப்பெருகவும் வெடிக்கவும் கூடியதாக இருக்கிறது. பெருந்தொற்று அதற்கு ஒரு பொறியை மட்டும் ஏற்படுத்தியது. குமிழிகள் வெடிக்க வேண்டியிருந்தது.

சோசலிசம் வழிகாட்டுகிறது

அதற்கு மாறாக, சோசலிச சீனாவில் கொரோனா தொற்றுத் தொடங்கியதிலிருந்து, இலவயப் பரிசோதனையும் மருத்துவமும் மட்டுமின்றி, சர்வதேசத் தரத்தில் வசதிகள் கொண்ட பல அடுக்குமாடி மருத்துவமனைகள், அதுவும் அசுர வேகத்தில் கட்டி அமைக்கப்பட்டன. அதற்கும் மேலாக, அவர்கள் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களையும், செவிலியர்களையும் மற்றும் பிற மருத்துவப் பராமரிப்பு உதவியாளர்களையும் நியமித்தனர். அதற்கும் கூடுதலாக, சீன அரசாங்கம் மின்சாரம், இணையம், அறை-வெப்பமூட்டிகள், இன்னபிறவற்றையும் இலவயமாக வழங்கியது. ஊதியத்துடன் கூடிய விடுமுறை அரசாங்கத்தின் கொள்கையாகவே அறிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த விடயத்தில் தங்கள் கொள்கையை அறிவித்தனர். சீனாவில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும் மருத்துவக் கருவிகளுடன் அத்தியாவசியப் பண்டங்களையும் உற்பத்தி செய்யுமாறு பணிக்கப்பட்டன. கொரோனாவிற்கு எதிரான சீனாவின் போர் அதன் சொந்த ஆட்சிப் பரப்புக்குள் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த பிற நாடுகளுக்கும் தனது மருத்துவ உதவியை விரிவாக்கியது.

சோசலிசக் கியூபா மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 1455 பேரை 22 நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் 60 ஆண்டுகாலப் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதும், தனது மருத்துவக் கண்டுபிடிப்புக்கள் அனைத்துடனும் அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பை உத்தரவாதப்படுத்துகிற, அனைத்தையும் உள்ளடக்கிய மனங்கவரும் பொது மருத்துவ முறையை வைத்திருக்கிறது. கியூபாவின் வைரஸ் எதிர்ப்பு மருந்து (இன்டெர்ஃபெரான் ஆல்ஃபா-2பி) உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொரோனாவை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கியூபாவில் 100 பேருக்கு 8.2 மருத்துவர்கள் வீதம் உள்ளனர், ஆனால் அமெரிக்காவிலோ அந்த விகிதம் வெறும் 2.6 மட்டுமே. அதற்கும் மேலாக, இயல்பாக பள்ளிச் சீருடைகள் மற்றும் பிற மருத்துவம் சாராத இனங்களைத் தயாரிக்கும் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் முகக் கவசம் தயாரிப்பதற்குத் திருப்பி விடப்பட்டன. கியூபா ஹென்றி ரீவ்ஸ் மருத்துவ அணிக்கு 2020க்கான நோபல் அமைதிப் பரிசு வழங்குவதற்குப் பிரெஞ்சு நிறுவனமான கியூபா லிண்டா பரிந்துரை செய்துள்ளது. கியூப மருத்துவ அணிக்கு நோபல் பரிசுக்கான பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக அந்த நிறுவனம் பொது முகநூல் குழுவை உருவாக்கியுள்ளது.

கொடிய கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடும் இன்னொரு சோசலிச நாடு வியட்நாம் ஆகும். அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 300 ஐத் தாண்டவில்லை. இறப்பு எதுவும் இல்லை. வியட்நாம் 4 இலட்சம் முகக் கவசங்களையும் பாதுகாப்புக் கருவிகளையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் கண்டறிவதற்கு வியட்நாம் இரக்கமற்ற தனிமைப்படுத்தல் கொள்கைகளைப் பயன்படுத்தியது. அவர்கள் தொற்றுக்கு உள்ளான ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களையும் ஆவணப்படுத்தினார்கள். வியட்நாமில் கடுமையான பொதுக் கண்காணிப்பு முறை இருந்துவருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் சீனாவுக்கு 5,50,000 பாக்டீரியா எதிர்ப்பு முகக்கவசங்களையும், பரிசோதனை உபகரணங்களையும் வியட்நாம் வழங்கியது.

தெற்கு ஆசியாவில் மலைகள் நிறைந்த இன்னொரு சிறிய சோசலிச நாடு லாவோஸ் ஆகும். 1975 மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து லாவோஸ் மார்க்சிய - லெனினிய மக்கள் புரட்சிகரக் கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. சீனாவையும் கியூபாவையும் போல ஒரு சோசலிச மாதிரி பொதுமருத்துவ முறையைப் பின்பற்றுகிறது. ஏப்ரல் மாதம் வரை 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர், இறப்பு எதுவும் இல்லை. இன்றுவரை உலகிலேயே மிகவும் மிகுதியான அளவுக்கு அமெரிக்கக் குண்டுவீச்சைச் சந்தித்தது லாவோஸ்தான். இது இரண்டாம் உலகப் போரின் குண்டுவீச்சுக்குச் சமமாகும். அவற்றில் இன்னும் எண்ணற்ற குண்டுகள் வெடிக்காமல் இருந்துவருகின்றன. பல நேரங்களில் ஒரு பந்து என்று நினைத்து உதைக்க முயன்ற குழந்தைகளின் இறப்பு நிகழ்கிறது. போர் நின்று விட்டது, ஆனால் வெடிப்பது இன்னும் நிற்கவில்லை. இப்போதும் கூட ஒரு விவசாயியின் கலப்பை நுனியில் மரணத்தின் நிழல் படிந்துள்ளது.

பிரேசிலின் மரன்ஹாவோ மாநிலம் கூட ஒரு அசாதாரண நிகழ்வை எடுத்துக் காட்டியுள்ளது. பிரேசிலின் வலதுசாரி மத்திய அரசாங்கத்தின் கீழ் ஒரே கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கும் மாநிலம் இது. இந்தியாவில் கேரளாவும் பினராய் விஜயனும் இருப்பது போல, பிரேசிலில் மரன்ஹாவோவும் ஃபிளாவியோ டினொவும் உள்ளனர். பிரேசில் கம்யூனிஸ்டுக் கட்சியின் உயர்மட்டத் தலைவரான டினோ மரன் ஹாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுனராக உள்ளார். போல்சோனரோ சாண்டா கடாரினாவில் ஒரு தொழிற்சாலையிலிருந்து மரன்ஹாவோவுக்கு வந்த 68 வெண்டிலேட்டர்களைத் தடை செய்தார், டினோ சீனாவிலிருந்து 2,00,000 முகக் கவசங்களையும் 107 வெண்டிலேட்டர்களையும் எத்தியோப்பியா வழியாகக் கடத்திவந்துவிட்டார். பிரேசில் கூட்டாட்சி அரசாங்கமோ, அல்லது அமெரிக்காவோ வழியில் 'கடத்தி விடவோ' பறிமுதல் செய்யவோ அச்சுறுத்தல் இருந்தது. கொரோனா தாக்குதல் தொடங்கியபோது, அரசு மருத்துவ மனையில் டினோ கொரோனா நோயாளிகளுக்காக 252 படுக்கைகளை ஒதுக்கீடு செய்திருந்தார், இப்போது 600 படுக்கைகள் இருக்கின்றன, மேலும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

தென்னிந்தியாவில் சிறிய கடலோர மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பில் உலகிலேயே ஒரு முன்மாதிரியாக கேரளா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தபிறகு, வூஹான் படிப்பினைகளை எடுத்துக் கொண்ட கேரளா 14 நாட்களுக்குப் பதிலாக 28 நாட்கள் கட்டாய ஊரடங்குக் கொள்கையைப் பின்பற்றியது. மேலும், கொரோனா அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது. அயல்நாடுகளிலிருந்து வந்த அனைத்துப் பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். இந்த முயற்சிகளுக்கு மனதைக் கவரும் மருத்துவப் பராமரிப்பு முறையும் உயர்ந்த கல்வியறிவு பெற்ற மக்கள் தொகையும் ஆதரவாக இருந்தன.

மோடி அரசாங்கம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அதேவேளையில், ஏதோ நாடே திருவிழாவைக் கொண்டாடுவது போல, மக்களை அவர்களுடைய வீட்டு மாடிகளில் நின்று கைத்தட்டவும், சங்கூதவும், பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பவும், மணிஓசை எழுப்பவும், விளக்குகளையும் மெழுகுதிரிகளையும் ஏற்றவும் கேட்டுக் கொண்டது. ஆனால் கேரளா தொற்று நெருக்கடி ஏற்படுத்திய தேவைகளுக்கு விரைவாகச் செயலாற்றும் அளவுக்கு செயலூக்கத்துடன் இருந்தது. கடுமையான ஊரடங்கு, கல்வி நிலையங்களை மூடுதல், கூட்டங்களைத் தடை செய்தல், மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது.

இப்போது வீடுகளிலிருந்து கொண்டு வேலை செய்வோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் இணையச் சேவை அதிகரிக்கப்பட்டது; கைகளைத் தூய்மைப் படுத்திக்கொள்வதற்கான கிருமிநாசினிகள் மற்றும் முகக்கவசங்களின் உற்பத்தி அதிகரிக்கச் செய்யப்பட்டது; இலவய மதிய உணவுச் சேவை பெற்றுவந்த பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது; மனநல உதவிக்கான தகவல்தொடர்பு உருவாக்கப்பட்டது; வீடுகளுக்குச் சென்று உணவுப் பொருள் வினியோகிக்கும் நடமாடும் கடைகள் உருவாக்கப்பட்டன; புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு “விருந்தினர் தொழிலாளர்கள்” அந்தஸ்து அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் அச்சத்தை அகற்றி, நம்பிக்கையை ஏற்படுத்தின. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டது. அலைந்து திரிவோருக்கும், தெருநாய்களுக்கும் கூட உணவளிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் 44,000 சமூக உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. முதலமைச்சர் பினராய் விஜயனும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் நிலைமைகள் குறித்து அன்றாடம் செய்தியாளர்களுக்குத் தகவல் அளித்தனர்

சோசலிச நாடுகள் மற்றும் மாநிலங்களின் இந்த வெற்றிகள் அனைத்தும் திறன்மிக்க கம்யூனிஸ்டு அரசாங்கங்களால் சோசலிசச் சித்தாந்தத்தின் வழியில் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களின் பின்னணியிலிருந்து வருவனவாகும்.

நாம் பெறும் படிப்பினைகள்

பெருந்தொற்றால் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி அடிப்படையில் முந்தையவற்றைவிட மாறுபட்டதாகும். உலகளாவிய பொருளாதார மையம் மீண்டும் “வர்க்கக்” கண்ணோட்டத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி கோடிக்கணக்கானோரின் வாழ்வை விளிம்புக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழு ஒன்று மராட்டியத்திலிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு தொடர்வண்டிப் பாதை வழியாக நடந்து சென்றனர்; அவர்கள் ரொட்டியை எடுத்துச் சென்றனர்; அதுதான் அவர்களிடம் இருந்த ஒரே உணவு; அவர்கள் தொடர்வண்டிப் பாதையிலேயே படுத்து உறங்கினர்; ஒருநாள் அதிகாலை ஒரு தொடர்வண்டி அவர்கள் மீது ஏறிச் சென்றது; 16 பேர் சிதறுண்டு இறந்து போயினர். ஜாலியன் வாலாபாக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலைக் குற்றச்சாட்டு இதுவாகத் தானிருக்கும்.

இந்தியாவின் இந்தப் பித்துப்பிடித்த, தான்தோன்றித்தனமான கொரோனா ஊரடங்கின் கொடூரம் அனைவரின் கண்முன்னே நடக்கிறது. இது ஏற்கெனவே 114 மில்லியன் மக்களை வேலையின்மைக்குள் தள்ளிவிட்டுள்ளது, இன்னும் பல இலட்சக்கணக்கானோரை முற்றிலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. இது முன்னூராயிரம் கோடி டாலர்கள் மதிப்புமிக்க “உலக வல்லரசாக” ஆகிக் கொண்டிருப்பதாகப் பீற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் தான் நிகழ்ந்து வருகிறது.

அரசாங்கத்தின் 22 பில்லியன் டாலர்கள் நிதித் திட்டம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% கூட இல்லை. மிகவும் தீவிரமான வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவின் மிகபெரிய உள்நாட்டு உற்பத்தியில் 10% நிதியளிப்புத்த் திட்டத்திற்கு மிகவும் மாறாக இருக்கிறது. இன்னிலையில் ஒருவரால் பேரச்சத்தில் அதிர்ச்சியடைய மட்டுமே முடியும்.

‘அயல்நாட்டு முதலாளிகள்’ அரசாங்கத்திடமிருந்து அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்டிருக்க, நாட்டின் உழைக்கும் மக்களோ அடிவயிற்றில் பற்றி எரியும் நெருப்பில் தகித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் அரசியல் பொருளாதாரம் தனியார் இலாபமீட்டலைச் சார்ந்திருப்பதால், சமூகத் தேவைகளை நிர்வகிப்பதற்கான சமூக ஒன்றிணைவும் பொதுவான மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதும் சாத்தியமில்லை. பொருளாதாரத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்குவதற்கு முதலாளித்துவத்திற்கு உண்மையில் வைரஸ் தேவையில்லை. அது தானாகவே அந்த வேலையை மிகவும் நாகரிகமாகச் செய்துகொண்டுள்ளது.

*****

ஆங்கிலத்தில்: சௌரவ் கோஸ்வாமி ஓர் அரசியல் செயல்வீரரும், மேற்கு வங்கத்தின் கணசக்தி மார்க்சிஸ்ட் நாளிதழின் முன்னணி இளம் இதழியலாளரும் ஆவார். நன்றி: countercurrents.org

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It