சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் வீழ்ந்து விட்டன. சீனா சோஷலிசப் பாதையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கி, இப்பொழுது முழுவதுமாக முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது. சோஷலிசப் பாதையை மறுத்து முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய பின், பொருளாதார வளர்ச்சியில் சீனா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. சோஷலிசப் பாதையைத் தக்க வைத்துக் கொள்ள, கியூபா, வடகொரியா, வியட்னாம் போன்ற நாடுகள் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் மார்க்சியம் தேவை தானா என்று முதலாளித்துவ அறிஞர்கள் வினாவை எழுப்புகின்றனர். அது மட்டுமல்லாமல் இனி மார்க்சியம் வெற்றி பெறாது என்றும், மார்க்சியத்தை நம்புசிறவர்கள் கானல் நீரை நம்புவதைப் போல் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் ஆருடம் கூறுகிறார்கள்.
 
marx_engels_340  இவர்கள் கூறுவது சரி தானா? சோவியத் ஒன்றியம் உலகிலேயே வலிமையான நாடாக அன்று இருந்தது. சோவியத் குடிமக்கள் என்றாலே மற்ற நாடுகளின் மக்கள் ஒருவித மரியாதையுடன் தான் நோக்கினார்கள். தன் தேவையை நிறைவு செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு உயர்தொழில் நுட்பங்களை அளிக்கவும் செய்தது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்த பொழுது, அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரும்புத் தொழில் நுட்பத்தை, பணம் பெற்றுக் கொண்டு அளிப்பதற்கும் மறுத்தன. ஆனால் சோவியத் ஒன்றியம் அதே தொழில் நுட்பத்தை இலவசமாக அளித்து, இந்தியாவில் இரும்புத் தொழிற் சாலைகள் அமைய உதவியது.
 
  இப்பொழுது சோவியத் ஒன்றியம் சிதைந்து, அதன் உறுப்பு நாடுகள் முதலாளித்துவப் பாதைக்குத் தள்ளப்பட்ட பின் ஏற்பட்டுள்ள நிலை என்ன?
 
  வேலை உத்தரவாதம் செய்யப்பட்ட அந்நாடுகளின் மக்கள், இப்பொழுது வேலை தேடி உலகெங்கும் அலைந்து கொண்டு இருக்கின்றனர். சோவியத் ஒன்றியத்தில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருந்த முதியவர்கள் தங்கள் தேவைகளுக்குச் செலவு செய்தது போக மீதம் இருந்த பணத்தில் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து இருந்தனர். ஆனால் இன்று அவர்களுடைய ஓய்வூதியம் அவர்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் போதவில்லை. ஓய்வூதியக்காரர்களை விட்டு விடுங்கள்; பணியில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய ஊதியம் போதாமல் தவிக்க வேண்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் முன்னணி நாடாகவும், மற்ற நாடுகளுக்கு உதவி புரியும் உயர்ந்த நிலையிலும் இருந்த நாடு, இன்று மூலப் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டிய கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.
 
  சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளின் நிலைமை இவ்வாறு என்றால், முதலாளித்துவ அறிஞர்களால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற்றுள்ளது என்று புகழப்படும் சீனாவின் நிலைமை என்ன? முன்பெல்லாம் சீனாவின் அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டன. ஆனால் இன்று சீன நாட்டில் முதலீடு செய்பவர்களின் வசதியை முன்னிட்டு, மாண்டரின் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத 50%க்கும் அதிகமான சீன மக்கள் அம்மொழியைப் பயில வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள். அன்று உழைக்கும் மக்கள் பெற்ற ஊதியம் அவர்களுடைய தேவையை நிறைவு செய்யப் போதுமானதாய் இருந்தது. இன்று அது போதவில்லை; அது மட்டுமல்ல, ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்பவர்கள் முதலாளிகளின் அடியாட்களால் தாக்கப்படுகிறார்கள்; சில சமயங்களில் கொலையும் செய்யப்படுகிறார்கள். அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களின் தாய் / தந்தை / மகன் / மகள் / மனைவி / கணவன் யாராவது கவல் துறையில் புகார் செய்தால் அவர்களும் தாக்கப்படுகிறார்கள். பணம் கிடைக்கும் என்பதற்காகவும், இலாபம் சம்பாதிக்கம் வழி என்பதற்காகவும் விதிகளை மீறுவது சீனாவில் பெருகி வருகிறது.
 
  முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் செல்வர்களாக இருக்க முடிகிறது என்றும், சோஷலிச உற்பத்தி முறை மக்களை வறுமையில் வாட்டுகிறது என்றும் கூறி -இவற்றுக்கு - அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும், கியூபா, வடகொரியா, வியட்னாம் நாடுகளையும் எடுத்துக் காட்டாகக் காட்டுகின்றனர். ஆனால் சோஷலிச நாடுகளில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்று சதித் திட்டம் போடுவதை மறைக்கின்றனர். இதைப் புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு முறை எளிமையாக விளக்கினார். யாராவது கியூபாவில் ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணினால், அவர்களுக்கு மிரட்டல் வரும் என்றும், அவ்வெண்ணத்தை அவர் கைவிடும் வரையில் அம்மிரட்டல் தொடரும் என்றும், இத்தகைய சூழலில் தான் சோஷலிச நாடுகள் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகின்றன என்றும் அவர் கூறினார். ஆனால் அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், 2005ஆம் ஆண்டில் கத்ரினா சூறாவளியின் பொழுது, கியூபா தங்கள் நாட்டு மக்களில் ஒருவரைக் கூட உயிரிழக்காமல் பாதுகாத்தது மட்டுமல்ல; ஒரு வளர்ப்புப் பிராணி கூட உயிரிழக்காமல் கியூபா பாதுகாத்தது. ஆனால் செல்வச் செழிப்பு மிகுந்த, அனைத்து அறிவியல் தொழில் நுட்ப வசதிகளையும் தன் வசம் கொண்ட அமெரிக்காவோ, அதே சூறாவளிக்கு ஆயிரக்கணக்கில் தன் மக்களைக் காவு கொடுத்தது.
 
  இவையெல்லாம் மக்கள் நலனுக்கு, சோஷலிச முறை தான் ஏற்றது என்றும், முதலாளித்துவ முறை மக்களின் நல்வாழவிற்கு ஏற்றதல்ல என்றும் தெளிவாகக் காட்டும் எடுத்துக்காட்டுகள்.
 
  இப்படி எல்லாம் எடுத்துக் காட்டுகளுடன் பேசும் பொழுது, சில முதலாளித்துவ அறிவு ஜீவிகள், கருத்தியல் ரீதியில் பேச வேண்டும் என்று கூறுகின்றனர். மார்க்சும் லெனினும், தங்கள் மூலதனம் (Capital), ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் (Imperialism - Moribund Capitalism) ஆகிய நூல்களில் கருத்தியல் ரீதியில் தெளிவாக விளக்கி இருப்பதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். இன்றைய கணினி, மற்றும் மின்னணு யுகத்தைப் பற்றி மார்க்சும் லெனினும் அறிய மாட்டார்கள் என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறை, அதாவது இலாபம் தரும் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வது என்ற அடிப்படை மாறாத வரையில் மார்க்சின், லெனினின் பகுப்பாய்வுகள் இன்றும் பொருந்தும் என்பதை வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கின்றனர்.
 
  ஆனால் உண்மை நிலை மார்க்சியத்தின் தேவையை இன்னும் வலுவாக வலியுறுத்திக் கொண்டுள்ளது. மார்க்சின் காலத்திலும், லெனினின் காலத்திலும் - ஏன் - மாவோவின் காலத்திலும் தெரியாத, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் சுற்றுச்சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும், இவ்வுலகம் உய்வதற்கு மார்க்சியத்தைத் தவிர வேறு தீர்வே இல்லை என்று கடைக்கோடி அறிவிலிகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் உரக்கக் கூவிக் கொண்டு இருக்கின்றன.
 
  பொருள் உற்பத்தியின் போது பக்க விளைவாக திட, திரவ, வாயு மாசுக்கள் உமிழப்படுகின்றன. இந்த மாசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த செலவினங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. திட்ட முதலீட்டுடன் மாசுக் கட்டுப்பாட்டுச் செலவினங்களையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது, இலாப விகிதம் குறைந்து விடுகிறது. சில சமயங்களில் இலாபமே இல்லாமல் போய் விடுகிறது. இலாபம் வராது எனில் அத்தொழிலில் முதலீடு செய்ய முடியுமா? இந்நிலையில் ஒரு முதலாளி மாசுக் கட்டுப்பாட்டிற்காகச் செய்ய வேண்டிய செலவினங்களைக் குறைக்கவோ தவிர்க்கவோ முயல்கிறார். முதலாளியின் இம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்காத பகுதிகளில் (அதாவது நாடுகளில் அல்லது மாநிலங்களில்) முதலீடு செய்ய அவர் முன்வருவதில்லை. அப்படி ஆதரவு கொடுக்காத அப்பகுதி ஆட்சியாளர்கள், மூலதனத்தை ஈர்க்கத் தெரியாத மடையர்கள் என்று ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன.
 
  சுற்றுச் சூழல் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று நினைத்து, மாசுக் கட்டுப்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத பகுதிகளில் தொழில்கள் செழித்து வளர்கின்றன. அப்பகுதி ஆட்சியாளர்கள் மூலதனத்தை ஈர்க்கத் தெரிந்த அறிவாளிகள் என்று முதலாளித்துவ ஊடகங்களால் புகழப்படுகின்றனர். மொத்தத்தில் தொழில்கள் வளர்கின்றன என்றாலே சுற்றுச் சூழல் மாசு அடைவது என்பது தவிர்க்க முடியாதது என்று ஆகிவிடுகிறது. ஆகவே தான் வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பல தொழில்கள் வளரும் நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த முரண்பாடு முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத உட்கூறு ஆகும். ஆனால் சோஷலிச உற்பத்தி முறையில் தனி மனிதனுக்கு இலாபம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல், அனைத்து உழைக்கும் மக்களின் பொது நலன்களே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் மாசுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது என்பது எந்தத் திட்டத்திலும் தவிர்க்க முடியாத உட்கூறாக இருக்கும். அதாவது இப்புவியில் சுற்றுச் சூழல் கேடு அடையாமல் இருப்பதற்கு மார்க்சியம் தவிர்க்க முடியாத ஒன்றாகத் தேவைப்படுகிறது.
 
  இன்று புவி வாழ்வை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் இன்னொரு விஷயம், புவி வெப்ப உயர்வு ஆகும். மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்காக உற்பத்தி செய்யும் பொருட்களும், மற்றும் சேவைகளுக்காகப் பயன்படுத்தும் எரிபொருட்களும், இரசாயனப் பொருட்களும், கரியமில வாயு (carbon -di- oxide) பச்சை வீட்டு வாயுக்கள் (Green House Gases) மற்றும் பிற நச்சுக் கழிவுகளை உமிழ்கின்றன. இந்த நச்சுப் பொருட்கள் புவியின் வெப்பத்தை உயர்த்திக் கொண்டே போகின்றன. இப்படிப் புவியின் வெப்பம் உயர்வதால் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து நிலப் பரப்பு குறையும். நாளடைவில் நிலத்தில் வாழும் உயிரினங்கள் வாழ்வதற்குப் போதுமான நிலப் பரப்பு இல்லாமல போய்விடும். ஒருவேளை நிலப் பரப்பு சிறிதளவும் இல்லாமல் போகலாம். அப்போது மனித இனம் உட்பட நிலத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போய்விடும். அது மட்டுமல்ல; இப்போது உமிழப்படும் நச்சுப் பொருட்கள் நீரில் கரைந்து நீரும் அமிலத் தன்மை பெற்றுவிடும். அந்நிலையில் நீர்வாழ் உயிரினங்களும் மடிந்து விடும். அதாவது இப்புவியில் உயிரினங்களின் சுவடே இல்லாமல் போய்விடும். இன்றைய நிலைமை இப்பேரழிவை நோக்கித் தான் வேகமாகப் போய்க் கொண்டு இருக்கிறது.
 
  இதைத் தடுத்து நிறுத்த முடியாதா? முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை ஆட்சி செய்யும் போது இப்பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியவே முடியாது. ஏனெனில் முதலாளித்துவ முறை அதிக இலாபம் கிடைக்கும் தொழில்களில் தான் மூலதனத்தையும் இயற்கை மூலாதாரங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று வழிகாட்டுகிறது. வழி காட்டுவது மட்டுமல்ல; கட்டாயப்படுத்தவும் செய்கிறது. புவி வெப்பத்தை உயர்த்தும் கழிவுகளை உமிழும் ஆயுத உற்பத்தி, வாகன உற்பத்தி, வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் தொழில்களை வளர்த்தல், நகரமைப்புத் திட்டத்தையும் அதன் வழியிலேயே செயல்படுத்தல் ஆகியவற்றால் தான் சந்தையில் மூலதனத்திற்கு இலாபம் கிடைக்கிறது. ஆகவே முதலாளித்துவ முறை ஆட்சி செய்யும் வரையில் இத்தொழில்கள் மேலும் மேலும் செழித்து வளரும். அதன் விளைவாகப் புவி வெப்பம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகும். அழிவுப் பாதையில் உலகம் இன்னும் வேகமாகச் செல்லும்.
 
  ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கைவிட்டு விட்டு, சோஷலிச உற்பத்தி முறையை ஏற்றுக் கொண்டால், புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் தொழில்களை வெகுவாகக் குறைத்து விட முடியும். சோஷலிச ஆட்சி முறையில் போர்கள் தேவையாய் இராது என்பதால் ஆயுத உற்பத்திக்கு அவசியமே இல்லாமல் போய்விடும்.
 
  உலகத்தை அழிவுப் பாதையில் இருந்து திருப்ப வேண்டிய அவசியத்தின் காரணமாக, அவசர அவசியத் தேவைகளுக்குத் தவிர மற்ற எல்லாப் பயணத் தேவைக்கும் பொதுப் போக்குவரத்து முறையையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டால், புவி வெப்ப உயர்வின் வேகத்தை நூற்றில் ஒரு பங்காகக் குறைத்து விட முடியும்,
 
  மேலும் மரம் வளர்த்தலையும் விவசாயத்தையும் அதிக அளவில் மேற்கொண்டால் கரியமில வாயுவை உறிஞ்சி உயிர் வளியை (oxygen) வெளியிடும் செயல்கள் நடக்கும். இது ஏற்கனவே உயர்ந்துள்ள புவி வெப்பத்தைப் படிப்படியாகக் குறைக்கும். இந்த மரம் வளர்த்தலையும் , விவசாயத்தையும் முதலாளித்துவ முறை ஆட்சி செய்யும் வரை ஊக்குவிக்க முடியாது என்பது மட்டுமல்ல; அவற்றில் நஷ்டம் வருவது உறுதி என்பதால் அச்செயல்கள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும். கருத்தியல் ரீதியாக மக்களை மயக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மரம் நடு விழா கொண்டாடப்படுமே ஒழிய உண்மையில் தேவையான அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு மரங்கள் கூட வளர்க்கப்பட மாட்டாது.
 
  ஆனால் சோஷலிச ஆட்சி முறையில் மக்கள் நலனே அடிப்படை என்பதால் பட்டினி கிடக்கும் மக்களுக்காகவும், ஊட்டச் சத்து இல்லாத மக்களுக்காகவும், விவசாயமும் மரம் வளர்த்தலும் வெகுவாக ஊக்குவிக்கப்படும். அதன் பக்க விளைவாக வெகுவாகக் கரியமில வாயு உறிஞ்சப்பட்டு, உயிர் வளி வெளியிடப்பட்டு புவி வெப்பம் குறையத் தொடங்கும். இவ்வுலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் வேகம் குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்த் திசையிலும் பயணிக்க வைக்க முடியும். அதனால் இப்புவியில் உயிரின வாழ்வு தொடர்வதை உறுதி செய்ய முடியும்.
 
  இதுவரையிலும் உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது மக்களின் நல்வாழ்விற்காகவும் மட்டுமே மார்க்சியம் தேவை என்ற நிலைமை இருந்தது. ஆனால் இப்பொழுதோ, இப்புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்கே கூட மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.
 
- இராமியா

Pin It