கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஒமைக்ரான் அபாயத்திலிருந்து காப்புப் பெற கோவிட்-19 தடுப்பு ஊக்கி மருந்து பரவலாகப் போட்டுக் கொள்ளவேண்டும் எனப் பரிந்துரைக்கப்படும் வேளையில், ஜனவரி முதல் நாள் நிலவரப்படி இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து இருமுறை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 24.8 விழுக்காடாகவும், கோவிட்-19 தடுப்பு மருந்து ஒரு முறை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 54.9 விழுக்காடாகவும் உள்ளது.

2021இல் நிலவிய குறைந்த வட்டி விகிதத்தாலும், ஏராளமான பணப் புழக்கத்தாலும் உண்மையான பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை, நவீன தாராளமயம் ஊக முதலீடுகளால் பங்குச் சந்தைகளையே ஊதிப் பெருகச் செய்துள்ளது. பெரும் எண்ணிக்கையில் புதிய முதலீட்டாளர்களைப் பங்குச் சந்தை ஈர்த்துள்ளது. உத்வேகம் பெற்ற காளைச் சந்தை எனப்படும் பங்குச்சந்தையில் அதிக எண்ணிக்கையில் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மைச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் ₹1.18 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன.

மார்ச் 2020க்குப் பிறகு ஆரம்பித்த பங்குச் சந்தை உயர்வு, 2021இல் உச்சம் தொட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இந்தியாவில் 2.744 கோடி புதிய ‘டிமேட் கணக்குகள்’ உருவாக்கப்பட்டுள்ளன. டிமேட் கணக்கு என்பது பங்குகளைச் சேமிப்பதற்கான கணக்கு. இந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் முறையே 32.4 இலட்சம் மற்றும் 36.3 இலட்சம் புதிய டிமேட் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் 1.050 கோடி டீமேட் கணக்குகள் உருவாக்கப்பட்டன. நிதிமயமாக்கத்தின் விளைவாகப் பங்குச் சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு பெருகத் தொடங்கியுள்ளது.

2019இல் 3.930 கோடியாக இருந்த இந்தியாவின் மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 2020 இன் இறுதியில் 4.980 கோடியாகவும், 2021 நவம்பர் மாத நிலவரப்படி 7.724 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

economic imbalanceகோவிட் தொற்றுநோய்க்கு முன்பு இந்திய பங்குச்சந்தை முதலீடுகள் ஆண்டுக்கு 10-15% என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தன. கோவிட்-19க்குப் பிறகு 30-50% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. ‘க்ரோ’ முதலீட்டுத் தளத்தில், மொத்த முதலீட்டாளர்களில் கிட்டத்தட்ட 76 விழுக்காட்டினர் முதல் முறை முதலீட்டாளர்கள் என அதன் தலைவர் ஹர்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

2021இல் மார்கன் ஸ்டான்லி சர்வதேச முதலீட்டு (MSCI) அமைப்பினது மதிப்பீட்டின் படி இந்தியா உட்பட வளர்ந்து வரும் சந்தைகளின் பங்குச் சந்தைக் குறியீட்டில் 5% இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனுடன் ஒப்பிடும் போது இந்தியப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 20%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் உலக அளவிலான பங்குச் சந்தைக் குறியீடு 19% உயர்ந்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது 100 கோடி டாலர்களுக்கு மேல் மதிப்புக் கொண்டிருக்கும் தொடக்க நிறுவனங்கள் யுனிகார்ன் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 2020இல் இருந்ததை விடக் கூடுதலாக 33 யுனிகார்ன்கள் வளர்ந்துள்ளன. 54 யுனிகார்ன் தொடக்க நிறுவனங்களுடன் பிரிட்டனை முந்திக் கொண்டு இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏற்றம் பெறும் பங்குச் சந்தையால் இந்தியாவில் பில்லியனர் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7,500 கோடி) மதிப்பை ஈட்டிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 2020 முடிவில் 85 ஆக இருந்து 126ஆக உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் $483 பில்லியன் (சுமார் ரூ. 35.3 டிரில்லியன்) ஆக இருந்த இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் $728 பில்லியன் (சுமார் ரூ. 54.6 டிரில்லியன்) டாலராக உயர்ந்துள்ளது. இவையே இந்தியாவின் சாதனைகளாகப் போற்றப்படுகின்றன.

இது வரை பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காகச் செயல்படுத்தப்பட்ட மலிவுப் பணக் கொள்கையால் பண வழங்கல் எக்கச்சக்கமாக உயர்த்தப்பட்டது. கடந்த மாதங்களில் உயரும் பணவீக்கம் பற்றிக் கருத்து தெரிவித்த போது அது ஒரு தற்காலிக நிகழ்வே, விரைவில் பணவீக்கம் தணிந்து விடும் என அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவல் கருத்துத் தெரிவித்தார். விரைவில் நிதிப் பத்திரங்கள் வாங்கிப் பணப் புழக்கத்தை உயர்த்தும் செயல்முறை குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மத்திய வங்கியின் வட்டிவீதம் இதுவரை உயர்த்தப்படவில்லை என்ற போதும் விரைவில் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதனால் வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இது நாடுகளின் நிதிச் சமநிலையில் கடுமையான இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக வளரும் நாடுகளின் நாணயங்களுக்கான தேவை குறைவதாலும் டாலருக்கான தேவை அதிகரிப்பதாலும், டாலர் மதிப்பேற்றம் பெற்றுவருகிறது, வளரும் நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்து வருகின்றன. இந்திய ரூபாயும் மதிப்பிழந்துள்ளது. ரூபாயின் நிலையான சரிவு பங்குச் சந்தையில் மேலும் சரிவை ஏற்படுத்தும். பாகிஸ்தானிய ரூபாய் கடுமையாக மதிப்பிழந்து சர்வதேசப் பண நிதியத்தின் உதவியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பால் இறக்குமதிக் கட்டணங்கள் உயர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியின் அந்நியச் செலவாணி இருப்புகளும் குறைந்துள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் கருதிப் பார்க்காத நிதியமைச்சகம் இந்தியப் பொருளாதாரம் சிறப்பானதொரு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி வருகிறது.

2021 அக்டோபர் முதல் இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய நிதி முதலீட்டாளர்கள் 470 கோடி டாலர் நிதி முதலீடுகளை விற்று வெளியேறியுள்ளனர். அக்டோபரில் 227 கோடி டாலர், நவம்பரில் 75.60 கோடி டாலர் மற்றும் டிசம்பரில் 169 கோடி டாலர் மதிப்புள்ள இந்தியப் பங்குகளை அந்நிய நிதி முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

அமெரிக்காவில் பணவீக்கம் 2 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது அதன் மத்திய வங்கியின் இலக்கு. ஆனால் அமெரிக்காவில் பணவீக்கமானது 6.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் நடப்பு நிலவரத்தில் உணவுப் பொருட்கள், காய்கறிகள் விலைவாசி பெரிதும் உயர்ந்துள்ளது ஆனால் தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிடும் பணவீக்கம் இந்த இயல்புநிலையைப் பிரதிபலிப்பதாகவே இல்லை. பணவீக்கம் இந்தியாவில் குறைத்து மதிப்பிடப்படுவதாகத் தெரிகிறது.

உலகெங்கிலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகெங்கும் உயரும் பணவீக்கம் வங்கிகளின் வட்டிவிகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளைப் பெருகச் செய்துள்ள சூழலில், பங்குச் சந்தையின் வெறித்தனமான உயர்வும் பெருக்கமும் 2022இல் மட்டுப்படும்.

ரொட்டி முதல் விரைவாக விற்பனையாகும் அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையையும் ஜனவரியில் மீண்டும் உயர்த்தப் போவதாகவும், அதிக இடுபொருட்செலவுகளை ஈடுகட்ட இந்த விலைஉயர்வு தேவை என்றும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உருக்கு, தாமிரம், அலுமினியம், நெகிழி ஆகிய மூலப்பொருட்களின் விலைகள் கடந்த ஓராண்டில் 40 முதல் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. இது குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளன.

நிதியமைச்சர் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளின் வர்த்தகத்தைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என முதலில் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு உலகளாவிய நடவடிக்கை மட்டுமே கிரிப்டோ கரன்சிகளைத் திறம்பட ஒழுங்குபடுத்துவதற்கான ஒரே வழி என்று கூறினார். அதற்கும் பிறகு இந்தியாவில் கிரிப்டோ கரன்சித் துறையை மேம்படுத்தும் திட்டம் இல்லை என மக்களவையில் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர்களது நிலைப்பாடு தொடர்ச்சியின்றியும் முன்னுக்குப் பின் முரணாகவுமே அமைந்துள்ளது.

பாஜக அரசு விளம்பரத்துக்காகவே செயல்படும் அரசு என்பது பெண் ’குழந்தைகளைக் காப்போம்’ திட்டத்தில் வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்கான தொகையில் 80% விளம்பரத்துக்காகவே செலவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.

டிசம்பர் 15 முதல் அமலுக்கு வந்த புதிய சரக்குக் கொள்கையின்படி இந்திய இரயில்வே தனது வலையமைப்பில் சரக்கு வணிகம் நடத்தும் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுக்கு வசூலிக்கும் நில உரிமக் கட்டணம் ரூ. 700 கோடியைக் கைவிட முடிவு செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசு நிதியுதவி பெற்ற பேட் பேங்க், ஜனவரி இரண்டாவது வாரத்திலிருந்து தனது வணிகத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறைகளை நீர்க்கச் செய்யும் விதமாக வங்கிகள் தங்கள் வெளிநாட்டுக் கிளைகளில் முதலிடவும், முன் அனுமதி பெறாமல் இலாபத்தைத் திருப்பி அனுப்பவும் அனுமதிக்கப்படும் என இந்தியத் தலைமை வங்கி தெரிவித்துள்ளது. இது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் நிதி வெளியேறுவதற்கே வழிவகுக்கும்.

வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய நிஜமான வங்கிக் கிளைகள் தேவையில்லை. ஏனெனில் மக்கள் கைகளில் உள்ள திறன்மிகுக் கைபேசிகள் இடையூறு இல்லாமல் வங்கிச் சேவை செய்யக் கூடிய தொழில்நுட்பத் தளத்தை வழங்குகின்றன என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

அவரது கருத்து வங்கிச் சேவைகளை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கை ஊக்கும் விதமாக உள்ளது. குறைந்த அரசு, நிறைந்த நிர்வாகம் என்பதுதானே பாஜக அரசின் தாரக மந்திரம்! இணைய நாடாளுமன்றமே போதுமல்லவா, அதிகரிக்கும் நிர்வாகச் செலவுகளுடன் கூடிய இவ்வளவு பெரிய நிஜமான நாடாளுமன்றம் எதற்கு? இழுத்து மூடி விடுவோமா? இதுதான் அவரது கருத்துக்குப் பதிலாக நாம் எழுப்பும் கேள்வி.

பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் நாள் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் தொடர்ந்து போராட்டங்கள், தர்ணாக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தத் திட்டம் முழுமையாக அரசியல் நோக்கம் சார்ந்த முடிவாகும் என்றும், வங்கிகளைப் பெரிய முதலாளிகள் வசம் கொடுக்கவே அரசு விரும்புகிறது என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வைப்புத் தொகைகளில் 70 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளில்தான் இருக்கிறது, இந்த வங்கிகளைத் தனியாரிடம் வழங்கும் போது, சாமானிய மக்களின் வைப்புத் தொகைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் அரசுப் பங்குகளின் குறைந்தபட்ச அளவை 51 விழுக்காட்டிலிருந்து 26 விழுக்காடாகக் குறைக்கும் விதமாக வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் 57 விழுக்காட்டினர் பாஜக அரசின் கடன் உத்தரவாதத் திட்டத்தில் கடன் பெறுவது கடினமாக இருந்ததாகப் பதிலளித்துள்ளனர். 150 சிறு குறு நடுத்தர நிறுவனங்களைப் பற்றி மேற்கொண்ட ஆய்வில், 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இரண்டாவது கோவிட் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர். 50 விழுக்காட்டினர் அரசுத் திட்டங்கள், சலுகைகள் தொற்றுநோய்த் தாக்கங்களுக்கிடையே நிலைத்திருக்க அவர்களுக்கு உதவவில்லை என்றும், 43 விழுக்காட்டினர் எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து விடுபட தங்கள் வணிக மாதிரியை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 50 விழுக்காட்டினர் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்றும் கூறியுள்ளனர். கோவிட் தாக்கத்தின் விளைவாக, 56 விழுக்காட்டினர் டிஜிட்டல் முறைகளைப் பின்பற்றத் தள்ளப்பட்டனர், அதே நேரத்தில் 35 விழுக்காட்டினர் தங்கள் முயற்சிகளுக்கு வெளிப்புற நிதி உதவியை நாடும் நிலையில் உள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

756 நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் ரூ. 10 இலட்சத்திற்கும் குறைவான கடன் வாங்குபவர்களில் 61 விழுக்காட்டினரும், 10 இலட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் பெறுபவர்களில் 52 விழுக்காட்டினரும், 1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கடன் பெறுபவர்களில் 49 விழுக்காட்டினரும் அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவது எளிதல்ல, மிகக் கடினம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் கடன் அட்டைக் கலாசாரம் பரவலாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதம் இந்தியாவெங்கும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி 21.5 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய மாதத்தை விட சுமார் 25 விழுக்காடு அதிகமாகும். இதைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 56 விழுக்காடு அதிகமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி செலவு செய்த தொகை ரூ.80,477 கோடியாகும்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறுகிறார்: கோவிட் தாக்கம் இருந்த போதிலும் சாலைக் கட்டுமானத்தில் நாடு பல உலக சாதனைகளைப் படைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவும் வளமான, வெற்றிகரமான நாடாக மாறும், ஏனெனில் இந்திய சாலைக் கட்டமைப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தரத்திற்கு நிகராக இருக்கும்.

வெறும் சாலைகள் போடுவதால் மட்டும் இந்தியாவின் உள்கட்டமைப்பையும், தொழில்நுட்பத்தையும் ஐரோப்பா, அமெரிக்காவின் நிலைக்கு மேம்படுத்தி விட முடியுமா? இந்தியாவில் ஆளுங்கட்சிகள் நெடுஞ்சாலைகளை மட்டுமே உள்கட்டமைப்பாகக் கருதுவது பொருளாதார நிலைகுலைவை ஏற்படுத்துகிறது.

நிட்டி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், இந்தியாவில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் தேவை என்பதால் அனைத்துத் துறைகளிலும் பெருமளவு சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த அரசாங்கத்தின் அடிப்படைத் தத்துவம் தனியார் துறையே செல்வம் படைக்கிறது என்பதுதான்.

”தனியார் துறையின் தொழிலை எளிதாக்கித் தர வேண்டும், அதற்கு ஊக்கியாகச் செயல்பட வேண்டும், அந்தத் திசையில் அனைத்துச் சீர்திருத்தங்களையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றும் அமிதாப் காந்த் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கூட்டாட்சி அரசியலிலும், இந்தியா போன்ற பரந்த நாடுகளிலும், மாநிலங்கள் மூலம் மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்தியத் துறைத் திட்டங்களின் (CSS) கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களின் நல்ல செயல்திறனின் அடிப்படையில் மத்திய அரசு அளிக்க வேண்டும். சீர்திருத்தப் பாதையைத் தொடரும் மாநிலங்களுக்கு அதிகரித்த நிதியை உறுதி செய்ய முயல வேண்டும். மாநிலங்களுக்கான வணிகத்தை எளிதாக்குதலுக்கான தரவரிசை வெளியிடுவதே போட்டி போட்டுக்கொண்டு மாநிலங்கள் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேசப் பண நிதியம் நாடுகளிடம் பல அமைப்புமாற்ற நிபந்தனைகளைச் செயல்படுத்தினால் மட்டுமே கடனளிப்போம் என்று நிர்பந்திப்பது போல் நவீன தாராளமயத்தின் ஒட்டுவாலாக ஜனநாயகமற்ற முறையில் இந்தியாவின் மத்திய அரசு மாநிலங்களை மக்களுக்கு எதிரான சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே நிதியளிப்போம் என நிர்பந்தித்து ஒடுக்குமுறை செய்யும் அவலம் தொடர்கிறது.

நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய உரையாடலில், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர்களோ விலையை உயர்த்துகிறார்களே ஒழிய புதிய முதலீடுகள் செய்யக் காணோம்.

இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் நிதிநிலை அறிக்கை குறித்துத் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் அரசின் சுகாதாரச் செலவினங்களை மேலும் அதிகரிக்கவும், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான செலவினங்களை அதிகமாக்கவும் பல்வேறு சமூகத் துறைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தரப்பிலிருந்து சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மூலதன வரம்பை உயர்த்த வேண்டும், சரக்கு சேவை வரிகளைக் குறைக்க வேண்டும், மேலும் ரூ. 40 இலட்சத்திற்கும் குறைவான புரள்வு மதிப்பைக் கொண்ட நிறுவனங்களை கட்டாய ஜிஎஸ்டி பதிவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், இலட்சக்கணக்கான விற்பனையாளர்கள், கூடுதலான ஜிஎஸ்டி இணக்க செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களின் செயல்பாடுகள் கோவிட் தாக்கத்தால் பெரிதும் முடங்கிப் போயுள்ளன. ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் அவர்தம் தொழில்களைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு (CII), சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் எளிதாகக் கடன் பெறுவதற்கான திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும் என்றும், 2020ஆம் ஆண்டு மார்ச்சு 31உடன் நிறுத்தப்பட்ட அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான நிதித் திட்டத்தையும், கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத் திட்டத்தை புதுப்பித்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் ரூ. 50,000 கோடி பங்கு செலுத்துவதற்காக ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ திட்டத்தை அரசு கடந்த ஆண்டு அறிவித்தது, ஆனால் அது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; அதையும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

இணை நிதியமைச்சர் பகவத் காரத் விவசாயம், வேளாண் செயலாக்கத் துறையின் பிரதிநிதிகளுடன் நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனைகளை பெற மெய்நிகர் கூட்டாய்வை நடத்தினர். அதில் விவசாயிகளின் அமைப்புகளும், வேளாண் வல்லுனர்களும் யதார்த்தமான உற்பத்திச் செலவு அடிப்படையிலான குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கவேண்டும், டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும், புதிய தொழில்நுட்பங்களை அனுமதிக்கவேண்டும் பொன்ற கோரிக்கைகளை அளித்துள்ளனர். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைவதற்காக, இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (CIFA) தலைமை ஆலோசகர் பி. செங்கல் ரெட்டி விவசாயத்திற்கான முன்னுரிமைத் துறை கடன்களை 25 விழுக்காடாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் மாநில நிதியமைச்சர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் ஜவுளி ஆடைத்துறையின் மீதான சரக்கு-சேவை வரியை 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காட்டிற்கு உயர்த்தியதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், மத்திய நிதியுதவி திட்டங்களில் மத்திய அரசு தனது செலவினப் பங்கை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு ஜவுளித் துறையின் மீதான 12 விழுக்காடு சரக்கு-சேவை வரி உயர்வைத் திரும்பப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; ஆகவே அவற்றுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான நிதித் தொகுப்பை அளிக்குமாறு கோரியுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனையின்றிக் கடன் வாங்க மாநிலங்களை அனுமதிக்குமாறு மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வருவாய் கணிசமாகக் குறைந்த நிலையில் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கு மாநிலங்கள் பெரும் செலவினங்களைச் செய்திருப்பதால், 2022 - 23 நிதியாண்டுகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி மாநிலங்களின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 5 விழுக்காட்டைக் கடனாகப் பெற அனுமதிக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 1 விழுக்காடு கடன் பெறுவதற்கான மத்திய அரசின் முன்னிபந்தனைகள் மாநில நிதி மற்றும் அதன் செலவின முறைகளை மோசமாக பாதிக்கின்றன என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒன்றியத்தின் மொத்த வரி வருவாயில் செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டண விகிதங்கள் 2010-11ல் 6.26 விழுக்காடாக இருந்து 2020-21இல் 19.9 விழுக்காடாகக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உண்மையில், ஒன்றியம் சேகரிக்கும் வருவாயில் சுமார் 20 விழுக்காடு பங்கை மாநிலங்கள் இழக்கின்றன. இந்த வரிகளைப் பகிரக் கூடிய தொகுப்பில் சேர்த்திருந்தால், 2021-22 நிதியாண்டில் மத்திய வரிகளின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் தங்கள் பங்காக சுமார் ரூ. 1.5 லட்சம் கோடி கூடுதலாகப் பெற்றிருக்கும். மாநிலங்கள் அதிகாரப் பகிர்வில் நியாயமான பங்கைப் பெறும் வகையில், அடிப்படை வரி விகிதங்களில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களையும் பகிரும் வருவாயுடன் இணைக்குமாறும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களுக்கான சரக்கு-சேவை வரிக்கான இழப்பீட்டுத் தொகை 2022 ஜூன் மாதத்துடன் முடிவுபெறவுள்ளது. கோவிட்-19 தாக்கத்தால் மாநிலங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் 2027 வரை மேலும் ஐந்தாண்டுகளுக்கு சரக்கு சேவை இழப்பீட்டுத் தொகை அளிக்கும் விதத்தில் சரக்கு சேவை வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சத்தீஸ்கரின் நிதியமைச்சர் ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அளிக்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

அரசுத் துறைகளின் நியாயமான கோரிக்கைகளையும் முடக்கும் விதத்தில், அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கான முன்மொழிவு என்ற போர்வையில் எந்த அரசுத் துறையும் கூடுதல் செலவு கேட்கக் கூடாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கான செயல்பாட்டு அறிக்கையில் இந்தியா கோவிட்-19 தொற்றுநோய்த் தாக்கத்தின் போது 15.1 விழுக்காடு நிதிச் சலுகை வழங்கியுள்ளதாக மத்திய அரசு கதை கட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதாரம் முந்தைய ஆண்டின் பெரிய சரிவிலிருந்து மீண்டு வருவதை அவசரப்பட்டுப் பொருளாதார மீட்சி எனக் கொண்டாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

2013-14 முதல் 2018-19 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அலுவலகத் தரவுகளால் காட்டப்பட்ட ஏழு விழுக்காடாக இல்லாமல், இயல்பான அல்லது சாத்தியமான மொ.உ.பொ. (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் நான்கு விழுக்காடாக இருந்தது எனவும், இந்தப் பின்னணியில் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் (PLI) பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் மூலதனச் செறிவுமிக்கத் துறைகளுக்குப் பலன்களைத் தரும். இந்தியாவில் உள்ளடங்கிய வளர்ச்சியை நாம் விரும்பினால், திறனற்ற உழைப்பு செறிந்த துறைகளில் மிகுந்த வளர்ச்சி தேவை. ஆனால் உற்பத்தித் திறனுடன்-இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் இதற்கு உதவும் வகையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் கணிக்கப்பட்டுள்ளபடி, இந்தியா 2021-22ஆம் ஆண்டிற்கான உண்மையான ‘ஜிடிபி’ வளர்ச்சி 9.5 விழுக்காட்டை எட்டுவது குறித்துப் பொருளாதார வல்லுனர் சி ரங்கராஜன் தன் ஐயத்தைப் பதிவு செய்துள்ளார். தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 8.4 விழுக்காடு வளர்ந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டின் 20.1 விழுக்காடு வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவை ஈடுசெய்துள்ளதே தவிர, அதைத் தாண்டி அதிக சாதகமான வளர்ச்சியைக் குறிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மூன்றாம் காலாண்டிலும், நான்காம் காலாண்டிலும் வளர்ச்சி வலுவாக இருந்தாலொழிய, இந்த முழு ஆண்டு வளர்ச்சிக் கணிப்பு நிறைவேறுவது சாத்தியமில்லை. மாறாக, 2021-22ஆம் ஆண்டிற்கான நாட்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி ஏழு முதல் எட்டு விழுக்காடு வரை இருக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்:

சென்ற ஆண்டு நவம்பரில் 2.29 விழுக்காடாக இருந்த மொத்த விலைப் பணவீக்கம் இந்த ஆண்டு நவம்பரில் 14.23 விழுக்காடாக உயர்ந்துள்ளது, எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 39.81 விழுக்காடு உயர்ந்துள்ளது உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 11.92 விழுக்காடு உயர்ந்துள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் ஆகியவற்றின் விலை உயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கத்தின் அளவு நவம்பர் மாதத்தில் 4.91 விழுக்காடு அதிகரித்துள்ளது, சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.78 விழுக்காடு உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 1.87 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 1.40 விழுக்காடு உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 13.62 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 6.03 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.18 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 1.31 விழுக்காடு குறைந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 29.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 5.55 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி அக்டோபர் மாதத்தில் உற்பத்தி 3.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 11.4, 2.0, 3.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே 9.0, 2.1, 5.3 விழுக்காடு உயர்ந்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 1.1 விழுக்காடு குறைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 0.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 6.1 விழுக்காடு குறைந்துள்ளது. 

நவம்பரில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு நவம்பரில் 3.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 8.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.2 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 3.2 விழுக்காடும் குறைந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 2.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 23.7 விழுக்காடும், எஃகு உற்பத்தி 0.8 விழுக்காடும், மின்சார உற்பத்தி 1.5 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் 2014-15 முதல் 2018-19, வரை இந்தியா கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கரும்பு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 10 விழுக்காட்டிற்கும் கூடுதலாகத் தயாரிப்பு சார்ந்த உள்நாட்டு ஆதரவு வழங்கியது என பிரேசில், ஆஸ்திரேலியா, குவாத்தமாலா ஆகிய நாடுகள் புகார் அளித்துள்ளன. சர்க்கரை மானியம் தொடர்பான இந்த சர்ச்சை இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. வர்த்தக அமைப்பின் உறுதிமொழிகளுக்கு இணங்கும் வகையில் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகப் பதிலளித்த இந்தியா இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி, தாராளமயமும், பொருளாதாரச் சீர்திருத்தமும் மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே பயனளித்துள்ளது. உலக மக்கள்தொகையில் முதல் 10 விழுக்காட்டினரின் வருவாயும் செல்வச் செறிவும் அதிகரித்து வருகின்றன. உலகின் அதிக சமத்துவமற்ற 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது. இந்தியாவில் முதல் 10 விழுக்காட்டினர் தேசிய வருவாயில் 57.1 விழுக்காட்டைப் பெற்றுள்ளனர். அதே சமயம் கீழே உள்ள 50 விழுக்காட்டு மக்கள் மொத்த வருவாயில் 13.1 விழுக்காட்டையே பெற்றுள்ளனர். முதல் 10 விழுக்காட்டினரின் சராசரி வருவாய் கீழேயுள்ள 50 விழுக்காட்டினரின் சராசரி வருவாயை விட 22 மடங்கு கூடுதலாக உள்ளது. இந்தியாவில் வருவாய்ச் சமத்துவமின்மை சீனா, அமெரிக்காவை விட அதிகமாக உள்ளது, சீனாவில் முதல் 10 விழுக்காட்டினரின் வருவாய் தேசிய வருவாயில் 41.7 விழுக்காடாக உள்ளது. சீனாவில் கீழே உள்ள 50 விழுக்காட்டினரின் வருவாய் மொத்த வருவாயில் 14.4 விழுக்காடாக உள்ளது. அமெரிக்காவில் முதல் 10 விழுக்காட்டினரின் வருவாய் மொத்த தேசிய வருவாயில் 45.5 விழுக்காடாக உள்ளது. கடைசி 50 விழுக்காட்டினரின் வருவாய் மொத்த வருவாயில் 13.3 விழுக்காடாக உள்ளது.

உலகச் சமத்துவமின்மை அறிக்கையின்படி, இந்தியாவின் வருவாய் சமத்துவமின்மை கடந்த காலத்தில் இருந்து கவனிக்கும் போது ஒரு ‘U’ வடிவப் பாதையை மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் முதல் 10 விழுக்காட்டினரின் வருவாய் பங்கு சுமார் 50 விழுக்காடாக இருந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, சோசலிசத்தால் ஈர்க்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களால் முதல் பத்து விழுக்காட்டினரின் வருவாய் பங்கு 35-40 விழுக்காடாகக் குறைக்க உதவியது. 1990 களில் பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிறகு அதிகரித்த சமத்துவமின்மையால் முதல் 10 விழுக்காட்டினரின் வருவாய் பங்கு 57.1% ஆக உயர்ந்துள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்களால் முதல் 10 விழுக்காட்டினரே பெருமளவில் பயனடைந்துள்ளனர், இந்த பெருகிவரும் வருவாய் செறிவின் முழுச் சுமையும் மக்கள்தொகையில் மிக ஏழ்மையான பாதிப் பகுதியினரால் சுமக்கப்பட்டது என்றும் இந்தாய்வறிக்கை கூறுகிறது. உலகளாவிய சொத்து வரியுடன், வருவாயில் 1.6 வரி விதித்து அதில் பெறப்படும் நிதியை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மாற்றத்தில் மீண்டும் முதலீடு செய்யலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்த காலத்தைக் காட்டிலும் தற்போது பாஜக ஆளும் இந்தியாவில் பொருளாதாரச் சமமின்மை அதிகரித்துள்ளது. பிற்போக்கான மன்னராட்சிக் காலத்தில் பயணிக்கிறது இந்தியாவின் “மக்களாட்சி”. உலகின் அதிகச் சமத்துவமற்ற 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதை பாஜக அரசு தன் சாதனையாகக் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- சமந்தா