நமது சமகாலச் சமுதாய சீர்கேடுகளுக்கும், சூழலியல் சீர்கேடுகளுக்குமான காரண கர்த்தாவைச் சூழலியல்வாதிகள் ஒருவாறு கண்டுகொண்டுவிட்டார்கள். குறிப்பாக, காலநிலை மாற்றச் சிக்கல், காடழிப்பு போன்ற சூழலியல் சிக்கல்களுக்குச் சமூகமனிதன்தான் காரணம் என நமது சூழல்வாதிகள் (குறிப்பாக லிபரல்) முடிவுக்கு வந்தனர். சிவில் சமூக மனிதனின் சுயநலம், பேராசை, ஆடம்பர வாழ்க்கை, டாம்பீக நுகர்வு முறைதான் சிக்கலுக்கு வேர் என்றனர். எழுநூறு கோடி மக்கள் சமுதாயத்தில் மாய மானாக இயற்கைச் சமநிலையை அழித்துத்திரிகிற அந்த “மனிதனை” ஒருவரும் அடையாளம் காண இயலாததால், அந்த மாய மானை கற்பனையில் துரத்திச் செல்வதோடு தங்களது சூழலியல் கரிசனத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

karl marxஇறுதிவரை அந்த “மனிதன்” சூழல்வாதிகளின் அருவச் சிந்தனையில் மட்டுமே வாழ்வதால், நடைமுறை எதார்த்தத்தில் (இயற்கையாய் அழிக்கிற) அந்த மனிதனிடம் கணக்கு தீர்க்கப்படவுமில்லை. ஆகவே, காலநிலை மாற்றத்திற்கெதிரான ஐநாவின் தீர்மானங்கள், திட்டங்கள் அனைத்துமே கற்பனைக்கெதிரான கற்பனைப் போராட்டங்களே தவிர நடைமுறைக்கும் அதன் தீர்மானங்களுக்கும் துளியும் தொடர்பில்லை!

1

யார் அந்த மனிதன்?

(ஏடறிந்த/ஏடறியா) மனித சமுதாயத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. தலைமுறைகளின் தொடர் வரிசையாக மனித இனம் தன்னைப் புனர் உற்பத்தி செய்து கொண்டு தனது சொந்த வரலாற்றைப் படைத்துக் கொள்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பிரமீடுகளைக் கட்டியே மனித இனமும், விண்வெளியில் செயற்கைக்கோள் ஏவுகிற மனித இனமும் வெவ்வேறு வரலாற்றுக் கட்டங்களைச் சேர்ந்த மனித சமுதாயத்தினர் எனத் துல்லியமாகத் தெரிகிறது. இதில் விடுவிக்கப்படாத புதிர் ஒன்று தொக்கி நின்றது. மனித வரலாற்றை இயக்குகிற சமூக விதி என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. பிரமிடு கட்டுவதில் இருந்து செயற்கைக்கோள் விடுகிற அளவிற்குச் சமுதாயம் வளர்ச்சி பெற்றது எப்படி? உண்பது, வாழ்வது என அவனது சொந்த இருத்தல் என்பது எல்லா வரலாற்றுக் கட்டத்தின் மனிதனுக்கும் பொருந்துகிற பொது அம்சம். ஐயாயிரம் ஆண்டுக்கும் முன்பும் தற்போதும் இதைச் செய்தால்தான் மனிதன் உயிர்பிழைக்க முடியும். இதைத் தவிர மானுட வாழ்க்கையைத் தீர்மானிப்பது என்ன? மானுட வாழ்க்கையை எது இயக்குகிறது?

இந்தக் கேள்விக்கான பதிலானது ஒன்றரை நூற்றாணடுக்கு முன்பாக தத்துவார்த்த ரீதியிலும், அனுபவவாத மெய்நடப்பு மூலமாகவும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. மனித உணர்வு மனித வாழ்வை தீர்மானிப்பதில்லை. மனித வாழ்க்கை நிலைமைதான் அவனது சொந்த உணர்வைத் தீர்மானிக்கிறது என்று மார்க்சால் இந்தப் புதிர் விடுவிக்கப்பட்டது.

மனிதன் உயிர் பிழைத்தலுக்காக இயற்கையுடன் வினையாற்றுகிறான். தனது சொந்த தேவைக்காக வாழ்க்கைச் சாதனத்தை உற்பத்தி செய்வதில் ஈடுபடுகிறான். இவ்வாறு மனிதன் மெய்யான பொருளாதார வாழ்க்கையை உருவக்கிக் கொள்கிறான்..

மனித உழைப்பின் மேம்பட்ட வளர்ச்சிக் கட்டத்தில் உழைப்புப் பிரிவினை பிரிதலுக்கு இட்டுச்செல்கிறது. பூர்வகுடி சமூகத்தில் இருந்து அடிமைமுறை சமுதாயத்திற்கும், அடிமைமுறை சமுதயாத்தில் இருந்து நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கும் பிறகு வணிக சமுதாயமாகத் தொழில்துறைச் சமுதாயமாக உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சிப்போக்கு நடைபெறுகிறது. உழைப்புப் பிரிவினையின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களும் அச்சமூகத்தின் உடமை உரிமை உறவையும் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, பூர்வகுடிச் சமூகத்தில் நிலம், சொத்து பொது உரிமையாகவும் பொது நுகர்வாகவும் உள்ளன. நிலப்பிரபுத்துவ சமுதயாத்தில், உழு கருவிகள், நிலங்கள் பிரபுவுக்கு தனிச்சொத்தாக இருக்கின்றன. தொழில்துறைச் சமுதாயத்தில் நவீன தனியுடமை வளர்த்து ஆலை உரிமையாக, இயந்திர சாதன உரிமையாளராக பண மூலதன உடைமையாளராக முதலாளி தனிச்சொத்து உடைமையின் வடிவமாக நடமாடுகிறார். ஆலைத் தொழிலாளி கூலிக்கு உழைப்பை விற்கிற சொத்தற்ற வர்க்கமாக உள்ளான்.

உழைப்புப் பிரிவினையின் மேம்பட்ட வளர்ச்சியால் தீர்மானிக்கப்படுகிற பொருள் உற்பத்தி முறையானது சமூக மனிதர்களுக்கு இடையிலான உறவையும் தீர்மானிக்கிறது. நிலப்பிரபுத்துவக் கட்டத்தில் பிரபுக்களும் ஏழை விவசாயியும் உற்பத்தி நடவடிக்கையால் பரஸ்பர சமுதாய உறவு கொள்கிறார்கள். நவீன முதலாளித்துவ பொருளுற்பத்தி சகாப்தத்தில் முதலாளியும் தொழிலாளியும் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளவேண்டியுள்ளது. இதையே உற்பத்தி உறவு (Production relation) என்ற புதிய சொல்லை அறிமுகம் செய்து விளக்கினார் மார்க்ஸ்.

இப்போது மனிதன் என ஒருவர் பொதுவாக எழுதினால், பேசினால், நாம் கேட்க வேண்டியது எந்த வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்த மனிதன் அவன்? அதாவது அந்த மனிதன் என்ன உற்பத்தி செய்தான்? எப்படி உற்பத்தி செய்தான்? திட்டவட்டமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள திட்டவட்டமான சமுதாயத்தின் எந்தச் சமுதாய உறவின் வடிவத்தை வெளிக்காட்டுகிறான். அதாவது நிலப்பிரபுவா? பண்ணையடிமையா? முதலாளியா தொழிலாளியா? பொருளுற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதலாளியின் வாழ்க்கை நிலைமை வேறு, சொத்தற்ற ஏழை கூலித் தொழிலாளியின் வாழ்க்கை நிலைமை வேறு. இந்த வாழ்க்கை நிலைமையே தொழிலாளியின் இயல்பையும் உணர்வையும் தீர்மானிக்கிறது. முதலாளியின் இயல்பையும் உணர்வையும் தீர்மானிக்கிறது. இருவரின் இயல்பும் உணர்வும் ஒன்றல்ல, செயல்பாடும் ஒன்றல்ல, நீங்கள் கூறுவது எந்த மனிதனை? அம்பானியையா அல்லது ஒப்பந்தத் தொழிலாளியையா?

2

பரிணாமவிதிக் கோட்பாட்டில் தெளிந்த சூழல்வாதிகள் சமூக வரலாற்று விதியைப் பொறுத்தவரை இன்னும் முன்னேறாமல் 19 ஆம் நூற்றாண்டிலேயே தேங்கி நிற்கின்றனர். ஆக, இவர்களுக்குப் பதில்சொல்ல நாம் அவ்வப்போது 19 ஆம் நூற்றாண்டில் தீர்க்கப்பட்ட விவாதத்திற்குள் செல்லவேண்டியுள்ளது.

பாயபார்க், புருத்தோன் மீதான இரக்கமற்ற விமர்சனத்தின் வழியே கார்ல் மார்க்ஸ் இதைத் தீர்த்தார். பாயபார்க் மனிதனை மன உணர்வில் அடக்கிவிட்டார். மெய்யான “வரலாற்று மனிதன்” என்பதற்குப் பதில் சிந்திக்கிற மனிதனாகச் சுருக்கிவிடுகிறார் என்றார் மார்க்ஸ். வரலாற்று மனிதன் என்பவன் உற்பத்தி நடவடிக்கையால் செயலூக்கமுள்ள மனிதனாக வாழ்கிறான். இவ்வாறு திட்டவட்டமான உற்பத்தியில் ஈடுபடுகிற மனிதன் திட்டவட்டமான சமுதாய உறவுகள் அரசியல் உறவுகளாக வெளிப்படுகிறார்கள்.

பாய்பார்க் பற்றிய ஆய்வுரைகள், ஜெர்மன் சித்தாந்தம் உள்ளிட்ட எழுத்துக்களில் மார்க்சால் தனித்தும் என்கெல்ஸுடன் இணைந்தும் தீர்க்கப்பட்ட இவ்விவகாரங்கள் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் துல்லியமாக எடுத்துரைக்கப்பட்டது. வரலாறென்பது வர்க்கங்களின் போராட்டமே என் இரத்தின சுருக்கமாக சமூக விதியை விளக்கியது. சமூக வரலாற்றை விஞ்ஞானமாக்கியது. அவ்வறிக்கையில் தொகுக்கப்பட்ட சாரத்தின் ஒரு பகுதியைத்தான் மேலே விவரித்தோம்.

டார்வினின் பரிணாம விதிக் கோட்பாடு மெய்நடப்பில் நிரூபணம் ஆனபின்னரும் குரங்கில் இருந்து மனிதன் பரிணமித்ததை ஏற்காத மத குருமார்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல நமது சூழல்வாதிகள். ஏனெனில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டு விதி இயற்கை வராலாற்றை விஞ்ஞானப் பூர்வமாக்கியதைப் போலவே, சமூக வரலாற்றை விஞ்ஞானம் ஆக்கிய மார்க்சின் சமூக விதிக் கோட்பாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்பதை மதகுருமார்கள் போலவே இவர்களும் அறியாதவர்களாக உள்ளனர். இதன் காரணமாக, இயற்கை வரலாற்றை விஞ்ஞானப்பூர்வமாக உள்வாங்கிய டார்வீனிய சூழல்வாதிகள் சமூக வரலாற்றுப் பக்கம் வரும்போதும் மானுட சமுதயாத்தை அதன் எதார்த்தத்தில் இருந்து புரிந்து கொள்ளாமல் அருவ ஊகமாகப் புரிந்துகொள்கிறார்கள்.

பொதுவாக இவர்கள் வரலாற்றைப் பார்க்கிறபோது பொருள்முதல்வாத கண்ணாடி கொண்டு பார்ப்பதில்லை. பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்கிற போது வரலாற்றைக் கவனிப்பதில்லை!

நமது சூழல்வாதிகள், இயற்கை நிலைமையை அழிக்கிற “மனிதன்” எனும் மாய மானை கற்பனையில் வேட்டையாடி களைப்புற்று வருகிறார்கள். நாமோ, வரலாற்று மனிதனாக, செயலூக்கமுள்ள மனிதனாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மனித சமுதாயத்தின் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் உள்ளார்ந்த முரண்பாட்டால் தோன்றியுள்ள வர்க்கச் சமுதயாத்தில், முதலாளித்துவ வர்க்க்கத்தைப் பொது எதிரியாக எதார்த்த்ததில் உணர்ந்துகொண்டு, உற்பத்தியிலும் அரசு அதிகாரத்திலும் அதன் சமூக மேலாண்மையை நடைமுறையில் வீழ்த்த ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் இணைந்தும் சேர்ந்தும் ஒன்றுபட்டும் போராடுகிறோம்.

- அருண் நெடுஞ்செழியன்