lenin revolution

பெரும் அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்கள், அதைப் பதுக்கிக் கொள்வதற்கு மேலும் வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.2,000 பணத் தாளைப் புதிதாக அறிமுகப் படுத்தியும், சிறிய அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களை மிரட்டிப் பணிய வைத்து, அவர்களைப் பெருமுதலாளிகளின் கேடயங்களாகவும், கவசங்களாகவும் பயன்படுத்தும் நோக்கத்துடன் ரூ.500, ரூ1000 பணத் தாள்களைச் செல்லாததாக்கியும் 8.11.2016 அன்று இந்திய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இவ் அறிவிப்பு உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாமல் சிறு, நடுத்தர வணிகர்களையும், தொழிலதிபர்களையும் முன் எப்போதும் கற்பனையும் செய்திராத அளவிற்குத் தாக்கி உள்ளது.

இவ்வளவு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட மக்கள் பொங்கி எழவில்லையே என்று சமூக மாற்றம் வேண்டுவோர் அதிர்ச்சியையும் மனக் கவலையையும் அடைந்து உள்ளனர். சமூக மாற்றம் வேண்டுவோர் நிச்சயமாகத் தங்கள் வழிமுறையைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

அரசியலில் ஈடுபாடு கொள்வது அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஏன்? அரசியலில் முன்னணியில் இருக்கும் தலைவர்களில் ஊழல் கறை படாதவர்கள் யாரும் இல்லை. விதிவிலக்காகச் சிலர் இருந்தாலும் அவர்கள் ஊழல் தலைவர்களின் குடைக்குக் கீழ் தான் இருக்க முடிகிறது. ஊழல் தலைவர்களுக்குக் கீழ் வராதவர்கள் ஊடகங்களால் முற்றிலும் புறக்கணிக்கப் படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் அரசியலைப் புறக்கணிப்பது தவிர்க்க முடியாததாகிறது. இந்நிலையில் மனக் கவலையை மறக்கடிக்கும் மதத்தில் சரண் புகுவதும் தவிர்க்க முடியாததாகிறது.

இது சுரண்டல் வர்க்கத்திற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை. புரட்சி நடக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தில் புரட்சிகரத் தத்துவம் நிலவ வேண்டும். ஆகவே இந்நிலையில் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுப்பதே சமூக மாற்றத்தை வேண்டுவோரின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பது தான் யதார்த்த நிலை.

தேர்தலில் பங்கு கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பதே பெரும் பாவமாகக் கருதுகின்றன. தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள் கூலி உயர்வு வட்டத்தில் சிறைப்பட்டுக் கிடக்கின்றன என்றால், தேர்தலில் பங்கு கொள்ளாத பொதுவுடைமைக் கட்சிகள் நடக்க வாய்ப்பே இல்லாத புரட்சிக்குத் தலைமை தாங்கும் கனவில் இருந்து வெளியே வரமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன. சிதறிக் கிடக்கும் இக்கட்சிகள் ஒன்று சேர விடாமல் தடுப்பது இத்தலைமைக் கனவே.

இத்தலைமைக் கனவுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? இன்று நம் சமூகத்தைக் கவ்வியுள்ள இருளின் அடர்த்தியைப் பார்க்கையில், எவ்வளவு தான் கடுமையாக முயன்றாலும், நம் தலைமுறையில் புரட்சி வரப் போவது இல்லை என்பதை உணரலாம். ஆகவே இத்தலைமைக் கனவு இம்மி அளவும் நடைமுறைக்கு உதவாது.

சமூக மாற்றத்தை வேண்டும் அனைவரும் மக்களிடையே அதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் கூற வேண்டும். "பெரு முதலாளிகளை வென்றெடுப்போம்", "பெருமுதலாளிகளை இந்தியாவில் கால் பதிக்க விடமாட்டோம்", "இந்தியத் தரகு முதலாளிகளை ஒழித்துக் கட்டுவோம்" இன்னும் இது போன்ற கூச்சல்கள் எந்தப் பயனையும் விளைவிக்காது. அது மட்டும அல்ல. மக்கள் பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து அந்நியப்படவே பயன்படும். ஆகவே சமூக மாற்றத்தை வேண்டுவோர் தங்கள் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிராக உள்ள பிரச்சினைகள் யாவை? பொதுவுடைமைச் சமூகத்தில் சுதந்திரம் இருக்காது என்று முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும், வலுவாகவும் வெற்றிகரமாகவும் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர். உழைக்கும் வர்க்கத்தினரிலேயே மிகப் பலர் இப்பொய்ப் பிரச்சாரத்திற்கு முழுமையாகப் பலியாகி உள்ளனர். அவ்வாறு பலியாகாதவர்களிலும் பலர் இத்தத்துவத்தைக் கொச்சையாகப் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.

நடுத்த வர்க்கத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முதலாளித்துவ அறிஞர்களின் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று சொல்லுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைப்பவர்கள். இவர்கள் முதலாளிகளின் சம்பளம் வாங்காத வேலைக்காரர்கள்.

இவ்வாறு பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கும் மக்களை இத்தத்துவத்தின் பால் ஈர்க்காமல், முதலாளிகளை, முதலாளித்துவத்தை வென்றெடுப்போம் என்று முழங்குவது வீண் வேலை. முதலில் பொதுவுடைமை என்பது மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல; மக்களின் சுதந்திரம் பொதுவுடைமைச் சமூகத்தில் தான் சாத்தியமாகும் என்பதைப் புரிய வைக்க வேண்டும். முதலாளித்துவச் சமூகத்தில் மக்களுக்குச் சுதந்திரம் என்பது சாத்தியமே அல்ல என்பதையும் புரிய வைக்க வேண்டும். மேலும் மக்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் முதலாளித்துவ முறை காரணமாக இருப்பதையும், பொதுவுடைமையில் மட்டுமே அவற்றிற்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல. இன்று உலக மக்கள் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து, உலகில் உயிரினங்களின் முழு அழிவிற்கு இட்டுச் சென்று கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் முதலாளித்துவம் பெற்றெடுத்த பெருங்கேடுகள் என்பதையும் புரிய வைக்க வேண்டும். மேலும் முதலாளித்துவ முறையில் இக்கேடுகள் வளராமல் இருக்க முடியாது என்பதையும் புரிய வைக்க வேண்டும். பொதுவுடைமை வழியில் மட்டும் தான் இவற்றிற்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்கி, உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உயிரினங்கள் அழியக் கூடாது என்று நினைக்கும் மனித நேயம் படைத்த பிற வர்க்கத்தினரையும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பால் ஈர்க்க முயல வேண்டும். இதன் மூலம் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுக்க வேண்டும்.

இப்பணிகள் நிச்சயமாகச் சலிப்பூட்டுபவையாகவும், சோர்வூட்டுபவையாகவுமே இருக்கும். அந்தச் சலிப்பையும் சோர்வையும் பொறுத்துக் கொண்டு, பணி புரிவதே சமூக மாற்றம் வேண்டுவோரின் கடமையாகும்.

- இராமியா

Pin It