இந்தியா உட்பட பல நாடுகள் (GATT) ‘காட்’ ஒப்பந்தத்தில் 1995 ஆம் ஆண்டு கையொப்பமிட்டன. அந்த ஒப்பந்தத்தின்படி வணிகம், பண்பாடு மற்றும் சேவைகளைத் தங்குதடையின்றி, உறுப்பினர் நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு கட்டுப்பாடின்றி சுதந்திரமாகச் சுரண்டலாம்.

 உலக முதலாளிகளின் மூர்க்கத்தனமும், அதன் விளைவாகப் பிறந்த ஆதிக்க உணர்வும் ஏற்படுத்தியதன் தாக்கமே, ‘உலகமயமாக்கல்!’. உலகமயத்தின் பெயரால், மூலதனம், அனைத்து நாடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிடுகிறது. சந்தைப் பொருளாதாரத்தின் செல்வாக்கும், முதலாளித்துவத்தின் சீரழிந்த கலாச்சாரமும் ஏழை மக்களைப் படாத பாடுபடுத்துகிறது.

 ‘உலகமயமாக்கல்’ நடத்தும், கட்டற்ற வியாபாரத்தில் ‘கல்வி’ மட்டுமே ஆண்டுதோறும் லாபக் கணக்கில் விற்பனையாகி, அதிகப் பங்கை ஈட்டியிருக்கிறது. ஆம்! எந்த நாட்டுக் கல்வி நிறுவனங்களும், வேறு எந்த நாட்டு மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம்போல் கல்விக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளலாம்; தங்கள் கருவூலங்களை நிறைத்துக் கொள்ளலாம். புதுப்புதுப் பாடங்களைச் சேர்க்கலாம். தேர்வு முறைகளையும் மாற்றி அமைக்கலாம்; தங்கள் விருப்பப்படி பட்டங்களை அளித்து, பறக்க விடலாம்! எந்தவிதக் கட்டுப்பாடும், விதிகளும் இவர்களைத் தீண்டமுடியாது!

‘உலகமயம்’ என்னும் உன்மத்தம், அமெரிக்காவின் தலைமையில் கோளங்களை ஆளவும், நீளச் சுரண்டவும் ஏழை மக்களை ஆட்டிப் படைக்கவும் செய்கிறது. ‘தங்குதடையற்ற கல்விப் பரிமாற்றம்’ – என்ற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கலை—பண்பாடுகளைச் சுரண்டிக் காயப்படுத்துகிறது.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஏழை நாடுகள், குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த ‘காட்’ ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்தக் கேடுகெட்ட நிபந்தனையைக் கூட இந்தியா மறுக்காமல் ஏற்றுக் கொண்டது. இது, மக்களின் மனதை வாட்டுகிறது. வாட்டத்தைப் போக்கமுடிகிறதா? விளைவு? தனியார் முதலீட்டையும், அகலக் கால்வைக்கும் அந்நிய நாட்டுக் கல்வி நிறுவனங்களின் வருகையையும், இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 ‘கல்வியைத் தரவும், சுகாதாரம் பேணவும், மருத்துவ வசதியை அளிக்கவும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கும், அரசினர் அதிக நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது’- என்பது உலக வங்கியின் உயரிய (!), யோசனை வடிவிலான அரிய(!) கட்டளை! அக்கட்டளையை, சிரமேற்கொண்டு, உலகமயக் கொள்கையின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற சேவைப் பணிகளிலிருந்து அரசு தன்னை விலக்கிக் கொள்கிறது! அதன்படியே அரசின் ஆதரவோடும், நீதிமன்றங்களின் தடைகளின்றியும், இந்திய தேசத்தில், ‘கல்வி வியாபாரம்’ கனகச்சிதமாய்க் கொடிகட்டிப் பறக்கிறது.

 இந்திய மண்ணில் அந்நியக் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதற்கான மசோதா, 2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் கோடை காலக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட இருந்தது. அந்த வரைவு மசோதாவில், அந்நியப் பல்கலைக் கழகங்களுக்கு அளப்பரிய சுதந்திரம் அளிக்கவும், பல்கலைக்கழக மான்யக் குழுவின் வளர்ச்சி நிதியிலிருந்து நிதி உதவி அளிக்கவும், வழிவகை செய்யப்பட்டிருந்தது. இடது சாரிக் கட்சிகளின் எதிர்ப்பினால், அம்மசோதா நிறைவேற்றப்படாமல் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 நடுவண் மற்றும் மாநில அரசுகளின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. அதுவும், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், கல்விக்கான மானியமும், கட்டுத்திட்டமின்றி, வெட்டப்படுகிறது. அதற்கு, அரசு தனது அறிக்கையில் முன்வைக்கும் வாதம் என்ன தெரியுமா? உயர்கல்வி என்பது, ‘திறன் சாராப் பொருள்’ கொண்டது. பாதுகாப்பு, பொது நிர்வாகம் முதலியன ‘பொது (நலப்) பொருட்கள்’ இரு வகைப்படுத்தியுள்ள இவை பொது நன்மைகளை உருவாக்குபவை; உயர்கல்வி அதனைப் பெற்றுக் கொள்பவருக்கு மட்டுமே சென்று சேர்கிறது. அவருக்கு மட்டுமே பயன் உண்டாகிறது”. இவ்வாறு உரைப்பதும் முன்வைக்கப்படுவதும் பிற்போக்குத்தனமான வாதம் ஆகாதா? உயர் கல்வி அளிக்கும் கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் அரசுகள் தம்மை கழற்றிக் கொள்கின்றன என்பதை இவை, காட்டவில்லையா?
 
ஆனால், இதற்கு மாறாக யுனஸ்கோ நிறுவனம் தனது அறிக்கையில், “உயர் கல்வி உட்பட ‘கல்வி’ என்பது, அதைப் பெற்றுக் கொள்பவரையும் தாண்டிச் சமூகத்திற்குப் பல நன்மைகளை உருவாக்குவது” என்றே விளக்கியும் துலக்கியும் கூறுகிறது.

 உயர்கல்வி என்பதும் ஒரு பொதுச் சொத்து. அதை வழங்க வேண்டியது சமூகத்தின் கடமை. அரசு, அக்கடமையிலிருந்து வழுவுதலையோ, நழுவுதலையோ, சமூக அக்கறை கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 கல்வி குறித்த பிர்லா-அம்பானி குழுவின் 2000 ஆம் ஆண்டின் அறிக்கை என்ன கூறுகிறது? இதோ அதன் சாறு: “கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்; கணினி அறிவியல் அதிகரிக்கும் வகையில் திட்டமிட வேண்டும்; உயர் கல்விக்கான அனைத்து மானியங்களையும் கைவிட வேண்டும்; அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களாக மாற்ற வேண்டும்; கல்வித் துறையில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்; அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திட வேண்டும்; அனைத்துக் கல்விக் கட்டணங்களையும் உயர்த்திட வேண்டும்”. இந்தப் பரிந்துரைகளை நடுவண் அரசுக்கு அளித்த, இந்தியப் பெரு முதலாளிகளுக்கும், உலகமயக் கொள்கைகளுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை நாம் இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதா?! முடியும்.

 உலக வங்கியின் நிர்ப்பந்தத்தால் அமைக்கப்பட்ட, ‘செலவு-சீர்திருத்தக் குழுவின்’, சிந்தனை மிக்க (!) பரிந்துரைகள் எவை? இதோ அவை:- அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் புதிய பணி நியமனங்கள் செய்யக் கூடாது; அனைத்து நிலைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாது; இடைக்காலமாக பத்து விழுக்காடு ஆட்குறைப்பு செய்யப்பட வேண்டும்; ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழித்திட வேண்டும்’ – இவற்றின் மூலம் என்ன விளைகிறது? உயர் கல்வியின் வளர்ச்சி முடமாக்கப்படுகிறது. மேலும், மான்யங்கள் குறைக்கப்படுவதால், ஆய்வகங்களின் தரம் தாழ்கிறது; நூலகங்களின் திறம், நலிந்து சிதைகிறது. மொத்தத்தில், உயர்கல்வி, மிகப் பெரிய பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்திக்கவும் எதிர்கொள்ளவும் நேர்கிறது.

 "சந்தையை நம்பிச் செயல்படும் சக்திகள் ஆட்சி செலுத்தும்போது ஏற்படுகிற முதற்பலி, சமத்துவ நிலைச் சரிவே!" எனச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வியில் சமத்துவமற்ற சரிவு நிலையைத் தனியார்மயக் கொள்கைகள் தாரளமாய் ஏற்படுத்துகின்றன.

 உலக முதலாளித்துவம், கல்வித் துறையை கோடிக்கணக்கான டாலர் மதிப்பில், லாபம் தரும் தொழிற்சாலையாக மாற்றியமைத்து வருகிறது. அதனால்தான் இந்தியாவில், உயர்கல்வி நிறுவனங்களை அழிக்கும் பணியில் பொதுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. ‘சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்’- என்ற பெயரில், அரசியல்வாதிகள் – அதிகாரிகள் - முதலாளிகள் ஆகியோரின் பொருந்தாக் கூட்டணிகள் உருவாகியுள்ளன. மாணவர்களையும், அவர்கள் வழி ஏழைப் பொதுமக்களையும் பெரிய அளவில் ஏமாற்றி இக்கள்ளக் கூட்டணிகள் கொள்ளையடிக்கின்றன. இச் ‘சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்’ தங்களின் சுயநிதியை மட்டுமே பெருக்கிக் கொண்டு வருவது, உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை! நடுவண் அரசும், மாநில அரசுகளும் இதைக் கண்டு கொள்ளாமல் பச்சைக் கொடி அசைக்கின்றன! பாசாங்கு காட்டுகின்றன! நீதி மன்றங்களும் ‘நெற்றிக்கண்’ மூடிய நிலையில், இவற்றைக் கண்டு கொள்ளுவதில்லை!

“தேசப் பாதுகாப்பிற்குச் செலவிடப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மருத்துவம், கல்வி முதலியவற்றை நோக்கித் திருப்பிவிடுவது அவசியம்” என்பார் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார மேதை அறிஞர் அமர்த்தியா சென்!

கல்வி என்பது விற்பனைப்பண்டம் அல்ல. நாட்டின் வளர்ச்சியிலும் சுதந்திரமான முன்னேற்றத்திலும் கல்வி அடிப்படையானது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

 அந்நியக் கல்வி நிறுவனங்களாலும், சுய நிதிக் கல்வி நிறுவனங்களாலும் ‘கல்வி வியாபாரம்’ தானே பெருகும்!. அந்த வியாபாரத்தில் ஏழை எளிய மக்களுக்கு, ‘உயர்கல்வி’ எளிதில் கிட்டாது. இன்னும் எட்டாத உயரத்திற்குச் சென்று விடும்.

 வறுமையும் ஏற்றத்தாழ்வும் நிறைந்த இந்தியாவில் கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏழைய எளிய மக்களுக்குக் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

 “ஏழை என்ற காரணத்தினால் ஒருவருக்குக், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது என்ற நிலை ஏற்படாமல் தடுப்போம்” – என்று ஐய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆரம்பக்கட்டத்திலேயே தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறியுள்ளது. அக்கூற்று, காற்றில் பறக்கவிடப்பட வேண்டுமா?

 உயர்கல்விக்கான செலவை மாணவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்; இது, ‘பயனீட்டாளர்களே விலையைக் கொடுக்க வேண்டும்’ என்னும் சந்தைப் பொருளாதாரத் தத்துவத்தின் சாரம் அல்லவா? இத்தத்துவம், ‘இந்திய ஏழையின் மீது திணிக்கும் அடிப்படையைக் கொண்டது’- என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

 உலகமயக் கொள்கையை அமல்படுத்தினால், பெண்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் உயர் கல்வியில், இடம் இல்லாமல் மறுக்கப்படும் அபாயம் குறுக்கிடும்! ‘கல்வி பெறும் உரிமை’, கூட காற்றில் பறக்கவிடப்படும்! சமூக நீதிக்கு சமாதி கட்டப்படும்!

 எனவே, கல்விக்கான உரிமையைப் பெறவும், பாதுகாக்கவும் அக்கறை, கொண்ட அனைவரும் கரம் கோர்த்து எழுவோம்! உயர்கல்வியை நசுக்கும் உலகமயத்தைப் பொசுக்குவோம்!

Pin It