தமிழுக்கே தகுதி (1938) - மறைமலையடிகள்

ஆங்கிலம் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை அறியாமல் நம் ஏழை மக்கள் திகைத்து விழிப்பது போலவே; இந்தி மொழியைக் கற்றவர் நம் மக்களிடையே இந்தியில் பேசினால் அவர் அதன் பொருளை அறியாமல் திகைத்து விழிப்பர் என்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே; இவ்விந்திய தேயத்தில்......தாம்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் நல்லறிவு பெற்று முன்னேற்றம் அடையும்படி உதவி செய்தல் வேண்டும்.

maraimalaiadikal 220இங்ஙனம் செய்வதை விட்டு இந்தி மொழியைக் கட்டாய பயிற்சிக்காக வைக்கப் பெரிது முயல்வது; உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமே அல்லாது; அதனால் ஒரு சிறு பயன்தானும் விளையமாட்டாது.

எல்லா வகையாலும் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொதுமொழி யாவதற்குரிய நலன்கள் எல்லாம் வாய்த்ததாயிருந்தும் அதனை பொதுமொழியாக்க முயலாமல் "இந்தி" முதலான சிதைவு கலப்பு மொழிகளை இத்தேயத்திற்கு பொது மொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவாரா என்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

- இந்தி பொதுமொழியா? (Is Hindi a common Language?) 1938 

தமிழர் மாநாட்டுத் தலைமையுரை (1938) - சோமசுந்தர பாரதியார்

ஆரிய மொழியாலும், அதனை கலையாலும் தேசியம் என்ற போர்வை போர்த்துத் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்குரிய இடமும், உரிமையும், நிலை தளரச் செய்தது போதாதது போல, நமது தமிழ் மொழி, இதுபோது (1938)  எதிர்பாராதவிடத்திலிருந்து கொணர்ந்து புகுத்தப் பெறும் புதியதொரு பகை மொழியை எதிர்க்க வேண்டியிருக்கிறது. நமது மாகாணத்துத் தற்காலக் காங்கிரஸ் மந்திரி சபை தனக்குள்ள செல்வாக்கைக் கருவியாகக் கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழுக்கு விபத்தொன்றைச் செய்யத் தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பாட சாலைகளிலும் எல்லா மாணவர்களும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தப் போவதாகத் தமிழர்களாகிய நம்மைப் பயமுறுத்துகின்றது. அரசாங்கத்தின் கொள்கையென்று சொல்லி, பாடசாலைப் பாடங்களுள் இரண்டாவது மொழி வகையில் விருப்பப்பாடமாக வைப்பதாயினும் நமது மாகாண மொழியாகிய தமிழ்மொழியின் சிறப்பையும் உரிமை நிலையினையும் கெடுத்துச் சீர்குலைத்து வரும் வடநாட்டு ஆரிய மொழியின் கிளையாய், சமசுகிருதத்தின் முடிவாய் வந்திருக்கும் இந்தி மொழியை நமது தமிழ்நாட்டு அறிவுப் பக்குவமில்லாத இளஞ்சிறுவர்கள் கட்டாயம் படித்துத் தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் இத்தீச் செய்கையால் நமது தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெருங்கேடும், தமிழர் நாகரிகத்துக்கு அனர்த்தமுமே 

உண்டாகும். இந்தி மொழியை எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் அது நம் தமிழ் மொழியின் காற்கீழ் ஒதுங்கக்கூடிய சிறுமையுடையது. இந்தியைக் காட்டாயப்படுத்திப் படிக்கச் செய்வது, தமிழ்க் கல்விக்கு இசைந்ததாக இல்லாமலிருப்பதோடு தற்காலம் நம் தமிழ் இருக்கும் நிலையில், அதற்கும் அதன் கலைவளர்ச்சிக்கும் பெரிதும் தடையும் இடையூறும் விளைவிப்பதாகவே இருக்கிறது. தமிழ்ச்சிறுவர்களுக்குச் சிறு வகுப்பிலேயே இந்தியைக் கட்டாயமாக நுழைப்பது, தமிழ் இளைஞர்களின் முற்போக்கைத் தடுத்து அவர் உயர் கல்வியைக் கற்க வொட்டாமல் தடை செய்வதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர வேறில்லை. இது, சாதிச்செருக்காலும், சமூகத்திமிராலும், தங்களுக்கு உரியது சமசுகிறதமேயென எண்ணி, பல நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தாழ்வு செய்து கொண்டே வந்த ஒரு சாதி இளைஞர்களுக்கு உயர் கல்விக்குரிய சலுகை காட்டுவதற்காகச் செய்யப்படும் சுயநலத் தந்திரமேயாகும். இந்தியென்பது சமசுகிருதத்தின் கிளைமொழியாகையால், அந்தச் சம்சுகிருதமே தங்கள் "சுவ பாசை" என்று கொண்டு பயின்று வரும் அந்தச்சாதி இளைஞர்களுக்கு இந்தி மொழி சுலபத்தில் வந்துவிடும். இந்தியை நுழைத்துவிடின், எதிர்காலத்தில் இந்தி படித்தவர்களுக்கு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்குரிய வசதிகளும் பிற்கால வாழ்வுக்குரிய தகுதிப்பாடுகளும் வழங்கப்படும். அந்நிலையில் இந்தியைக் கற்கமுடியாமல், நம் தமிழ்சிறுவர்களே மிகவும் பாதிக்கப்பட்டு மேற்கூறிய தகுதிப்பாடுகளையும் பெறமுடியாமல் வருந்த நேரிடும். தற்கால நமது மாகாண மந்திரிசபை, இந்த வகையில் தமிழர்களை அலட்சியம் செய்து, அவர்கள் கவுரவத்தையும் நிராகரித்து,  தங்களுடைய கட்சிப் பலத்தாலும், காங்கிரசின் பெயராலும், இந்தக் காரியத்தைச் செய்ய முனைந்திருக்கின்றது. நமது பாசை, கலை முதலியவைகளுக்குத் தீங்கு செய்யுமிடத்து, காங்கிரசாயிருந்தாலும் நாம் அதற்கு இடந்தரக்கூடாது. உண்மையில் காங்கிரசு நிறுவனங்கூட, இந்தியே எல்லா மக்களுக்கும் கட்டயாமான பொதுமொழியென முடிவு செய்துவிடவில்லை. ஆகவே நமது மாகாண மந்திரி சபை செய்யும் இது, தமிழர்களாகிய நம்மால் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

- வட ஆர்க்காடு தமிழர் மாநாட்டுத் தலைமையுரை 26.2.1938, திருவத்திபுரம் 

வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக்கூடாது - பாவாணர், (1968)

"வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக்கூடாது" என்பது பழங்காலப் பழமொழிகளுள் ஒன்று. இது எக்காலத்து இவ்விடத்து எது பற்றி எவ்வாறு எவர் வாயிலாய்த் தோன்றிற்றென்பது தெரிந்திலது. இதை ஒருமருங்கு ஒத்ததே. 

"Cold weather and knaves come out of the North" என்னும் ஆங்கிலப் பழமொழியும் வடக்கத்தியான் என்றது யாரை என்பது தெரியவில்லை.

ஆங்கிலர், நீங்கியபின், இந்தியரெல்லாரும் கண்ணியமான விடுதலையின்ப வாழ்வு வாழ எண்ணியிருந்த காலத்து, இந்தி வெறியர் ஏனை மொழியாரை முன்னினும் பன்மடங்கு இழிவான அடிமைத்தனத்துள் அமிழ்த்தவும் தமிழை நாளைடைவில் மெல்ல மெல்ல அழிக்கவும் திட்டமிட்டுவிட்டனர். இது முதலாவது தாக்கியதும் முதன்மையாகத் தாக்குவதும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி பேசும் தமிழரையே. 

கடந்த முப்பான் ஆண்டுகளாகத் தமிழர் எத்தனையோ வகையில் எதிர்த்துப் போராடியும் மறைமலையடிகள் உள்ளிட்ட மாபெரும் புலவர் ஏரணமுறையில் எடுத்துரைத்தும், பாலறாவாய்ப் பசுங்குழவிகளையேந்திய தாய்மார் பலர் சிறை சென்றும், தமிழை உயிர்போற்கருதிய இளைஞரும் நடுமையரும் தமிழ் கெடுமென்றஞ்சி அளவிறந்து உளம்நொந்து உலகை வெறுத்துத் தீக்குளித்தும், முதுகு தண்டொடிய மாணவர் தடியடியுண்டும், இந்திவெறியர் இம்மியும் அசையாது கடுமுரண்டுடன் அஃறிணையும் நாணுமாறு அடர்த்து நிற்கின்றனர். இதற்குத் தூண்டுகோலானவர் தமிழைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுப் பேராயக்கட்சியினரே . 

அண்மையிற் பொங்கியெழுந்த மாணவர் கிளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரைவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் அகப்பகையும் புறப்பகையுங் கூடி அதன் பயனைக் கெடுக்க முயல்கின்றன. அதனால் தமிழரை எளிதாய் விலைக்கு வாங்கிவிடலாமென்றும், அது தவறின் படைகொண்டு அடக்கி விடலாமென்றும், இந்தி வெறியர்கனாக் காண்கின்றனர். 

இந்நிலையில் தமிழாசிரியரும் மாணவரும் விடுமுறை நாளெல்லாம் பட்டினம் பாக்கம் பட்டி தொட்டி யெல்லாம் புகுந்து, இந்திக்கல்வியாலும் ஆட்சியாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் விளையும் தீங்குகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் பொது மக்கட்கு விளக்கிக் காட்டல் வேண்டும். இது குடியரசு முறைப்பட்ட மக்களாட்சி நாடாதலால், பொதுமக்கள் முனையின் எப்படையும் எதிர்நிற்காது.

இந்தியால் தமிழ் இவ்வாறு  கெடும்? 

- பாவாணர்  29.21968 

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(முற்றும்)

Pin It

தமிழ்ச் சமூக வரலாறு நீண்ட நெடிய வரலாற்றை, மனித குலம் தோன்றி நிலைபெற்ற செயல்முறையை விளக்கும் ஒளிவிளக்கமாய் திகழ்ந்து வருகிறது. தோண்ட தோண்ட நீர் பெருகுவது போல, ஆராய ஆராய பல புதிய கருத்துக்கள் தோன்றி பழந்தமிழர் வாழ்வை புதிய நோக்கில் ஆராயும் வேட்கையும் மிகுதியாகிறது.

கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இலக்கியங்களும் இன்ன பிற சான்றுகளும் வரலாற்றை வெளிக்கொணரும். அதே வேளையில் அவை முழுமையும் உண்மை நிலையை பிரதிபலித்து விடுவதில்லை. எனினும் பல்லாயிரம் கருத்துக்களை தம்முள் புதைத்தும், மறைத்தும் இன்று விதையாக நின்று புதிய கோட்பாடுகளோடு பொருத்தி ஆராய்கையில் புதிய வாழ்வியல் கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் ‘பதிற்று பத்து’ எனும் புற நூலின் வழியாகவும், பிற நூல்களின் வழியும் இவ்வாய்வு அமைகிறது.

cheraa kingதொல்காப்பியத்துள்,

“மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்”

என்று ‘குறிஞ்சி’ எனும் பெயருடையது இம்மலையும் மலையைச் சார்ந்த பகுதிகளுமெனவும்; அங்கு ‘சேயோன்’ தெய்வமாக (சே-சிவந்த, சிவந்தவன் முருகன், குமரன் என்று கூறுவார்.) இருந்ததாகக் கூறுகின்றது. ஆக, தெய்வமாக முருகன் இருந்ததாக பிற கருத்துகளின் வழியும் அறிய முடிகிறது.

குறிஞ்சிக்குப் புறத் திணை யென ‘வெட்சி’ யைக் கூறுகின்றார் தொல்காப்பியர். ‘வெட்சி’ என்பது ஆநிரை கவர்தல், வெட்சியின் உட்துறையாக ‘ஆநிரை மீட்டல்’ என்று குறிப்பிடப்படுகின்றது. அதாவது பசுவை பிற மக்களிடம் இருந்து யார்கும் தெரியாதவாறு கைப்பற்றும் போராக ‘வெட்சியும்’, அதனை மீட்க செல்லும் போராக‘கரந்தையும்’ போர் முறைகளாக இருந்ததென குறிப்பிடப்படுகின்றது.

 இப்போரில் பல இழப்புகள் நிகழ்வதைப் பற்றி தொல்காப்பியர் ‘புறத்திணையியலில்’ தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதில் “கரந்தைத் திணை”

 “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

 வேறியாட் பயர்ந்த காந்தளுமம்,..” (தொல்காப்பியம் நூல் 1006.)

என்று முருகன் எனும் வேலன் வேலை உடையவனை வணங்கி போருக்குச் செல்வதான குறிப்புகள் உள்ளன. காந்தன் மலரைச் சூடி இறைவனை வணங்கி சூளுரை மேற்கொண்டு கரந்தை வீரர்கள் போர் புரிந்த குறிப்புகள் பிற்கால நூலான புறப்பொருள் வெண்பா மாலையிலும் காணப்படுகின்றன.

 ஆக, மலையும் மலை சார்ந்தப் பகுதியிலும் முருகனை தெய்வமென எண்ணிய நிலையை அறிகின்றோம். பிற புராண, இதிகாச வழியாகவும் அறிகின்றோம்.

மக்களின் நிலை

 மலையும்,மலை சார்ந்த பகுதியில் வசித்தோரை நிலப் பெயரின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும் பெயர் வைத்து அழைத்ததை அறிகிறோம்.

 பொருப்பன் - குறிஞ்சி நிலத் தலைவன். பொருப்பு – பக்க மலை; பக்க மலைகளுக்குரியவன் என்பதால் நிலத் தலைவனாக இருந்திருக்கலாம். பொருப்பரையன் - மலையரசன் என்பர். பொருப்பு வில்லான் - சிவனுக்குரிய பெயர்; பொருநா – அரசர், கூத்தர், நாடகர் என பல்வகை பெயராக இருந்துள்ளது. பொருநன் - அரசன், குறிஞ்சி நிலத் தலைவன், திண்ணியன். அதாவது வலிமைமிக்கவன், படைத்தலைவன், பகைவன், கூத்தன் எனவும் வழங்கப் பெறுகிறது.

குறம்பொறை நாடு – குறிஞ்சி நிலத்து ஊர் பெயர்; குறும்பொறை நாடன் - முல்லை நிலத் தலைவன்; கானக நாடன் - குறிஞ்சித் தலைவன்; குறிஞ்சி கிழவன் – முருகன்.

 என்று பொருப்பு, சேரல், பொறை என மலையின் பெயராக இருந்திருக்கின்றது. ஆதலால் மலைக்குரிய தலைவனை மலைரச தலைவன் என்பதாக அழைத்ததை அறிகிறோம். இவற்றுள் பொருப்பு வில்லான் என்று சிவனை அழைத்ததன் வழி பொருப்பு – மலை; வில்லான் - வில்லை உடையவன் என மலையில் வில்லை கொண்டு பாதுகாப்பவன் அல்லது வில்லை உடையவனென உரைத்தலும் நோக்கத்தக்கது.

 மேலும், குன்றுவர் - வேட்டுவர், குன்றவர், குன்றவாணர் - குறிஞ்சி நில மக்கள் பெயர்; குன்றெறிந்தோன் – முருகன்; குன்றெடுத்தோன் - கண்ணன்.

சிலம்பன் வெற்பன் (வெற்பு-மலை)

குறிஞ்சி நிலத்தலைவன் - சேய், கானவர், வேடர், வேட்டுவர், குறவர், குறத்தி, கொடிச்சி, (இடைச்சி) கொடிச்சியர் எனவும் மக்கட் பெயரும், நிலத்துத் தலைவன் பெயரும், மலை நிலத்து பெயரும் தெளிவாக சொல்லாய்வின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் வழி நிலத்து அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் முதலில் பெயர்கள் தோற்றம் பெற்றதை அறிய முடிகிறது.

சேரர்களின் தோற்றுவாய்

சொல்லாய்வின் அடிப்படையில் ‘சேரர்’ என்தற்குரிய விளக்கமாக,‘மலை’யை ஆண்ட அரசர்களை குறிக்கும் சொல்லாக விளங்குகிறது. குறிப்பாக, சேரல் - மலை என்ற பொருளை உடையது. அதனால் மலையை ஆண்டவர்கள் ‘சேரர்’ எனப்பட்டனர். வெற்பு, பொறை, குன்று - என்றும் மலையை குறிக்கும் சொல்லும், அவர்களை மலையன், வெற்பன், பொறையன் குன்றன் என்று ஆண்பால் பெயர் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

சேரர்கள் ‘வில்’ லினைக் கொடியாகக் கொண்டனர். வேட்டையாடுதலில் நாட்டமும், அம்பு எய்துதலில் சிறந்தும் வாழ்வில் வலிமையைப் பொருளாகக் கொண்டு வாழ்ந்த மக்களின் தலைமகன்களாகவும், பிற்காலத்தில் பேரரசர்களாகவும் விளங்கியதை வரலாறு வெளிக்கொணரும், பெருந்தொகை நூலின் வழி.

“வடக்கு திசை பழனி வான்கீழ்த்தென் காசி

குடக்கு திசை கோழிக்கோடாம் - கடற்கரையின்

ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதச்

சேரநாட் டெல்லையெனச் செப்பு”

    (பெருந்தொகை பா.2091)

என்று, வடக்குத் திசையாக ‘பழனி’ யையும், கீழ்ப்பகுதியாக தென்காசியும், குடக்குத் திசையாக ‘கோழிக்கோடு’ பகுதியும், கடற்கரை ஓரமாக முள்ளெண் பதின் ஆகியவை சேரநாட்டு எல்லை இருந்ததென அறிய முடிகிறது.

மேலும், மேலைக் கடற்கரை வெளியை ஆண்டுள்ளனர். இஃது தமிழ் வழங்கும் நிலமாகவே முன் இருந்ததாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைக் கணவாய்கள் வழியாக இடையிடையே கிழக்கிலும் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

“சேர அரசர்களின் தலைநகராக வஞ்சி மூதூரே வரலாற்றுக் காலந் தொட்டு விளங்கி வந்தது. அதன்கண் இருந்து அரசியற்றியோர் சேரர் குடியின் தலைமையாளராக விளங்கினர். ஆயினும் சேரவரசர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பிற பிற இடங்களிலும்,பெரும்பான்மையையும் சுதந்திரமான தனியரசுகளை நிறுவிக் கொண்டு அதே காலத்தோடும், பின்னரும் மாண்போடு வாழ்ந்திருக்கின்றனர்” (பதிற்றுப்பத்து, 4ம்பத்து) என்பர்.

சேரர் மரபுத் தடம்

‘இவன் இன்னாரின் மகன்’ என தந்தையின் பெயரையே குறித்துச் சொல்லப்படும் மரபினுக்கு மாறாக,‘இன்னான் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த மகன்’ என தாயின் பெயரையும் சேரவே சொல்லும் சிறந்த குடிமரபு உரைக்கும் மரபையும் பதிற்றுப்பத்து பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணமாக,

     (பக்.6 பதிற்றுப்பத்து)

“இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு

வேளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்

அமைவரல் அருவி இமயம் விற் பொறிந்து

இமிழ்கடல் வேலி தமிகழம் விளங்கத்”

     (2ம் பத்து, பதிற்றுப்பத்து)

என்ற பாடலில், உதியஞ் சேரனை வெளியத்து வேளிர்களின் குடியிலே பிறந்து அவனை மணந்து, கோப்பெருந்தேவியாக விளங்கியவள் வேண்மாள் நல்லினி தேவி அவர்களின் மகனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான் என்று பாடல் கருத்தமைகின்றது. இது போன்ற பாடல்கள் வேறெந்த நூலிலும் காணப்படவேயில்லை. பண்டைய இலக்கிய வரலாற்றில் உலகெங்கிலும் இத்தகைய முறை காணப்படவே இல்லை என கருத இடமுண்டு.

“சேர மன்னரும் சிலர் தம்முடைய ஆன்ம விசாரம் கருதி, பார்ப்பன அறிஞரைக் குருவாக ஏற்றிருந்தனர் என்றும், அவர்கள் மூலம் வடமொழியறிவும்,வடமொழியாளரின் வேள்வியும் ஞானமும் பற்றிய அறிவும் பெற்று விளங்கினர்” (பக்.57, பதிற்றுபத்து) என்றும் உரையாசிரியர் குறிப்பிட்டுச் செல்கின்றனர்.

சேர மன்னர்களின் பட்டியல்   காலம் (தோராயமாக)

  1. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் - கி.பி.45-70
  2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி71-129
  3. பல்யானை செல்கெழு குட்டுவன் - கி.பி80-105
  4. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி106-130
  5. சேரன் செங்குட்டுவன் - கி.பி 129-84
  6. ஆடுகோட்பாட்டு சேரலாதன் - கி.பி130-167
  7. அந்துவஞ்சேரல் இரும்பொறை - கி.பி.70 (இருக்கலாம் என்பர்)
  8. மாந்தரஞ்சேரல் இரும்பொறை - கி.பி70 (இருக்கலாம் என்பர்)
  9. வாழியாதன் இரும்பொறை - கி.பி123-148
  10. குட்டுவன் இரும்பொறை - கி.பி (காலம் தெரியவில்லை)
  11. பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி148-165
  12. இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி165-180
  13. பெருஞ்சேரலாதன் - கி.பி.180
  14. கோப்பெருஞ் சேரல் இரும்பொறை - கி.பி (காலம் தெரியவில்லை)
  15. குட்டுவன் கோதை - கி.பி184 – 194
  16. மாரி வெண்கோ - காலம் தெரியவில்லை
  17. வஞ்சன் - காலம் தெரியவில்லை
  18. மருதம் பாடிய இளங்கடுங்கோ - காலம் தெரியவில்லை
  19. கணைக்கால் இரும்பொறை - காலம் தெரியவில்லை
  20. கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - காலம் தெரியவில்லை

சேரர்களின் வரலாற்றினைப் பற்றி தனியொரு நூலான பதிற்றுப்பத்து 10 சேர மன்னர்களின் வரலாற்றைத் தருகிறது. முதல் மன்னன் உதியஞ் சேரலாதன் ஆவான். ஆனாலும் அவனைப் பற்றி பாடப்பட்ட முதல் பத்து கிடைக்கவில்லை என்பர். 2ம் பத்தில் உதயனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். 3ம் பத்தில் இமயவரம்பனின் தம்பியான பல்யானை செல் கெழு குட்டுவன். 4ம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்தமகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல். 5ம் பத்தில் இமயவரம்பனின் மகனும் நார்முடிச் சேரலின் தம்பியுமான சேரன் செங்குட்டுவன்.

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்

இவன் பாரதப் போரில் இரு படைக்கும் பெருஞ்சோறு அளித்தான் என்று கூறப்படுவது உண்டு. இஃது முரண்பட்ட செய்தி என்ற கருத்தும் நிலவுகிறது.

 “ஓரைவ ஈரைம் பதின்ம ருடன் றெழுந்த

போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

கார்செய் குழலாட வாடாமோ ஆசல்

கடம் பெறிந்த வாபாடி யாடாமோ ஊசல்”

    (சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை செய்யுள்)

என்ற பாடல் வழி மகாபாரதம் போரில் கலந்து கொண்ட இருபெரும் படையினருக்கும் பெருஞ்சோறு அளித்தான் என்ற கருத்து காணப்படுகிறது என கூறுவர்.

முன்னோர் நினைவால் படையினருக்கு பெருஞ்சோறு அளித்தான் என்ற கருத்தானது அகநானூறு எனும் நூலின் 65 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மாமூலனாரால் பாடப்பட்ட இவன் பாடலிபுரத்தை ஆண்ட கடைசிமன்னன் நந்த மன்னனுடைய சம காலத்தவன் என்றும் கூறுவர்.

உதயஞ் சேரன் காலத்தில் பாடலிபுத்திரத்தில் நந்தனுக்கும் சந்திர குப்த மௌரியனுக்கு கி.மு.320-க்கு முன்னர் போர் நிகழ்ந்தது என்பர். தன் தந்தையின் காலத்தில் சேரர் படையை பாடலிக்குச் செலுத்தி மகாபத்ம நந்தனின் ஆரம்பகால வெற்றிக்குத் துணையானான் என புலவர்கள் பாடலில் கூறும் கருத்தில் வழி தெரிய வருகிறது. அதே போல ‘யவனர்’ களை வெற்றி கொண்டான் எனவும், யவனர்கள் (கிரேக்கர்) பாண்டிய நாட்டில் பாதுகாவலர்களாக இருந்ததை புறநானூம், அரிக்கமேடு ஆராய்ச்சி வழியும் அறிகின்றோம். இம்மன்னன் யவனரோடு போரிட்டு வெற்றி பெற்றான் என்றும் அரபிக்கடல் பகுதி சார் தீவில் போர் நடந்தது என்றும், மேற்குத் தீவில் கடம்பர்களை வென்று காவல்மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான் எனவும், சோழர்களுடன் நடத்திய போரில் மாண்டான் எனவும் இவன் வரலாற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து

 நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை”

    (பதிற்றுப்பத்து, பா.14:11-12)

என்ற பாடலில், ஏழு பேரை வென்று அவர்களது முடிகளாலேயே பொன் செய்த ஆரத்தை உடையவன் என்று கூறுகிறது. எழுவர் யார் என்பதை அறிய முடியவில்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

உதயனின் மகன் 2-ம் பத்தின் தலைவன் மாமூலனாரும் பரணரும் சிவனைப் புகழ்ந்துரைத்தனர். இவன் இமயம் வரை சென்று விற்கொடி பொறித்தான் என்றும், தடுத்த ஆரியரை வென்று அவர் தலைமீதே கல்லைச் சுமந்து வர செய்தான் என்றும் கூறுவர்.

“பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

ஆரியர் துவன்றிய பேரிசை மயம்

தென்னங் குமரியோடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே”

    (பதிற்றுப்பத்து 2- பா)

என்ற வழி ஆரியரை வென்றான் இவன் என்றும், அவர்களுக்கு அளித்த பொருட்களையும் திரும்பப் பெற்றான் என்றும் கூறுகின்றனர் உரையர்.

‘இமயவரம்பன் சோழர் குலத்து மணக்கிள்ளி என்ற மன்னனின் மகளுக்கும் பிறந்தவன். காலத்தால் முந்திய இம்மன்னனும் சங்க மருவிய காலம் சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்றும் உரையாளர் கூறுவதுண்டு. (சங்கப் பாடல் ஒன்றில் கூட செங்குட்டுவன் பெயர் இல்லை)

வணிகர்க்குத் தொல்லைத் தந்து தீவுகளில் பதுங்கிக் கொள்ளும் கடற்கொள்ளைக் கூட்டத்தினரை அழித்த “கடல் பிறகோட்டிய செல்கெழு குட்டுவன்” என பரணர் பாடினார். வடக்கில் ‘மோகூர்’ வரை சென்று பழையனை வென்றான். அங்கு குட்டுவனஞ்சூர்’ என்ற ஊர் இருக்கின்னது. இவன் புதல்வன் ஆடல்கலை வல்லவனாதலில்‘ஆட்டனந்தி’ என அழைக்கப்பெற்றான்.

சேரன் செங்குட்டுவன்

கிள்ளிவளவனொரு போரிட்டு 9 சோழ இளவரசர்களை ‘நேரிவாயில்’ என்ற இடத்தில் வென்றான். கிள்ளி வளவனுக்கு துணையாக நின்று அவன் அரசுரிமையை பாதுகாக்க இப்போர் நிகழ்ந்ததென்பர். 9 –சோழர்கள் யார் என தெரியவில்லை என்பர் ஆய்வர்.

கடம்பரை வென்றான், ஆரியரை வென்று அவர் தலையிலேயே கல் சுமக்கச் செய்து கண்ணகிக்கு கோயில் கட்டினான். இதனை ‘வடதிசை வணக்கிய மன்னவன்’ என்ற வழி அறியலாம். சத்தியநாதர் ஐயர் இதனை கலப்பற்ற பொய் என்கிறார். அவரால் காரணம் விளக்கப்படவில்லை. இம்மன்னனைப் பற்றி,

பத்தினி தெய்வத்திற்குச் சிலையெடுப்பதற்குரிய கல்லினைக் கொள்ள விரும்பியவனாக, கானலைக் கொண்டிருந்த காட்டு வழியே கணையைப் போல விரைந்து சென்றான். ஆரியரின் தலைவனைப் போரிலே’ வீழ்த்தினான். பெரும் புகழுடைய இனிய பல அருவிகளைக் கொண்ட கங்கையின் தலைப் பகுதிக்குச் சென்றான். நல்லினத்தைச் சார்ந்தவை என தெரிந்த பல ஆனினங்களை அவற்றின் கன்றுகளோடும் கைப்பற்றிக் கொண்டான். தம் இலக்கு மாறாது அம்புகளைச் செலுத்தி... இடும்பாவனத்தின் ஒர புறத்தே பாசறைவிட்டுத் தங்கினான். வியலூரை அழித்தான். பின்னர் கரையின் எதிர்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்றான்.

‘பழையன்’ என்பவன் காத்து வந்த… வேம்பினது முழவு போன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்றான். தூய மங்கல வணிகளை அதனாலே இழந்து போனவரான பல பெண்டிரின் நறுமணங் கொண்ட பலவாகிய கரிய கூந்தலைக் களைந்து அவற்றில் திரிக்கப் பெற்ற கயிற்றினாலேயே யானைகளை வண்டியிற் பூட்டி, அக்காவல் மரத்தை தன் கோநகர்க்கு எடுத்துச் சென்றான். வெம்மையான வலிமையையும் இடையறாது செய்யும் போரினையும் கொண்டவரான சோழர் குடியினரின் (பக்.134, ப.பத்து) அரசுரிமைக்கு உரியவர்களான ஒன்பதின்மரும் ஒருங்கே பட்டு விழுமாறு, அவர்களை நேரிவாயில் என்னுமிடத்தில் நிகழ்ந்த போரிலே வென்று நேரிவாயில் என்னுமிடத்தில் தங்கினான். அச்சோழர் குடியினரோடு நிலையான நாள்தோறும் செய்யும் போரினைத் தொடர்ந்து செய்து அவர்கள் தலைவனையும் கொன்றான்

  (பக்.135, பதிற்றுப்பத்து, 4-ம் பத்து)

என்று பரணர் அவர்கள் சேரன் செங்குட்டுவனின் வரலாற்றை தொடர்ச்சியாக எடுத்துரைக்கின்றார். குறிப்பாய் பதிற்றுப்பத்தில் காட்டப்படும் மன்னர்களுள் சேரன் செங்குட்டுவன் மட்டுமே தொடர் போரை நிகழ்த்தியவன் என கருதலாம்.

“வியலூர்” - இது நன்னன் வேண்மானுக்கு உரியது. நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர் என்று, இதனை (அ.நா.பா.67) மாமூலனார் உரைப்பர். ‘கொடுங்கூர் வியலூருக்கு மறு கரையிலிருந்தவூர், இவையிரண்டும் ஆற்றங்கரை ஊர்கள்; பழையன் ஒரு குறுநில மன்னன் பாண்டிய நாட்டு மோகூர்க்குத் தலைவனாக விளங்கியவன்;     இவனுக்குரிய காவன்மரம் வேம்பு ...சோழர் குடிக்குரியோரை இவன் வென்றதனை ‘சூடா வாகைப் பறந்தலை’ என்று குறிப்பிட்டுச் செல்கிறது.

- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306

Pin It

மயிலாடுதுறை சாரங்கபாணி 

சாரங்கபாணி மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் இளங்கலை (பொருளியில்) முதலாம் ஆண்டு படித்து வந்தவர். 

mayiladuthurai sarangapaniதமிழகம் முழுவதும் மாணவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி வந்த நேரம்! ஆனால் உள்ளூர்ப்பள்ளிகளில் ஒரு சில வகுப்புகள் கமுக்கமாக நடப்பதாகத் தெரிந்தது. 

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெரு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று 14.3.1965 காலை சாரங்கபாணியும் இரா.மா. இராசேந்திரன் முதலிய அவர்களும் போராட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டிக்கொள்ள வந்தனர். அதனை ஏற்று மாணவியர் பலர் வீட்டிற்குத் திரும்பினார். சில மாணவியர் முகத்தைத் திருப்பியபடி பள்ளிக்குள் சென்றனர். 

'பள்ளிக்குள் போகவேண்டாம்' எனச் சாரங்கபாணி தரையைத் தொட்டு வணங்கி உருக்கமாய்க் கேட்டு கொண்டிருந்தார். அவர் வணங்கத் தலை குனிந்த போது, பள்ளிக் காவலர் தடிக்கம்பால் தலையை நிமிர்த்தி எதிர் பக்கத்திற்குத் தள்ளி சென்றுள்ளார். 

'அவர்கள் செய்வதைச் செய்யட்டும்' என நண்பர்களிடம் கூறிய சாரங்கபாணி வேண்டுகோள் வைப்பதை அமைதியாகத் தொடர்ந்துள்ளார். 

இயல்பிலேயே அமைதியானவர் சாரங்கபாணி. வேளாண்மையை நம்பி வாழ்ந்த குடும்பம். ஒரே தங்கை இந்திரா. சொந்தவூர் மருதவாஞ்சேரி. மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையே முடிகொண்டான் ஆற்றங்ககரையில் உள்ள ஊர். 

தென்னந்தோப்பின் நடுவே சிறிய கூரைவீடு அவருடையது. கல்லூரியில் படிக்க வந்தவர், வெளியே அறை எடுத்து நண்பர்களுடன், தங்கியிருந்தார். 

தீக்குளிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து நடந்த போதும், தமிழைப் பாதுகாக்கும் தீர்வு கிடைக்கவில்லையே இணைக்க கவலைப்பட்ட நிலையில் சாரங்கபாணி இருந்துள்ளார். 

பள்ளி முன் அறப்போர் செய்த அன்று மாலை அவர் அறைக்கு வரவில்லை . மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வேறிடம் சென்று தங்கிவிட்டார். 

தனது தீர்மானத்தை நண்பர்கள் தடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாய் இருந்துள்ளார். விடியற்காலையில் மண்ணெண்ணெய் நனைந்த உடலில் தீ வைத்துக் கொண்டு கல்லூரி வாசல் நோக்கி ஓடியுள்ளார். 

உடல் வெந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் மாணவர் தலைவர்கள் பாலகிருட்டிணன் தமாசு முதலியோர் போராடியுள்ளனர்.

மருத்துவமனையிலிருந்தோரை அருகில் வருமாறு 15.3.1965ஆம் நாள் மாலை சாரங்கபாணி அழைத்துள்ளார். மருத்துவர், செவிலியர் எனக் கட்டிலைச் சுற்றி நின்றோரிடம் 'தமிழ் வாழ்க' என்று கூறுமாறு வேண்டியுள்ளார். 

கலங்கிய குரலுடன் அவர்கள் சொன்ன சொற்களைக் கேட்டபடியே சாரங்கபாணியின் உயிர் அடங்கிவிட்டது.  சொந்த ஊர் மருதவாஞ்சேரிக்குக் கொண்டுவரப்பட்ட அவர் உடல், அவருக்குச் சொந்தமான இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

பாவேந்தர் பாரதிதாசன் இப்படி ஏக்கக்குரல் எழுப்பிய போதும், இழப்பின் எண்ணிக்கை தொடர்ந்துபடி உள்ளது. 

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

     இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

தினையளவு நலமெனும் கிடைக்கும் என்றால்

    செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 2 . பக்கம் - 159)

***

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

    நமக்குள்ள உரிமை தமக்கென் பாரெனில்

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

    மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 17 . பக்கம் - 91)

***

தனக்கென வாழ்வது

      சாவுக்கொப் பாகும்

தமிழுக்கு வாழ்வதே

     வாழ்வது ஆகும்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 15. பக்கம் - 154)

புலவர் செந்தலை .கவுதமன்சூலூர் - பாவேந்தர் பேரவைகோவை

(தொடரும்...)

Pin It