சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற இயக்குனரின் நினைவுகளுக்குள் பறந்து விரிந்த பார்வையோடு, சினிமா என்கிற பெரும் பரப்பிலிருந்து கொண்டும், தீரா கவிஞன் ஒருவன் அனத்திக் கொண்டிருக்கிறான் தன் பால்யங்களின் சுவடுகளை சுமந்து கொண்டு.

மதுரை மண்ணில் சிறந்த படைப்பாளர் என்று மட்டுமே பெருமை கொண்டிருந்த எனக்கு, அவரின் கவிதைகள் தூரத்து சொந்தக்காரி ஒருத்தி கடந்து போகையில் சிந்தும் சிறு புன்னகைய போன்றுதான் அறிமுகம். இப்போது என் வீட்டிற்குள் விருந்தாளியாகவே நுழைந்துவிட்ட படைப்புகளை நான் கவனித்து பார்க்கும் இடத்தில் உறவாடிக் கிடக்கிறேன் கவிதைகளை.

அதிலும் இந்நூலின் தலைப்பு என்பது, அவருக்கோ பாலியத்தின் தடம், எனக்கோ இன்றும் நான் புலங்குகிற இடம். ஒரு நூலின் தலைப்பு நம்மை ஈர்த்த பின் அதனுள் நுழைவதொன்றும் அத்தனை கடினமில்லை.

கடந்த காலத்தில் உறைந்து நிற்கின்ற நினைவுகளும், நிகழ்காலத்தின் இருப்பை தக்க வைக்கவுமான இரு சமநிலையில் முரண்படாத ஒரு படைப்பாளியின் வெள்ளந்திக் கவிதையை வாசிக்கிறேன். கவிதைகளுக்குள் வாழ்வதும் மீள்வதுமாக தொடர்கிறது எனது பொழுதுகள்.

seenu ramasamay masi vithiyin kal sandhukalயாரோ ஒருவருக்காக அர்ப்பணித்திருக்கிற கவிதைகள் அசலான மனித உணர்வுகளுடன் நம்மை உரசி செல்கிறது..

"புறக்கணிப்பின் பேரில்
எழுந்த கூத்தாண்டவர் ஸ்தலம்
எவருக்கும் உண்டு"

-புறக்கணிப்பின் குறியீட்டை ஒரே ஒரு சொல்லில் தந்து உயிர் பிசைய வைக்கிறார்.

"எருக்களம் பூவொடிந்து
விழுகிறது
இந்தமுறை வீசிய காற்றுக்கு

பெடல் ஏறி மிதிக்கிறாள்
பாவாடை சட்டையணிந்த
செல்வி ஒருத்தி..

பின்பக்கம் அமர்ந்திருக்கும்
தாத்தன்
சிவன் காளைக்கோ
தூக்கம் சொக்குகிறது

அவள் கடக்கும்வரை
நகராமல் காத்திருக்கிறது
கம்மாயில் மிதக்கும்
மத்தியான உச்சிவெயில்.

- காட்சிகளை வைத்து படம் காட்டுகிற கவிதை வரிகள்.

"கான்கிரீட் தளத்தில்
கம்பியோடு வெயிலை
முறுக்கிய
தொழிலாளியிடம்
மாட்டிக் கொண்டது
உச்சிவெயில்"

-என சக மனிதனின் துயரறிந்த சொற்கள்.

மனதை ஒரு கணம் பிசைந்தது போன்ற இந்த வரிகளில் வந்து போனாள் என் அம்மாவும்,

"கானல் நீரில் நீந்தி
திசை தெறியாது நடந்து போன
றெக்கையற்ற
சிறுவாத்துக்குஞ்சுகளும்
அதன் தாயும்
வைகையாற்றில்
ஆறாக் காயத்தோடு
ஆற்றைக் கடந்த
மணல் நாட்கள்.

மணக்கண்ணில் சில துளிகள் வரிகளில் பட்டு தெரித்தது உண்மை. மதுரையின் கல்சந்து வீதிகளில் கவிஞரின் கவிதாப்பாத்திரங்கள் நடமாடுகின்றன. அவர்கள் ஒருவேளை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கூட உடன் பயணிக்கலாம் எங்கோ கேட்கும் ஒரு பாடல் பாடகி சித்ராவின் புன்னகை தவழும் முகத்தோடு கண்களுக்குள் வந்து போவது போல, எளிய மனிதர்களின் வாழ்வை படம் பிடித்து வைத்திருக்கிறது கவிஞனின் பேனாக் கண்கள்.

"மாசி வீதிகளும்
மாடப்புறாக்களும்
கோபுர நிழலும்
நானும் சாட்சி
ரிக்ஷாவின் பின் சீட்டில் தான்
கஞ்சாப் பொட்டலமும்
கன்னத்தில் பொட்டு வைத்த
ஒரு அக்காவின்
கருப்புவெள்ளை புகைப்படமும்
வாழ்ந்தன
போலீசுக்குத் தெரியாமல்.

-ரசித்த வரிகளை விட மனது வலிக்கும் வரிகள் நிரம்ப வழிகின்றன மனித நெரிசல்களில் வழிந்தோடும் வியர்வை போல்.

"மலக்குழிக்குள்
முதுகு வளைந்து
செத்த
கணவனின் முகம் மட்டும்
திரும்பத் திரும்ப மேலே வந்தது
அவ்வூரின் பொதுக்கிணற்றில்
யாவருக்கும் பொதுவான
நீதியின் நிலவு
செத்து மிதந்தது அவ்விரவில்.

பேருந்துகள் வராத பால்ய வயதில் அம்மாச்சி ஊருக்கு ஆவாரம்பூக்களால் நிறைந்துகிடக்கும் மதுரை இடையபட்டி மணற்குன்றுகளில் அம்மாவின் கைபிடித்து கொண்டு ஒத்தையடி பாதையில் நடந்தபோன நினைவுகளை கண்முன் கொண்டுவந்தது...

"எவர் பாதைக்கும்
பூத்து மகிழ்ந்திருக்கிறது
தமிழ் நிலத்தினையேற்ற
எம்மின் ஆவாரம் பெயரில்
மலர்ந்த பூவின் தாய்"

- பிறந்தோம் வளர்ந்தோம் என கடமையாக வாழ்ந்து செல்லும் மனிதர்களை விட வாழ்ந்த மண்ணை மனதஅணைத்துத்துக் கிடப்பவர்களிடம் காலம் தன் தடங்களை பதிவிடச் சொல்லி ஒப்படைக்கிறது. உயிர்ப்போடு ஒட்டிக் கிடக்கும் நினைவுகளை ஒரு படைப்பாளி மட்டுமே பண்பாட்டுக் கூறுகளாக்கி பதிய வைத்துச்செல்கிறான். தாத்தா வைத்துவிட்டு போன மரங்கள் பேரன்களுக்கு இசைவாய் வாழ்வதை எத்தனை பேர் உணரக்கூடும். அதன் வழி வரும் முன் வாழ்ந்தவர்களின் வாசனையை எத்தனை மனிதர்கள் முகர்ந்து பார்ப்பார்கள்.

எங்கள் ஊரில் அதிகாலையில் பறிக்கப்படும் மல்லிகை பூக்களை சுமந்து செல்லும் முதல் பேருந்து, புழுதி பறக்க புறப்பட்டு செல்லும்போது நெடுக மல்லிகையின் வாசனையை பரப்பிவிட்டுச் செல்வதைப் போல வாழ்ந்த வாசனை சுமந்து கிடக்கும் மனங்கள் ஒருவகையில் வரம் ஒருவகையில் பெருமூச்சின் அவஸ்தை.

மாசிவீதியின் கல் சந்துகளில் நுழைந்து வெளிவரும் காற்று அன்பு ஊட்டுவதாக தொடரும் கவிதை நாம் சுவைத்து பருக நீள்கிறது...

"கல் சந்தின் முட்டில்
சிறிய மஞ்சள் முகங்கள்
தெய்வச் சிலையாக
அது நட்பற்ற
சிறுவனோடு மட்டும்
பேசுகின்றன...

பெண்கள் அடிகுழாயில்
வாதுகள் பேசி பிரிவதில்
கற்பனை நீர்க்கிணறுகள்
ஊறுகின்றன

மாசி வீதியில்
பச்சை கிளிகள் பறக்க
கல் சந்துகளில் மாடு
நான் எதிர்படுகையில்
விலகி வழி விடுகிறது".

கடற்கரை பெண்ணுக்கும் ஒரு கவிதை, கவிஞனின் இன்னொரு பார்வையில் ரசனையாக வருகின்றன...

கவிச்சிப் பெண்

"மீன் காரிகைக்கு
திரிவிளக்கெனத்
துள்ளும் கண்கள்
சொற்களோ
உள்ளங்கை ஊன்றிக்
குடிக்கச் சொல்லும் ருசி
நடுமுள் தடித்த
ஆழ்கடல் தேகம்"

*
"வாழ்வு ஒரே சட்டையல்ல
சட்டைக்குப் பின் சட்டை
உரிக்கும் பாம்புக்கு
ஊரும் தோல் சட்டை
நானதற்குத் தப்பவில்லை"

"உருவமில்லா தெய்வத்துக்கும்
கையுண்டு
வெட்டுடையாளுக்கும் காசு
உண்டு
இளைத்தவர் அழைக்க தான்
தெய்வங்கள்
இம்மண்ணில் உண்டு"

- இப்படியாக 256 பக்கங்களில் நாம் பயணிப்பது என்பது வாழ்வின் அரைநூற்றாண்டை கடப்பதென்பதாகவே படுகிறது. விடுபட முடியாமல் சமரசம் செய்து நிகழ்காலத்திற்கு வருகிறேன். கவிஞர் சீனு ராமசாமி நமக்கு கொடுத்திருக்கும் கவிதை நூலென்பது வார்த்தைகளை வாசிக்க அல்ல, இவ்வாழ்வை நேசிக்க சொல்லி செல்கிறது.

மனபாரங்களை இறக்கிவிட்ட கவிஞர் இனி ஆசுவாசமாக சினிமாக் கலைஞனாகவும், கவிஞராகவும் தொடர்ந்து மிளிரட்டும். நம்மிடம் இறக்கி வைத்த அவரின் படைப்புகள் காலத்தின் கல்வெட்டுகளில் பதியட்டும். அன்பு வாழ்த்துக்கள்.

- பா.மகாலட்சுமி

Pin It