சத்தியமங்கலம் முத்து

இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் செய்திகளைக் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேசியபடி இருந்துள்ளார் சத்தியமங்கலம் முத்து. 'தமிழுக்குப் பாடுபடுபவர்கள் சாகிறார்களே' என வருந்தி அழுதுள்ளார்.

mozhipor sathiyamangalam muthuபகலில் துணிக்கடையிலும் இரவில் பட்டறையிலும் பணியாற்றுவது முத்து வழக்கம். இரவு பட்டறையிலேயே தங்கி விடுவார்.

11.2.1965 ஆம் நாள் துணிக்கடையில் பணியாற்றிவிட்டு, சரக்குந்து பட்டறைக்கு வந்துள்ளார். இரவு 7.30 மணிக்கு உடலில் தீயிட்டுக் கொண்டு 'தமிழ் வாழ்க'! இந்தி ஒழிக!' எனக் குரல் எழுப்பியுள்ளார்.

தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து, காவல்துறையிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.

"தமிழ் மாணவர்கள் தாக்கப்படக் கூடாது. தமிழ் வாழ வேண்டும். தமிழினம் வாழ வேண்டும். அதற்காகத்தான் தீக்குளித்தேன்"

அண்ணன் மாரியப்பன் தன் குழந்தையை முத்துவின் முகத்தருகே நீட்டி, பெயர் வைக்கச் சொல்லியுள்ளார்.

'தமிழ்ச்செல்வி' என அண்ணனின் குழந்தைக்குப் பெயர் வைத்த சில நிமிடங்களில் முத்துவின் உயிர் பிரிந்து விட்டது.

அன்றைய கோவை மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் குமாரபாளையத்தில் பெருமாள் பார்வதி மகனாக 31.7.1942 இல் பிறந்தவர் முத்து. அண்ணன் மாரியப்பன் தம்பி சின்னச்சாமி. வறுமையான குடும்பம். சத்தியமங்கலம் வந்து இருநேரமும் வேலை செய்வார்.

11.2.1965 இல் தீக்குளித்தவர் 18.2.1965ஆம் நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று! 

மொழியே காப்பாற்றும்!

"ஓர் இனத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும்
அடையாளத்தையும் தீர்மானிப்பது மொழிதான்!
பிறமொழி வல்லாண்மைக்கு ஆட்படாமல்
தன் வரலாற்றையும் பண்பாட்டையும்
காப்பாற்றிக் கொள்ளும் இனமே
காலத்தால் காப்பாற்றப்படும்
மொழியைக் காக்காத இனம், அடையாளமற்ற
மனித மந்தையாக மாறிவிடும்., எவர்
வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லக்கூடிய
அவலநிலைக்கு ஆட்பட்டுவிடும்!"

(செந்தலை ந.கவுதமன், விழிப்பூட்டும் மொழிப்போர், தமிழ்மண், 2012, பக்கம்.23 )

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(தொடரும்...)

 

Pin It