நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துனி வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம் (வேலூர்) திரும்பிக் கொண்டு இருந்தார்.

abdul hakeemநள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம் செல்லும் அடுத்த ரயில் என்பதால், ஏதாவது விடுதியில் தங்கலாம் என முடிவெடுத்தார்.

அந்தக் காலத்தில் சென்னை சென்ட்ரல் அருகே "இராமசாமி முதலியார் தங்கும் விடுதி" என்ற ஒரே ஒரு லாட்ஜ் மட்டுமே இருந்தது.

ஆனால் அங்கு சென்ற சித்தீக் ஹுசைன்'க்கு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. விடுதியின் வாசலில் "முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டு இருப்பது கண்டு அதிர்ந்து போனார்.

வியாபாரத்தில் நஷ்டம், உடல் நலக்குறைவு என மனத்துயரிலிருந்த அவருக்கு இந்த காட்சி மேலும் சோர்வை ஏற்படுத்தியது.

ஊர் திரும்பிய பின்பு கூட இந்த அவமானம் அவர் மனதில் மாறாத வடுவாகவே நிலைத்திருந்தது. பின் அவரது உடல் நிலை மோசமான போது, தனது 18 வயது மகனை அழைத்து "சென்னையில் முஸ்லீம்களுக்கான தங்கும் விடுதியைக் கட்ட வேண்டும்" என்ற தனது ஆசையை வசீயத்தாக (வாக்குறுதியாக) தனது மகனிடம் பெற்றுக் கொண்டார்.

தந்தையின் மனத்தீயை தன் மனதில் ஏந்திய அந்த இளைஞன், தனது வியாபாரத்தில் கடுமையாக உழைத்தார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த விடுதி தனது தந்தையை முஸ்லிம் என்பதற்காக அவமானப்படுத்தியதோ, அதே விடுதிக்கு அருகில், சிலரின் கடுமையான இடையூறுகளுக்குப் பின் 50,000 ரூபாய்க்கு ஒரு நிலத்தை வாங்கி,1921 ஆம் ஆண்டு 43 தங்கும் அறைகளுடன், இஸ்லாமியக் கட்டிடக் கலை அமைப்பில், தனது தந்தையின் நினைவில் "ஸித்திக் ஷராய்" என்ற பெயரில் விடுதியைத் திறந்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பள்ளிவாசல், தங்கும் முஸ்லிம் பயணிகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு இலவசம், பின் மூன்று மாதங்களுக்குக் குறைந்த கட்டணம் எனப் பரிவோடு எழுந்து நின்றது - 'ஸித்திக் ஷராய்'.

இதன் மூலம் அந்த இளைஞனுக்கு இருந்தது வெறும் பலி வாங்கும் வெறி அல்ல; அதையும் தாண்டிய சுயமரியாதை உணர்வு என்பதை இந்தத் தமிழகம் உணர்ந்து கொண்டது. அந்த சிறப்புமிக்க இளைஞனின் பெயர் 'சி.அப்துல் ஹக்கீம் சாஹீப்'.

சி. அப்துல் ஹக்கீம் சாஹீப் அவர்கள் 1863'ல் ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையாகும். மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சாஹீப் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினார்.

1965'ல் மேல் விஷாரத்தில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார். அதை அப்போது திறந்து வைத்தவர் அன்றைய சென்னை மாகாண முதல்வர் பக்தவச்சலம்.

இது தவிர தமிழகத்தின் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏராளமான நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.

சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் பள்ளி நடத்தி வந்த இந்துப் பெண் இவரிடம் உதவியை நாடி வந்த போது, அந்த பகுதியிலிருந்த தனது மகனின் வீட்டை காலி செய்யச் சொல்லி, அதை அவர்களுக்கு வழங்கினார். அங்கு அந்த பள்ளிக் கூடம் தொடர்ந்து நடக்க வழி செய்தார். அந்த பள்ளியே சி. அப்துல் ஹக்கீம் இந்து முஸ்லீம் பள்ளி என்ற பெயரில் பின் நாளில் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது இஸ்லாமியப் பணியிலும் சாஹிப் அவர்கள் வாரி வழங்கினார்.

வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்.

உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்.

வாணியம்பாடி முஸ்லிம் சங்க வருமானத்துக்குச் சென்னை பெரிய மேட்டில் ஆறு கிடங்குகள்.

மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்குக் கட்டிடம், மேலும் அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்.

ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர் நிலைப்பள்ளிக்காக ஒரு அங்காடி வாங்கி அப்துல் ஹகீம் அங்காடி என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.

திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்.

கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்.

பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப் பள்ளிக்கும் நிதி, அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி.

பல சிற்றூர்களிலும் பள்ளிகள்.

சேலத்தில் ஒரு பள்ளிவாசல்.

குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்.

மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்.

ஆற்காடு அப்துல் ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச் சம்பள உதவி என இவரது உதவி பட்டியல் மிக நீண்டது.

சாகிப் அவர்கள் அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியிலும் கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி முஸ்லிம் லீக்கிக்லும் முக்கிய பொறுப்புக்களில் உறுதியோடு செயல்பட்டார். இவரது அரசியல் வாழ்வில் 1936 இவர் தொடங்கிய "முஸ்லிம் முற்போக்கு கட்சி" இவர் மீது விமர்சனம் வரக் காரணமாகியது.

தமிழ் இலக்கியத்திலும் இவர் தடம் பதித்தார். காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்ற காலங்களில், அவர் சிறையிலிருந்து எழுதிய 'நேர்வழியின் விளக்கம்' மற்றும் 'நேர்வழி காட்டும் நூல்' ஆகிய இரு நூல்கள் தமிழில் சமூகத்தால் வெகுவாகப் பாராட்டப்பட்ட நூல்களாகும்.

1938 புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னை வந்திருந்த சாகிப் அவர்கள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

"இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு உன்னத மனிதரை நாடு இழந்து விட்டது. கல்விக்காகவும், சமூக நலனுக்காகவும் அயராது பாடுபட்ட ஒரு பெருமகனை நாடு இழந்துவிட்டது." என இந்து நாளிதழ் அவருக்கு இரங்கல் கட்டுரை வெளியிட்டது.(28.1.1938)

"தர்மம் குடை சாய்ந்தது" எனச் சுதேசமித்திரன் அவரது இறப்பையோட்டி தலையங்கம் தீட்டியது.

அதேபோல் இந்திய அரசின் அஞ்சல் துறை 2012 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை இவருக்காக வெளியிட்டது.

ஈகை குணம், மார்க்கப் பற்று, மத நல்லிணக்கம், மனிதநேயம், சுயமரியாதை ஆகியவற்றில் இன்றைய இளைஞர்களுக்குத் தூரத்து விண்மீனாக வழிகாட்டுபவர் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It

பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் -1936 ஜூலை 30

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் புதுவை மாநில தேசிய இயக்க வரலாறு தனிப்பட்ட சிறப்பிடம் பெறுகின்றது. வியாபாரிகளாய் வந்து ஆளுநர்களாய் மாறி இந்நாட்டின் வளத்தைச் சூறையாடத் தொடங்கிய அன்னிய ஏகாதிபத்திய நாட்டினரின் இராணுவ பலத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வெற்றி கண்டது வரலாறு. இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமையில் கற்றவர்கள், வசதிபடைத்தவர்கள், வணிகர்கள் போன்றவர்கள் முன்னிருந்து செயல்பட்டார்கள். காலப் போக்கில் தொழிலாள வர்க்கம் தேசிய இயக்கத்தில் கலந்து ஒன்றுபட்டது. ஆனால் புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்டத்தின் நிலைமையே வேறு. இங்கு, தொழிலாளி வர்க்கத் தலைமையை ஏற்றுக் கொண்டு உயர் மட்டத்தினர் விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள். இதுதான் புதுவை மாநில விடுதலை இயக்க வரலாற்றின் தனிப்பட்ட சிறப்புத் தன்மை. வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் மிகுந்த புதுவையின் தொழிலாளர்கள் 1930 களில் ஒன்றிணைந்து விடுதலை வேள்விக்குத் தீ மூட்டிய அந்த நாள் 1936 ஜுலை 30. வெந்து தணிந்தது பிரெஞ்சுக் காடு.

பிரெஞ்சிந்தியா

பல நூற்றாண்டுகளாக மிக அமைதியான முறையில் பிற நாடுகளுடன் உறவு வைத்திருந்த புதுவையின் அமைதித்தன்மைக்குப் பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவலம் நேரிடத் தொடங்கியது. கி.பி. 1666-இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுவையில் lo Royale compagnie de France en l'Inde orientale என்னும் வியாபார நிறுவனத்தை நிலை நாட்டினார்கள். இந்த நிறுவனம் 1666 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் முதல் தேதி பதினான்காம் லூயி அவர்களால் நிறுவப்பட்டது. பிரெஞ்சுச் சட்டதிட்டங்கள் பிரான்சுவா மர்தேன் என்பவரால் உருவாக்கப்பட்டன. இவர்தாம் நவீன புதுச்சேரி நகரத்தை நிர்மாணித்தார்.

வணிகர்களாக வந்து நாடு பிடிக்கும் ஆசையால் ஆட்சியாளர்களாக மாறிய பிரஞ்சியர்கள் எப்பொழுதும் தங்களை உயர்ந்தவர்களாகவும் இந்தியர்களைத் தாழ்ந்தவர்களாகவும் கருதி வந்தனர். உண்மையில் பிரஞ்சிந்தியாவில் சமத்துவம் என்பது ஒரு துளியும் கிடையாது. பிரஞ்சிந்திய நீதிமன்றங்களில் பிரஞ்சிந்திய வழக்கறிஞர்கள் காலில் செருப்பணிந்து செல்லக்கூடாது என்ற நடைமுறையிருந்தது. வழக்கறிஞர் பொன்னுத்தம்பி பிள்ளை காலணி அணிந்து சென்றதால் அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆக, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற உயரிய கோட்பாடுகளைக் கொண்டிருந்த பிரஞ்சு தேச அரசாங்கமானது தனது காலனி நாடுகளில் இந்தக் கொள்கையைப் பின்பற்றாமல் இரட்டை வேடம் போட்டு உலக மக்களை ஏமாற்றி வந்தது என்பதுதான் வரலாற்றின் கசப்பான உண்மை.

புதுவை மக்கள் இரண்டாந்தர குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கூடப் புதுவை மக்களுக்கு மறுக்கப்பட்டன. தொழிலாளர் நிலை மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது.

பிரெஞ்சிந்தியாவில் தொழிலாளர்;

புதுவையில் பிரஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன.

  • சவானா மில் - இது இன்றைய சுதேசி மில்
  • ரோடியர் மில் - இது இன்றைய ஆங்கிலோ பிரஞ்ச் ஆலை (AFT)
  • கப்ளே ஆலை - இது இன்றைய பாரதி மில்

இந்த மூன்று ஆலைகளிலும் சுமார் 20,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். புதுவையின் காலனியாதிக்க வரலாற்றை மாற்றி எழுதி வைத்ததில் இந்த மூன்று ஆலைகளுக்கும் மிகப் பெரிய பங்குண்டு. இந்த ஆலைத் தொழிலாளிகள் நடத்திக் காட்டியதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க 1936 ஜூலை 30 போராட்டம். ஓய்வுக்கு எட்டுமணி நேரம், உறங்குவதற்கு எட்டுமணி நேரம், உழைப்பதற்கு எட்டுமணி நேரம் என்ற மேதினக் கோரிக்கை, புதுவைத் தொழிலாளர்கள் விஷயத்தில் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. தொழிலாளர்கள் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. விபத்துக்கு உரிய நிவாரணம் இல்லை, பெண்கள் மிக இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

தொழிலாளர்களுக்கு ஒருவேளை உணவிற்கும் எட்டாத ஊதியம் தரப்பட்டது. ஓய்வுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லை. தொழிலாளர்தம் குழந்தைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. ஆறுவயதுக் குழந்தையும் மில்களில், கல் உடைக்கும் களங்களில், சுமை தூக்குவதில், கட்டிடக் கட்டமைப்புப் பணிகளில் ஒரு சில காசுகளுக்காகப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய மோசமான நிலைமை இருந்தது. எத்தனைக் காலம் தொழிலாளி வர்க்கம் இந்தச் சூழலில் அடிமை வாழ்க்கையை, அதன் துயரங்களைத் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? 1934ஆம் ஆண்டிலிருந்து புதுவையின் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் தங்கள் வாழ்க்கையின் அவலங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்; கிராமங்களில் கூடிக் கலந்து பேசினர்.

va subbiahபேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் சிறு குழுக்களாகக் கூடி மில்லுக்குள் மற்ற தொழிலாளர்களோடு கலந்து தங்களது நிலைமைக்கு விடிவு காண முடிவெடுத்தனர். 1935, பிப்ரவரி 4ஆம் தேதி சவானா மில் (சுதேசி மில்) தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நேரக் குறைப்பு முதலிய கோரிக்கைகளை மில் முதலாளிகளாக இருந்த பிரெஞ்சுக்காரர்கள் முன் வைத்தார்கள். பிரெஞ்சு ஆட்சியாளர்கள் கடிந்து தொழிலாளர்களை அச்சுறுத்தினார்கள். இந்த ஆணவப் போக்கைக் கண்டித்து 3000 தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இத்தகைய விழிப்புணர்வில் தோழர் வ.சுப்பையா அவர்களின் மகத்தான பணி குறிப்பிடத்தக்கது ஆகும்.

தொழிலாளர் ஒருங்கிணைப்பில் சுப்பையா

பிரெஞ்சிந்தியாவில் சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் துடிப்பும், எழுச்சியும் மிக்க இளைஞர்களை, மாணவர்களை ஒன்று திரட்டி இலக்கியச் சங்கம் அமைத்தார். சமுதாய மேன்மைக்காகப் பாடுபட்டார். தீண்டாமையை ஒழிக்கவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக் காகவும் காந்தியடிகள் அரிசன சேவா சங்கம் அமைத்துப் பாடுபட்டார். அரிசன சேவா சங்கத்தில் ஈடுபட்டுத் தீவிரமாக இருந்தமையால் அவரால் சமூகத்தின் அடித்தள மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை நன்கு அறியவும் அலசி ஆராயவும் முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் தோழர் வ. சுப்பையா ‘சுதந்திரம்’ என்னும் வாரப் பத்திரிக்கையை 1934 ஜுனில் தொடங்கினார். அப்பத்திரிக்கை தொழிலாளர் வர்க்கத்தின் போர்வாளாக விளங்கியது. அரிசன ஆலைத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றியும், தொழிலாளர் உரிமை பற்றியும் போதித்துக் கிராமம்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டினார். ஆலையில் மிகவும் இரகசியமாகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார்.

அந்தக் காலத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல் சூரியன்தான். சூரிய உதயத்திற்கு முன் ஆலையுள் நுழையும் தொழிலாளர்கள் சூரியன் மறைந்து இருட்டிய பின்தான் வெளியே வருவார்கள். சில நாள்களில் தீவட்டியைப் பிடித்துக் கொண்டும் வீடு திரும்புவார்கள். இதனால் தொழிலாளர்களின் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் தாய் தந்தையரின் முகத்தைக் கூடச் சரிவர பார்த்தது கிடையாது.

தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்

  • நாள் ஒன்றுக்குப் பத்துமணி நேரம் வேலைநேரமாக நிர்ணயிப்பது
  • தினக்கூலியை 3 அணாவிலிருந்து 6 அணாவாக உயர்த்துதல்
  • பெண்களுக்கு இரவுப்பொழுது வேலை கூடாது
  • 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்தக்கூடாது
  • பெண் தொழிலாளர்களுக்குப் பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு மாத விடுமுறையும், பிள்ளைப் பேற்றிற்காக அரை மாதச் சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன் வைத்துச் சவானா (சுதேசிப்) பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். இந்த ஆலை பிரான்சின் போர்தோவில் (Bordeux) உள்ள ஒரு பிரெஞ்சுக் கம்பெனிக்குச் சொந்தமானது. அன்று அதன் மேலாளராக இருந்த வலோ (valot) என்பவர் ஆலையின் கதவை அடைத்துத் தொழிலாளர்ளைப் பட்டினி போட்டால், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நிர்வாகத்திற்குப் பணிந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார். கிட்டத்தட்ட 84 நாள்கள் கடந்தன. ஆயினும் தொழிலாளர்களில் எவரும் வேலைக்கு வராதது அவருக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. இந்நிலைகளினால் வலோ நிலைகுன்றிப் போனார். போராட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர வேறு வழி இன்றித் திண்டாடினார். இதனால் போராட்டத் தலைவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி 1935 ஏப்ரல் 29 இல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாகத் தொழிலாளர்களின் வேலைநேரம் நாளொன்றுக்கு 10 மணிநேரம் என வரையறுக்கப்பட்டது. தொழிலாளர்களின் கூலி நாளொன்றுக்கு 6 அணா என்றும், பெண் தொழிலாளர் களின் பேறுகாலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒருமாத விடுமுறை, பிள்ளைப் பேறு செலவிற்காக அரைமாதச் சம்பளம் வழங்குவதெனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

வேலை நிறுத்தப் போராட்ட வெற்றி

1935 பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 29 வரை சுமார் 3 மாத காலம் நடைபெற்ற அப்போராட்டத்தின் வெற்றி மகத்தானது தொழிலாளர்களின் வரலாற்றில் அதுவரை கண்டிராதது. அதனால் இப்போராட்டமானது தொழிலாளார்கள் ஒன்றுபட்டுப் போராடினால் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் எனும் நம்பிக்கையை அளித்தது. தொழிற்சங்கம் அமைக்க மிக அத்தியாவசியமான தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உணர்வையும், உறுதிப்பாட்டையும் தழைத்துச் செழிக்கச் செய்தது. புதுச்சேரியில் உள்ள ரோடியர் பஞ்சாலை அன்றைக்கு பிரிட்டிஷ்; கம்பெனி ஒன்றுக்குச் சொந்தமானது. அதேபோல கப்ளே ஆலை எனி நூலெ கம்பெனியாருக்குச் சொந்தமானது. அவ்விரு ஆலை நிர்வாகங்களும் வளர்ந்து வரும் தொழிலாளர் போராட்டச் சூழ்நிலைகளையும் விழிப்புணர்வையும் கண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்கும் வகையில் சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சாவானாப் பஞ்சாலையின் நிர்வாகத்தைப் போன்றே வேலை நேர வரையறை, கூலி உயர்வு முதலியவற்றை அமல்படுத்த முற்பட்டன. இந்த மாபெரும் மூன்று மாதப் போராட்டத்திற்கும் தொழிற்சங்க அமைப்புகளின் உருவாக்கத்திற்கும் அன்றைக்கு முன்னோடிகளாய்த் திகழ்ந்தவர்கள் திரு.தெபூவா தாவீது, திரு. அமலோர், திரு. பெரிய நாயகசாமி, திரு. சுப்புராயலு போன்றவர்கள் தாம் இப்போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்த மில் முதலாளி பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் மீண்டும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிப் பழி வாங்கி ஆத்திரமூட்டினான். அதனால், 1935 ஜுலை 25 ஆம் தேதியிலிருந்து அனைத்து மில் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் இரண்டாவது முறையாக வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். பிரெஞ்சு அரசின் காவல் துறையின் துணையுடன் கருங்காலிகளைத் திரட்டி மில்லை நடத்திட முதலாளிகள் முயன்றனர். இரண்டரை மாத காலம் வேலை நிறுத்தம் நீடித்தது. இறுதியில் மில் முதலாளி தொழிலாளர்களின் தலைவர்களோடு சமரசம் பேசி மில்லை நடத்தினான்.

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் மையத்தோடு புதுவைத் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு பிரெஞ்சிந்தியாவில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டிருந்த அநீதியை எடுத்துக்கூறி சட்ட உரிமைகோரி வாதாடினார்கள். அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரசும், தொழிற்சங்க இயக்கத் தலைவர்களான தோழர்கள் வி.வி.கிரி, என்.எம்.ஜோ~p போன்றவர்களும் புதுவைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். தொழிலாளர்களின் இயக்கம் வலுப்பெற்றதால், புதுவை மாநில மக்களின் இதர பிரிவைச் சார்ந்தவர்களும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள்.

முதல் தொழிலாளர் மாநாடு - அரசு தடை

1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் நாள் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முதல் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார்கள். பிரெஞ்சு அரசு அம்மாநாட்டிற்குத் தடை விதித்தது, அதற்குத் தலைமையேற்று நடத்தவிருந்த தோழர்கள் வி.வி.கிரி, எஸ்.குருசாமி ஆகிய இருவரையும் புதுவையிலிருந்து வெளியேற்றியது. ஆனால், தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அம்மாநாட்டை பிரெஞ்சு இந்திய எல்லையில் இருந்த பெரம்பைக் கிராமத்தில் நடத்தினார்கள். மாநாட்டுத் தீர்மானங்கள் பிரான்சில் இருந்த தொழிற்சங்கங்களின் தலைமைக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கம் புதுவைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளான தொழிற்சங்க உரிமை, 8 மணி நேர வேலை போன்றவற்றை ஆதரித்து பிரான்சிலும் குரல் எழுப்பியது.

1936 ஆம் ஆண்டு 3 பஞ்சாலைகளின் தொழிலாளர்கள் சங்க உரிமைக்காக ஒன்றிணைந்து போராட இணைப்புக் குழூ அமைத்தனர், ஜுன் மாதத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்தினார்கள். பிரெஞ்சிந்தியக் கவர்னர் சொலோமியாக் மில்லுக்குள் தங்கி வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். தொழிலாளர்களின் போராட்ட இணைப்புக் குழுவின் கோரிக்கைகளில் பிரதானமான தொழிற் சங்க அமைப்பு உரிமை, 8 மணி நேர வேலை ஆகிய சில தொழிற் சட்டம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளைப் பிரெஞ்சு அரசோடு கலந்து ஒரு மாதத் தவணையில் முடிப்;பதாகக்கூறி, உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று தொழிலாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தொழிலாளர்கள் மீண்டும் உற்பத்தியில் இறங்கினார்கள். 30 நாட்கள் கடந்தன.

அரசு கொடுத்த வாக்குறுதியின்படி தொழிற்சங்க உரிமைச் சட்டம் அமுலாக்கப்படவில்லை. அதனால் 1936 ஜுலை 23 ஆம் தேதியிலிருந்து மூன்று மில்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் மீண்டும் தொடங்கினார்கள். 1936 ஜுலை 30-ஆம் நாள் காலை ஆயுதம் தாங்கிய பிரெஞ்சு காவல் படை தனக்குப் பின்னே எந்திரத் துப்பாக்கிகள், ஏணிகள் ஏற்றிய இரு லாரிகள் பின் தொடர, புதுவை நகர முக்கிய வீதிகளின் நடை போட்டுக் காட்டியது. தொழிலாளர் வர்க்கம், பிரெஞ்சு காவல் படையின் ஆயுதங்களையோ, மிருகபலத்தையோ கண்டு எள்ளளவும் அஞ்சவில்லை. முதல் நடவடிக்கையே ரோடியர் பஞ்சாலையின் நுழைவாயிலில் இருந்து தான் தொடங்கியது.

ஆலையின் பெரியவாயில் கதவை இறுக அடைத்துத் தொழிலாளர் தொண்டர் படைவீரர்கள் எப்பொழுதும் விழிப்போடு கண்காணித்து வந்தார்கள். ஆயுதப்படை தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டிச் சாலையைச் சமப்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆலையின் கதவை இடித்துத் தகர்த்து உள்ளே நுழைய முயன்றது. சிறிது நேரத்திற்குப்பின் நுழைந்தும் விட்டது. அதுவரை அடங்கி ஒடுங்கிக்கிடந்த ஆலை மேலாளர் திரு.மார்ஷ்;லேண்டு (Marshland) எனும் வெள்ளைக்காரர் ஆயுதப்படை உள்ளே நுழைந்து விட்டதைக் கண்டு துணிவு பெற்றுத் தன் கைத்துப்பாக்கியை எடுத்துத் தொழிலாளர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தார். குண்டடிபட்ட ஒரு தொழிலாளி அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்து இறந்தார். இதைக் கண்டு ஆவேசமுற்ற போராட்டத் தொழிலாளர்கள் தங்களின் கைகளுக்குக் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ஆயுதப்படை மீது எதிர்த் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் ஆயுதப் படையானது. சவானா பஞ்சாலைக்குச் சென்று கடலூர் சாலைக்கு எதிரில் தாக்குதலுக்கான ஆயத்த நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டது. பஞ்சாலை வளாகத்தில் பெரும் கட்டடங்களின் மேல்தளத்தில் ஆயிரக்கணக்கில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் போராட்ட ஆரவாரம் செய்து கொண்டிருக்க, வெளியில் முக்கிய சாலையில் நின்றிருந்த ஆயுதப்படை, எந்திரச் சுழல் துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டது. சராமாரியாகப் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கும் அஞ்சாது, உணர்ச்சி ஆவேசமுற்றுத் தொழிலாளார்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். ஆயினும் துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த அந்த ஆலைத் தொழிலாளர்களின் பெயர்கள் வருமாறு:

1.அமலோற்பவ நாதன் 2.இராஜமாணிக்கம் 3.கோவிந்தசாமி 4.ஜெயராமன் 5.சுப்பராயன் 6.சின்னையன் 7.பெருமாள் 8.வீராசாமி 9.மதுரை 10.ஏழுமலை 11.குப்புசாமி 12.ராஜகோபால்.

இதைக் கண்டதும் தொழிலாளர்களிடையே கொதிப்பும், கொந்தளிப்பும் அதிகமாயின. ஆங்காங்கே தங்களின் கைகளுக்குக் கிடைத்த கல், தடி, இரும்புத்தடி, இரும்பு பல்சக்கரம் போன்ற ஆயுதங்களை எடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தினர். தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து எண்ணிக்கையில் குறைவான ஆயுதப்படையினரைத் தாக்கியதால் சிறிது நேரத்திற்கெல்லாம் தொழிலாளர்களின் கை ஓங்கலாயிற்று. ஆயுதப்படை மெல்ல மெல்லப் பின்வாங்கத் தொடங்கியது. பின்வாங்கிய பிரெஞ்சு ஆயுதப்படை கடலூர்ச்; சாலையும், வில்லியனூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பு முனையில் நின்று கொண்டு தன் துப்பாக்கியின் கடைசித் தோட்டாவரை பயன்படுத்தி, இராஜமாணிக்கம் எனும் போராட்ட மறவனின் உயிரைக் குடித்தது.

1936 ஜுலை 30-இல் நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்டு தொழிற்சங்க உரிமை கோரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடும், அதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடுமையும் பிரெஞ்சு இந்திய வரலாற்றில் செந்நிற எழுத்துக்களால் எழுதப்பட்ட நிகழ்ச்சியாகும். 1936 ஜூலை 30 அன்று புதுவையில் நடைபெற்ற தொழிற்சங்க உரிமைக்கான போராட்டம் புதுவைத் தொழிலாளர் களுக்கான போராட்டம் மட்டுமன்று. அந்தப் போராட்டத்தின் நோக்கமும் கோரிக்கைகளும் உலகு தழுவிய தொழிலாளி வர்க்கத்தினரின் ஒட்டுமொத்த உரிமைக்கானது. அப்போராட்டம் சலுகைகளுக்கான போராட்டமன்று புதிய சரித்திரத்தை உருவாக்கிய போராட்டம். மேற்கத்திய உலகுக்கு அப்பால் கீழ்த்திசை நாடுகளில் உழைத்துழைத்து உருக்குலைந்து கிடந்த தொழிலாளர் சமூகத்திற்கு உயிர் கொடுத்த போராட்டம். எனவே புதுவைத் தொழிலாளர்களின் போராட்டம் சரித்திர முக்கியத்துவம் உடையதும் உலகு தழுவியதுமான ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

அந்த வகையில் ஜூலை 30 போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொலைவெறியோடு செயல்பட்ட பிரஞ்சு அரசுக்கு எதிராகவும் உலக அரங்கில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

  • பாரிஸ் நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடிப் புதுவைத் தொழிலாளர்களின் போராட்டத்தை வரவேற்றும் பிரஞ்சு அரசின் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • சென்னை மாகாணத் தொழிற்சங்கங்கள் மற்றும் சென்னை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் கூட்டுத் தலைமையில் புதுவைத் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • புதுச்சேரித் தொழிலாளர்கள் படுகொலைச் சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கத் தந்தை வி.சக்கரைச் செட்டியார் அறிக்கை விடுத்தார்.
  • புதுச்சேரித் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இளைஞர் மன்றத்தினர் 1936 ஆகஸ்ட் 10 இல்; கண்டனக் கூட்டங்களை நடத்தினர்.
  • 1936 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை தனது தலையங்கத்தில் புதுவை ஆலைத் தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு மற்றும் படுகொலைகள் குறித்து எழுதியிருந்தது. பிரஞ்சு அரசின் நடிவடிக்கையைக் கண்டித்த அந்தத் தலையங்கம் சம்பவம் குறித்துப் பொது விசாரணை தேவை என்றும் கூறியிருந்தது.

புதுச்சேரித் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக உலகு தழுவியும் இந்திய அளவிலும் துப்பாக்கிச்சூடு மற்றும் படுகொலைகளைக் கண்டித்தும் ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் கூட்டங்கள் பல நடைபெற்றன. இச்சம்பவம் பண்டித நேரு அவர்களின் இதயத்தை உலுக்கியது. இந்த நிகழ்ச்சி குறித்து சுப்பையா அவர்கள் பிரான்சுக்குச் சென்று அங்குள்ள மக்கள் முன்னணிக் கட்சியின் அமைச்சரோடு கலந்து ஆலோசிப்பது நல்லது என்று நேரு கருத்து வைத்தார். அவ்வண்ணமே தோழர் வ.சுப்பையாவும் பண்டித நேருவின் அறிமுகக் கடிதத்தோடு பிரான்சு சென்றார்.

வீரமரணம் விளைத்த தொழிலாளர் நலன்

1937 மார்ச் 6-இல் சுப்பையா பிரான்சு சென்று, பிரெஞ்சு அரசோடு இப்பிரச்சினை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-இல் பிரஞ்சிந்தியா விற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் தான் முதன்முதலில் அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர் களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டம் மற்றும் தியாகத்தின் வாயிலாகத் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுத்த அந்த நினைவுநாள் ஜுலை 30.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி-8

Pin It

புரட்சிக்கவிஞர் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் தனது பாடல்களால் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. பாமர மக்களும் எளிதில் புரிந்துணரும் வண்ணம் தன் பாடல்களை திரையிசையில் ஒலிக்கச் செய்தவர். மக்கள் கவிஞர், பாட்டுக்கோட்டை என்றெல்லாம் புகழப்பட்ட இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள, செங்கபடுத்தான்காடு என்னும் கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை கூட நிறைவு செய்யாத கல்யாணசுந்தரம் விவசாயப் பணிகளை செய்து வந்ததோடு, கௌரவம் பாராமல் பல்வேறு தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடங்களிலும் நடித்து வந்தார்.

pattukottai kalyanasundaramபாரதிதாசன் மேல் கொண்ட ஈடுபாட்டினால் அவரை வழிகாட்டியாக ஏற்று புதுவை சென்று அவரோடு இலக்கியப் பணியில் பயணிக்கத் தொடங்கினார். ஐம்பது அறுபதுகளில் திரைப்படங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. திரை நட்சத்திரங்கள் திரையில் நடித்துக் காட்டுவதை உண்மை என்று பலர் நம்பும் அளவிற்கு நடிகள் மீது தீரா நம்பிக்கை வைத்திருந்தனர். குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்கள் திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தார். பின்னர் தமிழக முதல்வராக வருவதற்குக் கூட அவருக்கு திரைப்பயணம் கை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. எம்.ஜி.ஆரின் புகழுக்கு கவிஞர் கல்யாணசுந்தரத்தின் சமூக சித்தாந்தப் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு முறை எம்.ஜி.ஆர், நான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடையது என்றார்.

ஆரம்ப காலத்தில் சுயமரியாதை கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கவிஞர் பிறகு பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார். ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய நிலபிரபுக்களையும் மேட்டுக்குடியினரையும் எதிர்த்து குரல் கொடுக்கலானார். தன்னுடைய பாடல்கள் அனத்தும் சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் குரலாகவே ஒலிக்கச் செய்தார். பட்டுக்கோட்டையார் கடைசிவரை தன் கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர் பாடல்கள் எழுதவில்லை. சமுக அவலங்களை சுட்டிக்காட்டவும் அவற்றைக் களையவுமே எழுதினார்.

 கையிலே வாங்கினேன் பையிலே போடலே

 காசு போன இடம் தெரியலே….

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் ரசிப்பதற்கு மட்டுமின்றி ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கவும் செய்தது.

 திருடாதே! பாப்பா திருடாதே !

 வறுமை நிலைக்குப் பயந்து விடாதே!

 திறமை இருக்கு மறந்துவிடாதே!

என்ற பாடல் மூலம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் நேர்மையையும் கற்றுத் தந்தார் கவிஞர்.

பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான எண்ணங்கள் மக்கள் மனதில் வேரூன்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் சமூகத்தில் வளர்ந்தன. அவற்றைத் தடுக்க கவிஞர்,

 சின்னப்பயலே சின்னப்பயலே

 சேதிகேளடா…

 வேப்பமர உச்சில்நின்னு

 பேயொன்னு ஆடுதுன்னு

 விளையாடப் போகும்போது

 சொல்லி வைப்பாங்க –உன்

 வீரத்தைக் கொழுந்திலேயே

 கிள்ளி வைப்பாங்க

 வேலையற்ற வீண்ர்களின்

 மூளையற்ற வார்த்தைகளை

 வேடிக்கையாக கூட நம்பிவிடாதே-

என்று பாடி அறியாமை நீக்கி அறிவியல் புகுத்தினார். அதே பாடலில் தான்,

 தனியுடைமைக் கொள்கைகள் தீரத்

 தொண்டு செய்யடா-நீ

 தொண்டு செய்யடா!

 தானா எல்லாம் மாறும் என்பது

 பழைய பொய்யடா

என்று குரலெழுப்புகிறார். ஒடுக்கப்பட்ட ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமானால் போராடித்தான் பெற வேண்டும் என்பதை இப்பாடல் மூலம் உணர வைத்தார்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஏராளமான பாடல்களை கவிஞர் தீட்டியிருந்தாலும்,

 ஊருக்கெல்லாம் ஒரே சாமி

 ஒரே சாமி ஒரே நீதி

 ஒரே நீதி ஒரே நீதி

 கேளடி கண்ணாத்தா-

என்ற பாடல் மூலம் அவரின் தொலைநோக்குப் பார்வையை நாம் உணர முடியும்.

 தூங்காதே தம்பி

 தூங்காதே…

பாடலில் ஒவ்வொரு வரிகளும் சமூகச் சீர்கேடுகளை சாட்டை கொண்டு அடிப்பது போல் இருக்கும். குறிப்பாக,

 பொறுப்புள்ள மனிதரின்

 தூக்கத்தினால்-பல

 பொன்னான வேலையெல்லாம்

 தூங்குதப்பா!

என்ற பாடல்வரிகள் எத்தனை பொருள் பொதிந்தவை..

விவசாமும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சுரண்டப்படும் ஆதங்கத்தை உணர்ந்தவரான கவிஞர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்..

 காடு வெளெஞ்சென்னு மச்சான் !- நமக்கு

 கையுங் காலுந்தானே மிச்சம்

 இப்போ

 காடு வெளைட்டும் பொண்ணே ! நமக்குக்

 காலமிருக்குது பின்னே!

 தேனாறு பாயுது வயலில்

 செங்கதிரும் சாயுது ஆனாலும்

 மக்கள் வயிறு காயுது அதிசயந்தான் இது…

பொதுச் சொத்துக்களை அபகரித்தும் இயற்கை வளங்களைத் திருடியும் பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகளைக் கண்டு மனம் நொந்து,

 குட்டி ஆடு தப்பி வந்தால்

 குள்ளநரிக்குச் சொந்தம்!

 குள்ளநரி மாட்டிகிட்டா

 கொறவனுக்குச் சொந்தம்

 தட்டுகெட்ட மனிதர் கண்ணில்

 பட்டதெல்லாம் சொந்தம் ------

என்று பாடுகிறார்.

பெண்கள் காலம் தொட்டு அடிமைகளாக வாழ்ந்து வருவதைக் கண்ட பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் உணச்சியூட்டும் பெண்விடுதலை பாடல்களைப் பாடி, பெண்களை விழித்தெழச் செய்தனர்.

அதே போல் மக்கள் கவிஞரும் ஆணுக்குப் பெண் அடிமை என்பதை ஏற்காது,

 ஆணுக்கு பெண்கள் அடிமை என்று

 யாரோ எழுதி வைச்சாங்க –அன்று

 யரோ எழுதிவைச்சாங்க—அன்று—அதை

 அமுக்கிப் பிடிச்சிகிட்டு விடமாட்டேன்னு

 ஆண்கள் ஒசந்துகிட்டாங்க---பெண்கள்

 ஆமைபோல் ஒடுங்கிப் போனாங்க

என அவருக்கே உரியநடையில், பெண்ணடிமைத்தனத்தை தோலுரித்தார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் இயற்கையான அன்பைக் கூட ஆரவாரமின்றி, ஆபாசமின்றி எளிய நடையில் தேன்சொட்டும் ரசனை மிக்கதாக மாற்றிக் காட்டியவர் நம் பட்டுக்கோட்டையார்,

 ஆடைகட்டி வந்த நிலவோ?---கண்ணில்

 மேடைகட்டி ஆடும் எழிலோ?.. .. .

 காடுவிட்டு வந்த மயிலோ?----நெஞ்சில்

 கூடுகட்டி வாழும் குயிலோ?

மேலும்,

 என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே---நீ

 இளைவளா மூத்தவளா வெண்ணிலாவே?

போன்ற பாடல்கள் எக்காலமும் ரசிக்கத்தக்கவையே!

நிகழ்கால சமூகத்தையும் கடந்தகால நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதும், சமூகத்தில் நடைபெறும் நெறிபிறழ்வு நிகழ்வுகளை சுட்டிக் காட்டுவதும், அவற்றை வெளிஉலகிற்கு கொணர்வதும் தான் எழுத்தாளர்களின் முக்கிய கடமையாகும். அக்கடமையை தான் வாழ்ந்த குறுகிய காலத்திலே நிறைவு செய்தவர் நம் மக்கள் கவிஞர். தன் பாட்டுத்திறத்தால் கலை உலகை ஆட்சி செய்த கவிஞருக்கு மூக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு செய்ய இயலா இழப்பைத் தந்தது கவிஞரின் மறைவு. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தனது அஞ்சலியில்,

கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார்-ஒளிதெரிகிறது!

கண்களைத் திறக்கிறேன்; கல்யாணம் இல்லை—

கலையுலகு இருட்டாயிருக்கிறது

எனத் தெரிவித்தார். பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே அவரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை, புகைப்படங்களாகவும் செய்திகளாகவும் வைத்துள்ளனர். மண்டபத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அனைத்தும் தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழுகிறார் மக்கள் கவிஞர்..

- கா.இரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பேட்டை முத்துப்பேட்டை, திருவாரூர்-மாவட்டம்

Pin It