தமிழுக்கே தகுதி (1938) - மறைமலையடிகள்

ஆங்கிலம் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை அறியாமல் நம் ஏழை மக்கள் திகைத்து விழிப்பது போலவே; இந்தி மொழியைக் கற்றவர் நம் மக்களிடையே இந்தியில் பேசினால் அவர் அதன் பொருளை அறியாமல் திகைத்து விழிப்பர் என்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே; இவ்விந்திய தேயத்தில்......தாம்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் நல்லறிவு பெற்று முன்னேற்றம் அடையும்படி உதவி செய்தல் வேண்டும்.

maraimalaiadikal 220இங்ஙனம் செய்வதை விட்டு இந்தி மொழியைக் கட்டாய பயிற்சிக்காக வைக்கப் பெரிது முயல்வது; உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமே அல்லாது; அதனால் ஒரு சிறு பயன்தானும் விளையமாட்டாது.

எல்லா வகையாலும் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொதுமொழி யாவதற்குரிய நலன்கள் எல்லாம் வாய்த்ததாயிருந்தும் அதனை பொதுமொழியாக்க முயலாமல் "இந்தி" முதலான சிதைவு கலப்பு மொழிகளை இத்தேயத்திற்கு பொது மொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவாரா என்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

- இந்தி பொதுமொழியா? (Is Hindi a common Language?) 1938 

தமிழர் மாநாட்டுத் தலைமையுரை (1938) - சோமசுந்தர பாரதியார்

ஆரிய மொழியாலும், அதனை கலையாலும் தேசியம் என்ற போர்வை போர்த்துத் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்குரிய இடமும், உரிமையும், நிலை தளரச் செய்தது போதாதது போல, நமது தமிழ் மொழி, இதுபோது (1938)  எதிர்பாராதவிடத்திலிருந்து கொணர்ந்து புகுத்தப் பெறும் புதியதொரு பகை மொழியை எதிர்க்க வேண்டியிருக்கிறது. நமது மாகாணத்துத் தற்காலக் காங்கிரஸ் மந்திரி சபை தனக்குள்ள செல்வாக்கைக் கருவியாகக் கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழுக்கு விபத்தொன்றைச் செய்யத் தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பாட சாலைகளிலும் எல்லா மாணவர்களும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தப் போவதாகத் தமிழர்களாகிய நம்மைப் பயமுறுத்துகின்றது. அரசாங்கத்தின் கொள்கையென்று சொல்லி, பாடசாலைப் பாடங்களுள் இரண்டாவது மொழி வகையில் விருப்பப்பாடமாக வைப்பதாயினும் நமது மாகாண மொழியாகிய தமிழ்மொழியின் சிறப்பையும் உரிமை நிலையினையும் கெடுத்துச் சீர்குலைத்து வரும் வடநாட்டு ஆரிய மொழியின் கிளையாய், சமசுகிருதத்தின் முடிவாய் வந்திருக்கும் இந்தி மொழியை நமது தமிழ்நாட்டு அறிவுப் பக்குவமில்லாத இளஞ்சிறுவர்கள் கட்டாயம் படித்துத் தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் இத்தீச் செய்கையால் நமது தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெருங்கேடும், தமிழர் நாகரிகத்துக்கு அனர்த்தமுமே 

உண்டாகும். இந்தி மொழியை எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் அது நம் தமிழ் மொழியின் காற்கீழ் ஒதுங்கக்கூடிய சிறுமையுடையது. இந்தியைக் காட்டாயப்படுத்திப் படிக்கச் செய்வது, தமிழ்க் கல்விக்கு இசைந்ததாக இல்லாமலிருப்பதோடு தற்காலம் நம் தமிழ் இருக்கும் நிலையில், அதற்கும் அதன் கலைவளர்ச்சிக்கும் பெரிதும் தடையும் இடையூறும் விளைவிப்பதாகவே இருக்கிறது. தமிழ்ச்சிறுவர்களுக்குச் சிறு வகுப்பிலேயே இந்தியைக் கட்டாயமாக நுழைப்பது, தமிழ் இளைஞர்களின் முற்போக்கைத் தடுத்து அவர் உயர் கல்வியைக் கற்க வொட்டாமல் தடை செய்வதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர வேறில்லை. இது, சாதிச்செருக்காலும், சமூகத்திமிராலும், தங்களுக்கு உரியது சமசுகிறதமேயென எண்ணி, பல நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தாழ்வு செய்து கொண்டே வந்த ஒரு சாதி இளைஞர்களுக்கு உயர் கல்விக்குரிய சலுகை காட்டுவதற்காகச் செய்யப்படும் சுயநலத் தந்திரமேயாகும். இந்தியென்பது சமசுகிருதத்தின் கிளைமொழியாகையால், அந்தச் சம்சுகிருதமே தங்கள் "சுவ பாசை" என்று கொண்டு பயின்று வரும் அந்தச்சாதி இளைஞர்களுக்கு இந்தி மொழி சுலபத்தில் வந்துவிடும். இந்தியை நுழைத்துவிடின், எதிர்காலத்தில் இந்தி படித்தவர்களுக்கு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்குரிய வசதிகளும் பிற்கால வாழ்வுக்குரிய தகுதிப்பாடுகளும் வழங்கப்படும். அந்நிலையில் இந்தியைக் கற்கமுடியாமல், நம் தமிழ்சிறுவர்களே மிகவும் பாதிக்கப்பட்டு மேற்கூறிய தகுதிப்பாடுகளையும் பெறமுடியாமல் வருந்த நேரிடும். தற்கால நமது மாகாண மந்திரிசபை, இந்த வகையில் தமிழர்களை அலட்சியம் செய்து, அவர்கள் கவுரவத்தையும் நிராகரித்து,  தங்களுடைய கட்சிப் பலத்தாலும், காங்கிரசின் பெயராலும், இந்தக் காரியத்தைச் செய்ய முனைந்திருக்கின்றது. நமது பாசை, கலை முதலியவைகளுக்குத் தீங்கு செய்யுமிடத்து, காங்கிரசாயிருந்தாலும் நாம் அதற்கு இடந்தரக்கூடாது. உண்மையில் காங்கிரசு நிறுவனங்கூட, இந்தியே எல்லா மக்களுக்கும் கட்டயாமான பொதுமொழியென முடிவு செய்துவிடவில்லை. ஆகவே நமது மாகாண மந்திரி சபை செய்யும் இது, தமிழர்களாகிய நம்மால் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

- வட ஆர்க்காடு தமிழர் மாநாட்டுத் தலைமையுரை 26.2.1938, திருவத்திபுரம் 

வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக்கூடாது - பாவாணர், (1968)

"வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக்கூடாது" என்பது பழங்காலப் பழமொழிகளுள் ஒன்று. இது எக்காலத்து இவ்விடத்து எது பற்றி எவ்வாறு எவர் வாயிலாய்த் தோன்றிற்றென்பது தெரிந்திலது. இதை ஒருமருங்கு ஒத்ததே. 

"Cold weather and knaves come out of the North" என்னும் ஆங்கிலப் பழமொழியும் வடக்கத்தியான் என்றது யாரை என்பது தெரியவில்லை.

ஆங்கிலர், நீங்கியபின், இந்தியரெல்லாரும் கண்ணியமான விடுதலையின்ப வாழ்வு வாழ எண்ணியிருந்த காலத்து, இந்தி வெறியர் ஏனை மொழியாரை முன்னினும் பன்மடங்கு இழிவான அடிமைத்தனத்துள் அமிழ்த்தவும் தமிழை நாளைடைவில் மெல்ல மெல்ல அழிக்கவும் திட்டமிட்டுவிட்டனர். இது முதலாவது தாக்கியதும் முதன்மையாகத் தாக்குவதும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி பேசும் தமிழரையே. 

கடந்த முப்பான் ஆண்டுகளாகத் தமிழர் எத்தனையோ வகையில் எதிர்த்துப் போராடியும் மறைமலையடிகள் உள்ளிட்ட மாபெரும் புலவர் ஏரணமுறையில் எடுத்துரைத்தும், பாலறாவாய்ப் பசுங்குழவிகளையேந்திய தாய்மார் பலர் சிறை சென்றும், தமிழை உயிர்போற்கருதிய இளைஞரும் நடுமையரும் தமிழ் கெடுமென்றஞ்சி அளவிறந்து உளம்நொந்து உலகை வெறுத்துத் தீக்குளித்தும், முதுகு தண்டொடிய மாணவர் தடியடியுண்டும், இந்திவெறியர் இம்மியும் அசையாது கடுமுரண்டுடன் அஃறிணையும் நாணுமாறு அடர்த்து நிற்கின்றனர். இதற்குத் தூண்டுகோலானவர் தமிழைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுப் பேராயக்கட்சியினரே . 

அண்மையிற் பொங்கியெழுந்த மாணவர் கிளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரைவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் அகப்பகையும் புறப்பகையுங் கூடி அதன் பயனைக் கெடுக்க முயல்கின்றன. அதனால் தமிழரை எளிதாய் விலைக்கு வாங்கிவிடலாமென்றும், அது தவறின் படைகொண்டு அடக்கி விடலாமென்றும், இந்தி வெறியர்கனாக் காண்கின்றனர். 

இந்நிலையில் தமிழாசிரியரும் மாணவரும் விடுமுறை நாளெல்லாம் பட்டினம் பாக்கம் பட்டி தொட்டி யெல்லாம் புகுந்து, இந்திக்கல்வியாலும் ஆட்சியாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் விளையும் தீங்குகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் பொது மக்கட்கு விளக்கிக் காட்டல் வேண்டும். இது குடியரசு முறைப்பட்ட மக்களாட்சி நாடாதலால், பொதுமக்கள் முனையின் எப்படையும் எதிர்நிற்காது.

இந்தியால் தமிழ் இவ்வாறு  கெடும்? 

- பாவாணர்  29.21968 

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(முற்றும்)

Pin It