வெறும் காற்றுக்கு
இதயம் அளிப்பவரே
எங்கிருக்கிறீர்

வழி உண்டாக்கும்
கால்களை
வணங்குதல் தானே முறை

கை வீசும் தோள்களின் வழியே
தோகை கூடும்
துயரம் ஓடும்

மலர்களின் நறுமணங்களை
மலர்த்தியெடுக்கும்
உயிரோவியங்களே வாருங்கள்

மழையை மகிமையாக்கத்
தெரிந்தோரே
வெயிலை விதையாக்க
உரியோரே

உளியென சிரிக்கும்
உள்ளத்தில்
பாறை வெடித்து
பவளமென சிற்பம் வரும்

இருக்கின்ற காட்சியெல்லாம்
வண்ணங்களில் வாகை சூட
கருப்பு வெள்ளை கண்களை
திறவுங்கள்

இருத்தலை உணர
ஒருவருக்கொருவர்
அணைத்துக் கொள்ளுங்கள்
பிரபஞ்ச ஒளி பூக்கட்டும்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.