ஸ்லேவ் ஐலேண்டு என்று அழைக்கப்படும் கொழும்பு கொம்பனி வீதியா பகுதியிலுள்ள சுமார் பத்தாயிரம் முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து அகற்றி தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு இரகசியமாக ஈடுபட்டுள்ளது என்கிற தகவல் அறிந்து கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் கொழும்பு முஸ்லிம்கள்.

நகரத்தின் மேம்பாடு என்ற பெயரில் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளாக இருக்கும் தெஹிவளை, கோட்டே, கொலன்னாவை போன்ற பகுதிகளிலிருந்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இடமாற்றம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வரும் செய்தியை "கொழும்பிலிருந்து தமிழ் பேசும் மக்களை வெளியேற்ற ராஜபக்ஷே அரசு திட்டம்' என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 08-14, 2011 தேதியிட்ட சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் விரிவாகவே எழுதியிருந்தோம்.

இந்நிலையில், கொழும்பு நகரத்தின் புகழ்பெற்ற பகுதியான கொம்பனி வீதியா (இது தெருவல்ல ஏரியாதான் இப்படி அழைக்கப்படுகிறது) பகுதியிலுள்ள முஸ்லிம்களை அகற்றுவதற்கு திட்டம் தீட்டி தயாராகி வருகிறது சிங்கள அரசு.

இலங்கைத் தீவு பிரிட்டீஷார் ஆதிக்கத்தில் இருந்தபோது கொம்பனி வீதியா பகுதியில்தான் கைதிகளை (அடிமைகளை) சிறையில டைத்து வைத்திருந்தனர் பிரிட்டீஷார். அதனால் இப்பகுதி ஸ்லேவ் ஐலேண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

மத்திய கொழும்பு பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இதை சிங்கள அரசு பிரச்சினையாகக் கருதுகிறது. முஸ்லிம்களை அப்புறப்படுத்தி சிங்கள மக்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கொழும்பு நகரத்தை மாற்றியமைக்க இராஜ பக்ஷே அரசு முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

“முன்பு கொழும்பில் 92 சதவிகித பெரும்பான்மையாக இருந்த சிங்களச் சமூகத்தின் ஜனத்தொகை தற்போது 27 சதவீதமாக குறைந்து போயுள்ளதாக சில சிங்களப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. கொழும்பு நகரம் உருவானதே முஸ்லிம்களால்தான். முஸ்லிம்கள்தான் கொழும்பு நகரை வளர்த்தெடுத்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன...'' என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத்துறையின் விரிவுரையாளரான எம்.எஸ். அனீஸ்.

தற்போது மாநகர சபையாக இருக்கும் கொழும்பு நகரத்தை மாநகர அதிகார சபையாக மாற்றப் போவதாக அறிவித்து அதன் அடிப்படையில் முஸ்லிம்களை இடமாற்றம் செய்ய ராஜபக்ஷே அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு, “கொழும்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதென்றால் அதற்கு அதிகார சபை என்று ஒன்று தேவையில்லை. மாநகர சபையை வைத்துக் கொண்டே அந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த முடியும்'' என்று கருத்து தெரிவிக்கும் அனீஸ், “தற்போது சிறிது சிறிதாக கொழும்பில் முஸ்லிம் குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கொம்பனி வீதியா பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த இரகசியமான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது'' என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

கடந்த 2010 ஜூன் மாதத்தில் கொம்பனி வீதியா பிரதேசத்திலிருந்த முஸ்லிம் குடியிருப்புகளை இடித்துத் தள்ளியது சிங்கள அரசு.

The Urban Development Authourity (UDA) which is now under the defence ministry, yesterday, with assistance of Police and Army, demolished what it called in unauthorised constructions down Mews Street in Kompannaveediya என - பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் நகர அபிவிருத்தி அத்தாரிட்டி போலிஸ் மற்றும் ராணுவத்தினரின் உதவியுடன் கொம்பனி வீதியா பகுதியில் மியூஸ் தெருவிலுள்ள வீடுகளை இடித்துத் தள்ளியது. அனு மதியில்லாமல் கட்டப்பட்டிருந்த கட்டங்களை இடித்ததாக அரசு தெரிவிக்கிறது என்கிற செய்தியை இலங்கையிலிருந்து வெளிவரும் THE SUNDAY TIMES பத்திரிகை 9-05-2010ல் செய்தி வெளியிட்டிருந்தது.

அதே தினத்தில் வெளியான DAILY MIRROR ஆங்கிலப் பத்திரிகையும், “Many families were forced out of their homes with their belongings and the demolition of the structures took place despite the residents claim to having documents that prove their structures were legal.'' என எழுதியது.

பல குடும்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்களின் உடமைகளோடு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அங்கிருந்த வீடுகள் சட்டப்பூர்வமானது என்பதற்கான ஆவணங்களை குடியிருப்புவாசிகள் வைத்திருப்பதாகவும் மேற்கண்ட செய்தி கூறுகிறது.

2010 மே 8ம் தேதி அதிகாலையில் போலீஸ், இராணுவம், கலவரத் தடுப்பு போலீசார் ஆகிய படைகளின் துணையோடு, மியுஸ் தெருவிலிருந்த 20 முஸ்லிம் வீடுகள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. வேறு மாற்று இடம் குறித்த எவ்வித உத்திரவாதமும் தராமல் அரசாங்கம் வீடுகளை இடித்துத் தள்ளி, 20 குடும்பங்களின் எதிர் காலத்தை கேள்விக் குறியாக்கியது என்று நீண்ட பட்டியலைத் தருகிறது M.I.C. எனப்படும் முஸ்லிம் தகவல் மையம்.

“மியுஸ் தெருவிலிருந்து குடியிருப்புவாசிகள் கட்டாய வெளியேற்றம்'' என்ற தலைப்பில் கொம்பெனி வீதியா பகுதியில் நடந்த கட்டாய வெளியேற்றம் குறித்த தகவல்களைத் திரட்டி கையேடாக அது வெளியிட்டிருக்கிறது.

தற்போது மாநகர அதிகார சபை என்ற பெயரில் முஸ்லிம்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற நடைபெறும் நிகழ்வுகளை நீண்ட கால திட்டத்தின் வெளிப்பாடுகளாகவே பார்க்க முடிகிறது.

கொழும்பு மாநகர சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டால் மேயராக, துணை மேயராக முஸ்லிம்களே தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாலும், அதிகாரப் பதவிகளுக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை இருப்பதாலும், மாநகர அதிகார சபை ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களின் பலத்தைக் குறைக்க அரசு முயற்சிப்பதாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எது எப்படி இருப்பினும், விடுதலைப் புலிகளுடனான யுத்த முடிவுக்குப்பின் அல்லது புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் பார்வை அழுத்தமாக பதிந்திருக்கிறது என்பதைத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ஆனாலும், இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்து வருகின்றன. அது இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கேடாகவே முடியும் என்பதை இந்தத் தலைமைகள் உணர்ந்து கொண்டு, சிங்கள அரசின் சதித் திட்டங்களை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் நின்று கைகோர்க்க வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- ஃபைஸல் 

ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்! - இஸ்மாயில் முஸ்டீன், கொழும்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தொடர்பில் முக்கியமாகப் பேசப்பட வேண்டிய விடயம் அவர்கள் கல்வி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

கொழும்பு முஸ்லிம்களின் கல்வியில் மிகச் சிறந்த பங்களிப்புச் செய்யும் பாடசாலைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் மிகப் பெரும்பகுதி முஸ்லிம்கள் சேரிப் புறங்களில்தான் வாழ்கின்றனர்.

இப்போதுள்ள நிலையில் சட்டப்பூர்வமற்ற கட்டங்கள் என்ற ஒருதலைப்பட்சமான நியாயப்படுத்தலுடன் பலவந்தமாக இடிக்கப்படும் கட்டடங்கள் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்குச் சொந்தமானது.

இந்தக் கட்டட இடிப்பு விவகாரத்தில் அரசு தெளிவோடு இருக்கிறதா என்றால் அது சந்தேகமே! "ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுதல்'' என்ற அரசாங்கத்தின் திட்டம் நல்லதுதான் வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால் அது ஏழை மக்களின் வயிற்றில் அடித்து அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கித்தான் அடைய வேண்டுமென்றால் அது நியாயமானதாகாது? அப்படிப்பட்ட உரிமைகளை மீறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அது எந்த இன மக்களாக இருந்தாலும் சரி, அவர்கள் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவரின் பொறுப்புமாகும்.

இங்கு அரசியல்வாதிகளின் மௌனம் மொத்தத்தில் அவர்களின் கையாலாகாததனத்தைத்தான் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த மக்களுக்கு கொழும்புக்குள்ளேயே மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்து விட்டு பின்னர் அக்கட்டடங்களை இடிப்பதில் தவறு கிடையாது. இதனால் நாட்டின் அபிவிருத்திக்கு இம்மக்களின் பூரண ஒத்துழைப்பு இருக்கும்.

ஆனால் அரசியல் பின்புலத்துடன் இனவாத முத்திரை குத்திக் கொண்டு ஏழை மக்களின் அடிப்படை உரிமையில் கை வைத்தல் என்பது மிகவும் கவனமாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சமாகும். கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம் மக்களுக்கு நிறையச் செய்திகளைச் சொல்கிறது!

கொழும்பு முஸ்லிம்களின் வாக்குகள் சமமாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட சரத் பொன்சேகாவுக்கு கூட விழுந்திருக்கின்றன. இவர்களில் யாரும் இந்த மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்க குரல் கொடுக்கவில்லை. மாறாக இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் நலன் சார்ந்து செயற்பட மட்டுமே அவர்களால் முடிகிறது.

அத்துடன் இதை வெறுமனே முஸ்லிம்களின் பிரச்சினையாக மட்டும் பார்த்து மற்ற இன மக்கள் மௌனம் காப்பது அபாயகரமானது. கொழும்பு அபிவிருத்தி என்பதும் நகராக்க விருத்தி என்பதும் ஏழை மக்களின் உரிமைகளில் கை வைக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

கொழும்பு ஏழை தமிழ் மக்களை அடுத்து கொழும்பு வாழ் ஏழை சிங்கள மக்கள் என்று அனைத்து மக்கள் மீதும் அதன் கரங்கள் நீளாது இருக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். வெறுமனே மனிதாபிமான உணர்வுள்ள மிகச் சொற்பமான மக்களின் பலவீனமான குரல் பலவீனமான அரசின் காதுகளில் இலகுவாக விழுந்து விடும் என்று எதிர்பார்ப்பது புத்திப்பூர்வமானதல்ல.

தனது குடிமக்களின் நலனைப் புறக்கணித்து வாழ அரசு ஆயத்தமாதல் அதன் இருப்புக்கு ஆரோக்கியமானதல்ல. இந்த மக்களின் வீடுகள் இடிக்கப்படுதல் தொடர்பில் தெளிவான திட்டத்தையும், மாற்று ஏற்பாடுகளையும் பகிரங்கமாக அரசு முன் வைக்க வேண்டும். அதற்கு குரல் கொடுக்க அரசியல்வாதிகளை எதிர்பார்ப்பது மடமை. எனவே அனைத்து இன மக்களையும் இணைத்து கொடுக்கும் குரல் மட்டுமே இங்கு பலனைப் பெற்றுத் தரும்.

இனவாத செயற்பாடுகளைப் பின்னிறுத்திக் கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் வெற்றிகரமானதாக தோன்றினாலும் அதன் தோல்வி மிகவும் அபாயகரமானது. அதன் மூலம் ஏற்படும் இன ஒற்றுமைக்கெதிரானதும் ஐக்கியத்திற்கு விரோதமானதுமான இடைவெளி எளிதில் நிரப்பப்பட முடியாதது என்பதை அதிகாரிகள் மனதில் இறுத்திச் செயற்பட வேண்டும்.

அடுத்து, பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரை குற்றஞ்சாட்டிக் கொண்டு பிரச்சினைகளை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க மக்கள் பெயரால் இயக்கம் நடத்தும் அனைவரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது!

Pin It