நம் நாட்டில் நீதியின் நிலைமையைப் பாருங்கள். பாவம், அதனால் யாருக்குத் தான் விசுவாசமாக இருக்க முடியும்? எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும் பாசிசம் அதன் மீதான செலுத்தும் தாக்கத்தினை தவிர்த்திட முடியவில்லை.
நாட்டின் முக்கிய தூண்களாக கருதப்படும் ஊடகங்கள் உட்பட நீதியைப் பெற்றுத் தர வேண்டிய இடத்தில் உள்ள யாவரும் தங்களுக்கென்று ஒரு நியாயத்தை வகுத்துக் கொள்கிறார்கள். அதிகபட்சமாக இன்றைய ஊடகங்கள் தேசியம் என்ற பெயரிலும், இந்துத்துவா கோட்பட்டின் அடிப்படையிலும் பல்வேறு மாற்றங்களை தங்களுக்குள் உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் கொடூரமான, நியாயமற்ற கொலைகளுக்கும் கூட நேர்மையற்ற காரணத்தைக் கொண்டு நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார்கள். எந்த செய்தியை முன்னாலும், எந்த செய்தியை பின்னாலும் தர வேண்டும் என்ற நுட்ப அரசியலை இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக பெரும்பாலான ஊடகங்கள் செய்து வருகின்றன.
இந்த நாட்டின் அனைத்து சக்திகளுக்கும் மேலானது என்று சொல்லக்கூடிய நீதிமன்றங்களும் இந்த நீதி பரிபாலனங்களை எல்லாம் பார்ப்பது இல்லை. இங்கே நீதிமன்றம் எப்படி இருக்கிறது என்றால் உதாரணத்திற்கு, சொஹ்ராபுதின் போலி என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டார்கள். நாடே இந்த வழக்கின் போக்கை அறிந்த நிலையிலும் அனைவரையும் விடுவித்த நீதிமன்றம், அத்தோடு தனக்கான வேலையை முடித்துக் கொண்டது.
உண்மையில் விடுவிக்கப்பட்ட எவரும் குற்றவாளிகளாக இல்லாத பட்சத்தில் அவர்களை விடுவித்து, மூவரைக் கொலை செய்தது யார் என்று விசாரித்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் சமர்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே மூவரின் கொலைக்கான எந்த நீதியும் பொருட்படுத்தப்படவில்லை. அதை விட குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையே முதன்மையாக இருந்தது.
அதிலும் இன்றைக்கு இருக்கும் மோடி அரசு பாசிசத்திற்காக பணிபுரிவோர்களுக்கு ஊதியத்தையும், சன்மானத்தையும், பதவிகளையும், பதக்கங்களையும் வழங்குகிறது.
அரசின் சொல்கேட்பவர்களுக்கு சன்மானமும், பதவி உயர்வும்
காஷ்மீர் இந்தியாவின் உட்பகுதி என சொல்லிக் கொள்ளும் மத்திய அரசுகள் எதுவும், இந்த உட்பகுதி அந்த காஷ்மீர் மக்களால் தான் உருவாக்கப்பட்டது என்பதை உணர மறுத்ததுமில்லாமல் கூலிப்படையினருக்குப் பதிலாக ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தி, அம்மக்களை கொன்று குவித்து
வருகின்றன.
காஷ்மீரில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி கொல்லப்படுவதாக சொல்லும்போதும் இந்தியாவின் மூலையிலிருக்கும் ஒவ்வொருவரும், நாட்டிற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதாக உள்ளாற மகிழ்கிறார்கள். ஆனால், அங்கே ராணுவம் நடத்திக் கொண்டிருப்பது 'contract killing'ஐ விட மோசமான ஒன்றாகும்.
Grade A வகையில் உள்ள தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவரை சுட்டுக் கொன்றால், கொன்ற வீரருக்கு ரூ.7 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை பரிசுத் தொகை தரப்படுகிறது. பணத்தோடு மட்டும் நிற்காமல் அவர்களுக்கான பதவி உயர்வு, பதக்கங்கள் என்று நீள்கிறது. ஆனால் இதுவே கொல்லப்பட்டது பொதுமக்களில் ஒருவர் எனும் பட்சத்தில் அரசு இழப்பீடாக அந்த குடும்பத்திற்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் தருகிறது. கொல்வதற்கு உதவி புரியும் காஷ்மீரிகளுக்கு அரசாங்க வேலை தரப்படுகிறது. அதனால் கொல்லப்படும் அநேகர் தீவிரவாதிகளாகவே காட்டப்படுகிறார்கள். அதனால் காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது இது முதல் முறையுமல்ல, கடைசி முறையாகவும் இருக்காது. (Indian Express 19/11/18).
கொல்லப்படுவதால் பதவி உயர்வும், சன்மானமும் கிடைக்கும் என்பதால் காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளாக உருவகப்படுத்தப்பட்டு கொல்லப்படுவது குறையப் போவதில்லை.
காஷ்மீரில் மட்டுமா இந்நிலை என்றால் அதுவும் இல்லை. இந்தியாவின் பிற பகுதிகளிலும் முஸ்லிம்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுதல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் சிலவற்றை நேர்மையான அதிகாரிகள் வெளிக்கொண்டு வந்தனர். அவற்றில் இஸ்ரத் ஜகான், சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்குகள் முக்கியமானவை. இந்த வழக்குகளையும், கொண்டு வந்த நேர்மையான அதிகாரிகளையும் ஒருசேர அழித்து, கிடைக்க வேண்டிய நீதியையும் இல்லாமலாக்கினார்கள் பாசிஸ்ட்கள். தற்போது இதற்கு உதவிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
G.L.சிங்கால், காவல்துறை உயரதிகாரி இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். இவர் மூலம் கிடைத்த இரண்டு பென்டிரைவ் மற்றும் 267 வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம், பாஜக'வின் தேசியத் தலைவர் அமித் சா ஒரு பெண்ணை சட்டவிரோதமான முறையில் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க உத்தரவிட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிங்கால் 2014ம் ஆண்டு பிணையில் வெளி வந்தார். மீண்டும் பணியில் இணைந்த இவருக்கு தற்போது பதவி உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது.
அதே போல் சொஹ்ராபுதின் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி அகர்வால், கோத்ரா வழக்கில் மோடி அரசுக்கு ஆதரவாக இயங்கிய அதிகாரி J.R..மொதல்லியாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. (Indian Express 01/01/2019).
பாசிசத்தின் பிடியில் அரசு அதிகாரிகள்
அரசு எப்போதும் அதிகாரத்தை சுற்றியே சுழல்கிறது. ஆனால் அந்த அரசின் அதிகாரம் என்று சொல்லப்படுவது, அதன் செயலாட்களாக உள்ள அரசு அதிகாரிகளையே சார்ந்தது.
இந்த அரசு அதிகாரிகளின் செயலுக்கான அனுமதியைத் தருவது மட்டுமே இந்திய அரசின் வேலை, அதனை தடுக்க முடியாது என்ற சூழல் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாட்டின் ஒட்டுமொத்த நகர்வையும் தீர்மானிப்பவர்களில் மேலானவர்கள் அரசு அதிகாரிகள்.
இவர்களுக்கான தலைமையில் அமர்ந்திருப்பவர்களில் அதிகமானோர் உயர்குடி மக்களாக பாசிசத்தை அறமாக எண்ணக்கூடியவர்களாக இருப்பதால், இங்கே ஒடுக்கப்படுதல் அவர்களுக்கு பாரமில்லாத ஒன்று. அவர்கள் பாதிக்கபடாமல் இருப்பதற்கான ஒன்று.
இந்த உயர்குடிகளுக்கான, அரசு அனுமதியானது கைக்கட்டி நிற்பது அல்லது வீதி உலா எடுத்து அவர்களை அழைத்துச் செல்லும் இரண்டு வாய்ப்புகளை மட்டுமே பெற்றதாகும்.
இதில் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் அரசுக்குப் பெயர் காங்கிரஸ். வீதி உலா எடுத்துச் செல்லும் அரசுக்குப் பெயர் பாஜக.
மற்றபடி இந்த அராஜகங்களை நிகழ்த்துவதில் அரசுகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.
- அபூ சித்திக்